Wednesday, October 15, 2014

64 சிவவடிவங்கள்

2. இலிங்கோற்பவ மூர்த்தி




நான்முகனுக்கு  இரண்டாயிரம்  சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க  சென்றார். உடன் தேவலோகத்தினரும் மகலோகம் சென்றனர். அப்பொழுது பெரும் கடற்பெருக்குத் தோன்றி உலக உயிர்கள்

அனைத்தையும் அழித்தது. அதனால் உலகம் மறைந்து விட்டது. திருமால் ஒரு ஆலிலைமேல் சின்னஞ் சிறிய குழந்தை வடிவத்துடன்  உறங்கினார். இதனை கண்ணுற்ற  அனைவரும்  குழந்தையை ஆராதித்தனர்.    ஆராதனையைக்கேட்டு எழுந்த திருமால் பழைய உலகைத் தேடினார். அது பாதாளத்தில் இருப்பதைக் கண்டார்.

 உடன் வராக அவதாரம் எடுத்து தனது கொம்பினால் குத்திக்கொண்டு வந்து முறைப்படி நிறுத்தினார். பின் பாற்கடலில் நித்திரையில் ஆழ்ந்தார். இதனிடையே நான்முகனுக்கு இரவு நீங்கி பகல்  ஆரம்பமானது. அனைத்து தேவ மாந்தர்களையும் ஈரேழுலகங்களையும் திரட்டி இந்திரனையும் சபை நிறுத்தி அரசாள செய்தார்.

இடையில் ஏற்பட்ட  சம்பவம் தெரியாததால் , இந்த உலக இயக்கம் தன்னாலே எனக் கர்வம் கொண்டார். தானே முழுமுதற்கடவுள் என்ற  எண்ணத்துடன்  உலகை வலம் வரும் போது பாற்கடலில் யோக நித்திரையில்  திருமால் இருப்பதைக் கண்டு  அவரிடம் சென்று நீ யார்? என வினவினார்.

அவரோ நான்  உனது  தந்தை என்றார், இதனால்  பெரும்  வாக்குவாதம்  இருவருக்கும் ஏற்பட்டது. அது  யார்  பெரியவர்  என்றளவில்  பெரும்  போரானது. இப் போரினால்  உலக உயிர்கள்  அனைத்தும் வாடின. உடன் நாரதர் தோன்றி நீங்களிருவருமே பெரியவர் கிடையாது.

சிவபெருமானே அனைவருக்கும் பெரியவர் என்றுரைத்தார். மேலும் இனியும்    போர் தொடர்ந்தால் ஜோதிரூபமாக சிவபெருமான் தோன்றுவார் என்று கூறி மறைந்தார். இருப்பினும் விடாமல் போர் தொடர்ந்தது. சிறிது   நேரத்திற்குப் பின் பெரும் ஜோதி தோன்றியது, அதிலிருந்து அசரீரீ கேட்டது.

உங்கள் இருவரில் எவர் எனது அடியையும், முடியையும்  கண்டு  வருகிறிர்களோ அவர்களே பெரியவர் என்று அசரீரீ கூறியது. உடன் நான்முகன் அன்னமாக மாறி முடியைத் தேட,
திருமால் வராகமாக மாறி அடியைத் தேட இரண்டுமேக் கிடைக்கவில்லை.

இருவரும் சிவனே சரணம் என்று சிவனை அடைந்தனர். மனம் வருந்தினர். உடன் இருவரும்  ஒன்றாக அங்கே ஒரு  சிவலிங்கத்தை  பிரதிஷ்டை செய்து பூஜித்தனர். உடனே சிவபெருமான் தோன்றி இருவரிடத்திலும், நான்முகன் என் வலதுபுறத்திலும், திருமால் என் இடதுபுறத்திலும் தோன்றியவர்கள் எவனே எனக்கு இருவரும் ஒன்றே என்றுக்கூறி மறைந்தார். வானுக்கும் பூமிக்குமாக நின்ற ஜோதி வடிவம் சிறிது சிறிதாக குறைந்து மலையாக மாறியது. அதுவே திருவண்ணாமலையாகும். அவர்கள் இருவரும்  வணங்கிய  சிவலிங்கமே  லிங்கோர்பவர் ஆகும்.

திருவண்ணாமலையில்   அருணாச்சலேஸ்வரர்  ஆலயத்தில் இருக்கும் லிங்கோத்பவரை வணங்கினால்  நாம் செய்த அனைத்துக் குற்றங்களும் மறைந்து விடும். இனி குற்றம் செய்யும் எண்ணம் வராது.  நமக்கு வேண்டிய அனைத்தையும்  அளிக்க  வல்லவர். இங்கு பௌர்ணமி கிரிவலம் மிக விசேஷமானது.

மேலும் இவரை வணங்க சூரியகிரகணத்தால் உண்டாகும் அனைத்து  பிரச்சினைகளும்  விலகும். மேலும் வென்னிற நந்தியாவர்த்தம் மலரால் அர்ச்சனையும், சாதம் அல்லது பால் நைவேத்தியமும்  பௌர்ணமி அன்று  கொடுக்க சித்தம் தெளிவடையும் . மேலும் இங்குள்ள சிவபெருமானுக்கு குளிர்ச்சியான நல்லெண்ணையில் அபிசேகம் செய்தால் வெப்பநோய்கள் நீங்கும்.

No comments:

Post a Comment