Friday, October 24, 2014

சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்


சிவாலய வழிபாட்டின் முக்கியத்துவம்

1. ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் நிவேதனம் செய்கிறோம்; ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்கிறோம். எல்லாருமே வீட்டில் இவ்வாறு பூஜை செய்து, திரவியங்களை ஈசுவரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன. இறைவனுக்கு நன்றி செலுத்துவதைத்தான் பரார்த்த பூஜையாக, நிஷ்காம்ய வழிபாடாக, ஆலயங்களில் செய்கிறோம்.

2. அரணிக்கட்டையுள் நெருப்பு மறைந்துள்ளது போல, மலரில் மணம் மறைந்துள்ளது போல ஈச்வரன் பிம்பத்தில் (லிங்கத்தில்) உள்ளார். பாலை விட, தயிரிலிருக்கும் நெய்யைக் கண்டெடுப்பது எளிது. உலகெங்கிலும் பாலில் மறைந்துள்ள நெய் போல் உறையும் இறைவன், ஆலயத்தில் தயிரினுள் மறைந்திருக்கும் நெய் போல எளிதில் நமக்கு முன் வந்து அருளக் காத்திருக்கிறான்.

3. ஆகமங்களில் விதித்துள்ள சிற்ப சாஸ்திரங்களுக்கொப்ப அமைந்துள்ள திருக்கோவில்களே பரம்பொருள் வீற்றிருக்கும் தேவாலயங்கள். ஆகம விதிப்படி அமையாத ஆலயங்கள் மடாலயங்கள் எனப்படும்.

4. சிவலிங்கம் இருக்கும் இடத்திலிருந்து நான்கு புறமும் 150 முழ தூரம் சிவ÷க்ஷத்ரம் ஆகும். இங்கு வசிப்பதுமச் சிவலோகவாசத்திற்கு காரணமாகும் என்று சுப்ரபேத ஆகமம் கூறுகிறது

5. முன் ஜன்மாவில் சிவ கைங்கர்ய உபகாரிகளாக வாழ்ந்தவர்கள், இந்த ஜன்மாவில், நல்ல உருவமும், தன ப்ராப்தியும் உடையவர்களாக காணப்படுவார்கள். சிவ தர்மத்தில் - பக்தியுடன், தன் சொத்துக்குத் தகுந்தபடி, ஆலயங்களை ஒவ்வொருவரும் செய்விக்க வேண்டும். அப்படிச் செய்தால், சிறிதாக அல்லது பெரிதாக செய்தாலும், தனவானுக்கும் ஏழ்மையானவர்களுக்கும், சமமான புண்யமே. பணக்காரராயினும், லோபமான மனஸுடன் பணத்தைக் குறைத்து சிவதர்மங்களைச் செய்பவர், அப்புண்ய பலனை அடைய மாட்டார். வாழ்வு நிலையற்றது; எனவே, ஒவ்வொருவரும் தன் சொத்தில் இரு பங்கு தர்மத்திற்கும், தனது வாழ்விற்கு ஒரு பங்குமாக ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்கிறது ஜீர்ணோத்தார தசகம்.


6. மனத்தை ஒருவழிப் படுத்தவும், கீழ்ப்படிவு, நீதி வழி நிற்றல், தன்னலம் மறுப்பு, பணிவு, இரக்கம் ஆகிய பல சிறந்த பண்படுகளை உண்டாக்கி வளர்க்கவும், இறுதியாக மோக்ஷ ஸாம்ராஜ்யம் அடைந்திட வழி வகுக்கவும் திருக்கோயில் வழிபாட்டைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.

7. சாதாரணமாக, நம் கைகள் இரண்டு விரிந்து, வளைந்து, பற்பல செய்கைகளைச் செய்கின்றன. இறைவனுடைய ஸந்நிதானத்தில் கும்பிடும்போது, அத்தகைய செய்கைகள் எல்லாம் ஒழிந்து, கைகள் ஒன்று சேர்ந்து குவிகின்றன. அவ்வாறு குவிந்திடும் கைகள் ஆண்டவனே ! இனி என் செயல் என்று ஏதும் இல்லை என்பதை உணர்ந்துவிட்டேன். எல்லாம் உன் அருட் செயலே என்ற சரணாகதி தத்துவத்தை உணர்த்துகின்றது.

8. ஆலயங்களில் விக்ரஹ ஆராதனை முக்கியத்துவம் பெறுகிறது. உலகத்தில் சக்திகள் யாவும் உறையும் இடம் என்று பொருள் தருவது விக்ரஹம் என்ற சொல் (விஸேஷேண க்ருஹ்யதே ஸக்திஸமூஹ: அஸ்மின் இதி விக்ரஹ:) வி என்றால் விசேஷமான, சிறப்பான, இறைத்தன்மையுள்ள என்று பொருள். க்ரஹிப்பது என்றால் ஈர்த்துக்கொள்வது. பல்வேறு மந்த்ர தந்த்ர யந்த்ர வழிபாட்டு முறைகளினால் ஆராதிக்கப்படும்போது, இறையருளை முன்வைத்து, இறைத்தன்மையை ஈர்த்துத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, தன்னை வணங்குவோருக்கு அருள் புரியும் வல்லமை உள்ள பொருள்தான் விக்ரஹம்.


9.விக்ரஹங்கள் பல திறத்தன: பொருள் பொதிந்து விளங்குவன. எடுத்துக்காட்டாக, இறைவன் உருவமற்றவன்: அருவமானவன். அவனுக்கு அருவுருவமாகிய லிங்க ப்ரதிஷ்டை கருவறையிலே. அவனுக்கே, மாகேச்வர மூர்த்தங்கள் என்று அழைக்கப்படும் 25 உருவங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. 

(அவையாவன: 

1. லிங்கோத்பவர் 
2. சுகாசனர் 
3. சந்திதர மூர்த்தி 
4. கல்யாண சுந்தரர் 
5. அர்த்த நாரீச்வரர் 
6. ஸோமாஸ்கந்தர் 
7. சக்ரவரதர் 
8. திரிமூர்த்தி 
9. ஹரிமர்த்தனம் 
10-15 சலந்தராரி 
16. திரிபுராரி 
17. சரப மூர்த்தி 
18. நீலகண்டர் 
19. திரிபாதர் 
20. ஏகபாதர் 
21. பைரவர் 
22. இடபாரூடர் 
23. சந்திரசேகரர் 
24. நடராஜர் 
25. கங்காதரர்). 

இவை 25 விக்ரஹங்களுள் ஒவ்வொன்றும், பற்பல தத்துவங்களை உள்ளடக்கியவை. மீண்டும் எடுத்துக்காட்டாக, சோமாஸ்கந்த மூர்த்தியை எடுத்துக் கொண்டால், ஸச்சிதானந்தமே சோமாஸ்கந்தம் என்கிறார் காஞ்சிப் பரமாச்சாரியார். அவர் கூற்றுவது: ஸத்-சித்-ஆனந்தம் என்று சொல்வார்களே அதுதான் பரம்பொருள். இதிலே ஸத் (இருப்பு) பரமேச்வரன்; இருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தியைக் காட்டுகிறது சித் அம்பாள்: இப்படி உணர்ந்ததில் பேரானந்தம் பிறக்கிறது. இந்த ஆனந்தமே சுப்ரமண்யர். சிவம் என்கிற மங்களமும், அம்பாள் என்கிற காருண்யமும் கலந்த மரம் பரம உத்க்ருஷ்டமான (உயர்வான) ஸ்தானம் அவர் (ஸுப்ரஹ்மண்யர்); ஸச்சிதானந்தத்தையே சோமாஸ்கந்தர் என்று தமிழ்நாட்டுச் சிவாலயங்களில் எல்லாம் வைத்து உற்சவம் நடத்துகிறோம்.

10. இறைவனை அடையும் வழிகள் ஒன்பது என்பர்: 

(1) ச்ரவணம் - கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் - உதாரணம்: ஹனுமான், 
(2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை - உதாரணம்: வால்மீகி, தியாகராஜ ஸ்வாமிகள். 
(3) ஸ்மரணம் - நினைத்தல், நின்றும் இருந்தும் கிடந்தும் அவனையே நினைப்பது - உதாரணம்; ஸீதாதேவி, 
(4) பாதசேவனம் - சேவித்தல் - உதாரணம்: பரதன், 
(5) அர்ச்சனம் - பூஜித்தல் - உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், சாக்கிய நாயனார், 
(6) வந்தனம் - நமஸ்கரித்தல், வந்தித்தல் - உதாரணம்: விபீஷணன். 
(7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - உதாரணம்: லக்ஷ்மணன், திருநாவுக்கரசர். 
(8) ஸக்யம் - சிநேக பாவம் - உதாரணம்: சுக்ரீவன், அர்ஜுனன், சுந்தரர். 
(9) ஆத்ம நிவேதநம் - தன்னையே அர்ப்பணித்தல் - உதாரணம்: ஜடாயு. இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது ஒன்றை உறுதியாகப் பற்றுவதே இறைவனை அடைவதற்கு போதுமானது. இவற்றுள் கடைசி இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் வழிபட ஆலயங்களே வகை செய்வது குறிப்பிடத்தக்கது.


11. இவ்வாறு ஆலய வழிபாட்டை மையமாக வைத்து அமைக்கப்பட்ட வாழ்க்கை முறையே சிவதன்மம் ஆகிறது. சிவதன்மம் என்றால் சைவ ஒழுக்கம் என்று பொருள். சிதம்பரம் மறைஞானதேசிகர் (கி.பி.1560) சிவாகம பரிபாஷா மஞ்சரி என்ற வடமொழி நூலில் சிவதன்மம் பத்துக் கோட்காடுகளைக் கொண்ட நெறி என்கிறார்: 

1. அஹிம்சை. 
2. தயை, 
3. சத்யம், 
4. அடக்கம் 
5. வளம், 
6. புலனடக்கம் 
7. எளியோர்க்கு வழங்குதல், 
8. தியாகம், 
9. ஜபம், 
10. தியானம் - (அல்லது) 

1. அஹிம்சை, 
2. சத்யம், 
3. பிறர் பொருள் விழையாமை, 
4. சிற்றின்பம் துறத்தல், 
5. அவா ஒழித்தல், 
6. க்ரோதம் தவிர்த்தல், 
7. பெரியோரைப் போற்றுதல், 
8. தூய்மை, 
9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 
10. நேர்மை என்றபடி. இக்கோட்பாடுகள் அனைத்தும் ஆலய வழிபாட்டு நெறிக்கும் இன்றியமையாததாக இருப்பது கவனிக்கத்தக்கது.

12. எனவே, ஆலயத்தை மையமாகக் கொண்ட வாழ்க்கையில், நீறு இல்லா நெற்றி பாழ்; சிவாலயம் இல்லா ஊர் பாழ்; சிவபூஜை இல்லா ஜன்மம் பாழ்; சிவனை அடையா வித்யை பாழ் என்று ஆகமங்கள் வலியுறுத்துகின்றன.

விளக்கேற்றி வழிபடும் திருக்காட்டூர் கோயில்


48ஆயிரம் விளக்கேற்றி வழிபடும் திருக்காட்டூர் கோயில்-தீப திருவிழா

 கார்த்திகை தீப திருவிழா மூலமாக கடந்த சில ஆண்டுகளாக, சின்ன திருவண்ணாமலை போல பிரபலமாகிவரும், திருக்காட்டூர் தையல் நாயகி சமேத உத்ரவைத்ய லிங்கேஸ்வரர் ஆலயம் பற்றி இந்த நேரத்தில் அறிந்து கொள்வோம்.


காரணம் இன்னும் இரண்டு நாளில் அதாவது வருகின்ற 26ம் தேதி (திங்கட்கிழமை) 1008 சங்கு பூஜையும், 27ம் தேதி 48,000 விளக்கு பூஜையும் இங்கு சீரும் சிறப்புடனும் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள விரும்புவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும், வழிகாட்டுதலாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட கட்டுரை.

சென்னையில் இருந்து திருப்போரூர் போகும் வழியில் உள்ளது திருக்காட்டூர். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் வழி, வெண்பேடு அஞ்சல், காட்டூர் கிராமத்தில், இயற்கை எழிலார்ந்த சின்ன, சின்ன கிராமங்கள் சுற்றி அமைந்திருக்க நடுவே கம்பீரமாக வீற்றிருக்கிறது, வைத்தியலிங்கேஸ்வரர் கோயில். இந்த கோயிலுக்கு பலவித சிறப்புகள் உண்டு. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாறைக் கொண்டுள்ளது. அகத்திய மாமுனி தங்கியிருந்து வழிபட்ட ஈஸ்வரனைக் கொண்டுள்ளது. சிறந்த செவ்வாய் பரிகார தலமாக விளங்குகிறது. அற்புதமான அகத்தியர் தீர்த்தம் அமைந்துள்ளது. பங்குனி உத்திர திருநாளுக்கு மூன்று தினங்கள் முன்பாக காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் சூரியன் தன் பொற்கிரணங்களால் தரிசித்து வணங்கி செல்லும் சிறப்பைக் கொண்டுள்ளது. வேம்பும், பனையும் தல விருட்சமாக அமைந்துள்ளன. அர்த்த மண்டபத்தில் மக்கள் பிணி தீர்க்கும் மருத்துவராக உத்திர வைத்திய லிங்கேஸ்வரரும், தையல்நாயகி அம்பாளும் வீற்றிருக்கின்றனர்.




வருட ஆரம்பத்தில் வைகாசி விசாகமும், ஆடிப்பூரத்தன்று பால்குடமும், புரட்டாசியில் நவராத்திரி கொலுவும், ஐப்பசியில் அன்னாபிஷேகமும், கார்த்திகை மாதம் 1008 சங்காபிஷேகமும், தீப திருநாளான்று திருவிளக்கேற்றுவதும், மார்கழியில் ஆருத்திரா தரிசனமும், தையில் மகர சங்கராந்தி பூஜையும், பங்குனியில் திருக்கல்யாணமும் என வருடம் முழுவதும் இந்த கோயிலில் விழா நடைபெறுகிறது. பல சிறப்புகள் அமையப்பெற்ற இந்த தலத்தில் சமீப வருடங்களாக நடைபெறும் கார்த்திகை தீபம் திருவிழா பிரசித்தம் பெற்றுவருகிறது. சிறந்த சிவ பக்தரான எஸ்.ராஜு என்பவர் இந்த கோயிலில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன் கொஞ்சம் விளக்கேற்றி வழிபட, அது கோயிலுக்கு மட்டுமல்லாது அவரது வாழ்க்கையிலும் பிரகாசத்தை ஏற்படுத்த, விளக்குகளின் எண்ணிக்கையை படிப்படியாக உயர்த்தி, இந்த வருடம் வருகின்ற 27ம் தேதி மாலை 4.30 மணிக்கு 48 ஆயிரம் விளக்குகளை ஊர் பொதுமக்கள், பக்தர்கள் ஆதரவோடு நடத்திட உள்ளார். இவரைப் போலவே நிறைய கோயில்களில் பக்தி பணியாற்றிவரும் பத்திரிகையாளர் ஜெயா சுந்தரம் இந்த கார்த்திகை தீப திருவிழா சிறக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்.




கோயிலில் 48 ஆயிரம் விளக்குகள் ஏற்றப்படும் அதே வேளையில் திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படுவதைப் போல இங்கேயும் பக்கத்தில் உள்ள பைரவர் மலையில் அகண்ட தீபம் ஏற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




கார்த்திகை தீப திருவிழாவில் பங்கேற்று தீபம் ஏற்றவோ அல்லது கோயிலுக்கு வந்து வழிபாடு செய்யவோ விரும்பும் பக்தர்கள் இது தொடர்பான விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9444878797, 9445736549.

கார்த்திகைதீபம்

கார்த்திகைதீபம்: நடக்கப் போகும் நாட்கள் எல்லாம் நல்லதாக நடக்கட்டும்!




விளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மக்கள் இறைவனை ஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு என்று குறிப்பிடுகின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை ஆகிய எட்டுத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் கொண்டு தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். மாதம் தோறும் கார்த்திகை நட்சத்திரம் வந்தாலும், கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரமே "பெரிய கார்த்திகை எனப் போற்றப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதியாகிய சிவன், தனிப்பெருங்கருணையோடு நமக்கு அருள் புரியும் நாள் திருக்கார்த்திகை. இறைவனுக்கு நைவேத்யம் செய்யாவிட்டால் வழிபாடு நிறைவு பெறுவதில்லை.

கார்த்திகைக்குரிய பிரசாதமாக கார்த்திகைப் பொரியை இறைவனுக்கு படைப்பது மரபு. வெல்லம் சேர்த்த பொரி உருண்டையோடு, அப்பம், பாயாசம், பிடிகொழுக்கட்டை ஆகியவையும் நைவேத்யத்தில் இடம்
பெறும். திருக்கார்த்திகை நாளில் பிரதான திருவிளக்கோடு இருபுறமும் துணை விளக்குகளை அவசியம் ஏற்றவேண்டும். வீட்டு வாசலிலும், வீட்டுக்குள்ளும் முக்கிய இடங்களில் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது, கைக்குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

சாம்பிராணி, பத்தி போன்ற தூபதீபங்களை முதலில் விநாயகருக்கும், பின் திருவிளக்கு ஜோதிக்கும் காட்டி, பின் மற்ற தெய்வப்படங்களுக்கு காட்ட வேண்டும். இன்று மாலை வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன், விளக்கிற்கு சந்தனம் குங்குமம் இடவேண்டும். விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்துக் கொள்ள வேண்டும். இதனால், வீட்டில் செல்வம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன. கார்த்திகை காலம் மட்டுமின்றி, விளக்கேற்றுவது எப்போதுமே நன்மை தரும். தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்ற உகந்த நேரங்களாகும். குறிப்பாக சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் உகந்தவை. கல்வியில் உயர்வு, திருமணத்தடை நீங்க இந்த வேளையில் தீபமேற்றுவர். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவது பற்றி சம்பந்தரே பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், அவள் மீண்டும் உயிர் பெறுவதற்காகப் பதிகம் பாடினார். அதில்,"விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய் என்று பாடுவதில் இருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.இன்று நம் வீடுகளில் ஏற்றும் கார்த்திகை தீபம், இனி நடக்கப் போகும் நாட்களில் எல்லாம் சகல ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்கட்டும்.

வன்னி மரத்தடியில்

 வன்னி மரத்தடியில் ஆனைமுகன்

                                            


திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவிலும், சாத்தூரிலிருந்து கோவில்பட்டிக்கு வரும் வழியில் சுமார் 7 கி.மீ. தொலைவிலும் உள்ளது வன்னி விநாயகர் கோவில். வன்னி மரத்தடியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். சித்தர்களும், சான்றோர்களும் வழிபட்ட பழைமை வாய்ந்தது இக்கோயில். 

இங்கே கருவறையில் வன்னி விநாயகப் பெருமானும், வன்னி மரமும் சேர்ந்து அமையப் பெற்றிருப்பது சிறப்பு. கருவறை மண்டபம் மேல் வன்னி மரம் பசுமையாக, கோபுரம் போன்று காட்சியளிக்கிறது. அதனால், கருவறை மண்டபத்தின் மேல் கோபுரம் கட்டப்படவில்லை.

எண்ணியவை திண்ணியமாக  அருள் தரும் 
வன்னி வினாயகரை  வழிபடுவோம் 

ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்

பலன்தரும் பரிகாரத் தலம்:

 மனபலம் அளிக்கும் மகாதேவர் ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில்




இறைச் சிந்தையில் நம்பிக்கையற்ற ஒருவன், ஒரு நாள் சிவாலயம் ஒன்றுக்கு செல்லும்படி நேர்ந்தது. அங்கே அவனுக்கு திருநீற்றுப் பிரசாதம் தரப்பட்டது. நீறு என்றால் புனிதம் அன்றோ. "நீறு இல்லா நெற்றி பாழ்' என்ற சிந்தை கொண்ட அந்நாளில், கோயிலில் வழங்கப்பட்ட திருநீறை உதாசீனம் செய்தான். நெற்றியில் பூணாமல் வீணாக்கினான். இந்தப் பாபம் அவனைச் சேர்ந்தது. மறு பிறவியில் பன்றியாகப் பிறப்பெடுத்து சேற்றில் உழன்றான். ஆயினும், முற்பிறவியில் செய்த புண்ணிய பலனாக, அவனுக்கு தன் தவறு புரிந்தது. அதற்காக வருந்தியவன், சிவபெருமானைத் துதிக்கத் தொடங்கினான். சிவபெருமான் இங்கே சுயம்புவாக வெளிப்பட்டார். அவரை வணங்கிய அவன், சிவ தீர்த்ததில் மூழ்கி எழுந்து, பாப விமோசனம் பெற்றான்.

ஒரு முறை இந்தத் தலத்துக்கு வந்த பிரம்ம தேவர், சுயம்பு வடிவான சிவபெருமானை வணங்கினார். அப்போது சிவனார் தன் பொன் நிறம், வெண்மை, சிவப்பு, கருமை, புகை நிறம் ஆகிய ஐந்து நிறங்களை வெளிப்படுத்தி அருள்புரிந்தார். மேலும், 

"வெண்மை நிறத்தில் இருந்து நீரும், 
பொன் நிறத்திருந்து மண்ணும், 
செம்மை நிறத்திருந்து நெருப்பும், 
கருமை நிறத்திருந்து காற்றும், 
புகை நிறத்திருந்து ஆகாயமும் வெளிப்படும்' என்றார்". 

இதனைக் கேட்ட பிரம்மா, ஐந்து நிறங்களில் தோன்றி ஐந்து பூதங்களையும் தன்னில் அடக்கியவராக அருள் புரியும் ஈசனுக்கு பஞ்சவர்ணேஸ்வரர் என்று திருநாமம் இட்டு வணங்கினார். அதன் படி, சிவபெருமான் நீர்த் தலமான திருவானைக்காவலும், நிலத் தலமான காஞ்சியும், நெருப்புத் தலமான திருவண்ணாமலையும், வாயுத் தலமான காளஹஸ்தியும், ஆகாயமான சிதம்பரமும் என , ஐந்து பூதங்களையும் தன்னுள் ஒன்றாக அடக்கி உறையும் பிரானாக அருள் புரியும் தலம் என்பதால் உறையூர் எனப்பட்டது இந்தத் தலம். பெருமான் இங்கே "பஞ்சவர்ணேஸ்வரர்' என்றும் "நிறங்கள் ஓர் ஐந்துடையாய்' என்று மாணிக்க வாசகர் திருவாசகத்தில் பாடப் பெறுபவராகவும் ஆனார்.

இங்கே சுவாமிக்கு இந்தப் பெயர் வந்ததற்கு தல புராணத்தில் இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. வேத, ஆகம புராணங்களில் வல்லவராகத் திகழ்ந்த உதங்க முனிவர், ஒரு முறை தன் மனைவி பிரபையுடன் கங்கையில் நீராடினார்.

அப்போது, ரிஷிபத்னி பிரபையை ஒரு முதலை நீருக்குள் இழுத்துச் சென்றது. கண் முன்னே தன் பத்தினி மாண்டதைக் கண்டு மன வேதனையுற்றார் முனிவர். மன நிம்மதி இன்றி தத்தளித்தார். கலைந்து அலைந்து களைத்த மனத்துக்கு மருந்தாக சிவபெருமானை வேண்டினார் முனிவர். உறையூர் பதிக்கு வந்தார். ஐந்து வேளையிலும் நீராட்டி அவனைத் தொழுதார். அப்போது, சிவபெருமான் 

காலை வழிபாட்டில் ரத்ன லிங்கமாகவும், 
உச்சிக்கால வழிபாட்டில் ஸ்படிக லிங்கமாகவும், 
மாலை வழிபாட்டில் பொன்னிறத்திலும், தங்க லிங்கமாகவும் 
முதல் யாம வழிபாட்டில் வைர லிங்கமாகவும், 
அர்த்த ஜாம வழிபாட்டில் சித்ர லிங்கமாகவும் ஜொலித்தார். 

ஐந்து வர்ணங்களில் அவன் காட்சி கண்ட முனிவர் மனம் அலைக்கழிப்பில் இருந்து அகன்று ஒருவாறு அடங்கி அமைதி பெற்றது. அதனால் சிவபெருமானை பஞ்ச வர்ணேஸ்வரர் என்று போற்றிக் கொண்டாடிய முனிவருக்கு ஞானம் கைவரப் பெற்று முக்தி அடைந்தார். இவ்வாறு ஆடிப் பௌர்ணமியில் உதங்க முனிவருக்கு பஞ்ச வர்ணங்களையும் காட்டி அருள்புரிந்ததாக புராணம் கூறுகிறது. அன்று பெருமானை வணங்கினால் மனம் நிம்மதி பெற்று முக்தி அடையும் என்பது வழிவழி நம்பிக்கை.

அதன் பின்னர் சுயம்புவாக அருள் புரிந்த பெருமான் மண்ணில் குடி கொண்டார். மீண்டும் வெளித் தோன்ற பெருமானே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார்.

ஒரு முறை சோழ அரசன் ஒருவன்... பட்டத்து யானையின் மீதேறி உலா வந்தான். திடீரென யானைக்கு மதம் பிடித்தது. செய்வதறியாது திகைத்தனர் பாகனும் அரசனும். அப்போது, கோழி ஒன்று குரலெழுப்பியபடி வேகமாகப் பறந்து வந்தது. பட்டத்து யானையின் மத்தகத்தின் மீது ஏறி தன் அலகால் குத்தியது. அதனால் யானை உடனே மதம் அடங்கப் பெற்றது. இவ்வாறு யானையின் மதம் அடங்கிய வேகத்தில் பறந்து சென்ற கோழி ஒரு வில்வ மரத்தடியில் தஞ்சம் புகுந்து மறைந்தது. அதனைப் பிடிக்க வந்த மன்னன், கோழியைக் காணாமையால் வருந்தி, அங்கே மரத்தடியில் தோண்டிப் பார்க்க அங்கே, சிவலிங்கம் இருக்கக் கண்டான்.

சிவபெருமானே தன்னையும் மக்களையும் காக்க கோழியாக வந்ததாகக் கருதிய மன்னன், பெருமானுக்கு அழகிய கோயிலை எழுப்பினான். இவ்வாறு இந்தக் கோயில் உருப்பெற்றது.

பலவீனர்கள் துன்பப் படும்போது, அவர்களைப் பெருமான் காத்து அருள்கிறார் என்பதால் இங்கே பக்தர்கள் தங்கள் துயர் தீர இப்பெருமானை மனமுருகி வேண்டுகின்றனர். அவர்களுக்கு மனபலம் தந்து அருளும் பிரான், முனிவருக்கு அருள் புரிந்ததுபோல், முக்தி நல்குவார் என்றும் நம்பிக்கை. இத்தலத்தில் வழிபடும் பக்தர்களுக்கு மறுபிறப்பில்லை என்று தோன்றும் வண்ணம், "திருமூக்கீச்சுரம்' என்றும் பெயர். இங்கே உள்ள காந்திமதி அம்மன் நாகலோகத்தில் உறையும் நாக கன்னியரால் பூஜிக்கப்பட்டு, பின்னர் சோழ மன்னனால் இங்கே கொணரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக தல புராணம் கூறுகிறது.

இங்கே பெருமானுக்கு பஞ்சவர்ணேஸ்வரர், திருமூக்கிச்சுரத்தடிகள் என்று திருநாமம். அம்மை-காந்திமதியம்மை. வில்வம் தல விருட்சமாகத் திகழ்கிறது.

பரிகாரம்:-  பைரவர், சனீஸ்வரர், சூரியன் என அனைவரும் ஒரே சந்நிதியில் வீற்றிருக்கின்றனர். அதனால், இந்தத் தலம் கிரக தோஷ நிவர்த்தித் தலமாகத் திகழ்கிறது. தேய் பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு அபிஷேகம் நடக்கிறது. சாப, பாப, தோஷ நிவர்த்தி தரும் சுவாமி இவர். 

இத்தல முருகனை அருணகிரிநாதர் பாடியுள்ளார். பெருமானை ஞானசம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடியுள்ளனர். அவ்வகையில் 
தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 
இது 5வது தலமாகத் திகழ்கிறது.


கோயில் திருவிழாக்கள்: 

சித்ரா பெüர்ணமி, 
வைகாசி பிரம்மோற்ஸவம், 
ஆனித் திருமஞ்சனம், 
ஆடி பௌர்ணமி, 
ஆவணி மூலத் திருவிழா, 
நவராத்திரி, ஐப்பசி பெüர்ணமி அன்னாபிஷேகம், 
மார்கழி திருவாதிரை, 
தைப் பூசம், 
மகா சிவராத்திரி, 
பங்குனி உத்திரம்.... ஆகியன.

திறக்கும் நேரம்: காலை 5.30-12.30 வரை, மாலை 4-8.30 வரை.

தகவலுக்கு: 0431-2768546

இருப்பிடம்: திருச்சி நகர்- உறையூரில்.

மூர்த்தி சிறிது;கீர்த்தி பெரிது!




வளம் செழிக்கும் பாலாற்றின் கரையில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றுதான் அவளூர் அருள்மிகு காமாட்சியம்மன் உடனுறை சிங்கேஸ்வரர் ஆலயம். தாம்பரம் - காஞ்சி சாலையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது அவளூர்.

பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட பெருமை உடையது இந்த சிவாலயம். தூண்களுடன் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கர்ப்பகிரகம் என்று அழகுற அமைந்துள்ளது. ""மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது'' என்ற சொல்லிற்கு ஏற்ப மூலவ மூர்த்தியான லிங்கமும், அம்பாளும் உருவங்களில் மிகச் சிறியதாய் காணப்பட்டாலும் பேரருளுடன் திகழ்கிறார்கள். சுவாமியின் மீது தினமும் சூரிய கிரணங்கள் பட்டு வழிபாடு செய்யும் வகையில் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு துர்க்கையும், நந்திகேஸ்வரரும் ஆலயத்தில் வெளிப்புறமாகக் காட்சி தருகிறார்கள்.

மன வலிமை, வேலை வாய்ப்பு வேண்டி இவ்வாலயத்தில் பக்தர்கள் வழிபடுகிறார்கள். மூன்று பிரதோஷங்கள் தொடர்ந்து சிங்கேஸ்வரரை வழிபடுபவர்களுக்கு திருமணத் தடை நீங்கும். காஞ்சி மகாசுவாமிகள் பல வருடங்களுக்கு முன்பு காமாட்சியம்மனுக்கும், சிங்கேஸ்வரருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டுள்ளார்கள்.

ஒரு காலத்தில் ஆண்டு முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்த இந்த சிவாலயம் காலப்போக்கில் பராமரிப்பின்றி சிதிலமடைந்துவிட்டது. தற்போது இந்து சமய அறநிலையத் துறை ஆதரவுடன் இவ்வாலயத்தின் திருப்பணிகளை மேற்கொண்டுள்ளனர் கிராம மக்கள். புதியதாக கன்னிமூல கணபதி, சூரிய சந்திரர்கள், பைரவர், கோஷ்ட தெய்வங்கள், சண்டிகேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களின் விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கர்ப்பகிரக விமானம் அமைப்பதற்கான முயற்சியும் நடந்துவருகிறது.

மேலும் தகவலுக்கு: 99621 43347.

சுயம்பு விநாயகர் - கணபதி புலே

சுகம் தரும் சுயம்பு விநாயகர்  கணபதி புலே
வக்ரதுண்ட விநாயகர் - சென்னை
மகோதர் விநாயகர்       - ராமேஸ்வரம்
எகதந்த விநாயகர்          - கேரளா
கஜானன் விநாயகர்       - தஞ்சாவூர்
விக்கத் விநாயகர்           - காஷ்மீர்
விக்னராஜ் விநாயகர்    - இமாலயம்
தூம் வம விநாயகர்        -  தீபெத்
லம்போதர விநாயகர்    - மகாராஷ்டிரா
இவர்கள் பாரத நாட்டன் அஷ்ட விநாயகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்

அஷ்ட வினாயகர்களின் தலைவர்

இந்த அஷ்ட விநாயகரை  பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம்,
படித்திருப்போம், பார்த்தும் இருப்போம்.  ஆனால் இவர்களை விடவும்
மகவும் பெருமை மிகுந்தவர், மும்பையில் இருந்து 350 கிலோ மீட்டர்
தூரத்தில் உள்ள ரத்தினகிரி என்ற மாநகரில் கணபதி புலே என்ற இடத்தில்
சுயம்பு விநாயகராக  வீற்றிருக்கிறார். கணபதி புலே என்ற திருநாமத்துடன்
தான் இந்த விநாயக அழைக்கப் படுகிறார். இவரே அஷ்ட வினாயகர்களுக்கு
எல்லாம் தலைவர் என்றும்  கூறப்படுகிறது.



சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு, மொகலாயர் ஆட்சி காலத்தில் கொங்கன்
மலையடிவாரத்தில் தாழம்பூ செடிகள் சூழ்ந்த காட்டில் மன்னன் அடியில்
இருந்து, கனபதிபுலே விநாயகர் சுயம்புவாக தோன்றினார். இவ்விடத்தில்
அந்த காலத்தில் பால்பாத் பிடே  என்ற பிரமணர் ஒருவர் வசித்து வந்தார்
இவருக்கு மொகலாய ஆட்சியில் துன்பங்கள் ஏற்ப்பட்டன.

அசரீரியாக தோன்றினர்

இருப்பினும் திடமான மனத்துடன்  சில காலம்  உண்ணாமல், தாழம்பூ காட்டில் அமர்ந்து மங்கள மூர்த்தியான விநாயகரை நோக்கி வழிபட்டு தவமிருந்து வந்தார் . அங்கு அசரீரியாக தோன்றிய விநாயகப்பெருமான். இங்கே நான்
ரூபமற்றவனாக இருக்கறேன். என்னுடைய பக்தர்களின் கோரிக்கையை நிறைவேர்ற்ற உள்ளேன் . எனவே என்னை நினைத்து பூஜித்து வா உன்னுடைய கஷ்டங்களை போக்கி அதிலிருந்து விடுவிக்கிறேன் என்றார்.

இந்த நிலையில் ஒரு சமயம், பால்பத் பிடே வளர்த்து வந்த பசு ஓன்று
பால் காராமல் இருந்தது. அதற்க்கு சிகிச்சை அளித்தும் அந்த பசு பால்
கறக்க வில்லை. குறிப்பிட்ட அந்த பசு மட்டும் பால் காரைக்காமல் இருப்பதற்கான காரணம் தெரியாமல் மாடு மேய்ப்பவன் திணறினான்
ஒருநாள் மாடு மேய்ப்பவன், பசுவின் நடாடிக்கையை கவனிக்க குறிப்பிட்ட
அந்த பசுவை பின்தொடர்ந்தான்.

பால் கரந்த பசு

அப்போது  பசு ஒரு இடத்தில் தன்  மடியில் இருந்து பாலை தானாகவே
சுரந்தது, ஆச்சரியம் அடைந்த மேய்ப்பன் இதை பால்பத் பிடே விடம்
தெரிவித்தான். உடனே அவர் அந்த இடம் சென்று அந்த இடத்தை சுத்தம்
செய்து பார்த்தார் அப்போது அங்கே கணபதி சுயம்புவாக தோன்றினர்.
இதைக்கண்டு மெய் சிலிர்த்த பால்பத் பிடே உடனடியாக அங்கு ஒரு
கோவிலை எழுப்பினார், கணபதி புலே என்ற நாமத்துடன் விநாயகரை
வழிபட தொடங்கினார்.

'கணா' என்றால் காப்பவன், 'புலே' என்றால் குகை. மலைக் குன்றுபோல்
அமர்ந்து இந்த பிரபன்ஜத்தை காப்பவன் என்பதால் 'கணபதி புலே' என்ற
பெயர் பெற்றது. பழமை வாய்ந்த இந்த கோவில் கணபதி சிலை,
மலையடிவாரத்தில் தான் தோன்றியாக வந்தது. சுயம்பு சிலையை சுற்றிலும்
பூக்கள் நிறைந்த செடிகள் சூழ்ந்திருக்கின்றன

ஜொலிக்கும் கோவில்

இந்த  கணபதிக்கு, விஷேச நாட்களில் மகா பிரசாதம் தயார் செய்வதற்காக
ஒரு பெரிய சமையல் அரை உள்ளது. விழா நாட்களில் கோவிலின் முன் வாயிலில் 17 தீபத் தூண்களில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஜெக  ஜோதியாய்
ஜொலிக்கும். தசரா தீபாவளி, கார்த்திகை, குடிபடவா சங்கஷ்டி போன்ற
விழா காலங்களில் மகா பிரசாதம் வழங்கப்படும் .


அப்போது  பசு ஒரு இடத்தில் தன மடியில் இருந்து பாலை தானாகவே
சுரந்தது, ஆச்சரியம் அடைந்த மேய்ப்பன் இதை பால்பத் பிடே விடம்
தெரிவித்தான்.