தேவி மஹாத்மியம் (பாடல்)
நவராத்திரியின் ஒன்பது இரவுளும் அம்மனை பாடி வழிபடுவது சிறந்தது. இந்தக் காலத்தில் மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநுõறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல், மார்க்கண்டேய புராணத்தில் எழுநுõறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் என்னும் திருக்கதையைப் படித்தலும், கேட்டலும் முறையாகப் பாராயணம் செய்தாலும், மலைகளும் வனங்களும் காடுகளும் கொண்ட இப் பூமண்டலம் உள்ளவரை இவ்வுலகில் அவருடைய புத்திர பௌத்திர ஸந்ததி நீடித்து நிலைபெறும். உடல் வாழ்க்கையின் முடிவில் தேவர்களுமடைதற்கரிய உயர்ந்த அழியாப்பதவியை மாஹமாயையின் பிரஸாதத்தால் எய்துவர். 700 ஸ்லோகங்கள் கொண்ட தேவி மஹாத்மியத்தை முழுவதுமாக படிக்க இயலாதவர், தேவி மஹாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கும் சொல்லப்பட்டிருக்கும் தேவியின் சரிதத்தை, புகழை, அமெரிக்க டாக்டர் சங்கர் குமார் தன் பாணியில் வாசர்களுக்கு தர முயன்றுள்ளார்.
அனைவருக்கும் தேவி ராஜ ராஜேஸ்வரியின் அருள் குறையின்றிக் கிடைக்கட்டும்.
காப்பு
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
உலகாளும் அன்னையவள் ஒன்பது நாள் உலாவந்த
உன்னதத்தைப் பாக்களிலே படித்திடவே துணிகின்றேன்
என்னவிங்கு சொல்வதுவோ எப்படித்தான் பாடிடவோ
என்னருமைத் தேவியிவள் செய்திருந்த அற்புதத்தை
அறியாதான் பாடவந்தேன் அம்மை திருக்கதையை
தெரியாதான் பாட வந்தேன் தேவி திருக்கதையை
குற்றமிங்கு கொள்ளாமல் குணம்மட்டும் கொண்டிருக்க
ஏற்றியும்மை வேண்டுகிறேன் கணபதியின் துணைகொண்டு
ஆனைமுகத்தோனை அகிலமெலாம் காப்பவனை
பானைவயிற்றோனை பக்தர்களைக் காப்பவனை
மூஷிகத்தில் வீற்றிருந்து மோனநிலை அருள்வோனை
வந்தித்துத் தொடங்கிடுவேன் கலைவாணி அருள்வாயே!
வெண்டாமரை வீற்றிருக்கும் வாணி சரஸ்வதியே
அண்டிவந்த பக்தருக்கு அருள்ஞானம் தருபவளே
சொற்குற்றம் பொருட்குற்றம் ஏதுமிங்கு வாராது
தேவிதிருக்கதையைத் திருத்தமாய் அருளிடம்மா!
குருவுக்கும் குருவாக என்னுள்ளில் இருப்பவனாம்
என்னப்பன் முருகனையும் இக்கணத்தில் துதித்திடுவேன்!
ஏறுமயில் ஏறிவந்து என்னுள்ளம் வீற்றிருப்போன்
ஆறுமுகசுவாமி நின்றன் அடிபணிந்து தொடங்குகிறேன்!
பாடலிலே பழுதின்றி பத்திரமாய்க் காத்திடுவாய்
நாடிவரும் என்நாவில் நல்லதமிழ் தந்திடுவாய்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம் !
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்
தேவி திருக்கதை 1 - கதை பிறந்த கதை!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
முதலாக இக்கதையை மார்க்கண்டேய மாமுனிவர்
இதைக்கேட்க ஆவலுடன் மரக்கிளையில் வந்திருந்து
பறவையென வீற்றிருந்த ஜைமினி முனிவருக்கும்
அவர்தம் சீடருக்கும் அன்புடனே சொல்லிவைத்தார்
சுரதன்எனும் ஓரரசன் சுற்றம்செய்த துரோகத்தால்
நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டுக் காட்டை அடைந்தான்
வழியிலொரு வணிகனிடம் செல்வதெங்கே எனக்கேட்டான்
தன்மனைவி மக்களாலே தானுமிங்கேத் துரத்தப்பட்ட
தன்சோகக் கதையொன்றை ஸமாதியெனும் அவ்வணிகன்
சொன்னதனைக் கேட்டமன்னன் ஆதரவாய் அவன்தோளில்
கைபோட்டு நடந்தபடி அடுத்தொன்று சொல்லலானான்
இத்தனையும் எம்மக்கள் எமக்கிங்கு செய்திடினும்
இன்னுமிங்கு என்மனமும் அவர்நலனே நாடிடுதே!
ஏனென்று தெரியவில்லை! ஏனிதெனப் புரியவில்லை
அதுகேட்ட வணிகனுமே எனக்குமிங்கு அந்நிலையே!
எதுவென்றாராய என்னாலும் முடியவில்லை என்றான்
அப்போது காட்டினிடைத் தவமிருந்த ஸுமேதஸரெனும்
முனிவரைக் கண்டவுடன் இவரிடமே கேட்டிடுவோம்!
எனவிருவரும் முடிவுசெய்து அவரடியைப் பணிந்தனராம்
ஐயமொன்று ஐயனே! தீர்த்துவைக்கணும் மெய்யனே!
என்றபடி அடிபணிந்த இருவரையும் அமரவைத்து
கேளப்பா! இதுவெல்லாம் விஷ்ணுமாயை என்னுமொரு
இறையவளின் லீலையப்பா! நடப்பதெல்லாம் மாயையென
நீயுணர வேண்டித்தான் அன்னையவள் செய்கின்றாள்!
அவளாடும் நாடகத்தை நானுரைக்கக் கேட்டிடுவாய்!
மூன்றுவகை அரக்கரையே மாயையிவள் அழித்திட்டாள்!
ஒவ்வொன்றாய்ச் சொல்லிடுவேன்! ஒருமையுடன் கேட்டிடுக!
எனச்சொல்லி விரிவாகத் திருக்கதையைத் தொடங்கலானார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
முதல் கதை மது-கைடப வதம்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
ஆதியிலே பரந்தாமன் ஆழ்துயிலில் ஆழ்ந்திருந்தான்
ஆதிசேஷன் படுக்கையிலே அமைதியாகத் துயிலிருந்தான்
பாற்கடலிற் பள்ளிகொண்டப் பரந்தாமன் துயிலிருந்தான்
அன்னைபரா சக்தியவள் அருட்செயலால் துயிலிருந்தான்
அகிலமெல்லாம் ஆளுபவள் ஆணையினால் துயிலிருந்தான்
அண்டமெலாம் காப்பவளின் சொல்லுக்காய்த் துயிலிருந்தான்
யோகத்துயில் ஆழ்ந்தவனின் லீலைகளும் துயிலுற்றன
துயிலிருந்தவன் செவியினின்றுப் பிறந்திட்டார் இருவரக்கர்
மதுஎன்னும் ஓர்அரக்கன் கைடபன்எனும் மறுஅரக்கன்
திருமாலின் தன்னினின்று தோன்றியதால் கொண்டிட்டார்
தான்என்னும் அகங்காரம் தமதென்ற மமகாரம்
அகங்காரம் தலைக்கேற உயர்த்திட்டார் தம்பார்வை
நாபியின் கமலத்தில் தானாக முளைத்திட்டப்
பிரமனின் உருமீது பட்டதவர்ப் பார்வையங்கு
படைப்பினைப் பிறப்பிக்கப் பிரமனவன் முனைகின்ற
நேரத்தில் மதுகைடபர் தொந்தரவு செய்திட்டார்
தன்தொழிலைச் செய்யவிடாது தடுக்கின்ற அரக்கர்களைத்
தன்னால் இயன்றவரைத் தடுத்துக் களைத்திட்டார்
இனிமேலும் படைப்பிதனைச் செய்திடலும் ஆகாது
எனவுணர்ந்த பிரமனவன் திகைத்திட்டார் விழித்திட்டார்
நடப்பதெல்லாம் நாயகியின் லீலையெனப் புரிந்திட்டப்
பிரமனும் தேவியவள் திக்கை நோக்கித் துதித்திட்டார்
என்பணியை யான் செய்ய எனக்கிங்கே உதவிடுக
எனச்சொல்லிப் பலவாறு துதிகளினால் வேண்டிட்டார்
விஷ்ணுமாயா மனமகிழ்ந்தாள் அப்படியே என்றிட்டாள்
திருமாலின் துயில்விட்டுத் தான்நீங்கிச் சென்றிட்டாள்
துயில்கலைந்தத் திருமாலும் தேவிதனை வணங்கிவிட்டுத்
தானெழும்பிச் சென்றிட்டார் அரக்கர்வதம் செய்திட்டார்
மதுகைடப அரக்கருடன் ஆயிரமாண்டு போரிட்டபின்
அரக்கர்தமை அழித்திட்டார் படைப்பினையே தொடரச் செய்தார்
தமஸ்என்னும் குணத்தை அரக்கரிவர் கொண்டதனால்
தானுமந்தக் குணம் கொண்டு அன்னையிவள் வதம்செய்தாள்!
முதலாம் கதையிதுவே! முழுதுமாய்ச் சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
முதலாம் கதை முற்றிற்று!
விஷ்ணுமாயை நீங்கிய திருமாலின் தோற்றம்
இரண்டாம் கதை -மஹிஷாஸுர வதம்
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
மஹிஷனெனும் ஓர்அசுரன் மண்டலத்தை வாட்டி வந்தான்
தனக்கெனவேப் பலஉருவம் எடுத்துவந்துப் பாழ்செய்தான்
அனைத்தினிலும் முதன்மையவன் தாங்கிவந்த எருமையுரு
அனைவருமேநடு நடுங்கும் கொடியதோர் பேருருவம்
மனிதரையும் தேவரையும் தனதடிமை யாய்க்கொண்டான்
தனைஎதிர்த்த அனைவரையும் தரைமட்டம் ஆக்கிவிட்டான்
இந்திரனும் பயந்தொளிந்தான் தேவரெலாம் மயங்கிநின்றார்
அண்டபகி ரண்டமெலாம் நடுங்கிடவே அவன்நடந்தான்
இதுவரையில் இவன்போல அசுரனிங்கு இருக்கவில்லை
எனவஞ்சி உலகோரும் நடுங்கிடவே அவன் திரிந்தான்
முக்கடவுள் அடியினையே தேவருமே பணிந்து நின்றார்
அடைக்கலமே நீரென்று அவரடியில் தாள்பணிந்தார்
அசுரஉடல் எருமைத்தலை குத்திவிடும் கொம்பிரண்டு
எவராலும் வெல்லவொண்ணா வரம்பெற்ற இறுமாப்பு
அஹங்காரம் தலைக்கேறப் புரிந்திட்டான் அட்டகாசம்
மஹிஷன்பெற்ற வரமதனால் மூவருமே திகைத்திருந்தார்
தனிவரத்தின் மகிமையதால் மஹிஷனுமே பலம் பெற்றான்
இவ்வரத்தை அழித்திடவே தம்முடைய சக்தியினை
ஒன்றாகச் சேர்த்தளித்துப் பணிந்திட்டார் மூவருமே
தானளித்த சக்தியெலாம் மீண்டுமங்கே தான்கொண்டு
சக்தியவள் கிளர்ந்தெழுந்தாள் தீதழிக்க மனம்கொண்டாள்
மஹிஷாசுர மர்த்தினியாய் அவதாரம் செய்திட்டாள்
சிங்கத்தை வாகனமாய்ச் சக்தியவள் கொண்டிருந்து
மஹிஷனுடன் போரிடவே பல கைகள் தான்கொண்டாள்
போரினிலே வேகமதாய் பகைவரையே அழிக்கையிலே
மஹிஷனையும் கொன்றழித்து மனிதகுலம் காத்திட்டாள்
எருமைக்கிடா தலைவீழ எழுந்ததொருத் தீயசக்தி
தன்பலத்தால் அதையழித்துத் தரணியதை வாழ்வித்தாள்
எருமையதன் உருத்தரித்த அசுரனையும் வதைத்திட்ட
அன்னையிவள் பெருங்கருணை சொல்லிடவும் எளிதாமோ!
ரஜஸ்என்னும் துர்க்குணத்தை அன்னையிவள் அழித்திட்டாள்
அனைத்துலகும் வாழ்ந்திடவே அன்னையிவள் அருள் செய்தாள்!
துர்க்கையிவள் மஹிஷாஸுர மர்த்தினியாய் வந்திட்ட
பெருமையினைப் போற்றிடுவோம்! ஜெயெஜெயெவெனப் பாடிடுவோம்!
இரண்டாம் கதையிதுவே! இன்பமுடன் சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
இரண்டாம் கதை முற்றிற்று.
மூன்றாம் கதை சும்ப-நிசும்ப வதம்
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக் கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
மூன்றாம் முறையாக அன்னையிவள் செய்திட்ட
அற்புதத்தைப் பாடிடுவோம் அவள் பெருமை கூறிடுவோம்
சும்பன்எனும் ஒருவரக்கன் நிசும்பன்எனும் அவன்தம்பி
தாம்பெற்றப் பெருவரத்தால் தேவரையே அடக்கியாண்டார்
மூவுலகும் நடுங்கிடவே கொடுமையெலாம் செய்துவந்தார்
அவர்கொடுமை தாங்காது அலறிட்ட வானவரும்
உமையன்னை பதம்நாடி மலையெங்கும் தேடினரே
இமயத்துமலைகளிலே அலைந்திருந்த உமையன்னை
அவர்க்கிரங்கி அம்பிகையாம் கௌஸிகையாய் வடிவெடுத்தாள்
அவளழகைக் கண்டிட்ட சண்டமுண்டன் எனுமரக்கர்
அரக்கர்கோன் தமையடைந்து விவரமெலாம் சொல்லிட்டார்
சண்டமுண்டரைத் துõதனுப்பி தம்விருப்பம் சொலவனுப்ப
தேவியிடம் தமதரசர் பெருமையினை மிகச்சொல்லி
மனையாளாய் வரவேண்டிப் பக்குவமாய் எடுத்துரைத்தார்
தனைவெல்லும் ஒருவனுக்கே மாலையிடும் எண்ணத்தைக்
கௌஸிகையும் சொல்லிடவே அரக்கனிடம் திரும்பிவந்தார்
செய்தியினைக் கேட்டறிந்த மூடரவர் வெகுண்டெழுந்து
பலவந்தமாய்க் கூட்டிவரத் தம்மந்திரி துõம்ரலோசனனை
அனுப்பிடவும் அவனங்கே சென்றவளின் கரம்பற்றி
இழுத்திடவும் துணிந்திடவே, கோபமுற்ற அன்னையவள்
ஹூங்கார ஒலியினால் எரித்துச் சாம்பராக்கினளே
சேதிகேட்ட அரக்கனுமே சண்டமுண்டர் இருவரையும்
சேனையுடன் அனுப்பிவைக்க அன்னையவள் சீற்றமுற்றாள்
மைவண்ணக் கண்ணழகி பெருஞ்சீற்றம் கொண்டதனால்
குண்டலினியின் கண்ணினின்று புறப்பட்ட அன்னைசக்தி
காளியென்னும் கோரவுரு கொண்டங்கு வெளிவந்து
சண்டமுண்டர் சிரம்கொய்து அதனின்றுப் பீறிட்ட
குருதிகுடித்து, அரக்கர்களின் தலைகொண்டு தேவியவள்
காலடியில் சமர்ப்பிக்கத் துõயவளும் மனமகிழ்ந்து
சாமுண்டா எனும்பெயரைக் காளிக்குச் சூட்டினளே
சண்டமுண்டர் சாய்ந்துவிட்டச் சேதிகேட்ட சும்பனுமே
ரக்தபீஜன் என்பவனைப் போர்புரியப் பணித்திட்டான்
ரக்தபீஜன் எனுமரக்கன் மூர்க்கமாகச் சண்டையிட்டான்
இவன்பெற்ற பெருவரமோ எவரையுமே வியப்பிலாழ்த்தும்
தன்னுதிரம் ஒரு துளியும் பூமியிலே விழுமாயின்
அதனின்று மற்றுமொரு ரக்தபீஜன் தோன்றிடுவான்
எனும்வரத்தைப் பெற்றதனால் தனைவெல்ல யாருமில்லை
என்கின்ற தலைக்கனத்தில் தாறுமாறாய்ச் சண்டையிட்டான்
கொடுமையான அரக்கனிவனை வெல்லும்வழி யாதெனவே
தேவியவள் சிந்தித்தாள் காளியெனச் சண்டையிட்டாள்
அகலமான வாயினிலே தொங்குகின்ற நாக்குடனே
அசுரனிவன் மார்பிளந்து உதிரமொரு துளியேனும்
நிலத்தடியில் வீழாமல் நாவெடுத்துக் குடித்திட்டாள்
பிறவரக்கர் தோன்றுவதை தன்மதியால் தடுத்திட்டாள்
ரக்தபீஜ அரக்கனவன் கொடுஞ்செயலை முறித்திட்டாள்
இவர்க்கெல்லாம் அரசரான அண்ணன்தம்பி இருவருமே
படையனைத்தும் திரட்டியே ஆரவார முழக்கமுடன்
ஆயுதங்கள் ஏந்தியே அன்னையெதிர் தோன்றிட்டார்
நீண்டதோர்ப் போர் நிகழ்த்த அன்னையவள் உளம்கொண்டாள்
தன்சக்தி அனைத்தையுமே பலமடங்காய்ப் பெருக்கியவள்
தனக்குதவி செய்யவென எட்டு சக்தி படைத்திட்டார்
நாராஷ்மி,வைஷ்ணவி, குமாரி, ப்ராஹ்மி, வராஹி, ஐந்த்ரீ
சாமுண்டா எனும் காளி, அம்பிகா என்பதுவே அவர் பெயராம்
மாத்ரிகையர் எண்மருடன் தேவியவள் புடைசூழ
போர்க்களத்தில் நிசும்பனுடன் கோரமான போர்புரிய
பலகாலம் போர்புரிந்து நிசும்பனுமே மாண்டொழிந்தான்
தம்பியவன் மாண்டவுடன் சும்பனவன் தேவியிடம்
தனியளாய் வந்திடாது எண்மருடன் சேர்ந்துவந்துப்
போர்புரிதல் நியாயமாமோ நினைவெல்ல மட்டுந்தான்
நீகொண்ட சபதமது எனவுரைக்க அதுகேட்டுத்தேவியும்
யானின்றி எவருண்டு இவ்வுலகில் என்னிடமே
பிறந்தவரும் என்னையே சேர்ந்தடைவர் எனச்சொல்லி
எஞ்சிநிற்கும் சும்பனுடன் போர்புரியும் ஆற்றலுக்காய்
தான் படைத்த எண்மரையும் மீண்டும்உள்ளே சேர்த்திருந்தாள்
தனியளாகத் தேவியவள் சும்பனுடன் போர் செய்தாள்
கண்டவர்கள் அதிசயிக்க விண்ணவர்கள் வாழ்த்தொலிக்க
தேவியவள் செய்த போரில் சும்பவதம் நிகழலாச்சு
கொடுமரக்கன் மாண்டுபட்டான் தேவி சிரம் கொய்துவிட்டாள்
விண்ணவரும் மறையவரும் மண்ணவரும் வாழ்த்திநின்றார்
அன்னையவள் அகமகிழ்ந்து அனைவருக்கும் ஆசிதந்தாள்
மூன்றாம் கதையிதுவே! முடிந்தவரை சொல்லிவந்தேன்
உணர்ந்திங்கு கேட்டோரும் உன்னதத்தைத் தானடைவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
கதை முடிந்த கதை!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
தேவிதிருக்கதையைத் தீர்க்கமுடன் சொல்லிவந்த ஸுமேதஸரும்
மன்னனையும், வணிகனையும் வாழ்த்தியங்கு அனுப்பிவைத்தார்
திருக்கதையைச் செவிமடுத்த இருவருமே மனமுணர்ந்து
விஷ்ணுமாயை என்னுமிந்த அன்னையவள் தனைஎண்ணி
கண்மூடித் தியானித்து பலகாலம் தவமிருந்தார்
அன்னையவள் மனமிரங்கி அவர்முன்னே தோன்றிநின்று,
அவர் வேண்டும் வரமெல்லாம் அளித்தருளி மேலும் சொன்னாள்:
என் கதையை எவரொருவர் பக்தியுடன் படிப்பவரோ
படிப்பவரைக் கேட்டவரோ, மனமொன்றி எனை நினைந்தால்
அவர்வேண்டும் வரம் யாவும் நானவர்க்கு வழங்கிடுவேன்
இகலோக,பரலோக இன்பமெல்லாம்யானளித்து நற்கதியும் நான்தருவேன் !
என்றுரைத்து மறைந்திட்டாள் சர்வலோக ஜெகன்மாதா!
சகலருக்கும் வாழ்வளிக்கும் தேவி விஜயலக்ஷ்மி !
துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதியாக தேவியிவள்
செய்திட்ட அற்புதத்தை இதுவரையில் பாடிவந்தேன்.
படித்தவரும் கேட்டவரும் இகத்தினிலும் பரத்தினிலும்
பாக்கியத்தைத் தானடைந்து பேரின்பம் பெற்றிடுவார்!
தேவி திருக்கதையைச் சொல்லுவதும் ஓரின்பம்
செவியார அதைக்கேட்டுக் களிப்பதுவும் பேரின்பம்!
தேவியிவள் திருவடிவைப் பாடுவதும் பேரின்பம்!
ஆவியதில் கலந்தவளைப் போற்றுவதும் தனியின்பம்!
கார்மேகம் போலிங்கேக் கூந்தலதை விரித்திருப்பாள்!
கார்குழலாள் சடைவிரிக்கச் சகலமுமே அதிலடங்கும்!
கற்றையொன்றுப் புரளுகின்ற நெற்றியதில் சுட்டி மின்னும்!
வெற்றியதைச் சொல்லிவந்து வாழ்வளித்துத் தந்துவிடும்!
முன்நுதலில் துலங்கிவரும் குங்குமத்தைப் பார்த்திருந்தால்
முன்வந்த தீமையெலாம் பின்னொழிந்து ஓடிவிடும்!
வில்போலும் புருவமது வேல்விழியைக் காட்டிவிடும்!
சேல்போலத் துள்ளுகின்ற விழியிரண்டும் பூத்துநிற்கும்!
கண்ணழகைச் சொல்லிடவோ காலமிங்குப் போதாது!
விண்ணவரும் தவித்திடுவார் சின்னவன்யான் என்சொல்வேன்!
எடுப்பாக வளைந்திருக்கும் நாசியிலே ஒளிவீசும்
மூக்குத்திச் சிவப்பினிலே முன்வினைகள் பறந்தோடும்!
இளம்பஞ்சுப் போலவிங்கு மெலிதாகச் சிவந்திருக்கும்
மென்பட்டுக் கன்னங்கள் மெய்ம்மறக்கச் செய்திருக்கும்!
தாம்பூலச் சிவப்பழகா தன்மூக்குச் சிவப்பழகா - எனத்
தத்தைகளும் அன்னையிவள் செவ்விதழை ஆழ்ந்திருக்கும்!
முத்துப்பல் மோஹனமே! முத்துநகைச் சித்திரமே!
மொழிபேசும் கோமளமே! முகத்தழகை என்சொல்வேன்!
குழலங்கு மூடிவரும் காதுமடல் குண்டலங்கள்
வழிவழியாய் வந்திருக்கும் தீதெல்லாம் அசைத்துவிடும்!
வெண்சங்குக் கழுத்தழகு கமுகொன்றைக் காட்டிவிடும்
முன்மார்பில் தவழ்ந்திருக்கும் முலையிரண்டும் முந்திவரும்!
அமுதக் கலசமென அசைந்திருக்கும் மென்முலைகள்
தமிழமுதம் தந்துவிடத் தவித்திருக்கும் மார்பினிலே!
செவ்வல்லிக் கையிரண்டும் சேர்த்தணைத்து முத்தி தரும்!
செவ்விரல்கள் குழைத்திருக்கும் செம்பவளம் தோற்றுவிடும்!
இல்லையென்று சொல்லிவிடும் இடையங்குத் தேடிவிட
இல்லையெனப் போய்விடுமே இருந்திட்டப் பாவமெலாம்!
நாபிச் சுழலினிலே நற்கதியும் கிட்டிவிடும்
ஆவிக்கும் இதமளிக்கும் அற்புதமும் தெரியவரும்!
நீள்துடைகள் நெஞ்சமதில் நர்த்தனங்கள் ஆடிவரும்
கால்விரல்கள் நடந்துவரும் அழகினிலே எனைமறப்பேன்!
நற்கலவை தோய்த்திருக்கும் நறுமணமும் கூந்தலிலே!
சொற்கவிகள் பிறந்திருக்கும் சுந்தரியாள் கண்களிலே!
சந்திரனும் சூரியனும் கண்ணிரண்டில் துலங்கிடவே
செந்தாமரைப் பதமெடுத்து சித்திரமே நீவருவாய்!
செவ்விதழ்கள் சிந்திவரும் புன்னகைக்கோர் விலையில்லை
செங்கழுத்தில் சிறந்திருக்கும் பொன்மாலை அசைந்திருக்கும்!
பத்துவிரல் மோதிரமும் எத்தனை பிரகாசமது
கொத்துமலர்ப் பூங்குழலில் கோடிவரும் வாசமது!
மூக்குத்தி புல்லாக்கு முகத்தழகைக் கூட்டிவிடும்
பூக்குத்தி நின்றிருக்கும் சூடாமணி ஒளிவீசும்!
ரத்தினப் பதக்கமும் மோஹன மாலையழகும்
சுத்தமான செவிகளிலே செங்கமலம் சிரித்திருக்கும்!
கையிரண்டில் கங்கணங்கள் மார்பணையும் மாணிக்கப்பதக்கம்
இடுப்பினிலே ஒட்டியாணம் காலிரண்டில் தண்டைகொஞ்சும்!
மெட்டியொலி ஓசையிலே மேதினியும் உயர்ந்துவிடும்
கச்சிதமாய் உடலணைக்கும் காஞ்சிப்பட்டு காத்துவிடும்!
இடையணியும் மேகலையும் இடரனைத்தும் தள்ளிவிடும்
நடையழகைக் கண்டிருந்தால் நல்லனவும் பிறந்துவிடும்!
பொன்கொலுசு ஒலியெழுப்பப் புத்தொளியும் சேர்ந்துவிடும்
மின்னலிடை நெளிவினிலே மயக்கங்கள் தெளிந்துவிடும்!
மருதாணிச் சிவப்பிருக்கும் மலர்கைகள் ஆட்டிவர
செம்பஞ்சுப் பாதமெடுத்து சித்திரமே நீவருவாய்!
என்னவளே என்தாயே! ஏற்புடைய ஏந்திழையே!
அன்னநடை நீநடந்து என்முன்னே வருவாயடி!
அன்புடனே நினையழைத்து ஆராதனை யான்செய்ய
அன்புருவாய் வருவாயடி! ஆதிசிவன் தேவியளே!
தேவியிவள் திருவடிவைப் பாடுவதும் பேரின்பம்!
ஆவியதில் கலந்தவளைப் போற்றுவதும் தனியின்பம்!
தேவி திருக்கதை நிறைவுற்றது. சுபம்.
No comments:
Post a Comment