Thursday, October 9, 2014

#நின்ற_திருக்கோலத்துடன்_திகழும்_நந்தி - 

திருவாரூர்

பிரதோஷ வேளைகளில் சகல தேவ கணங்களும் சிவ தரிசனம் செய்வதாக ஐதீகம். 

அவர்களை ஒழுங்கு செய்து திருக்கயிலையில் அமைதியைக் காப்பவர் நந்தியம்பெருமான்!.. 

அதனாலேயே அவர் அதிகார நந்தி எனும் திருப்பெயரினை உடையவர்.

அத்தன்மையை உடையவர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அதனைச் செய்ய முடியாது.

அங்கும் இங்கும் ஓடி அல்லது ஸ்திரமாக ஓரிடத்தில் இருந்து கொண்டு தான் மெய்க்காவல் பணியைச் செய்ய இயலும்.

அப்படி - நின்ற திருக்கோலத்துடன் நந்தி திகழும் திருத்தலம் - திருஆரூர்.

ஆரூரில் ஏன் நந்தியம்பெருமான் நின்று கொண்டிருக்க வேண்டும்!..

முப்பத்து முக்கோடித் தேவர்களும் சர்வ சதாகாலமும் - வீதி விடங்கப் பெருமானைத் தரிசித்து இன்புற நெருக்கியடித்துக் கொண்டு நிற்பதனால்!..

சப்த விடங்கருள் முதலானவர் - ஆரூர் வீதிவிடங்கப் பெருமான்!..

ஆரூர் எப்போது தோன்றியது!.. - என அந்த இறைவனிடமே வியந்து கேட்பவர் - அப்பர் பெருமான்.

"ஒருவனாய் உலகேத்த நின்ற நாளோ
ஓருருவே மூவுருவம் ஆன நாளோ
கருவனாய்க் காலனைமுன் காய்ந்த நாளோ
காமனையுங் கண்ணழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும்விண்ணுந் தெரித்த நாளோ
மான்மறிக்கை ஏந்தியோர் மாதோர் பாகந்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ
திருஆரூர் கோயிலாக் கொண்ட நாளே!.."

அந்த அளவுக்குப் பழைமையான திருத்தலம்.

சோழர்களின் முதல்வர் எனப்படும் முசுகுந்த சக்ரவர்த்தி ஆட்சி செய்ததும் மாமன்னன் மனுநீதிச் சோழன் ஆட்சி செய்ததும் ஆகிய - திருத்தலம்.

பசுங்கன்று மாள்வதற்குக் காரணமான தன் மகனைத் தேர்க் காலில் இட்டு - நீதியை நிலை நாட்டிய பெருமகன் - மனுநீதிச் சோழன்.

சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் திருத்தலங்களுள் ஒன்று.

அத்துடன் அவர்களுக்கு தில்லைத் திருச்சிற்றம்பலம் போல அபிமான திருத் தலம் - திரு ஆரூர்.

சமயாச்சார்யார்கள் - நால்வரும் பாடிப் பரவிய திருத்தலம்.

பூங்கோயில் எனப்படும் - இத்திருத்தலத்தில் வருடம் முழுதும் விசேஷங்கள் நிகழ்கின்றன.

ஈசன் சுயம்பு மூர்த்தி. புற்று உருவானவர். எனவே- மூலவர் வன்மீக நாதர் புற்றிடங்கொண்டார் என்பன திருப்பெயர்கள்.

வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கின்றது. அபிஷேகங்கள் கிடையாது.

ஐயனின் கருவறையை திருமூலட்டானம் - என்கின்றார் திருநாவுக்கரசர்.

வீதி விடங்கரின் சந்நிதியில் வெள்ளிப்பேழைக்குள் இருக்கும் ஸ்படிக லிங்கத்திற்கு தான் அபிஷேகம். வீதிவிடங்கரின் அருகில் பிரியாது இருப்பவள் - அல்லியங்கோதை.

இந்த சந்நிதியில் தான் நந்தியம் பெருமான் நின்ற வண்ணம் விளங்குகின்றார்.

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''

No comments:

Post a Comment