Friday, October 10, 2014

பழநி முருகனை தரிசித்தால்.

 
அகத்தியர், தன் நாடி ஜோதிடத்தில்.பழநிமலை மேல் வீற்றிருப்பவர் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி. கலி பகவானை விரட்ட, கையில் தர்மக்கோல் தாங்கியிருக்கிறார். கௌபீனம் என்னும் கோமணத்துடன், சந்யாசி கோலம் கொண்டு நவபாஷாணத்தால் ஆன மேனியுடன் அருள் பாலிக்கிறார். இடும்பன் என்ற அசுரன் சுமந்து வந்த சக்திகிரியில், ஞானப்பழம் வேண்டி வந்த மனச்சுமையை முருகன் இறக்கி வைத்த இடம்தான் பழநிமலை எனப்படுகிறது.

எனவே இடும்பனுக்கு முருகன் முதல் பூஜையை தந்தருளினார். இடும்பனைத் தொழுத பின்தான் முருகனை தரிசிக்கவேண்டும். இது இத்தல மரபு. இடும்பனைத் தொழுதால் சகல விதமான பித்ரு தோஷமும் விலகும். முன்னோர்கள் ஆத்மா நற்கதி அடையும் என்கிறார் போகர், தனது போக நாதநாடியில்.

திருமுருகன் நின்ற இடத்தில், ஒரு மூர்த்தியை நிறுவ எண்ணங்கொண்ட அகத்தியர் சீன நாட்டைச் சேர்ந்த காளிங்கநாதர், புலிப்பாணி சித்தரையும் அழைத்து வந்து, போகரிடம் தன் எண்ணத்தை வெளிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

நவரத்தினங்களை ஒன்றாக்கி நவகிரகங்களை ஒரே உருவில் செய்தால் என்ன சக்தி கிட்டுமோ அதைவிட சக்தி கூட்டி, அழகில் திருமகளைப்போல தண்டாயுதபாணியை, ஒரு தைப்பூச நன்நாளில் ஆரம்பித்து 16 ஆண்டுகள் சிரமப்பட்டு நவபாஷாண மூலவரை நிறைவாகச் செய்தார்.

தனக்கு ஞானப்பழம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் தீர்ந்த இடத்தில், அந்த நவபாஷாண சிற்பத்தை நிர்மாணித்தார். இவ்வாறு சிலையை உருவாக்குவதற்காக, பற்பல மலைகளிலிருந்தும் கடல்களிலிருந்தும் நவ பாஷாணங்களைக் கொணர்ந்தனர். புலிப்பாணியும் காளிங்கநாதரும் வான்வெளியில் பறந்து பல பாஷாணங்களையும் மூலிகைகளையும் கொண்டு வந்து சேர்த்தனர். போகரும் பல அரிய மூலிகைகளை சேகரித்து நவபாஷாணத்தைக் கட்டி எஃகை விட வலிமையுடைய மெழுகாகச் செய்து, தண்டாயுதபாணி சிற்பத்தை உருவாக்கினார்.

கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரம், பௌர்ணமி திதி, திங்கட்கிழமை அன்று முருகப்பெருமான், கனிக்காக கோபித்து நின்ற அதே இடத்தில் பிரதிஷ்டை செய்தார். அவருக்கு ஜோதி ஸ்வரூபமாய் காட்சி தந்தார் முருகன். காளங்கிநாதர், போகர், பாபாஜி, புலிப்பாணி ஆகியோர் இன்றும் கார்த்திகை ஜோதி அன்று குகையிலிருந்து வெளிப்பட்டு பக்தர்களோடு பக்தர்களாகக் கலந்து முருகனை வழிபடுகின்றனர்.

தண்டாயுதபாணி சுவாமியின் அடியில் உள்ள சுரங்கப்பாதை போகர் குகை வரைக்கும் நீண்டு பின் மலையுள் செல்கிறது. போகரும் கோரக்கரும் புலிப்பாணியும் தங்கம் செய்யும் வித்தை கற்றவர்கள். காளங்கிநாதரும் பாபாஜியும் நவரத்தின வித்தை தெரிந்தவர்கள். எனவே ஏராளமான பொக்கிஷத்தைக் கூட்டி சுரங்கத்தில் வைத்துள்ளனர்.

பற்பல மரகதலிங்கத்தை உற்பத்தி செய்து போகர் குகையுள் வைத்து பூஜித்தார். அதில் ஒன்றுதான் இன்று நாம் பழநியில் காண்பது.அகத்தியர், நக்கீரர், பாம்பாட்டி சித்தர், கோரக்கர், சிவ வாக்கியர், திருமூலர் என பற்பல சித்தர்கள்
நித்தியவாசம் செய்யும் தலம் பழநி.

பழநி முருகனை தரிசித்தால், ‘‘வற்றாத செல்வமும், இன்பமும், தடையிலா வெற்றியும், ஒரு பிணி இல்லா வாழ்வும் சேரும்” என்கிறார் சிவவாக்கியர்.
நவபாஷாண மூர்த்திக்கு செய்யப்படும் அபிஷேகத்தில் உள்ள ஒவ்வொரு துளியிலும் மருத்துவகுணம் உண்டு.

குஷ்டரோகம், புற்றுநோய், மலட்டுத்தன்மை, இதயபீடை, சிறுநீரகக் கோளாறு, நுரையீரல் பீடை  போன்றவை பழநி முருகனுக்கு சார்த்திய சந்தனத்தை, மிளகு அளவு எடுத்து காலை சூரியோதயத்திற்கு முன் வெறும் வயிற்றில் (அப்போது நீர் கூட அருந்தியிருக்கக் கூடாது) உண்டால், மூன்று மண்டலத்தில் முழுபலன் கிட்டும். அதாவது நோய் பூரணமாய் குணமடையும். இது அனுபவத்தில் கண்ட உண்மையும் கூட.

 ‘‘மேனியிற்பட்ட பொருள் யாவுமே அரு
மருந்து & வினை நோயுமறுபடுமே” என்கிறார் அகத்தியர்.

No comments:

Post a Comment