Saturday, October 4, 2014

ஏகாதசியும் துவாதசியும்...

ஏகாதசியும் துவாதசியும்...


வைகுண்ட ஏகாதசியில் வரும் சொர்க்க வாசல் திறப்பு ஏழு வாயில் கதவுகளைக் கடந்தபிறகே நடத்தப்படுவதற்குக் காரணமென்ன?

ஏகாதசியில் சிறப்புற்று விளங்குவது வைகுண்ட ஏகாதசி. பெரும்பாலானவர்கள் முன்பெல்லாம் எல்லா ஏகாதசிகளிலுமே உபவாசம் இருந்தனர். இப்போது நடைமுறையிலோ வைகுண்ட ஏகாதசி அன்றாவது உபவாசம் இருப்போம் என்றாகியிருக்கிறது. இந்நாளில் ஆலயங்களில் 'சொர்க்க வாசல் திறப்பு' என்றொரு நிகழ்ச்சி நடத்தப்பெறும். இச்சமயம் ஆலயத்தின் வடக்குப்புற விசேஷமான ஏழு வாயில் கதவுகள் ஒவ்வொன்றாகத் திறக்கப்படுகின்றன. இவைகளைக் கடந்த பின்னரே பரமபத வாசனைத் தரிசிக்க இயலும். ஏன் இப்படி? ஏனெனில் தேகமே இங்கு ஆலயமாகப் பார்க்கப்படுகிறது. நம் தேகத்தில் ஏழு சக்கரங்கள் அமைந்துள்ளன. மூலாதாரம் எனப்படும் சக்கரம் நிலத்தோடு சம்பந்தமுடையது. இச்சக்கரம் முதுகெலும்பு முடிவுறும் இடத்தில் அமைந்துள்ளதாகக் கூறுவர். அடுத்து சுவாதிஷ்டானம் எனப்படும் சக்கரம் நீரோடு சம்பந்தப்பட்டது. இது தொப்புளுக்குக் கீழே நான்கு இன்ச் தள்ளி அமைந்துள்ளது என்பர். மணிபூரகம் என்ற சக்கரம் தொப்புள் அமைந்துள்ள இடமேதான். 


இச்சக்கரம் நெருப்போடு தொடர்புடையது என்பர். அதற்கடுத்தது அனாகதச் சக்கரம் எனப்படும் நெஞ்சு மையம். இது காற்றோடு தொடர்புடையது. அடுத்தது விசுக்திச் சக்கரம். இது தொண்டைப் பகுதியில் அமைந்துள்ளது. விண் எனப்படும் ஆகாயத்தோடு சம்பந்தப்பட்டது இச்சக்கரம். இதனையடுத்ததே பஞ்சபூதங்களையும் கடந்த நிலையான ஆக்ஞா எனப்படும் ஆக்ஞைச் சக்கரம். பஞ்ச பூதங்களையும் அடக்கியாள ஒரு விழிப்பு நிலை வேண்டும். அதற்கு இந்தச் சக்கரம் உதவுகிறது என்பர். இச்சக்கரம் புருவமத்தியில் அமைந்துள்ளது. இதையும் தாண்டினால் வருவது சஹஸ்ராரம் எனப்படும் ஏழாவது சக்கரம். இச்சக்கரம் உச்சந்தலையில் அமைந்துள்ளதாகக் கூறுவர். இந்நிலைக்கு தியானத்தின் மூலம் படிப்படியாக ஒரு சாதகன் உயரும் நிலையில் அவனுக்குத் தெய்வ தரிசனம் கிட்டும் என்பர். இவ்வித நிலையைச் சுட்டிக் காட்டுவதற்கே ஏழு வாயில் கதவுகளைத் தாண்டி இறை தரிசனத்தை வைத்துள்ளனர். எப்படி ஏழாவது வாயிலினுள் நுழையும்போது இறை தரிசனம் நம் கண்ணுக்கு எட்டுகிறதோ அதுபோன்று ஒரு சாதகன் தியான நிலையில் படிப்படியாக மேற்கூறிய நிலைகளைக் கடந்து ஏழாவது நிலைக்கு உயர்கையில் அவனுக்கு இறை தரிசனம் நிச்சயம் என்பதை உணர்த்தவே இப்படியொரு ஏற்பாடு. இனி ஏகாதசி பற்றிய விவரங்களுக்குள் நுழைவோம்.

1. உற்பத்தி ஏகாதசி: ஏகாதசி விரதம் தோன்றக் காரணமான கதை இந்த ஏகாதசியை முன்னிட்டே சொல்லப்படுகிறது. ஏகாதசி உற்பத்தியான தினமாகச் சொல்லப்படும் இந்தத் தினத்தில் விரதமிருப்போருக்கு எல்லா வளங்களும் கிடைக்கும்.

2. மோட்ச ஏகாதசி: வைகுந்த வாசனுக்கு மிகவும் பிடித்த ஏகாதசி. இத்தினத்தில் பரமபத வாசல் வழியாகச் சென்று பரந்தாமனை தரிசிப்போருக்கு பரமபதம் கிட்டும் என்பது ஐதீகம்.

3. சபலா ஏகாதசி: சம்பாவதி நாட்டு இளவரசனான உலும்பகன் தகாத செயல்கள் செய்ததால், தந்தையாலேயே விரட்டப்பட்டவன். ஒரு சமயம், வேறு நாட்டு சிறையில் அடைபட்ட அவன் அங்கே உணவு ஏதும் தரப்படாததால் பட்டினி கிடந்தான். அன்றைய தினம் சபலா ஏகாதசி தினம் என்பதால் அவனது பாபங்கள் எல்லாம் நீங்கி அவனும் மனம் திருந்தினான். அதன் காரணமாக அவன் தந்தை அவனை மன்னித்து மகுடம் சூட்டி வைத்தார். இந்த ஏகாதசி விரதத்தால் சகல பாவங்களும் அகலும்.

4. புத்ரதா ஏகாதசி: இதன் பெயரே இது என்ன பலனைத் தரும் என்பதை உணர்த்தும். ஆமாம். புத்திர பாக்கியம் தரக்கூடிய ஏகாதசி இது. பத்ராவதி நாட்டு மன்னன் சுகேதுமான் இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தே புத்திரப்பேறு பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன.

5. ஷட்திலா ஏகாதசி: எல்லாதானங்களும் செய்த ஒரு பெண்மணி, அன்னதானம் மட்டும் செய்யாததால் சொர்க்கத்தில் பசியால் வாடினாள். தேவ மங்கை ஒருத்தி, தான் கடைப்பிடித்த ஷட்திலா ஏகாதசி விரதத்தின் பலனை அவளுக்குத் தர, அதனால் அவள் பசிப்பிணி நீங்கினாள். இந்த விரதத்தினை அனுஷ்டிப்பவர்கள் வீட்டில் உணவுப்பஞ்சமே வராது. மேலும் பிரம்மஹத்தி மற்றும் பசுவதைத் திருட்டால் உண்டாகும் பாவங்களும் நீங்கும்.

6. ஜயா ஏகாதசி: இந்த ஏகாதசி தினத்தில் விரதமிருப்பது வெற்றிகளைத் தரும். அதோடு, குடும்பத்தில் அகால மரணமடைந்தவருக்காக இந்த விரதத்தை அனுஷ்டித்தால் அதன் பலனாக அவருக்கு மோட்சமும் கிட்டச் செய்யும். தேவ சபையில் இருந்த போது மனசஞ்சலம் அடைந்த மால்யவான்-புஷ்பவந்தி தம்பதியர், தேவேந்திரனின் சாபத்தால், பேய் உரு அடைந்தனர். அவர்கள் மீண்டும் வானுலகை அடைய இந்த விரதத்தைக் கடைப்பிடித்தே சாபம் நீங்கினர்.

7. விஜயா ஏகாதசி: விரும்பிய பலனைத் தரும் இந்த தினத்தில் விரதம் இருந்தே, ராவணனை வெல்லும் ஆற்றலை ராமர் பெற்றாராம். எந்தக் கோரிக்கையுடன் விரதமிருக்கிறோமோ அதனை ஈடேற்றும் ஏகாதசி இது.

8. ஆமலகி ஏகாதசி: ஆமலகம் என்பது நெல்லி மரத்தைக் குறிக்கும். நெல்லி மரத்தின் கீழ் கவசம் வைத்து, அதில் ஸ்ரீமந் நாராயணரை எழுந்தருளச் செய்து வலம் வந்து வணங்கிட வேண்டிய ஏகாதசி தினம் இது. இந்த ஏகாதசி விரதத்தால் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனும், புண்ணிய தீர்த்தங்கள் பலவற்றில் நீராடிய பலனும் கிட்டும்.

9. பாபமோசனிகா ஏகாதசி: பாவங்களைப் போக்குவதால் இந்த ஏகாதசிக்கு பாபமோசனிகா ஏகாதசி என்ற பெயர் வந்தது. லோமேசர் எனும் முனிவர், தமது தவத்தைக் கெடுக்கவந்த மஞ்சுமதி என்னும் தேவகன்னிகையை பேயாக மாறச் சாபமிட்டார். மன்னித்தருளுமாறு வேண்டி நின்ற மஞ்சுமதியிடம், சித்திரை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று விரதம் கடைப்பிடிக்கும்படி சொன்னார். அவளும் அப்படியே செய்து பாபம் நீங்கினாள். 

10. காமதா ஏகாதசி: தம்பதியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் ஏகாதசி இது. இந்த ஏகாதசியின் மகிமையை வசிஷ்டர் திலீபன் என்ற மகாராஜனுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

11. வரூதினி ஏகாதசி: இந்த ஏகாதசியை சிவன், மாந்தாதா மற்றும் துந்துமாரன் போன்றோர் கடைப்பிடித்து நலம் பெற்றுள்ளனர். தானப் பலனைத் தரக்கூடியது இந்த ஏகாதசியில் செய்யும் தானம் சிறியதேயானாலும் யிரம் மடங்கு பலனைத் தரவல்லது. பிறவிப் பெருங்கடலைக் கடக்க விரும்புவோர் இந்த ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளலாம்.

12. மோகினி ஏகாதசி: வசிஷ்ட முனிவர் இந்த ஏகாதசியின் சிறப்பை ஸ்ரீராமருக்கு எடுத்துரைத்துள்ளார். அறியாமையைப் போக்கும் ஏகாதசி.

13. அபரா ஏகாதசி: இந்த ஏகாதசியன்று பெருமாளை த்ரிவிக்கிரமராக நினைந்து பூஜிக்கவேண்டும். அபர காரியம் எனப்படும் முன்னோர்களுக்குக் கயையில் பிண்டம் அளிப்பது, பிரயாகையில் புனித நீராடுவது, பத்ரிகாசிரமத்துக்குப் புண்ணிய யாத்திரை மேற்கொள்வது போன்றவற்றால் எந்த அளவுக்கு ஒருவருக்குப் புண்ணியம் கிடைக்குமோ அந்தப் புண்ணியப் பலனைத் தரவல்லது இந்த ஏகாதசி. குருநிந்தை எனப்படும் குருவைத் திட்டி 
அவமானப்படுத்துவது போன்ற பெரும்பாவங்களும் இந்த ஏகாதசி விரதத்தால் நீங்கும்.

14. நிர்ஜலா ஏகாதசி: பீம ஏகாதசி என்ற பெயராலும் இந்த ஏகாதசி அறியப்படுகிறது. ஏனெனில் பெருந்தீனி உண்பவனான பீமனே தண்ணீர்கூட அருந்தாமல் உபவாசம் இருந்த ஏகாதசியாதலால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. வேத வியாஸர் பாண்டவர்களுக்கு ஏகாதசி விரதத்தின் அருமை பெருமைகளை எடுத்துரைத்து இந்த விரதத்தை அனுஷ்டிக்குமாறு கூற, பீமன் மட்டும் சம்மதிக்கவில்லை. என்னால் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் 
இருக்க முடியாது. என்னைப் போன்று பெருந்தீனி உண்பவர்களுக்கு வருஷத்தில் ஒரு முறை உபவாசம் இருந்தாலே போதும் என்பதான ஏகாதசி விரதம் இருந்தால் சொல்லுங்கள் அனுஷ்டிக்கிறேன் என்று கூற, வியாஸர் இந்த நிர்ஜலா ஏகாதசியைத்தான் பரிந்துரைத்தார். இந்த ஏகாதசியில் உபவாசமிருந்தால் மலைபோல் வரும்போல் துன்பங்கள் சடுதியில் மறையும்.

15. யோகினி ஏகாதசி: மார்க்கண்டேய மகரிஷி குபேரனின் பணியாளனான ஹேமமாலிக்கும் அவனது மனைவிக்கும் உபதேசித்த ஏகாதசி. ஒரு முறை குபேரன் சிவபூஜை செய்துகொண்டிருக்கையில் உரிய நேரத்தில் பூக்களைக் கொண்டுசெல்லாமல் மனைவியோடு மெய்ம்மறந்து பேசிக்கொண்டிருந்தான். இதனால் கோபமுற்ற குபேரன் தனது பணியாளனான ஹேமமாலிக்குப் பதினெட்டுவிதமான குஷ்டங்கள் உண்டாகக் கடவது எனச் சபித்துவிட, அத்தம்பதியர் மார்க்கண்டேய மகரிஷியைத் தஞ்சம் புகுந்தனர். இந்த ஏகாதசியை அனுஷ்டித்த ஹேமமாலி குஷ்டரோகத்தினின்று விடுதலை பெற்று, பின்னர் குபேரபுரிக்கே திரும்பினான். இந்த ஏகாதசி குஷ்டரோகத்தை நீக்கும் சிறப்பு வாய்ந்தது.

16. சயினி ஏகாதசி: இந்த ஏகாதசியை சயன ஏகாதசி என்றும் கூறுவர். மகாபலியின் கர்வத்தை அடக்க த்ரிவிக்கிர அவதாரம் எடுத்த மாயவன் பின்னர் மற்றொரு திருமேனி கொண்டு பாற்கடலில் பாம்பணையில் படுத்து உறங்கினான். பரந்தாமன் சயனித்த அந்த ஏகாதசியே 'சயினி ஏகாதசி' எனப்படுகிறது. இந்த ஏகாதசியில் தீப தானம் செய்வது சிறந்த பலன்களை நல்கும்.

17. காமிகா ஏகாதசி: இந்த ஏகாதசியில் திருத்துழாய் எனப்படும் துளசி கொண்டு பெருமாளைப் பூஜித்தால் தங்கத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இத்தினத்தில் நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது போன்றவை மிகுந்த புண்ணியத்தை நல்கும்.

18. புத்ர(ஜா)தா ஏகாதசி: தை மாதத்தில் வரும் ஏகாதசிக்கும் இப்பெயரே வழங்கப்படுகிறது. இதுவும் புத்திரப் பேற்றை அளிக்கும் ஏகாதசியே. 'பிள்ளை பிறக்காது' என மருத்துவர்களாலேயே கைவிடப்பட்டவர்களுக்கும்கூட நல்ல புத்திர பாக்கியத்தை அளிக்கும் வல்லமை மிக்கது இந்தப் 'புத்ர(ஜா)தா ஏகாதசி.' மஹீஜித் என்ற மன்னன் தனக்கொரு வாரிசு இல்லையே என்றெண்ணி மனம் வாடினான். இதற்குக் காரணம் அவன் 
முற்பிறவியில் ஒரு குளத்தில் நீர் குடிக்கச் செல்கையில், அங்கு நீர் குடித்துக்கொண்டிருந்த பசுவை விரட்டிவிட்டுக் குடித்ததுதான் இதற்கான காரணம் என்றறிந்த லோமசர் என்ற முனிவர், அந்த அரசனிடம் இந்த விரதத்தைக் கடைப்பிடிக்கும்படி கூறினார். அரசனும் கடைப்பிடிக்க, அவனும் தந்தையானான் இந்த ஏகாதசி மகிமையால்.

19. அஜா ஏகாதசி: இந்தப் பிறவியில் செய்யும் பாவங்களே நம் மனக்கண் முன்னால் தோன்றி இன்னும் ஏதாவது செய்திருக்கிறோமா எனச் சித்தம் தடுமாறுவோம், நமக்குத் துன்பம் நேர்கையில். இந்நிலையில் சென்ற பிறவியில் செய்த பாவங்கள் எத்தனை எத்தனை என்று பட்டியலிட முடியுமா? அப்படிப்பட்ட சென்ற பிறவிப் பாவங்களையும் சேர்த்து எரிக்கவல்லது இந்த அஜா ஏகாதசி. இதற்குச் சான்றாக விளங்குபவன் அரிச்சந்திரன். எனவே அவனது துயரம் தீர கெளதம முனிவர் இந்த ஏகாதசி வழிமுறையை அரிச்சந்திரனுக்கு உபதேசித்தார்.

20. பத்மநாபா ஏகாதசி: மாநிலத்தில் மழை வேண்டுவோர் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கலாம். சூரிய வம்சத்தவனான மன்னன் மாந்தாதாவின் ஆட்சியில் ஒரு சமயம் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து மழை பெய்யவில்லை. எனவே பஞ்சம் தலைவிரித்தாடியது. இத்துயரிலிருந்து நீங்கும் உபாயத்தை ஆங்கீரஸ முனிவரிடம் வேண்டினான். அதற்கு அவர் இந்த ஏகாதசி விரதம் மேற்கொள்ளும்படி கூறினார். அரசனும் அவ்விதமே விரதத்தை அனுஷ்டிக்க, வானம் மடை திறந்த வெள்ளம் போல வளம் தரும் மழையைப் பொழிந்தது. இந்த ஏகாதசி விரதம் மேற்கொண்டால் தேசமே சுபிட்சம் பெறும்.

21. இந்திரா ஏகாதசி: பித்ருக்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது. மாஹிஷ்மதி நாட்டு மன்னனான இந்திரசேனன் அவன் தந்தை நரகத்திலிருந்து விடுதலை பெறவேண்டி அனுஷ்டித்த ஏகாதசி. ஏகாதசி விரதமிருந்து தந்தைக்கு சிராத்தம் செய்ய, அவர் நரகத்திலிருந்து விடுதலை பெற்று அவனை ஆசிர்வதித்தார். நாரதர் இந்த விரதத்தை அந்த மன்னனுக்கு உபதேசித்தார்.

22. பாபாங்குசா ஏகாதசி: வேதனை என்பது கண்ணுக்குத் தெரியாமல் படும் துயரங்கள். வாதனை என்பதோ கண்ணுக்குத் தெரிந்தே நம்மைத் துயரத்தில் ஆழ்த்தும் விஷயங்கள். இந்த இரண்டையுமே இந்த ஏகாதசி விரதம் நீக்குகிறது. பாவங்களை நீக்கும் அங்குசமாக இந்த ஏகாதசி திகழ்வதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

23 ரமா ஏகாதசி: முசுகுந்தச் சக்ரவர்த்தியின் மகளான சந்திரபாகா ஒருசமயம் அவள் கணவன் சோபனனுடன் தந்தையைக் காணவந்தாள். அவள் வந்தது ஏகாதசி தினத்தில். விஷ்ணுவின் தீவிர பக்தனான முசுகுந்தன் அந்த ஏகாதசிக் காலங்களில் தம் நாட்டு மக்கள் விரதத்தைக் 
கடைப்பிடிக்கவேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டை விதித்திருந்தான். எனவே சந்திரபாகா தம் கணவன் சோபனனிடம், இன்று அவசியம் நாம் விரதம் மேற்கொள்ளவேண்டும் எனக் கூற, தன்னால் அது இயலாதே என சோபனன் தவித்தான். இல்லாவிட்டால் தம் தந்தை தண்டிப்பார் என எடுத்துரைக்க வேறுவழியில்லாமல் விரதமிருந்தான் சோபனன். விரத முடிவில் அவன் உயிர் போய்விட்டது. இந்தத் துக்கம் தாங்காமல் சந்திரபாகாவும் உயிர் நீத்தாள். பின் இருவரும் வைகுண்டத்தை அடைந்தார்கள். மறுபிறவியில் சோமசர்மா என்பவரின் உபதேசப்படி ரமா ஏகாதசி எனப்படும் இந்த 
ஏகாதசியை அனுஷ்டித்து வாழ்வில் வளம் பல பெற்றனர்.

24. ப்ரபோதினி ஏகாதசி: இந்த ஏகாதசியில்தான் பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திருக்கிறார். இந்நாளில் துளசியால் பெருமாளை பூஜிப்பவர்கள் வைகுண்டத்துக்குச் செல்வர். இந்த ஏகாதசியில் துளசியைத் தரிசிப்பது, துளசியைத் தொடுவது, துளசியின் பெயரைச் சொல்வது, துளசியைத் துதிப்பது, துளசியை நட்டு வளர்ப்பது என துளசிக்கு எதைச் செய்தாலும் பல யுகங்களுக்கும் பலனை அளிக்கவல்லது இந்த ஏகாதசி. கார்த்திகை மாதத்தில் வரும் இந்த ஏகாதசியை கெளசிக ஏகாதசி என்றும் கைசிக ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த ஏகாதசியில் உபவாசமிருந்தால் 24 ஏகாதசிகள் உபவாசமிருந்த பலன் என்பர். இந்த கெளசிக ஏகாதசி முடிந்த மறுநாள்தான் துளசிக் கல்யாணம் நடக்கிறது.

25. கமலா ஏகாதசி: மகாலட்சுமியின் பரிபூரண அருளைக் கூட்டுவிப்பதால் இந்த ஏகாதசிக்கு இப்பெயர். சில வருஷங்களில் மட்டுமே அபூர்வமாக வரும் ஏகாதசி இது. 

இவ்வளவு தூரம் விளக்கியதையே கீழே சுருக்கமாக...

மார்கழி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - உற்பத்தி ஏகாதசி
மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி என்றும் கூறுவர்)
தை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - ஸபலா ஏகாதசி
தை மாத சுக்லபக்ஷ ஏகாதசி - புத்ரதா ஏகாதசி
மாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - ஷட்திலா ஏகாதசி
மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - ஜயா ஏகாதசி
பங்குனி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - விஜயா ஏகாதசி
பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - ஆமலகி ஏகாதசி
சித்திரை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - பாபமோசனிகா ஏகாதசி
சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசி - காமதா ஏகாதசி
வைகாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - வரூதிநி ஏகாதசி
வைகாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - மோகினி ஏகாதசி
ஆனி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - அபரா ஏகாதசி
ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - நிர்ஜலா ஏகாதசி
ஆடி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - யோகினி ஏகாதசி
ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - சயினி ஏகாதசி (மஹாவிஷ்ணு சயனிக்கும் நாள்)
ஆவணி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - காமிகா ஏகாதசி
ஆவணி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - புத்ரதா ஏகாதசி
புரட்டாசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - அஜா ஏகாதசி
புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - பத்மநாபா ஏகாதசி
ஐப்பசி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - இந்திரா ஏகாதசி
ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி - பாபாங்குசா ஏகாதசி
கார்த்திகை மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி - ரமா ஏகாதசி
கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசி- ப்ரபோதினி ஏகாதசி (மஹாவிஷ்ணு விழிக்கும் நாள்)

அதிகப்படியாக வரும் இருபத்தைந்தாவது ஏகாதசிக்கு 'கமலா ஏகாதசி' என்று பெயர்.

ஏகாதசி விரதம் மேற்கொள்கையில் எதற்குக் கண்விழிக்க வேண்டும்?

ஏகாதசி தினத்தன்று இரவு கண்விழித்து முழித்திருப்பதற்கு மெய்ஞ்ஞான ரீதியில் மட்டுமல்ல விஞ்ஞான ரீதியாகவும் காரணங்கள் உள்ளன. அன்று முழுவதும் உண்ணாமல் உபவாசமிருந்தால் இயற்கையாகவே தேக உஷ்ணம் அதிகரிக்கும். மேலும் இரவு கண்விழிப்பதாலும் உடல் உஷ்ணம் அதிக அளவில் அதிகரிக்கும். இவ்விதம் உருவாகும் இந்த வெப்பத்தால், நாம் ஏற்கெனவே உட்கொண்ட உணவுகள், நீர், காற்று இவைகளின் 
வாயிலாக நம் உடலில் சேர்ந்த நுண்ணிய நோய்க்கிருமிகள் அழிக்கப்பட்டு நம் உடல் பரிசுத்தமாகிறது. இதை ஏன் மற்ற நாள்களில் மேற்கொள்ளக்கூடாது? ஏகாதசி அன்று மட்டும் ஏன் செய்யச் சொல்கிறார்கள் என்ற கேள்விக்கும் பதில் கூறியுள்ளனர் நம் முன்னோர்கள். ஏகாதசி அன்று சந்திரனின் கதிர்கள் நம் உடலில் பாய்ந்து அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். முக்கியமாக அன்றைய தினத்தில் நமது ஜீரண உறுப்புகள் சந்திரனின் கதிர்வீச்சால் பாதிப்புக்குள்ளாகும் என்பதாலேயே அன்றைய தினம் உபவாசம் மேற்கொள்ளச் சொல்கிறார்கள்.

துவாதசி அன்று அகத்திக்கீரையை முக்கியமாக உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வதற்குக் காரணம் என்ன?

இதுவும் முன்னோர்களின் ஏற்பாடுதான். ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியன்று அகத்திக்கீரை, நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என சாத்திரம் வலியுறுத்துகிறது.

அகத்திக்கீரையை துவாதசியன்று உணவில் சேர்த்துக்கொள்ளச் சொல்வதற்கு முக்கியக் காரணம் ஒன்று உண்டு. ஏகாதசி அன்று மேற்கொண்ட உபவாசத்தால் உடலில் உஷ்ணம் எழுந்து பின்னர் தணிந்து மறுநாள் சமநிலைக்கு வரும். அச்சமயத்தில் அகத்திலும் எழும் தீயை அணைக்கவே இந்த அகத்திக்கீரை பயன்படுத்தப்படுகிறது. அகம்+தீ+கீரை = அகத்திக்கீரை. பெயர்ப் பொருத்தமுள்ள கீரை என்பது இதிலிருந்தே உங்களுக்குப் 
புரிந்திருக்கும்.

Peptic Ulcer எனப்படும் குடற்புண்களுக்கு இக்கீரை சிறந்த வரப்பிரசாதி. நரம்புத்தளர்ச்சியை நீக்கும் இக்கீரையில் வைட்டமின் 'ஏ' சத்தும், இரும்புச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் மற்றும் தாதுப்பொருள்களும் அதிகளவில் உள்ளன. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகச் சிறந்த ஒளஷதம். இவ்வளவு சிறப்புகளா என எண்ணி இந்தக் கீரையை அடிக்கடி உபயோகிக்க ஆரம்பித்தால் வாயுக்கோளாறுகள் வரும். எனவே மருந்தாக மட்டுமே கருதி இக்கீரையை பதினைந்து நாள்களுக்கு ஒருமுறை அதாவது துவாதசியில் உணவில் சேர்த்துக்கொள்வது நலம் பயக்கும். அடுத்து நெல்லிக்காயை ஏன் சேர்க்கிறோம் என ஆராய்ந்தால் அதுவும் உடல் வெப்பத்தை குறிப்பாக கண்களின் வெப்பத்தைத் தணிக்கிறது என்கிறார்கள். நெல்லிக்காயை தினமும் பயன்படுத்தி வரலாம். இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்புத் திறன் கூடும். எனவேதான் நெல்லிக்காய். 

பின் சுண்டைக்காய் எதற்கு? குடலில் அவ்வப்போது உண்டாகும் கிருமிகளை அழிக்கவும் மீண்டும் தோன்றாமல் தடுக்கவும் சுண்டைக்காய் உதவுகிறது. மேலும் குடலை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் சுண்டைக்காயைப் பயன்படுத்தலாம். துவாதசி அன்று அகத்திக்கீரையுடன் சுண்டைக்காயும் சேர்ப்பதால் குடல் பரிபூரண சுத்தம் பெறுகிறது. மொத்தத்தில் நம் உடலில் சேரும் கிருமிகளை அழிக்க ஏகாதசி விரதம் மேற்கொண்டு, துவாதசியன்று மேற்சொன்ன இம்மூன்றினாலும் கிருமிகளின் மீது மும்முனைத் தாக்குதல் நடத்தினால் கிருமிகள் மீண்டும் நம்மை அண்டவே நடுங்கும் என்பதால் இப்படியொரு ஏற்பாடு.

No comments:

Post a Comment