Friday, October 10, 2014

சிவராத்திரியில் வணங்க வேண்டிய நவ கைலாய திருத்தலங்கள்!



சக்திக்கு ஒன்பது ராத்திரி, நவராத்திரி திருவிழாவாக கொண்டாடுவது போல், சிவனுக்கு ஒரு ராத்திரியை சிவராத்திரியாக கொண்டாடுகிறோம்.

மாதந்தோறும் சிவராத்திரி வந்தபோதிலும் மாசி மாதத்தில் வரக்கூடிய மகா சிவராத்திரி மிகவும் புண்ணிய தினமாகும். மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது.

சிவராத்திரியின்போது பக்தர்கள் விரதமிருந்து இரவு முழுவதும் விழிந்திருந்து சிவனை வணங்குவார்கள். சிவாலயங்களுக்கு சென்று சிவனை வணங்குவது மிகவும் சிறந்தது. சிவராத்திரி தோன்றியது குறித்து பல்வேறு புராண கதைகள் கூறப்படுகின்றன.

கைலாயத்தில் ஒருமுறை சிவபெருமானின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடினாள். இதனால் உலகம் இருண்டது. அனைத்து ஜீவன்களின் இயக்கமும் நின்றது. இதனால் தேவர்கள் கைலாயம் சென்று முறையிட்டனர். இதை உணர்ந்த பார்வதிதேவி அனைத்து உயிர்களுக்கும் நற்கதி அருள விரதமிருந்து சிவனை வணங்கினார்.

அந்த நாளே சிவராத்திரி என கூறப்படுகிறது.

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது கொடிய விஷம் தோன்றியது. இதற்கு அஞ்சி தேவர்கள் அனைவரும் சிவனிடம் தஞ்சமடைந்தனர். சிவன் அந்த விஷத்தை தானே உண்டார். அந்த விஷம் சிவன் உடல் முழுவதும் பரவாமல் இருக்க அனைவரும் இரவு முழுவதும் ஆடிப்பாடி சிவனை வணங்கினர்.

அந்த நாள் சிவராத்திரி எனவும் கூறப்படுகிறது.

சிவராத்திரி அன்று சிவாலயங்களில் 4 கால சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிவராத்திரியின் போது குமரி மாவட்டத்தில் சிவாலயம் ஓடடம் என பக்தர்கள் சிவாலயங்களுக்கு சென்று வழிபடுவார்கள். அதுபோல நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பக்தர்கள் நவ கைலாயங்களுக்கு சென்று வணங்குவார்கள். நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரதான தாமிரபரணி நதிக்கரையில் புண்ணிய தீர்த்தலங்களுக்கும், ஆலயங்களும் உள்ளன.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஆலயங்கள் அனைத்துமே நவகிரகங்களுடன் தொடர்பு உடையவை. அந்த வகையில், நவகைலாயங்கள் எனப்படும் 9 சிவலாயங்களுக்கும், நவக் கிரகங்களுக்கும் அதிக தொடர்புகள் உள்ளது.

எனவே சிவராத்திரியின் போது நவ கைலாயங்களுக்கு சென்று வணங்குவது சிறந்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சேரன்மகாதேவி, கோடாநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், தென் திருப்போரை, ரஜபதி, சேர்ந்தபூமங்கலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவாலயங்கள் நவ கைலாயங்களாக விளங்குகின்றன.

நவ கைலாயங்கள் தோன்றியதற்கும் புராண கால வரலாறு உள்ளது. அகஸ்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் ஒருமுறை முக்தி பெற வேண்டி பொதிகை மலையில் சிவபெருமானை வணங்கினார்.

இதையறிந்த அகஸ்திய முனிவர் தாமிரபரணி சங்கமிங்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு பின்னர் 9 கோள்கள் வரிசையில் சிவனை வணங்க வேண்டும் எனக் கூறினார். இதற்காக 9 கோள்களின் நிலை அறிய 9 மலர்களை ஆற்றில் விட்டு இந்த மலர்கள் எங்கு ஒதுங்குகிறதோ அங்கு லிங்கம் வைத்து வழிபாடுமாறு உரோமச முனிவருக்கு அருளினார்.

இதையடுத்து உரோமச முனிவர் 9 மலர்களை தாமிரபரணியில் திரண்டு வரும் தண்ணீரில் விட்டார். அதில், முதல் மலர் பாபநாசத்திலும், 2–வது சேரன்மகாதேவியிலும், 3–வது மலர் கோடக நல்லூரிலும், 4–வது மலர் குன்னத்தூரிலும், 5–வது மலர் முறப்பநாட்டிலும், 6–வது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும், 7–வது மலர் தென்திருப்போரையிலும், 8–வது மலர் ராஜபதியிலும், 9–வது மலர் சேர்ந்த பூமங்கலத்திலும் ஒதுங்கின.

இந்த 9 தலங்களிலும் 9 கோள்கள் முறையே பாபநாசத்தில் சூரியன், சேரன்மகாதேவியில் சந்திரன், கோடகநல்லூரில் செவ்வாய், குன்னத்தூரில் ராகு, முறப்ப நாட்டில் குரு, ஸ்ரீவைகுண்டத்தில் சனி, தென்திருப்போரையில் புதன், ராஜபதியில் கேது, சேர்ந்தபூமங்கலத்தில் சுக்கிரன் ஆகிய கிரகங்களின் தாக்கம் இருப்பதை உரோமச முனிவர் அறிந்தார். இந்த பகுதியில் லிங்கம் வைத்து வழிபாடும்போது ஜீவன் முக்திபேறு கிடைக்கும் என்றும் சிவபெருமான் நற்கருதி அருள்வார் என்றும் அவர் உணர்ந்தார்.

அதன்படி, அமைந்த கோவில்கள்தான் நவ கைலாய கோவில்கள்.

பாபநாசம் (சூரிய தலம்):–

நவ கைலாசத்தின் முதல் தலம் பொதிகை மலை அடிவாரத்தில் உள்ள பாபநாசத்தில் உள்ளது. இது நெல்லையில் இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதரும், அம்பாள் உலக அம்பிகையும் அருள் புரிகின்றனர்.

சேரன்மகாதேவி (சந்திர தலம்):–

இந்த சிவாலாயம் பாபநாசத்திலிருந்து கிழக்கே 22 கி.மீ. தொலைவில் அமைந் துள்ளது. மூலவர் கைலாசநாதரும் அம்பாள் ஆவடை நாயகியும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.

கோடகநல்லூர் (செவ்வாய் தலம்):–

சேரன்மகா தேவியிலிருந்து நெல்லை வரும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் கல்லூருக்கு அருகே உள்ளது. இங்குள்ள மூலவர் கைலாச நாதர் அம்பாள் சிவகாமி.

குன்னத்தூர் (ராகு தலம்):–

நெல்லை டவுணில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த தலம். இங்கு மூலவர் கைலாச நாதரும், அம்பாள் சிவகாமியும், கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

முறப்பநாடு (குரு தலம்):–

நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் உள்ளது இந்த தலம். இங்கும் மூலவர் கைலாசநாதர் அம்பாள் சிவகாமி அருள் புரிகின்றனர்.

தென்திருப்பேரை (புதன் தலம்):–

நெல்லை, திருச்செந்தூர் சாலையில் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து 8–வது கி.மீட்டரில் அமைந்துள்ளது இந்த தலம்.இங்கு மூலவர் கைலாச நாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை வீற்றிருக்கின்றனர்.

ராஜபதி (கேது தலம்):–

இந்த தலம் தென் திருப்போரையில் இருந்து 6–வது கி.மீட்டர் தொலைவில் உள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் அழகிய பொன்னம்மை அருள் புரிகின்னர்.

சேர்ந்தபூமங்கலம் (சுக்கிர தலம்):–

இந்ததலம் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் புன்னைக்காயல் அருகே அமைந்துள்ளது. மூலவர் கைலாசநாதர், அம்பாள் சவுந்தர்யா நாயகி. சிவராத்திரி அன்று இந்த நவ கைலாயங்களுக்கு சென்று வணங்கினால் சிவபெருமானின் அருளையும், நவகிரகங்களின் அருளையும் பெறலாம். இதனால் வாழ்வில் செல்வம் பெருகும். நோய் பிணிகள் நீங்கி சுபிட்ச வாழ்வு கிடைக்கும்.


No comments:

Post a Comment