Sunday, October 12, 2014

மனோபயம் நீக்கும் பெருமாள் மலை!

புரட்டாசியில் புண்ணிய தரிசனம்
திருப்பூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும், காங்கேயத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது பெருமாள் மலை. இங்கே... தன்னை நாடி வருவோருக்கு அருளும் பொருளும் அள்ளித் தந்து சேவை சாதிக்கிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாள்.
காங்கேய நாட்டில் உள்ள பட்டாலி கிராமத்தில் ஸ்ரீபால்வெண்ணீஸ்வரர் கோயிலும், கிழக்குப் பகுதியில் ஸ்ரீசிவன்மலை ஆண்டவர் கோயிலும், மேற்குப் பகுதியில் அலகுமலை ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி கோயிலும், தெற்குப் பகுதியில் வட்டமலை ஸ்ரீமுருகன் கோயிலும் அமைந்துள்ளன. இந்த நான்கு மலைகளுக்கும் மத்தியில் அமைந்துள்ள பெருமாள் மலையில், அழகே உருவெனக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள்.
சுமார் ஆயிரம் வருடப் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் பல இடங்களில் மீன் சிற்பங்களைப் பார்க்கும்போது, இது பாண்டியர் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என அறிய முடிகிறது. ஸ்ரீதேவி- ஸ்ரீபூதேவி சமேதராக நின்ற கோலத்தில் காட்சி தரும் ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாளை தரிசித்து வணங்கினால், இன்னல்கள் யாவும் நீங்கப் பெற்று, நிம்மதியுடன் வாழலாம்; வழக்கில் வெற்றி கிடைக்கும்; திருமணத் தடை நீங்கும்; தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் எனப் பெருமிதத்துடன் சொல்கின்றனர் பக்தர்கள். இங்கு, பூ வாக்கு கேட்கும் வழக்கமும் உண்டு.
சித்திரைப் பிறப்பு நாளில் விஷ§ புண்ய கால சிறப்பு அபிஷேக ஆராதனை, வைகாசியில் திருக்கல்யாண உத்ஸவம் ஆகியவை சிறப்புற நடைபெறுகின்றன. திருக்கல்யாண உத்ஸவத்தில் மஞ்சள் சரடு, குங்குமம் ஆகியவற்றைப் பெருமாளின் திருப்பாதத்தில் வைத்து பூஜித்து, பிரசாதமாக பெண்களுக்கு வழங்குகிறார்கள். இந்தப் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டால், மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்! தவிர, உலக நன்மைக்காகவும் மழை வளத்துக்காகவும் ஸ்ரீசுதர்சன ஹோமம் செய்யப்படுகிறது.
ஸ்ரீவிஷ்வக்சேனர், ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீகருடாழ்வார், ஸ்ரீராமானுஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.
மனக்குழப்பம் உள்ளவர்கள், பெருமாள்மலை ஸ்ரீபிரசன்ன வேங்கடேச பெருமாளைத் தரிசித்தால் குழப்பம் நீங்கும், மனோபயம் அகலும் என்கின்றனர் பக்தர்கள்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசியின் சனிக்கிழமைகளில், மதிய வேளையில் 12 மணிக்கு உத்ஸவர் புறப்பாடு சிறப்புற நடைபெறுகிறது. அப்போது பக்தர்கள் சர்க்கரைப் பொங்கல் படையலிடுகின்றனர். அன்றைய நாளில், அன்னதானமும் நடைபெறுகிறது.

No comments:

Post a Comment