Sunday, October 12, 2014

அகத்தியருக்கருளிய துர்க்கை : 



ஒரு சமயம் அகத்தியர், அம்மையப்பனின் திருமணக்கோலத்தை காண வேதாரண்யத்திற்கு செல்லும் வழியில், விந்தியன் என்ற அசுரன் ஆகாயம், பூமி அலாவி நின்று அகத்தியருக்கு வழிவிட மறுத்தான். 

அகத்தியர் அவ்விந்தியனை சம்ஹரிக்க தமக்கு சக்தி வேண்டும் என அவ்விடத்திலேயே தங்கி இந்த துர்க்கையை உபாசித்து இந்த அன்னையின் அருளால் விந்தியனை சம்ஹரித்து பின்னர் சிவபெருமானின் திருமணக்கோலம் காணச் சென்றார். 

அகத்தியர் இவ்வனத்தில் தங்கி இத்துர்க்கையின் அருள் பெற்றதால் இவ்வன்னையை பைந்தமிழ் பாடலால் பாடினார். வாழ்வித்த அன்னை வனதுர்க்கா என போற்றினர். எனவே இத்துர்க்கைக்கு வனதுர்க்கா என திருநாமம் ஏற்பட்டது.


ஸ்தல வரலாறு:

சிவன், பிரம்மா, விஷ்ணு என்ற மூவருக்கும், முப்பத்து முக்கோடி தேவருக்கும் முடிவற்ற துன்பங்களை தந்து கொண்டே இருந்தனர் அசுரர்கள். ஈரேழு உலகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இதனால் மும்மூர்த்திகளும், தேவர்களும் ஆதிபராசக்தியின் அருள் வேண்டி மிகப்பெரிய யாகம் செய்தனர். 

அந்த யாக குண்டத்தில் தேவி எழுந்தருளி, அஞ்சற்க விரைவில் மகிஷன், சும்பன், நிசும்பன், பண்டன் இவர்களின் கதை முடியும் எனக்கூறி மறைந்தாள். சொல்லியபடியே அன்னை பராசக்தி பூவுலகில் பர்வதச் சாரலில் இளம்பெண்ணாக சஞ்சரிக்கிறாள். அம்பிகை, தேவாதி தேவர்களின் அம்சத்தையும், தன் அம்சத்தையும் இணைத்து துர்க்கையாக தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களை காக்கிறாள். தேவர்கள் அனைவரும் அன்னையைப்

நமஸ்தே! சரண்யே சிவே ஸானுகம்பே!
நமஸ்தே! ஜகத்வியா பிகே விச்வரூபே!
நமஸ்தே! ஜகத்வந்த்ய பாதார விந்தே!
நமஸ்தே! ஜகத்தாரி ணித்ராஹி துர்க்கே.......!

போற்றிப் புகழ்ந்தனர். அமரர்களின் குறையைத் தீர்த்த பின்னர் அவள் ஏகாந்தியாக சிவமல்லிகா என்ற இத்தலத்தில் தங்கி உலக நலன் கருதி தவம் செய்யத் துவங்கினாள். அந்த தலமே தற்போது கதிராமங்கலம் என்று அழைக்கப்படுகிறது.


அறிய வேண்டிய மற்றொரு தகவல்:

பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை என்பதால் அம்பாளின் திருவுருவம் அப்படியே அமைந்துள்ளது. முன்பக்கம் அம்பாள் உருவத்தைப் போலவும், பின்பக்கம் பாம்பு படம் எடுத்தது போலவும் அமைந்துள்ளது. ஆகம விதிப்படி விநாயகர் சன்னதி இல்லாமல் எந்த ஒரு ஆலயமும் அமைவதில்லை. ஆனால் இங்கே விநாயகர், அம்பாளுடனே கலந்திருப்பதாக ஐதீகம். மேலும் மற்ற தலங்களில் சிம்மவாஹினியாக அல்லது மகிடனை வதைத்த அறிகுறியாக மகிஷாசுரனைப் பாதத்தில் கொண்டே காட்சி தருவாள்.

ஆனால் இங்கு மகாலட்சுமியின் அம்சமாக தாமரைப்பூவில் எழுந்தருளியுள்ளாள் வனதுர்க்கை. இத்துர்க்கையை ராகு கால துர்க்கை என்பர். இவள் தனது வலது மேற்கரத்தில் பிரத்தியேக சக்கரம்(தீவினையறுக்க), இடது மேற்கரத்தில் அபயம் கூறும் சங்கு, வலதுகீழ் கரத்தில் அபய வரத ஹஸ்தம், இடது கீழ் கரம் ஊர்த்து விஹாஸ்தம் (இடுப்பில் கை வைத்த எழிலான பாவனை) கொண்டு, தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளுகிறாள்.மனம் மகிழ்ந்த மிருகண்டு முனிவரும் அன்னையை வாழ்த்திப் போற்றினார்.


திருவிழாக்கள் :


இது பரிகாரக் கோயில் என்பதால் திருவிழாக்கள் எதுவும் கிடையாது.


கோவிலின் இருப்பிடம் :


கும்பகோணத்திலிருந்து 26 கி.மீ., சூரியனார் கோவிலிலிருந்து 10 கி.மீ., தூரத்திலும் கோயில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து ஆடுதுறை, சூரியனார்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் வழியில் கதிராமங்கலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்து கல்லணை செல்லும் வழியில் 28 கி.மீ. தூரத்தில் கதிராமங்கலம் அமைந்துள்ளது.


No comments:

Post a Comment