Sunday, October 12, 2014

துர்க்கை அம்மனின் பிற வடிவங்களும் சிறப்புகளும் 





சிவலிங்க வடிவில் துர்க்கை: 

விஜயவாடாவில் உள்ள குன்று ஒன்றிலுள்ள கனகதுர்க்கைக்கு ஆதிசங்கரர் சக்கரம் பிரதிஷ்டை செய்து சாந்த துர்க்கையாக்கினார். மங்களூரிலிருந்து 25 மைல் தூரத்தில் நந்தினி நதிக்கரையில் உள்ளது கடில்நகர். பண்டாசுரனை வதம் செய்த இந்தத் தலத்தில் துர்க்கை சிவலிங்கவடிவில் பக்தர்களுக்குக் காட்சி தந்து கொண்டிருக்கிறாள். ஹரியானா மாநிலத்தின் தலைநகரான சண்டிகர் அருகிலுள்ள ஒரு குன்றில் சண்டி தேவி இருக்கின்றாள். அவள் பெயரால்தான் சண்டிகார் ஏற்பட்டதாம். நந்தப் பிரயாகையில் மிகப் பழமையான சண்டிகா கோயில் உள்ளது. ரிஷிகேஷத்தில் ஒரு குன்றில் சண்டியும் மற்றொரு குன்றில் மானசாதேவியும் கோயில் கொண்டுள்ளனர். இமயத்தில் அலகநந்தா நதிக்கரையில் கிருஷ்ணபரகின்மாயா, சக்தாயகம்மர்த்தினி கோயில் உள்ளது. இங்கு துர்க்கைக்கு சிலை ஏதுமில்லை. ஒரு குண்டத்தை துர்க்கையாகப் பாவித்து, பூஜை செய்கின்றனர்.

தடைகளை தகர்க்கும் துர்க்கை:

துர்க்கம் என்றால் அரண் என்று அர்த்தம். பக்தர்களுக்கு அரணாக இருந்து அரவணைத்துக் காப்பவளே துர்க்கை அன்னை. நீரில், நிலத்தில், வானில், கானில், தீயில், எதிரிகளுக்கு மத்தியில் என எங்கே இருந்து வேண்டினாலும் அங்கே உடன் தோன்றிக் கவசமாய்க் காப்பவள் அவளே என்கின்றன புராணங்கள். தூய மனதோடு வணங்குவோரை ஓடிவந்து காத்திடும் அந்த துர்க்கை அன்னையின் திருவடிவங்களை நவராத்திரி நாட்களில் தரிசிப்பதே பெரும் பாக்கியம் என்பர். கருணை மழை பொழியும் துர்காதேவியை தரிசனம் செய்தால் உங்கள் வாழ்வில் தடை யாவும் விலகும்.

சாந்தமான துர்க்காதேவி: 

தஞ்சை கும்பகோணம் பேருந்து சாலையில் உள்ள பட்டீஸ்வரத்தில் உள்ளது தேனுபுரீஸ்வரர் ஆலயம். இந்த ஆலய கர்ப்ப கிரகத்தின் வடக்குப் பகுதியில் வடக்கு திசை நோக்கி எழுந்தருளியுள்ளாள் துர்க்கா தேவி. எட்டுக் கரங்கள் கொண்டு இங்கு துர்க்கை சாந்த சொரூபிணியாக அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் திருமேனியைப் போன்ற தோற்றமும், பொலிவு மிக்க தெய்வீக அம்சமும் உடைய வேறு துர்க்கையை வேறு எங்கும் காண இயலாது என பக்தர்கள் கூறுகின்றனர். 
உய்யக்கொண்டான் விஷ்ணு துர்க்கை: 

திருச்சியை அடுத்த உய்யக்கொண்டான் திருமலையில் உள்ளது ஆளுடையார் கோயில். இங்கு இறைவனின் தேவ கோட்டத்தில் வடக்கு திசையில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை. திருமணம் நடக்க வேண்டியும் குழந்தை வரம் வேண்டியும் துர்க்கையை வேண்டும் பெண்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் அன்னைக்கு எலுமிச்சைப் பழ மாலை அணிவித்து மகிழத் தவறுவதில்லை.

பணிவை உணர்த்தும் விஷ்ணு துர்க்கை: 

கும்பகோணம் மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள மரத்துறையில் உள்ள ஹரிஹரபுத்ர சுவாமி ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் விஷ்ணு துர்க்கை. பொதுவாக தேவ கோட்டத்தின் வடபுறத்தில் அருள்பாலிக்கும் துர்க்கை இங்கு கோயிலின் நுழை வாயிலிலேயே வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறாள். அன்னைக்கு இங்கு தனி மண்டபம் உள்ளது. இங்கு அன்னையை வணங்குவோர் சற்றே குனிந்து பார்த்தால்தான் துர்க்கையின் முழு உருவத்தையும் தரிசிக்க முடியும். பணிவு தேவை என்பதை இங்கே சொல்லாமல் உணர்த்துகிறாள் இந்த விஷ்ணு துர்க்கை. 
அஷ்டபுஜ துர்க்கை: 

கோவை உக்கடம் அருகே உள்ளது. உஜ்ஜைனி மகா காளியம்மன் ஆலயம். இங்கு பிராகாரத்தின் மேற்குப் பகுதியில் அருள்பாலிக்கிறாள் அஷ்டபுஜ துர்க்கை. இந்த துர்க்கை எட்டுக் கரங்களுடன் மகிஷாசுரன் மேல் சூலம் குத்திய நிலையில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த துர்க்கையின் தலையில் சிவ பெருமானின் திருஉருவம் உள்ளது சிறப்பம்சம். இந்த ஆலயத்தில் துர்க்கையே பிரதானம். செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில் இந்த துர்க்கைக்கு நடைபெறும் ராகு கால பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பேறு வேண்டியும் இந்த பூஜையில் கலந்து கொள்ளும் பெண்கள் நல்ல பலனை அடைகின்றனர். தங்கள் நன்றிக் கடனை நிறைவேற்ற பெண்கள் அன்னைக்கு எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டு மகிழ்வது இங்கு வழக்கமாக உள்ளது.

பீமநகர் விஷ்ணு துர்க்கை: 

திருச்சி பீம நகரில் உள்ளது வேணுகோபால் கிருஷ்ணன் ஆலயம். இந்த ஆலயத்தின் மகாமண்டபத்தின் வலது புறம் தனி சன்னதியில் விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறாள். துர்க்கையின் முன் சிங்கத்தின் திருமேனியும் பலிபீடமும் உள்ளன. துர்க்கை எட்டுக் கரங்களுடன் சூலம் ஏந்தி சிம்ம வாகனத்தில் காட்சி தருகிறாள். இந்த துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் எலுமிச்சை விளக்கிட்டு வேண்டிக் கொள்வதால் தடைப்பட்ட திருமணம் நடந்தேறுவதுடன் கன்னிப் பெண்கள் விரும்பிய மணாளனை கைபிடிப்பது நிஜம் என்கின்றனர் பக்தர்கள்.

No comments:

Post a Comment