Thursday, October 9, 2014

பொன்னம்பலத்தாடும் ஐயன்

திருவெம்பாவையின் நிறைவுப்பாடல் சிவபெருமானது திருவடிகளைப் 
போற்றுவதாக மட்டுமே அமைந்துள்ளது. அப்பாத மலர்களே ஆதியும் 
அந்தமும் ஆவன. அவையே ஐந்தொழில்களுக்கும் ஆதாரமாக 
விளங்குவன. அத்திருவடிகளைப் பாதமலர் என்றும், செந்தளிர்கள் என்றும் 
பொற்பாதம் என்றும் பூங்கழல்கள் என்றும் இணையடிகள் என்றும் 
புண்டரீகம் என்றும் பொன்மலர்கள் என்றும் போற்றித் துதிக்கிறார் 
மாணிக்கவாசகப் பெருமான்.

இறைவனது திருவடிகளைத் தாமரையாக உருவகிப்பது வழக்கம். 
இறைவனோ பவளம்போன்றும் செம்பொன் போன்றும் ஒளிருபவன். 
தாமரையானது கதிரவனைக் கண்டால்தான் மலரும். ஆனால் இப்பாத 
தாமரையோ எப்போதும் என்றென்றும் மலர்ந்து விளங்குவது. ஆயிரம் 
தாமரைகள் சேர்ந்தது போல ஒளி வீசுவது. மணமும் வீசுவது. ஆம்! 
இயற்கையாகவே அவை மணம் வீசுபவை.எல்லா வகை மலர்களுக்கும் 
மணம் கொடுப்பவனும்,மலரெனவே நிற்பவனும் அவனே. அதைத்தான் 
அப்பரும், “வாச மலர் எல்லாம் ஆனாய் நீயே” என்றும் ,” நறு மலராய் நாறு 
மலர்ச் சேவடி” என்றும் அருளினார். பெருமானது பாத மலர்களை மட்டும் 
தாமரையாக உருவகிப்பதில் திருப்தி அடையாத மணிவாசகர் , அவனது 
திருவுருவம் முழுவதுமே தாமரை போன்றது. அதிலும் தாமரைக் காடு 
போன்றது என்கிறார். “செந்தாமரைக்காடு அனைய மேனித் தனிச்சுடரே” 
என்பது திருவாசகம்.

திருநாவுக்கரசரது தேவாரத்திருப்பதிகங்களில் திருவடிச் சிறப்பைப் 
பேசுபவனவாகத் திருவதிகை, திருஇன்னம்பர், திருவையாறு, திருமாற்பேறு 
ஆகிய தலங்களின் மீது பாடல்கள் அமைந்துள்ளன. அவை அனைத்தும் 
ஒப்பற்ற பாடல்கள். நெஞ்சத்தை நெகிழ வைப்பவை. நித்திய 
பாராயணத்திற்கு உரியவை. அப்பேசற்கு அரிய திருவடிகளிடம் நம்மை 
ஆட்படுத்துபவை
பாம்பணையில் துயிலும் மாலும், நான்முகனும் சிந்திப்பரிய திருவடிகள் 
அவை. வராக வடிவெடுத்துப் பலகாலம் அகழ்ந்து சென்றும் சிவஜோதியின் 
பாதமலர்களைக் காணமாட்டாமல் திருவாரூர்த் தியாகேசப்பெருமானைத் 
தியானித்தவாறே தமது மார்பில் அவனது அஜபா நடனத்தை ஏற்றுக் 
களிப்பவர் திருமால். அதோடு அமையாது, அம்மலரடிகளைச் சிந்தித்துப் 
போற்றுவதை, நாவுக்கரசர், “அரவணையான் சிந்தித்து அரற்றும் அடி” 
என்கிறார். போற்றுதல், வணங்குதல் , வழிபடுதல் போன்ற தொடர்களைக் 
காட்டிலும் சிறந்தது “அரற்றுதல்” என்ற இச்சொல் ஓலமிட்டு 
அலறுகிறானாம் திருமால். இப்படிச் சொல்கிறார் மாணிக்க வாசகர்: “மாலும 
ஓலமிட்டு அலறும் அம்மலர்க்கே மரக்கணேனையும் 
வந்திடப்பணியாய்”.என்பது அவரது வாக்கு.

அத்திருவடிகள் அண்மையில் உள்ளவை அல்ல. அதே சமயம் தூரத்தே 
உள்ளனவும் அல்ல. “சேயாய் நணியானே என்று சிவபுராணம் 
கூறுவதுபோல், அப்பரும், “ அணியனவும் சேயனவும் அல்லா அடி” என்றார். 
அவற்றை எப்படி வருணிப்பது? எவ்வாறு அளக்கத்தான் முடியும்? அவை ” 
சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து” நிற்பதோடு, “கணக்கு 
வழக்கைக் கடந்து” நிற்பவை அல்லவா? ஆகவே, “ அரை மாத்திரையில் 
அடங்கும் அடி என்ற அப்பர் பெருமான் “ அகலம் அளக்கிற்பார் இல்லா அடி” 
என்று அருளினார். அப்படிப்பட்ட பாத கமலங்கள் அடியார்களுக்கு 
அமுதமாக விளங்குபவை. மருந்தாகிப் பிணி தீர்க்க வல்லவை. மந்திரமும் 
தந்திரமும் ஆனவை. பற்றுக்களை விட்டவர்க்கும் வேறு பற்றுக்கோடு 
இல்லாதவர்களுக்கும் ஒரே கதி என நிற்பவை. நிந்தனை செய்பவர்களது 
பொய் உரைகள் சென்று சேராதவை. தன்னைச் சரணம் என்று சார்ந்த 
மார்க்கண்டேயனைக் காப்பதற்காகக் காலனையும் உதைத்தவை.

அப்படியானால் அச்சேவடிகள் யார்க்கு எளியவை ? அப்பர் இதற்கும் விடை 
அருளுவார். “ சீலத்தராகித் தொடர்ந்து விடாத தொண்டர்க்கு அணியன” 
என்பதே அது. அத்தொண்டர்கள் பெறும் பேறு எத்தகையது தெரியுமா? 
உண்மைத் தொண்டர் வேண்டும் பிறவாமை ஆகிய வரத்தைக் 
கொடுப்பதேயாகும். இதைத்தான் குருநாதர், “ ஏழேழ் பிறப்பும் அறுத்தன” 
என்று ஐயாறப்பரின் திருவடிப்பெருமையைப் பேசுகிறார். அதோடு மட்டும் 
அல்ல. தன்னைப் போற்றும் குருடனையும் பாழ் நரகக் குழியிலிருந்து கை 
கொடுத்து ஏற்றி உய்விக்கும் பரம கருணாமூர்த்தியாகப் பெருமான் 
விளங்குவதை,
குருடரும் தம்மைப் பரவக் கொடு நரகக் குழி நின்று
அருள் தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே.”
என்பன இவ்வினிய அடிகள்..

அடியார்களது அர்ச்சனைகள் சென்றடையும் இடம் பெருமானது பாதங்கள் 
அல்லவா? அப்பாதங்கள், போலிகளது அர்ச்சனைகளையும் கூடத்தான் 
ஏற்றுக்கொள்கின்றன. அது, அவன் அனைவரையும் மன்னித்து ஏற்கும் 
பெரும்கருணையை உணர்த்துவதாக உள்ளது. உற்றார் யாரும் 
இல்லாதவர்க்கும் உறுதுணையாக இருப்பதும், அற்றார்களுக்கு அரும் 
பொருளாவதும் சிவபிரானது பாதங்களே என்று அப்பர் சுவாமிகள் நமக்கு 
உபதேசிக்கிறார். துயரம் வந்து நம்மை வெய்யில் சுடுவதுபோன்று 
சூழ்ந்துகொண்டால் , நிழலாக வந்து நம்மைக் காப்பன அத்திருவடிகளே. 
இப்படி எல்லாப்பொருளாக இருந்து திகழும் ஐயாறன் அடித்தலத்தை 
அப்பரது திருவாக்கால் இங்கே காணலாம்:

இப்பாடல், இறைவனே எல்லாமாகி நிற்பதை அறிவித்து அவனது 
திருவடிகளே எல்லாவற்றிக்கும் பிறப்பிடம் ஆவதை,

ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த
வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும்
சோதி அம்சுடர் ஞாயிறும் ஒப்பன தூ மதியோடு
ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே.
என்று போற்றுகின்றார் திருநாவுக்கரசர்.

இத்தனைச் சிறப்பு வாய்ந்த திருவடிகள் தன் சிரத்தில் எழுந்தருளவேண்டும் 
என்று விண்ணப்பிக்கிறார் அப்பரடிகள். வேண்டுவார் வேண்டுவதே ஈயும் 
வள்ளலான சிவ பெருமான் அவரைத் திருநல்லூருக்கு வரவழைத்துத் தன் 
பாதமலர் சூட்டினான். உவகை மேலிட்ட நாவுக்கரசு சுவாமிகள், “திருவடி 
என் தலைமேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்லவாறே” எனப் 
பாடுகிறார். கனவிலும் இந்தப்பேற்றை அடையத் தவம் செய்யாத நாம், 
நல்லூர் சென்று அக்கோவிலில் நம் சிரத்தில் சார்த்தப்பெறும் 
திருவடிகளைச் சூடவாவது தவம் செய்ய வேண்டாமா?

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''

No comments:

Post a Comment