Saturday, October 4, 2014

குரு விரதம்


குரு பார்க்க கோடி நன்மை என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு முதல் தர சுபக்கிரகமாக குரு போற்றப்படக் காரணம், ஜாதக ரீதியான பல்வேறு தோஷ அமைப்புகளை ஏற்படுத்தும் கிரகங்கள், ராசிகள், கிரகக் கூட்டணிகள், அசுப ஸ்தானங்கள் ஆகியவற்றை தமது பார்வை பலத்தால் நன்மை தரும்படி செய்து விடுவதால்தான். ஒருவரின் அதிர்ஷ்ட நிலையின் அளவீட்டை நிர்ணயம் செய்வதும் குருவே. இதுதவிர பொருளாதார உயர்வு, பிறர் நம்மை மதிக்கும் நிலை, புத்தியின் தெளிவு ஆகிய பல்வேறு விஷயங்களில் அவரது பங்களிப்பு பெருமளவு உண்டு. 

வியாழ விரதம் எனப்படும் குருவார வழிபாட்டைக் கடைபிடிப்பதால் குருவின் ஆகர்ஷண சக்தியின் வலிமையால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். 

குருவார வழிபாட்டை வளர்பிறை வியாழக்கிழமையில் ஆரம்பித்துச் செய்வது சிறப்பாகும். சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு, மஞ்சள் நிற ஆடையில் பிரதானமாக இருக்கும்படி ஆடை அணிந்து, நெற்றியில் சந்தனம் அணிந்து வடக்கு முகமாக அமர்ந்து பூஜையை ஆரம்பித்து செய்யவேண்டும். 

தென்முகம் கடவுளான தட்சணாமூர்த்தியின் திருவுருவ படம் அல்லது ஒருவருடைய பெருமதிப்பிற்குரிய ஆன்மிக குருவாக விளங்குபவர்கள், அல்லது மனதிற்கு உகந்த மகான்களின் திருவுருவப் படங்களை பூஜைக்குப் பயன்படுத்தலாம். 

ஒரு மஞ்சள் விரிப்பை விரித்து அதில் மேற்கூறிய தெய்வத்திருவுருவங்களோ ஆன்மிக குருமார்களின் படங்களையோ நன்கு சுத்தம் செய்து பொட்டிட்டு மலர் தூவி அலங்கரித்து கிழக்கு நோக்கி வைத்து நான்கு அல்லது ஆறு தீபங்களை (அகல்) ஏற்றிவைத்து, இனிப்புகளோ, கற்கண்டோ நைவேத்தியம் செய்து, தூப, தீப, கற்பூர ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம். 


அன்று ஒரு வேளை மட்டும் உணவு உண்டு விரதமிருந்து அடுத்த நாள் அதை நிறைவு செய்யலாம். இல்லாவிடில் காலையில் மட்டும் பூரண உபவாசம் இருந்து மதியம் உணவு எடுத்துக் கொள்ளலாம். காலையிலிருந்து மதியம் சாப்பிடும் வரையில் மவுன விரதம் இருப்பது மிகவும் சிறந்ததாகும்.

No comments:

Post a Comment