ஸ்ரீ நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம்
உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
ஸ்ரீ நந்திகேஸ்வரர் (வரலாறு) புராணம்
தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் திருவாதிரை நக்ஷத்திரத்தில் சிலாத முனிவரின் புதல்வராக நந்திகேஸ்வரர் அவதரித்தார்.
முன்னர் ஒரு முறை கைலாயத்தில் நந்திகேஸ்வரர் வழக்கமான சேவைகளை செய்யும் போது தனக்கும் பூமியிலே போய் பிறவி எடுக்க வேண்டும் என்கிற எண்ணம் தோன்றியது. அதை புரிந்து கொண்ட சிவபெருமான் ,”சரி! உன்னுடைய எண்ணம் போல கயிலைக்கு சமமானதாகப் போற்றப்படும் திருவையாற்றிலே சிலாத முனிவரின் குழந்தையாகப் பிறந்து உன் எண்ணம் போல திருமண வைபவங்கள் கண்டு கயிலைக்கு வந்து சேரலாம்” என்று அருள் செய்தார்.
அதன்படி திருவையற்றிலே சிலாத முனிவரின் புதல்வனாக நந்திகேஸ்வரர் திருவாதிரை நக்ஷத்திரத்தில் அவதரித்தார்.
இன்றும் திருவையாற்றில் பங்குனி மாத திருவாதிரை நக்ஷத்திரத்தில் நந்திகேஸ்வரரின் ஜனன உற்சவமும், மாலை பட்டாபிஷேகமும் நடைபெறுகிறது.
மறுநாள் திருவையாற்றை அடுத்த [சப்த ஸ்தலங்களில் ஒன்றான திருமழபாடி நந்திகேஸ்வரருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக வியாக்ரபாத மகரிஷிக்கு சுயசாம்பிகை என்கிற மகளை முன்னதாகவே இறைவன் அருளினார்] அந்த சுயசாம்பிகையை புனர்பூச நக்ஷத்திரத்திலே முப்பத்து முக்கோடி தேவர்கள் சாக்ஷியாகவும், அக்னி சாக்ஷியாகவும், பஞ்சபூதங்கள் சாக்ஷியாகவும் மிகவும் விமரிசையாக ஸ்ரீ நந்திகேஸ்வரருக்கு திருமண வைபவம் லக்ஷக்கனக்கான பக்தர்களும், சிவகணங்களும் கண்குளிர காண நடந்தேறியது.
குறிப்பு :-
திருவையாற்றிலே நந்திகேஸ்வரர் மனித உருவத்தில் பிறந்து சிவகணங்களின் தலைவராக பட்டாபிஷேகம் முடிந்து சுயசாம்பிகையை திருமணம் செய்து கொண்டார். பின்னர் சிவபெருமான் ரிஷப முகத்துடன் காக்ஷியளிக்கும்படி ஆணையிட்டார்.
அதன்படி நாம் நவக்கரை நந்தி கோவிலில் ரிஷப முகத்துடன் கூடிய ஸ்ரீ நந்திகேஸ்வரர், சுயசாம்பிகைத் திருமண வைபவத்தை கயிலாயத்தில் நடைபெறுவது போல் கண்டு களிக்கிறோம்.
நம் சைவ சமயத்தில் [பழமையான] சிவாலயங்களுக்கு செல்லும் பொது முதலில் விநாயகர் வழிபாடும் அடுத்ததாக அதிகாரநந்தியின் உத்தரவோடும் தான் சிவனை வழிபடுகிறோம். அதன்படி பல சிவாலயங்களில் ரிஷப வாகனம் என்றும், அதிகாரநந்தி (ரிஷப முகத்துடனும், கூப்பிய கரங்களுடனும், சிவபெருமானை போல் வலது கையில் மழுவும், இடது கையில் மானும் ஏந்தி காக்ஷியளிப்பார்) என்றும் உற்சவ காலங்களில் நந்தியின் பெருமையைப் பறைசாற்றும் வண்ணம் மேற்படி வாகனங்களில் சிவபெருமானை எழுந்தருளச் செய்வதை காண்கிறோம்.
இங்கே 31 அடிஉயரமும், 21 அடி நீளமும். 12 அடி அகலமும் உள்ள மிகப்பெரிய நந்தி காட்சியளிக்கிறது. அதனால் இந்த இடம் நந்தி கோவில் என்றே அழைக்கப் படுகிறது.
இந்த ஸ்தலத்தில் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீநந்திகேஸ்வரருக்கு திருமண வைபவம் காண கண்கோடி வேண்டும்.
“நந்தி திருமணம் கண்டால் முந்தி திருமணம் நடக்கும்”.
“நந்தன ஆண்டில் நல்ல (கொடை) மழை பெறலாம்”
எல்லாருடைய வாழ்விலும் சகல செல்வங்களும், வளமும் நலமும் பெற்று வாழ வேண்டுமாய் ஆசீர்வதிக்கிறோம்.
சுபம்
No comments:
Post a Comment