Sunday, October 12, 2014



மெட்டி அணிந்த துர்க்கையம்மன்:

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 15 கி.மீ. தொலைவில் உள்ளது கீழச் சூரிய மூலை என்ற தலம். இங்குள்ள சூரிய கோடீஸ்வரர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள் துர்க்கையம்மன். இந்த துர்க்கையின் ஒரு பாதத்தில் மெட்டி உள்ளது. தனது ஒரு காலை சற்றே முன் நகர்த்திய கோலத்தில் அருள்பாலிக்கிறாள் இந்த துர்க்கை. தன்னை தரிசிக்க வரும் பக்தர்களை அன்னை நடந்து வந்து வரவேற்கிறாள் என்று இதற்கு பொருள் கூறுகின்றனர் பக்தர்கள்.

துயர் துடைக்கும் துர்க்கையம்மன்: 

கும்பகோணம் அணைக்கரை நெடுஞ்சாலையில் அணைக்கரையிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது கோடாலி கருப்பூர் என்ற தலம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தின் பிராகாரத்தில் கீழ்த் திசையில் அருள்பாலிக்கிறாள் துர்க்கையம்மன். மங்கையர் துயர் துடைக்கும் இந்த துர்க்கையம்மன் இந்தப் பகுதி பெண்களின் கண்கண்ட தெய்வம் என்பதில் சந்தேகமே இல்லை.

திருச்சி பாலக்கரை துர்க்கை: 
திருச்சி பாலக்கரையில் துர்க்கை அம்மனுக்கு தனி ஆலயம் உள்ளது. 500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தன் மேல் இடது கரத்தில் சங்கையும், வலது மேல் கரத்தில் சக்கரத்தையும், கீழ் வலது கரத்தில் சூலத்தையும், கீழ் இடது கரத்தில் பாச முத்திரையுடன் மகிஷனின் சிரத்தின் மேல் நின்ற கோலத்தில் இள நகை தவழ காட்சி அளிக்கிறாள். இறைவியின் விமானத்தில் உள்ள சுதை வேலைகள் மிகவும் சிறப்பாக உள்ளன. விமானத்தைச் சுற்றிலும் அஷ்டலட்சுமிகளின் திருமேனிகள் அலங்கரிப்பதுடன் நடு நாயகமாய் மூன்று திசைகளில் கிருஷ்ணனின் திருமேனியும் ஒரு புறம் வக்கிர காளியின் திருமேனியும் காணப்படுகிறது. இங்கு ஏழு வாரங்கள் ராகு கால பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு விரைந்து திருமணம் நடப்பது உறுதி என்கின்றனர் பக்தர்கள்.
தனிக்கோயிலில் வனதுர்க்கை: 
நவதுர்க்கையில் ஒன்றான வனதுர்க்கைக்கு கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் தனி ஆலயம் இருப்பது குறிப்பிடத்தக்கது. கல்வியில் சிறந்த கம்பர் இந்த அன்னையின்பால் விசேஷ பக்தி கொண்டவர். இவளை வழிபடாமல் எந்தச் செயலையும் அவர் துவங்குவது இல்லை. ஒருநாள் மழைக் காலத்தில் கம்பர் வீட்டுக் கூரை சிதைந்தது. கம்பர் அம்பாளை நினைத்து மனமுருகி அம்மா உன் அருள் மழை என்றும் என்னைக் காக்கும் எனக் கூறி படுத்து உறங்கிவிட்டார். காலை விழித்தெழுந்து பார்த்தபோது அவர் வீடு நெற்கதிர்களால் கூரை வேயப்பட்டு இருந்ததைக் கண்டு மனமுருகி கதிர்தேவி கதிர்வேய்ந்த மங்கள நாயகி எனப் பாடிப் பரவசமானார். இதுதான் நாளடைவில் கதிராமங்கலம் என மருவி உள்ளது. வனதுர்க்கா பரமேஸ்வரிக்கும் காசி விசாலாட்சி அன்னபூரணி ஆகியோருக்கும் தொடர்பு உண்டு. அம்பாள் தினமும் காசி போய் வருவதாக ஐதிகம் உண்டு. இதற்கு ஏற்ப இன்றும் அம்பாளின் கோபுர விமானத்தில் அம்பாளுக்கு நேர் எதிரே ஒரு சாண் சதுர அளவில் ஒரு துவாரம் உள்ளது. இதனால் இவளை ஆகாச துர்க்கை என்றும் சொல்வர். பொதுவாக ராகுவுக்கு அதிதேவதை துர்க்கை. அதுபோலவே அம்பாளின் திருஉருவமும் உள்ளது. முன்பக்கத் தோற்றம் அம்பாள் தோற்றமும் பின்பக்கம் பாம்பு படம் எடுத்ததுபோல் உள்ளது.

No comments:

Post a Comment