செவ்வாயும் வெள்ளியும் அம்மனுக்கு உகந்த நாட்கள் என்போம். நகரேஷு காஞ்சி எனச் சிறப்பித்துச் சொல்லப்படும் காஞ்சி மாநகரில், வருடம் 365 நாட்களுமே காமாட்சி அம்பாளின் ஆட்சி நடைபெறுகிறது. நம் வீட்டில் ஒரே ஒரு நாள் அம்மா இல்லாமல், அவளின் நடமாட்டம் இல்லாமல் போனாலும், அந்த நாள் களையிழந்து அல்லவா காணப்படுகிறது! அதனால்தான், காஞ்சியை ஆட்சி செய்யும் காமாட்சியின் செங்கோல் வருடம் முழுவதும் ஓங்கி உயர்ந்து ஆட்சி செலுத்துகிறது.
கிழமைகளும் பண்டிகைகளும், விசேஷங்களும் விழாக்களும் நமக்காகத்தான்! நவராத்திரி எனும் ஒன்பது நாள் விழாவும், அதையடுத்து பத்தாம் நாள் விஜயதசமி எனப்படும் பண்டிகையும் நாம் வணங்கி, பலன் பெற்று, பலமுடனும் நலமுடனும் வாழ்வதற்காகவே உண்டாக்கப்பட்ட கோலாகலங்கள்.
காஞ்சி காமாட்சி அம்பாள் ஆலயத்திலும், நவராத்திரி விழாவானது வெகு விமரிசையாக நடைபெறுகிறது. புண்ணியம் நிறைந்த மகாளய அமாவாசை அன்று, வாராஹி சந்நிதியில், பகலில் சண்டி ஹோமம் நடைபெறும். இரவில், ம்ருத்சங்க்ரஹணம் வாஸ்து சாந்தி பூஜை நடைபெறும். அடுத்த நாளிலிருந்து சாரதா நவராத்திரியின் ஒன்பது நாள் விழா, விமரிசையாக நடைபெறும். அந்த நாட்களில், பகலில் ஸ்ரீசக்கரத்துக்கு நவாவரண பூஜை நடைபெறும். இந்த பூஜையைத் தரிசிப்பது, சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்து, ஐஸ்வரியங்களை அள்ளித் தரக்கூடியது என்பார்கள்.
அதையடுத்து, கோயிலின் நவராத்திரி மண்டபத்தில், தினமும் இரவு வேளையில் அம்பாள் உற்ஸவர் புறப்பாடாகி, பிராகாரத்தில் வலம் வந்து தரிசனம் தருவார். தினமும் சூரசம்ஹாரமும், பிராகாரத்தில் உலா வருவதும் நடைபெறும். எட்டாம் நாளான துர்காஷ்டமி நாளில், உற்ஸவர் காமாட்சி அம்பாளுடன் துர்கையும் பிராகாரத்தில் உலா வருவார். இந்த நாளில் காமாட்சியையும் துர்கையையும் ஒருசேர தரிசித்தால், சத்ருக்கள் பயம் நீங்கும்; எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.
துர்காஷ்டமியுடன் சூரசம்ஹாரமும் பூர்த்தியாகும். ஆனால், அம்பாள் புறப்பாடு என்பது விஜயதசமி நாளில் நிறைவுறுகிறது. சூரனின் தலையுடன் ஒருநாள், மகிஷாசுரனின் தலையுடன் ஒருநாள் என அம்பாள் காட்சி தருவதைக் காண, காஞ்சி புரம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
”அம்பாளைப் பற்றி பல ஸ்தோத்திரங்கள் இருக்கின்றன. அவற்றில், ஆதிசங்கரர் அருளிய ‘செளந்தர்ய லஹரி’யும், மூக கவி எழுதிய ‘மூக பஞ்ச சதீ’யும் ஈடு இணையற்றவை. கண்ணுக்கும் மனசுக்கும் எட்டாத பராசக்தியை, கண்ணால் காணவும் மனதால் அனுபவிக்கவும் செய்கிற சக்தி, செளந்தர்ய லஹரிக்கும் மூக பஞ்ச சதீக்கும் உண்டு.” என்கிறார் காஞ்சி மகான்.
மூகன் என்றால், வாய் பேச இயலாதவன் என்று அர்த்தம். அப்படி, வாய் பேச முடியாமல் இருந்த பக்தர் ஒருவர், காஞ்சியில் குடிகொண்டிருக்கும் காமாட்சியின் கிருபா கடாட்சத்தையும், அவளின் தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிர்த சாகரம்போல் ஐந்நூறு ஸ்லோகங்களைப் பொழிந்து தள்ளினார். அதையே ‘மூக பஞ்ச சதீ’ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து. ‘சத’ என்றால் நூறு. மூக பஞ்ச சதீயை எவரொருவர் படித்துப் பாராயணம் செய்து, காமாட்சி அம்பாளை ஆராதிக்கிறாரோ, அவர்கள் ஞானத்திலும் செல்வத்திலும் சிறந்து விளங்குவார்கள்!
குறிப்பாக, நவராத்திரி வேளையில் காமாட் சியை செளந்தர்ய லஹரியைப் பாடியும் மூக பஞ்சசதீயைச் சொல்லியும் வழிபடுங்கள். எல்லா வளமும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக, துர்காஷ்டமி நாளில், நவராத்திரியின் எட்டாம் நாளில், தரிசியுங்கள். மனோ பலம் பெருகும். மங்கல நிகழ்வுகள் இல்லத்தில் நடைபெறும்.
”அம்பாள் கறுப்பா, சிவப்பா? மூகர், இரண்டு நிறத்தையுமே சொல்லியிருக்கிறார். அதாவது குங்குமப் பூங்கொத்து போன்ற கோமளக் கொடி என்றும், செக்கச் சிவந்தவள் என்றும் பல இடங்களில் குறிப்பிடுகிறார். அதையடுத்து, கருநீலக் காயாம்பூ போல் ஒளிர் கிறாள் என்றும் தெரிவிக்கிறார்’ என விளக்குகிறார் காஞ்சி மகான். மேலும் தொடர்ந்து ”ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில், ‘ஜயதி கருணா காசித் அருணா’ என்கிறார். நல்லதுக்கெல்லாம் உற்பத்தி ஸ்தான மாக சம்பு என்று ஒன்று இருக்கிறது. அது பரப்பிரம்மவஸ்து. பரப்பிரம்மமாக செயலின்றி இருந்தால் போதாது என்று, அது லோகத்துக்கு நல்லது செய்வதற்காக ஒரு ஸ்வரூபம் எடுக்கிறது. அதற்கு அம்பாள் என்று பெயர். நிறமில்லாத சம்பு, உலகைக் காக்கும் கருணையால் அருணவர்ணம் கொண்டு, வெற்றியோடு பிரகாசிக்கிறது. ஜகத் த்ராதும் சம்போ. ஜயதி கருணா காசித் அருணா. சூர்யோதயத்துக்கு முன்னே கிழக்கில் பரவுகிற சிவப்புதான் அருண நிறம். அருண நிறம் என்றால் கருணை நிறம். அதுவே அம்பிகையின் நிறம்” என்கிறார் காஞ்சி மகான்.
காஞ்சியில் குடிகொண்டிருப்பவள், கருணையே வடிவானவள். நூறு கோடி சூரியப் பிரகாசத்துடன் திகழ்பவள். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் விடியலைத் தந்து, வாழ்வில் ஒளியேற்றுபவள். வானத்து நிறமான நீல நிறத்திலோ, வானத்தில் பிரகாசிக்கும் சூரியச் சிவப்பு வர்ணத்திலோ, பூமிக்குப் போர்வையாய்த் திகழ்கிற வயல்களின் நிறமான பச்சை நிறத்திலோ… காமாட்சி அன்னைக்குப் புடவை சார்த்தி வழிபடுங்கள். உங்கள் வாழ்க்கையில் பிரகாசத்தையும் அழகையும் பசுமையையும் தந்து, உங்களை ஜொலிக்கச் செய்வாள் பராசக்தி.