Tuesday, September 23, 2014

ஆலயக் கருவறைகளில் சிவபெருமான் தமது அருவுருவத் திருமேனியான லிங்க வடிவில் எழுந்தருளிக் காட்சி தருவதையே நாம் கண்டிருக்கிறோம். ஆனால் இறைவனும் இறைவியும் கருவறையில் ஒருவர் பின் ஒருவராக ரிஷபத்தின் மீது அமர்ந்து கால்களைக் கீழே தொங்கவிட்டவாறு அருள்பாலிக்கும் அரிய ஆலயம் ஒன்று கர்நாடக மாநிலம், கதக் மாவட்டத்தில் லக்ஷ்மேஷ்வரா கிராமத்தில் உள்ளது. இந்தத் திருக்கோலம் இந்தியாவில் வேறு எங்குமே இல்லை என்றே கூறலாம்.

இந்தக் கிராமம் சிவாலயங்களுக்கு மட்டுமின்றி, ஜைன மத ‘பசதிகள்’ எனப்படும் ஜினாலயங்களுக்கும் பெயர் பெற்றது. புலிகள் வந்து நீர் அருந்தும் ஒரு பெரிய ஏரி இங்கு இருந்ததால் ‘புலிகரே’ (புலிகள் நீர் அருந்தும் நீர்நிலை) என்று அழைக்கப்பட்டு, பின்னர் நாளடைவில் இப்பகுதியினை ஆண்ட லக்ஷ்மண ராஜா என்பவர் பெயரால் ‘லக்ஷ்மேஷ்வரா’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுகிறார்கள். இங்குள்ள ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயம் காரணமாகவும் இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதாமி சாளுக்கிய மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட இந்த ஸ்ரீ சோமேஸ்வர் ஆலயம் 11வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. 


இந்த ஆலயத்தில் 50க்கும் மேற்பட்ட கன்னட, வடமொழிக் கல்வெட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.சாளுக்கிய மன்னர்களின் கட்டடக் கலைபாணிக்கு இக்கோயில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த சிவாலயத்தைச் சுற்றிலும் கோட்டைச் சுவர் போன்று நெடிதுயர்ந்த மதில்களும், மூன்று நுழைவாயில்களும் உள்ளன. பிரதான நுழை வாயிலை அடுத்து முக மண்டபம், நவரங்க மண்டபம், அர்த்த மண்டபம், அடுத்து கருவறை என்று அனைத்து அம்சங்களுடன் அமைந்துள்ள இந்த ஆலயத்தில், ஸ்ரீசோமேஸ்வர் என்ற பெயரோடு ஈசன் கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
ரிஷப வாகனத்தில் ஸ்ரீசோமேஸ்வரரின் பின்புறம் அமர்ந்துள்ள பார்வதிதேவி, சிவனாரின் தோளில் கையை பதித்து அமர்ந்துள்ளாள். முகத்தில் சாந்தம் தவழ, ஜடா மகுடத்துடன் காட்சி தரும் ஸ்ரீசோமேஸ்வர் அபய ஹஸ்தமாகத் திகழ்கின்ற தன் முன் வலக்கரத்தில் அட்ச மாலையையும், இடக்கரத்தில் ஒரு கனியையும், பின் வலக்கரத்தில் திரிசூலத்தையும், பின் இடக்கரத்தில் டமருகத்தையும் ஏந்தி, கம்பீரமாக அமர்ந்திருக்கும் காட்சி தரிசிப்பவர்களின் கண்களையும், கருத்தையும் விட்டு அகலாது. 


சிவபெருமான், பார்வதி தேவி, நந்தி ஆகிய மூவரும் ஏராளமான அணிகலன்களோடு திகழ்கின்றனர். திருமணம் முடிந்து மகிழ்ச்சியுடன் தேவியை தன் வாகனத்தில் அழைத்துக் கொண்டு கயிலைக்குச் செல்லும் பாணியில் இந்த சிலாரூபம் அமைந்துள்ளதாக ஐதீகம். மூல விக்கிரகம் போன்றே சிறிய அளவிலான உற்சவ விக்கிரகமும் இங்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருங்கல்லில் மிக நுணுக்கமாக வடிக்கப்பட்ட கலைநயம் மிக்க இந்த அபூர்வ விக்கிரகம் அக்காலச் சிற்பிகளின் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. குஜராத் மாநிலம் சௌராஷ்ட்ரா பகுதியிலிருந்து ஒரு சிவ பக்தர் இந்த அழகிய விக்கிரகத்தை இங்கு எடுத்து வந்து பிரதிஷ்டை செய்ததால், இவர் ‘சௌராஷ்ட்ர சோமேஸ்வர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

கதக் மாவட்டத்தில் உள்ள பல ஆலயங்களில், ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் மற்றும் ஸ்ரீத்ரி கூடேஸ்வரர் ஆலயங்கள் பிரபலமானவை. ஸ்ரீ சோமேசர் குடி, சோமநாதர் குடி, சோமலிங்கேசர் குடி என்று பல பெயர்களில் பக்தர்களால் அழைக்கப்படும் ஸ்ரீசோமேஸ்வர் ஆலயத்தில் மாத சிவராத்திரி, பிரதோஷம், மஹாசிவராத்திரி போன்ற நாட்கள் மிகச் சிறப்பகக் கொண்டாடப்படுகின்றன. இந்த ஆலய திருமஞ்சனத்தின்போது பால், பழம், சீனி மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. 


ஸ்ரீசோமேஸ்வரரை வழிபட, கணவன்-மனைவியிடையே தாம்பத்தியம் அன்னியோன்யப்படுவதாகவும், திருமணத் தடை விலகி மணவாழ்வு கைகூடுவதாகவும் பக்தர்கள் அனுபவம்.


செல்லும் வழி:
கர்நாடக மாநிலம் கதக்கிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், ஹூப்ளியிலிருந்து 55 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

No comments:

Post a Comment