திருமாலின் பஞ்சாயுதங்களில் முதன்மையானது ‘சுதர்சனம்’ என்னும் சக்கரம். ‘ஆயுதங்களின் அரசன்’ என்றும் இதைப் போற்றுவர். ‘சஹஸ்ரார ஹும்பட்’ என்னும் ஆறெழுத்து மந்திரத்தால் ஆராதிக்கப்படுபவர் இவர். யானை கஜேந்திரன், மன்னன் அம்பரீஷன் ஆகியோரைக் காக்க முன்வந்தவரும் இவர்தான். இதை அடையும் பொருட்டு திருமால் சிவனை வழிபட்ட தலம், திருமால்பூர் (திருமாற் பேறு).
குபன் என்னும் அரசனின் விருப்பத்துக்காக ததீசி முனிவரின் மீது தமது சக்ராயுதத்தை ஏவினார் திருமால். அது அவரது வஜ்ர உடலைத் தாக்க முடியாமல் வாய் மடிந்தது. அதனால் திருமால் இத்தலத்தை அடைந்து, சிவனை நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களால் பூஜித்து வந்தார். ஒருநாள் தாமரை மலர்களில் ஒன்றை சிவன் மறைக்க, பூஜை செய்யும்போது அதை உணர்ந்த திருமால், தமது கண்மலரால் இறைவனைப் பூஜித்தார். அதனால் மகிழ்ந்த ஈசன் சக்ராயுதத்தை அளித்தார் என்கிறது தலவரலாறு.
பழைமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு நோக்கிய அம்பாள் சன்னிதி. துவார பாலகர்கள் பெரிய உருவில் காட்சி தருகின்றனர். ஆலயத்தின் அருகிலேயே நந்தவனமும் பசு மடமும் உள்ளன.
உட்பிராகாரத்தில் நந்திகேசுவரர் நின்ற கோலத்தில் உள்ளார். சோளீஸ்வரர், பாலகணபதி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், தட்சிணாமூர்த்தி, அஷ்டதுர்க்கை எதரிசிக்கிறோம்.
இரண்டாம் பிராகாரத்தில் திருமால் கூப்பிய கரங்களுடன் சிவபெருமானை வணங்கும் கோலத்தில் காட்சி தருகிறார். சுவாமி தீண்டாத் திருமேனி உடையவர். குவளை சாத்தியே அபிஷேகம் நடக் கிறது. ‘விருத்தக்ஷீரநதி’ என்னும் பழைய பாலாறு இத்தலத்துக்கு வடக்கு திசையில் உள்ளது.
இங்கு வந்து வழிபடுவதால் மகப்பேறு, ரத்தம் தொடர்பான வியாதிகள் குணமாவதாகச் சொல்கிறார்கள். அதன் பொருட்டு அடுத்தடுத்து பக்தர்கள் வருவதையும் இங்கே காண்கிறோம்.
‘நீலமணிமிடற்று ஒருவன்’ என்பாள் ஔவைப் பெருமாட்டி. அதே மணிமிடற்றுப் பெருமான் மணிகண்டீஸ்வரராக அருளும் திருமால்பேறு தலத்தை தரிசிப்போம்; திருமால் பெற்ற பேறு நமக்கும் கிட்டும்.
செல்லும் வழி: செங்கல்பட்டு-அரக்கோணம் ரயில் பாதையில் திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து 4 கி.மீ.. காஞ்சிபுரத்திலிருந்து 12 கி.மீ.. காஞ்சி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
No comments:
Post a Comment