நெய்யப்ப கணபதியை தேடிவரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலாக, ‘சுவாமிக்கு இத்தனை நெய்யப்பம் நிவேதனம் செய்கிறேன்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு அதற்குரிய தொகையை ஆலயத்தில் செலுத்தி விடுகிறார்கள்.
சிவனார் செல்வன், கணபதிக்கு மிகவும் பிடித்த நைவேத்தியம் மோதகம் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நெய்யப்பத்தை மிகவும் உகந்து ஏற்று அருள்பாலிக்கும் கணபதியை தரிசிப்பது, கேரள மாநிலம், கொட்டாரக்கராவில் உள்ள சிவன் கோயிலில். இவர்தான் நெய்யப்பப் பிரியராகக் காட்சியளிக்கிறார். இந்த நெய்யப்ப கணபதியின் வரலாறைச் சற்று பார்ப்போம்:
கேரள மாநிலம், கொட்டாரக்கராவில் ஓர் அழகிய சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் கருவறையில் அருள்பாலிப்பது பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கம். மேற்கு திசை நோக்கி அருளும் இத்தல அன்னையை ‘படிஞ்ஞாறு பகவதி’ என்று அழைக்கிறார்கள்.
இச்சிவன் கோயில் காண்பதற்குச் சிறியது என்றாலும், இங்கே அருள்பாலிக்கும் நெய்யப்ப கணபதியால் இது மிகவும் பிரசித்தி பெற்றுத் திகழ்கிறது.
இக்கோயிலின் கருவறையை ஒட்டி தெற்குத் திசை நோக்கி தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார் கணபதி. இவர் பலா மரத்திலான திருமேனியைக் கொண்டவர். இவரது இடது திருக்கரத்தில் அப்பம் வைத்திருக்கிறார்.
இக்கோயிலின் கருவறையை ஒட்டி தெற்குத் திசை நோக்கி தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறார் கணபதி. இவர் பலா மரத்திலான திருமேனியைக் கொண்டவர். இவரது இடது திருக்கரத்தில் அப்பம் வைத்திருக்கிறார்.
சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிய நாராயணன் என்ற வேதியர் இப்பகுதியைக் கடந்து சென்றபோது, வேதியரே, என்னைத் தரிசிக்காமல் எங்கே போகிறாய்?" என்று ஒரு அசரீரி கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்த வேதியருக்குப் பின்னால் ஒரு பெரிய பலாமரம் கீழே சாய்ந்துக் கிடப்பதையும், அதனால் ஏற்பட்ட ஒரு பள்ளத்தையும் கண்டார். அங்கு பலாமரத்தினாலான அழகிய ஒரு விநாயகர் விக்கிரகம் இருப்பதைக் கண்டார். வேதியர் அதன் அழகில் மெய்மறந்தார். அசரீரியாகத் தம்மை ஆட்கொண்டவர் அவரே என்பதை அறிந்து வணங்கி அவரிடம், ‘இங்கேயே தங்கி அருள்பாலிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே விநாயகப் பெருமானும் அங்கேயே தங்கிவிட்டார்.
கணபதியின் புகழ் எங்கும் பரவியது. கொட்டாரக்கரா பகுதியை ஆண்டு வந்த மன்னர் இக்கணபதியின் பரம பக்தராகி, அங்கு அழகியதொரு கோயில் எழுப்பி, முறையாக வழிபாடுகள் மேற்கொள்ள ஆவன செய்தார். அச்சமயம் மன்னரின் மகளுக்குத் திருமணம் நிச்சயமாயிற்று. மணநாளில் பலவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்த விரும்பினார் மன்னர். அதற்காக ‘கிருஷ்ணங் களியாட்டம்’ என்ற கலை நிகழ்ச்சி நடத்த வேண்டி வடக்கே மலபாரில் உள்ள ஒரு களியாட்டக் குழுவினரை அழைத்துவர ஏற்பாடுகள் செய்தார்.
அக்குழுவின் தலைவன், தெற்கில் உள்ள மக்களுக்குக் கலையுணர்வோ, ரசனையோ போதாது. எனவே, நாங்கள் வருவதற்கில்லை"யென்று உறுதியாகக் கூற, வருத்தமுற்ற மன்னர் கணபதியிடம் முறையிட்டார்.நெய்யப்ப கணபதி அன்றிரவு மன்னரின் கனவில் தோன்றி, அவரை ‘ராமாயண காவியம்’ எழுதச் சொன்னார். அதன்படி, மன்னர் ராமாயணத்தை எட்டுப் பகுதிகளாக எழுதி முடித்து, அதற்கு ‘ராமனாட்டம்’ என்று பெயரிட்டு, அதை கணபதியின் திருப்பாதங்களில் வைத்து வழிபட்டார்.
அன்றிரவு மன்னருக்கு மறுபடியும் ஒரு கனவு. அதில் சீறி வரும் கடல் அலைகளிலிருந்து மகுடம், பச்சை, தாடி, மினுக்கு, கத்தி, கதை முதலிய பல உருவங்கள் தோன்றின. அதன் பிறகுதான் கணபதியின் அருளால் ‘கதகளியாட்டம்’ என்ற அரியதொரு நடனக் கலை தோற்றுவிக்கப்பட்டதாம். இந்தக் ‘கதகளியாட்டம்’ உற்பத்தியான இடத்தை கொட்டாரக்கரா என்கிறார்கள். இப்போதும் கதகளியாட்டக் கலைஞர்கள் நெய்யப்ப கணபதியைத் தேடி வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
இக்கணபதி சன்னிதியில் நடைபெற்று வரும் நெய்யப்ப வழிபாடு மிகவும் விசேஷம். மிக வரப்பிரசாதியான இக்கணபதியை தேடி வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதலாக, ‘சுவாமிக்கு இத்தனை நெய்யப்பம் நிவேதனம் செய்கிறேன்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டு அதற்குரிய தொகையை ஆலயத்தில் செலுத்தி விடுகிறார்கள். ஆலய ஊழியர்கள் கோயிலிலேயே நெய்யப்பம் செய்துத் தந்து விடுகிறார்கள். அதுவும் கணபதி சன்னிதிக்கு எதிரில் அவரது மேற்பார்வையிலேயே அடுப்பு மூட்டி, நெய்யப்பம் செய்கிறார்கள்.
இப்பணி காலை ஐந்து மணி முதல் பதினோரு மணி வரையிலும், மாலை நாலரை மணியிலிருந்து இரவு ஏழரை மணி வரையிலும் நடைபெறுகிறது. இந்த நெய்யப்பம் தயாரிப்பதில் உள்ள மற்றொரு விசேஷம் என்னவென்றால், ‘கணபதி சன்னிதிக்கெதிரில் செய்வதால்தான் அது மணக்கிறது; ருசிக்கிறது. வேறு எங்காவது செய்தால் இத்தனை மணம் வீசுவதில்லை’ என்கிறார்கள்.
செல்லும் வழி: கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சுமார் 40 கி.மீ.. பஸ் வசதி உண்டு.
செல்லும் வழி: கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சுமார் 40 கி.மீ.. பஸ் வசதி உண்டு.
No comments:
Post a Comment