Thursday, September 25, 2014

[Image1]
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 


அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்
 
 
மூலவர்:கைலாசநாதர்
 உற்சவர்:-
 அம்மன்/தாயார்:பெரியநாயகி
 தல விருட்சம்:இலந்தை
 தீர்த்தம்:பிரம்மதீர்த்தம்
 ஆகமம்/பூஜை:காமீகம்
 பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
 புராண பெயர்:-
 ஊர்:பிரம்மதேசம்
 மாவட்டம்:திருநெல்வேலி
 மாநிலம்:தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
   
 - 
   
 திருவிழா:
   
 சித்திரைப்பிறப்பு, வைகாசிவிசாகம், ஆனியில் நடராஜர் அபிஷேகம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம். 
   
 தல சிறப்பு:
   
 இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்ராயண புண்ணிய காலத்திலும் சூரியன் , சுயம்புத் திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு. 
   
திறக்கும் நேரம்:
   
 காலை 7 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
 அருள்மிகு கைலாசநாத சுவாமி திருக்கோயில், பிரம்மதேசம் - 627413. திருநெல்வேலி மாவட்டம். 
   
போன்:
   
 +91- 4634 - 254247 
   
 பொது தகவல்:
   
 கோயில் பிரகாரத்தில் அம்பாள், காசிவிஸ்வநாதர், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளிலும், தூண்களில் அர்த்தநாரீஸ்வரர், வாலி, சிவன், சுக்ரீவன், மன்மதன், ரதி ஆகியோரும் அமைந்திருந்து அருட்காட்சி தருகின்றனர். 
   
 
பிரார்த்தனை
   
 திரமணத்தடை நீங்க, புத்திரபாக்கியம் கிட்ட, வியாபாரம் சிறக்க, குடும்ப ஐஸ்வர்யம் பெருக, கல்வியில் சிறக்க, தோஷங்கள் நீங்க இங்கு வேண்டிக்கொள்ளலாம். 
   
நேர்த்திக்கடன்:
   
 பிரார்த்தித்துக்கொண்ட செயல்கள் நடந்திட சுவாமிக்கு வஸ்திரங்கள் சாத்தி சிறப்பு அபிஷேகங்கள் செய்யலாம். அம்பாளுக்கு திருமாங்கல்ய பூஜை செய்யலாம். 
   
 தலபெருமை:
   
 
நவகைலாயங்களில் "ஆதிகைலாயம்' என்ப்படும் இத்தலத்தில் உள்ள சிவனை வணங்கினால் காசி, ராமேஸ்வரம் சென்று சிவனை வணங்கிய பலன் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

நவக்கிரக தலங்களில் சூரியனின் ஸ்தலமான இங்கு சூரியபகவான் தனிச்சன்னதியில் அமைந்திருந்து ஆட்சி செய்கிறார். தட்சிணாயணபுண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் அவர், சுயம்பு சுவாமியின் புண்ணிய திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாக உள்ளது. பிரம்மனின் பேரனுக்கு தோஷம் நீக்கிய சிவன் வீற்றிருக்கும் தலம் அமைந்த ஊர் என்பதால் இவ்வூர் "பிரம்மதோஷம்' என்று அழைக்கப்பட்டு பின்னர் பிரம்மதேசம் ஆனது. "அயனீஸ்வரம்' (அயன் - பிரம்மன்; வரம் தேசம்) என்றும், பிற்காலத்தில் நான்மறை ஓதிய அந்தணர்களுக்கு இவ்வூரை ராஜராஜசோழமன்னர் தானமாக வழங்கியதால் "ராஜராஜசதுர்வேதி மங்கலம்' என்றும் அழைக்கப்படுகிறது.

கோயில் ராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பதும். தஞ்சை பெரிய  கோயில் போல அதிக ஓவிய வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருப்பதும், கட்டடக்கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது.

இக்கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் சோழமன்னர் காலத்திலும், மர வேலைப்பாடுகள் சேரமன்னர் காலத்திலும், மண்டபவேலைப்பாடுகள் பாண்டியமன்னர் காலத்திலும், மதிற்சுவர் பணிகள் நாயக்கர் மன்னர் காலத்திலும் செய்யப்பட்டவை .

பிரமாண்டமான கோபுரம் கொண்டு சிறப்புற திகழும் இத்தலத்தில் ராஜகோபுரம், மத்தியகோபுரம், மேலகோபுரம் என முக்கோபுரங்களுடன் ஆறு விமானங்களும் அமைந்துள்ளன.

கோயில் பிரகாரத்தில் உள்ள தாமரை வடிவிலான வட்டவடிவ கல்லின் மீது நின்று நோக்கும் போது இவை அனைத்தும் ஒரே பார்வையில் தெரிவது சிறப்பாக உள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு பெற்ற இத்தலத்திலுள்ள மூலவர் சிவபெருமானை முன்பு ஏழு அடி உயரத்தில் சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த பெரியநந்தியும்,  அம்பாளுக்கு வலதுபுறம் அதே உயரத்தில் உள்ள பிட்சாடனர் சிலையும் காண்போர் வியக்கவைக்கும்படியான அழகுடன் அமைந்துள்ளது.

இங்கு வேண்டிக்கொண்டு, இலந்தை பழத்தை பக்தியுடன் உண்டால் புத்திரபேறு நிச்சயம் என்பதால் இங்கு வசிக்கும் பக்தர்கள் பலர் தமது குழந்தைகளுக்கு நந்தியின் பெயரையே சூட்டுகின்றனர்.

 
   
  தல வரலாறு:
   
 பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தைமரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதிக்கு வந்தார்.

ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருந்ததைக் கண்டார். பின், அவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி, சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜித்து மனமுருகி வணங்கிய அவர், தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவனாக இத்தலத்தில் கைலாசநாதர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

 
   
சிறப்பம்சம்:
   
 அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் தட்சிணாயண புண்ணிய காலத்திலும், உத்ராயணபுண்ணிய காலத்திலும் சூரியனின் , சுயம்புத் திருமேனியின் மீது தனது ஒளி கிரணங்களை பரப்பி அவரை அர்ச்சிப்பது சிறப்பு. 

விஞ்ஞானம் அடிப்படையில்:
 கோயில்ராஜகோபுரத்தின்முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
 
   


No comments:

Post a Comment