Thursday, September 25, 2014

ஆந்தைகள் அலறல்: நல்ல சகுனமா? கெட்ட சகுனமா?

owl-uluka and Lakshmi

Lakshmi with owl.
கட்டுரையாளர்:- லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:-1065 ; தேதி:- மே 26, 2014.
(This article is posted in English as well)
பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது (குறள் 481)
ஆந்தைகள் பற்றி ரிக்வேத காலம் முதல் இன்றுவரை பல நம்பிக்கைகள் இருந்து வருகின்றன. மேலை நாடுகளில் ஆந்தைகளுக்கு நல்ல பெயர். கீழை நாடுகளிலோ கெட்ட பெயர். ஏன் இப்படி? சகுன சாஸ்திரம் பற்றி ஆராய்வோம்
கிரேக்க நாட்டின் தேவதை அதீனாவுக்கு ஆந்தை வாகனம் அல்லது பிரியமான பறவை. இதேபோல இந்துக்களின் தெய்வங்களான சாமுண்டிக்கும் லெட்சுமிக்கும் ஆந்தை வாஹனம். இப்படி தெய்வ வாஹனமாக இருந்தபோதிலும் ஆந்தைகள் அலறலைக் கண்டு அஞ்சுவது ஏன்?
முதலில் சங்கத் தமிழ் இலக்கியத்தில் உள்ள பாடல்களைப் பார்ப்போம்:
“எம்மூர் வாயில் உண்டுறைத் தடை இய
கடவுள் முதுமரத்து உடனுறை பழகிய
தேயா வளைவாய்த் தெண்கண் கூருகிர்
வாய்ப்பறை அசாஅம் வலிமுந்து கூகை
மையூன் தெரிந்த நெய்வெண் புழுக்கல்
எலி வான்சூட்டொடு மலியப் பேணுதும்
எஞ்சாக் கொள்கைஎங் காதலர் வரல்நசைஇத்
துஞ்சாது அலமரும் பொழுதில்
அஞ்சுவரக் கடுங்குரல் பயிற்றாதீமே”–( நற்றிணை 83 )
பொருள்: வலிமைமிகு கூகையே! ஊர்வாசலில் நீர்த்துறையில் நிற்கும், கடவுள் இருப்பதாகக் கருதப்படும் மரத்தில் இருப்பாய். வளைந்த வாய், தெளிந்த கண்கள், கூரிய நகங்கள் உடைய நீ, உன் வாயால் பிறரை வருத்துகிறாய்.. உனக்கு ஆட்டு மாமிசத்தோடு நெய் கலந்த சோறு தருவோம். வெள்ளெலியின் சூட்டிறைச்சியும் தருவோம். என் காதலர் வரும் இரவு நேரத்தில் பயமுறுத்தும் சப்தத்தைப் போடாமல் இரு.
ஆந்தையும் இசையும்
“மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து
அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை
பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப”– (நற்றிணை 394, அவ்வையார்)
பொருள்:–மரங்கள் உள்ள அகன்ற காட்டில் வாடிய ஞெமை மரத்தில் பேராந்தை இருந்தது. அது பொற்கொல்லன் தொழில் செய்யும்போது ஏற்படும் ஒலி போல இனிய ஒலியை எழுப்பியது.
“உருள்துடி மகுளியின் பொருள்தெரிந்து இசைக்கும்
கடுங்குரல் குடிஞை” –(அகம் 19)
பொருள்: உருளும் இழுகு பறையின் ஓசையினைப் போல பொருள் தெரிய ஒலிக்கும் கடுமையான குரலை உடைய ஆந்தைகள் உள்ள பெரிய மலை.
OWL
ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியில் ஆந்தையின் பாட்டு நல்ல நிமித்தம் எனப் பாடப்பட்டுள்ளது. இதற்கு உரை எழுதிய ‘’உச்சிமேற் புலவர் கொள்’’ நச்சினார்க்கினியர், “மணம் பரப்பும் கோங்கின் உச்சியிலே குவிந்த அரும்பின் முகட்டிலே தேன் போல இனிமை பொருந்திய ஒலியையுடைய யாழினைப் போல ஆந்தை அமர்ந்து பாடும்” – என்று கூறுகிறார். அதன் குரல் யாழின் ஒலிக்கு உவமையாக்கப் பட்டுள்ளது.
இதையே சம்ஸ்கிருதத்தில் உள்ள லிங்க புராணமும் கூறுகிறது.
ஆந்தைகள் எழுப்பும் ஒலி, சங்கீத ஸ்வரம் போல இருப்பதாக இந்துமத நூல்கள் சில கூறும். (Brown Wood Owl is said to consist of four deep musical syllables, who—hoo—hoo—hoo) மர ஆந்தையின் குரல் 4 ஸ்வரங்களை உடையது. லிங்க புராணத்தில் நாரத முனிவரை இமய மலையில் மானசரோவர் ஏரிக்கரையில் வசிக்கும் ஆந்தையிடம் சங்கீதம் கற்கச் சொன்னதாக எழுதி இருக்கிறது. ஆகவே ஆந்தையில் ஒருவகை எழுப்பும் இசை ஒலியை இந்துக்கள் போற்றினர் என்று இந்தக் குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது.
அசுணம் என்னும் இசையறி பிராணியை மிருகம் என்றும் பறவை என்றும் தமிழ் இலக்கியம் கூறும். சிலர் ஆந்தையில் ஒருவகை அசுணம் (ஆசிரிய நிகண்டு) என்றும் கருதுவர். அசுண மா பற்றிய எனது கட்டுரையில் விவரம் காண்க)
சில வகை ஆந்தைகள் எழுப்பிய ஒலி கர்ண கடூரமாக இருந்ததும் தெரிகிறது:–
“அத்தக் குடிஞைத் துடிமருள் தீங்குரல்” (புறம் 370)
பொருள்: கூகைகள் எழுப்பும் துடி போன்ற கடிய குரல் ஓசை……
“கூகைச் சேவல் குராலோழடேறி
ஆரிருஞ் சதுக்கத் தஞ்சுவரக் குழறும்
அணங்கு கால் கிளருங் மயங்கிருள் நடுநாள்”–-(அகம் 260)
பொருள்: முதிய மரத்தில் எப்போதும் இருக்கும் முழங்கும் பெரிய வாயை உடைய பேராந்தை வாய்குழறி ஒலிப்பதும் பேய் திரிவதும் ஆகிய பாதி இரவில்……………………….
barn owl
சாவுக்கும் ஆந்தைக்கும் தொடர்பு
புறநானூற்றுப் பாடல்கள் ஆந்தையை மரணத்துடனும் இடுகாடு–சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்திக் காட்டுகின்றன. தமிழர்களுக்கு சகுன சாத்திரத்தில், அதாவது புள் நிமித்தத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஆந்தையின் கூக்குரல் பற்றி அவர்கள் பயப்படுகின்றனர். மரணத்தோடு தொடர்பு படுத்தும் மூன்று புறநானூற்றுப் பாடல்களே இதற்குச் சான்று கூறும்.
“திங்கள் கல்சேர்பு கனையிருள் மடியின்
இல்லெலி வல்சி வல்வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்”– (அகம் 122)
பொருள்: நிலவானது மேற்குத் திசையில் மறைந்து இருளைப் பரப்பும் நேரத்தில் வீட்டில் வாழும் எலிகளை இரையாக உண்ணும் கூகை— பேய்கள் உறங்கும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்.
“பொத்த அறையுள் போழ்வாய்க் கூகை
சுட்டுக்குவியென செத்தோர்ப்பயிரும்
கள்ளியம் பறந்தவை” – (புறம்.240)
பொருள்: ஆயண்டிரன் இறந்தவுடன் அவனது உரிமை மகளிரும் தீப்பாய்ந்து மாய்ந்தனர். பிளவுபட்ட வாயுடைய பேராந்தைகள், ‘சுட்டுக்குவி’ என்று செத்தோரை அழைப்பது போலக்கூவும். கள்ளிச் செடிகளை உடைய சுடுகாட்டில்,,,,,,,,,,,,,,,
பல் ஆ தழீஇய கல்லா வல்வில்
உழைக்குரற் கூகை அழைப்ப ஆட்டி–(புறம்.261)
இப்போது பல பசுக்கூட்டங்களைக் கைப்பற்றிய கல்லாத வன்மையான வில்வீரனை கூகையானது தன் இனத்தாரை அழைப்பது போல அலைத்து துரத்தும்
முதுமரப் பொத்தின் கதுமென இயம்பும்
கூகைக் கோழி ஆனாத்
தாழிய பெருங்காடெய்திய ஞான்றே (புறம்.364, கூகைக் கோழியார்)
பொருள்:
முதிய மரத்தின் பொந்துகளில் இருந்து கதும் எனக்கூவும் பேராந்தைகள் நீங்காத தாழிகளை உடைய இடுகாட்டை………………………..
குடும்பங்கள் வாழும் கூடாரத்தின் மேல் கோட்டான்கள் உட்கார்ந்தால் பழங்குடி மக்கள் சில பரிகாரங்களைச் செய்வர். சிலநேரங்களில் புதுக் கூரையே வேய்ந்துவிடுவர் என்று பிலோ இருதயநாத் கூறுவார். இவர் பழங்குடி இனங்களை ஆராய்பவர்.
மாயன் நாகரீகத்திலும்…………
athena-owl-spear-face-tl-3196
Greek Goddess Athena with an owl
இன்னொரு வியப்பான ஒற்றுமையும் இருக்கிறது:
புறநானூற்றில் எப்படிப் புலவர்கள் ஆந்தையை மரணத்துடனும் சுடுகாட்டுடனும் தொடர்புபடுத்தினரோ அதே போல மாயன் நாகரீக மரணக் கடவுள் ஹூனாஹுவும் ( God Hunahau) ஆந்தையுடன் தொடர்புடையது. இதனுடைய தலை ஆந்தைத் தலைபோலவே காட்டப்பட்டிருக்கும். சாவு பற்றிய ஒற்றுமையுடன் நின்றுவிடவில்லை. எப்படி இதற்கு ஆந்தையின் தலை (long eared owl )இருக்கிறதோ அதே போல கந்தனுடைய சேவகர்களில்(M.Bh. 9-45-79) ஒருவனுக்கு ஆந்தைத் தலை என்றும் மாத்ரீகளில் ஒருவர்க்கும் இப்படி இருப்பதாகவும் கந்தபுராணம் கூறும்.
மெக்சிகோவில் அஸ்டெக் நாகரீகத்துக்கு முந்தைய நாகரீகம் ஆந்தையைப் புனிதப் பறவையாகக் கருதியது. ஆனால் அஸ்டெக் நாகரீகத்தில் இது தீய பறவையாகக் கருதப் பட்டது. சீனாவிலும் இப்படித் தீய பறவையாகவே கருதப் பட்டது.
இந்தியாவில் பொதுவாக மரணத்துடன் சம்பந்தப்பட்ட பறவை, எப்படி செல்வத்துகு அதிதேவதையான லெட்சுமிக்கு வாகனமாகியது என்பது மர்மமாகவே நீடிக்கிறது.
ஆந்தையின் பல பெயர்கள்
ஆண்டலை, ஆந்தை, இருடி, உலூக, ஊமன், கின்னரம், கின்னரி, குரால், குடிஞை, கௌசிக, கூகை,கூன், கோட்டான், பிங்கலை, கேகயம், (அசுணமா, இசையறி பறவை:– ஆசிரிய நிகண்டு)
ஆந்தையின் வடமொழிப் பெயாரான உலூக என்பதில் இருந்தே ஆங்கிலச் சொல்லான ‘’அவுல்’’ வந்தது. உலூக, கௌசிக, இருடி என்பதெல்லாம் ரிஷிகளின் பெயர்கள். இந்தப் பெயரில் பழங்காலத்தில் ரிஷிகள் இருந்தனர். தமிழில் பிசிர் ஆந்தையார், ஓதல் ஆந்தையார், கூகைக் கோழியார் என்பன ஆந்தையின் பெயர்கள் உடையன.பெருங் கௌசிகன் என்ற புலவரும் சங்க இலக்கிய காலத்தில் இருந்தனர்.
கட்டுரையின் இரண்டாவது பகுதியில் ராமாயணம், மஹாபாரதம், வேதங்களில் ஆந்தைகள் பற்றி என்ன இருக்கிறது என்பதையும் பழமொழிகள், பஞ்சாங்கத்தில் உள்ள பக்ஷி சாஸ்திரம் பற்றியும் பஞ்ச தந்திரக் கதை, ஜெங்கிஸ்கான் கதை பற்றியும் காண்போம்

No comments:

Post a Comment