Wednesday, October 15, 2014

64 சிவவடிவங்கள்

15. சந்த்யாந்ருத்த மூர்த்தி


தேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும் கொண்டு கடைந்தனர்.  இதில் வாசுகியின் வாயையும் வாலையும் தேவர்களும், அசுரர்களும்  இழுக்கும் பொருட்டு  வாசுகி கொடிய ஆலகால விஷத்தைத் துப்பியது அவ்விஷம் அனைவரையும் எதிர்த்தது, எதிர்ப்பட்ட திருமாலும் அதன் முன் உடல் கருகினார். இதனைக் கண்ட தேவர்கள் கைலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டனர்.

சிவபெருமானும் தேவர்களின் துயரைப் போக்க அவ்விஷத்தை உண்டார். அதனால் அவர்க்கு ஒன்றும் நேரவில்லை எனினும் ஒரு விளையாட்டை நிகழ்த்தினார். அவ்விஷம் அவரைத் தாக்கியது போல், மயங்குவது போல் உமா தேவியின் முன்பு மௌனமாய் உறங்குவது போல் இருந்தார்.  இதனைக் கண்ட தேவர்கள் அவரை அர்ச்சித்து அன்று முழுவதும் உறக்கம், உணவின்றி இருந்தனர்.  

அந்தத் திதியை நாம் ஏகாதசி என்போம். மறுநாளாகிய துவாதசியில் தேவர்கள் பாராயணஞ் செய்தனர். அதற்கு மேற்ப்பட்ட திதியான திரயோதசியில் சிவயபெருமான் சூலம், உடுக்கை சகிதம் ஒரு சாமகாலம் திருநடனம் செய்தார். அந்த காலத்தை நாம் பிரதோஷம் என்போம். அதாவது பதினைந்து தினங்களுக்கொருமுறை வரும் திரயோதசியை நாம் மாத பிரதோஷம் என்றும், வருடத்திற்கொருமுறை வரும் மகா சிவராத்திரியை வருடப் பிரதோஷம் என்றும், தினசரி மாலை முடிந்து இரவு ஆரம்பிக்கும் நேரத்தையும் நாம் பிரதோஷ காலமாகக கொள்ளலாம்.


சிவபெருமான் நிருத்தம்(நிருத்தம் - நடனம்) செய்வதைக் கண்ட தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தனது கரங்களை சிரத்திற்கு மேல் தூக்கி சிவசிவ என்று   ஆர்ப்பரித்தனர்.  ஆடினர், பாடினர், தேவர்கள் அவர் நடனத்திற்கு ஏற்றவாறு வாத்தியங்களும், விஷ்ணு மிருதங்கமும் வாசித்தனர். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் நடனம்  ஆடியதால் அவரது பெயர் சந்த்யாந்ருத்த மூர்த்தி என்றானது. அவரை தரிசிக்க  மதுரை செல்ல வேண்டும்.  சதாசிவமூர்த்தியின் உச்சியில் அமைந்துள்ள ஈசான  முகத்திலிருந்து தோன்றிய வடிவமே நடராஜமூர்த்தி யாவார். 

அவரது வடிவமே சந்த்யாந்ருத்த மூர்த்தி போன்ற பல வடிவமாகப் பறந்து விரிந்தது. மதுரை வெள்ளியம்பலத்தில் உள்ள இவரை வணங்குவோமானால் நம் தொழில்களை காப்பதுடன் பலகலைகளில் சிறப்பு பெற உதவுவார்.  செந்தாமரையால் அர்ச்சனையும், தேங்காய் சாத நைவேத்தியமும் திங்கள், புதன் கிழமை மாலையில் செய்ய தடங்கள் அகழும், விரோதிகள்  ஒழிவர். நன்மை பாராட்டுவர்.  மதுரை நடராஜ பெருமானுக்கு பன்னீரால் அபிசேகம் செய்தால் கல்வியறிவு  மேன்மையடையும் என்பது ஐதீகம்.

No comments:

Post a Comment