Friday, October 24, 2014

ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர்

வாழ்வில் அமைதி தரும் ஒத்தக்கடை ஸ்ரீயோக நரசிம்மர்




ரோமச முனிவர். வரம் பல பெற்றவர்தான், இருப்பினும் பிள்ளைச் செல்வம் இன்றி வருந்திக் காலம் கழித்தார். அதற்காக அவர் யாகம் செய்யத் தீர்மானித்தார். யாரை நோக்கித் தவம் செய்வது? அவருக்கு பிரகலாதன் நினைவு வந்தது. பக்தியும் ஞானமும் பெற்ற பிரகலாதனின் உயர்வுக்கு ஸ்ரீநரசிம்மர் காரணமாயிருந்தது போல், தமக்கும் அமைய எண்ணினார். சக்ர தீர்த்தத்தில் நீராடினார். அந்த நினைவுகளுடனே நரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானிக்கத் தொடங்கினார்.

ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைக் குறித்து தியானித்தாரே ஒழிய, அவருடைய அவதார காலத்தில் எப்படி இருந்தாரோ அப்படியே அவரை தரிசிக்க ஆவல் கொண்டார். தன் வேண்டுதலை சங்கல்பம் செய்து கொண்டு தியானத்தில் இருந்தார். அவரது தவத்தின் பலனாக நரசிம்ம மூர்த்தி அங்கே தோன்றினார். ஆனால், உக்ரரூபியாக... அவருடைய உக்கிரம் தாங்காது, உலகமே அவதிப்பட்டது. ரோமச முனிவர் மட்டுமல்ல... தேவரும் முனிவரும் சகலரும் நடுங்கினர்.

ஸ்ரீநரசிம்மர் ஏன் உக்கிர ரூபம் கொண்டார்? அசுரன் இரணியனின் மகன் பிரகலாதன். ஸ்ரீமந் நாராயண பக்தனான இவன் எந்நேரமும் ஸ்ரீமந் நாராயணனின் நாமத்தையே சொல்லிக் கொண்டிருப்பான். ஸ்ரீவிஷ்ணுவை அழிக்கும் நோக்கத்தில் இருந்த இரணியனுக்கு இது பெரும் வெறுப்பைத் தந்தது. தன்னையே உலகம் எல்லாம் கடவுளாக வழிபட்டுக் கொண்டிருக்க, தன் மகனோ வேறு ஒருவரை கடவுளாகக் காண்கிறானே என்ற வெறுப்பு. ஆத்திரமடைந்த இரணியன் பிரகலாதனைக் கொல்ல எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் பகவந்நாம மகிமை அவனைக் காப்பாற்றுகிறது.

இறுதியாக, ஒரு நாள் உன் பகவான் நாராயணன் எங்கிருக்கிறான் எனக் கேட்க, தூணிலும் துரும்பிலும் இருக்கிறான் என்றான் பிரகலாதன். அப்படியானால் இந்தத் தூணில் இருக்கிறானா என்று கேட்டபடி ஒரு தூணைத் தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் இரணியன். அவனை அழித்து உலகை காப்பதற்காகவே, உக்கிர ரூபியாக ஸ்ரீநரசிம்மமூர்த்தி அங்கே வெகுண்டெழுந்தார். தீய அசுரனை அழிப்பதற்காகக் கோப உருக் கொண்டு உலகம் நடுநடுங்க அவனை வதம் செய்தார்.

அதே உக்கிர ரூபத்தில் தரிசிக்க ரோமச முனிவர் வேண்டிக் கொண்டதால், பெருமாள் இங்கே அதே கோலத்தில் எழுந்தருளினார். ஆனால், பெருமானின் உக்கிரத்தைத் தணிக்க என்ன செய்வது? வேறு வழியின்றி, பிரகலாதனையே அழைத்தனர். பிரகலாதன் வந்தால் பெருமானின் உக்கிரம் தணிந்துவிடும் என்று எண்ணினர். அதன்படி, பிரகலாதனும் வந்தான். பெருமானைத் துதித்துப் போற்றினான். பாடினான். புகழ்ந்துரைத்தான். அந்தச் சிறுவன் மொழிகளிலே பெருமானுக்கு உக்கிரம் தணிந்தது என்றாலும், முழுதாக அவர் சாந்தம் அடையவில்லை.

இந்த விவரம் ஸ்ரீமகாலட்சுமித் தாயாருக்குச் சென்றது. அனைவரையும் காக்க, ஸ்ரீலட்சுமி அங்கே தோன்றினார். தன் கனிவுப் பார்வையினால் ஸ்ரீநரசிம்மரை அமைதிப் படுத்தினார் தாயார். அன்னையைக் கண்டதும் நரசிம்மரின் உக்கிரம் முழுமையாகத் தீர்ந்தது. அன்னையை ஆசையுடன் அருகே அழைத்து ஆலிங்கனம் செய்துகொண்டு, தம்பதியாய் தரிசனம் தந்தார் ஸ்ரீநரசிம்மர். பின்னர் யோகத்தில் அமர்ந்து, யோக நரசிம்மராய்க் காட்சியளித்தார். இரு கைகளையும் யோக ஆசனத்தில் அமர்ந்தி, அருகே அன்னை ஸ்ரீலட்சுமியையும் அமர்த்தி அழகுக் கோலம் கொண்டார் ஸ்ரீயோக நரசிம்மர்.

ஸ்ரீநரசிம்மரின் இந்த யோக தரிசனமே இங்கே கோயில் எழக் காரணமாயிற்று. இந்தக் கோயிலில், மூலவர் யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு நோக்கியும், நரசிங்கவல்லி தாயார் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கின்றனர். மதுரையில் ஒத்தக்கடை பகுதியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. மலையை ஒட்டி ஒரு குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது ஸ்ரீயோகநரசிம்மரின் திருக்கோயில்.

இந்தக் கோயிலில் கொடி மரம் கிடையாது. காரணம் கொடிமரம், கருவறைக்கு மேல் எழும்பும் விமானத்தின் நீள அகல அளவைப் பொறுத்து அமையும். இங்கே கருவறைக்கு மேல் யானை மலை நெடிதுயர்ந்து இருப்பதால் கொடிமரம் வைக்கப்படவில்லையாம். குடவரைக் கோயிலான இங்கே கருவறையும், அதன் முன்னே உள்ள உடையவர், நம்மாழ்வார் உள்ள அர்த்த மண்டபமும்கூட குடைவரை அமைப்பில்தான் உள்ளது. கோயிலை ஒட்டி அமைந்துள்ள தீர்த்தத்தில் மாசி பெüர்ணமியில் கஜேந்திர மோட்ச நிகழ்ச்சி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதற்காகவே இத்தலத்தின் அருகே அமைந்துள்ள திருமோகூரிலிருந்து காளமேகப் பெருமாள் இங்கே எழுந்தருள்கிறார்.

மேலும், இந்த மலையில் திருவண்ணாமலையைப் போல் பெüர்ணமி கிரிவலம் சிறப்பாக நடைபெறுகிறது. தேவலோகத் தலைவனான இந்திரனே யானை வடிவில் மலையாகப் படுத்திருப்பதாக புராணம் கூறுகிறது. எனவே இந்த மலையும் புனிதமாகக் கருதப்படுகிறது. இங்கே யோக நரசிம்ம மூர்த்தி, ஆறடி உயர கருவறையில், கருவறை முழுவதுமாக நிரம்பியபடி, இரு கைகளையும் யோக ஆசனத்தில் வைத்து, அமர்ந்த கோலத்தில், வலது கையில் சக்கரத்துடனும் பிரமாண்டமான உருவில் அருள்பாலிக்கிறார்.

கி.பி. 8, 9ஆம் நூற்றாண்டுகளில் அடர்ந்த காடாக இருந்தது இப்பகுதி. இதனை மதுரையை ஆண்ட வரகுண பாண்டியனின் அமைச்சர் மாறன் காரி என்பவர் செப்பனிட்டு கோயில் திருப்பணி தொடங்கினார். அவருக்குப் பின் அவரது தம்பி மாறன் எயினர் என்பவர் கி.பி.770இல் கோயிலை முழுதாக்கி குடமுழுக்கிட்டதாக இங்குள்ள கல்வெட்டு தகவல் தெரிவிக்கிறது. அண்மைக் காலத்தில் மீண்டும் செப்பனிட்டு கோயில் அழகுறக் காட்சி தருகிறது.

சிவன் கோயில்களைப் போல இங்கும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. நரசிம்மர் அவதாரம் எடுத்தது பிரதோஷ காலத்தில்தான். அந்த நேரத்தில் யோக நரசிம்மரை வழிபட்டால் கல்வி சிறக்கும். வியாபாரம் விருத்தி அடையும். எதிரிகள் பயம் இருக்காது. மரண பயம் அகலும்.
தாயார் நரசிங்கவல்லியை வேண்டினால் திருமணத் தடை நீங்கும். திருமணம் நடந்தும் கணவன் மிகவும் கோபத்துடனும் மூர்க்கத்துடனும் நடப்பவனாக இருந்தால், வாழ்க்கைத் துணையின் கோபம் நீக்கி, அமைதி தவழும் இல்வாழ்க்கைக்கு வித்திடுவார் ஸ்ரீயோக நரசிம்மர் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை. எனவேதான் இங்கே நரசிம்ம பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் பலர் வருகின்றனர்.

சுமார் 5 கி.மீ. நீளமுள்ள யானை மலை அடிவாரத்தில் தனிக் கோயிலில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீயோக நரசிம்மப் பெருமான். புகழ்பெற்ற இரு பெருமாள் கோவில்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இந்த ஆலயம். வடக்கே அழகர் கோவில், கிழக்கே திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில். மாசி மகத்தில் இங்கே நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.

இருப்பிடம்: மதுரை- ஒத்தக்கடையிலிருந்து மேற்கே 2 கி.மீ. தொலைவு. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி அதிகம்.

சந்நிதி தரிசன நேரம்: காலை 6-11 மாலை 5-8 வரை.

No comments:

Post a Comment