Tuesday, September 23, 2014

தல விருட்சங்கள் - 4

வெயில் அதிகமாக இருந்தது.

எனினும் - வழி நெடுகிலும் மரங்கள் தான்!.. சோலைகள் தான்!.. 

பலவகையான பயணங்களைப் பார்த்திருந்தது - அந்தப் பெருவழி!..

பல ஊருக்கு வழிகாட்டும் அந்தப் பெருவழியில் -
பல பேருக்கு நல்வழி காட்டிய நற்றமிழ்த் தேனருவி!..
என் வழி.. தமிழ் வழி என - தனி வழியில் தழைத்திருந்த  -  தமிழமுது!..


இனித்திருக்கும் தமிழ் - தழைத்திருக்கும் நாவில் வறட்சி!.. 
தமிழமுத மழை பொழிந்த கார்மேகம் - ஒரு துளி நீருக்குப் பரிதவித்தது.
 
மொழிந்த மொழி கேட்டு மூவேந்தரும் மண்டியிட்டு வணங்கிய திருப் பாதங்கள் - ஒரு கணம் ஓய்வு கேட்டு சோர்ந்தன..

அதற்கு மேல் நடக்க இயலாதவராகக் களைத்து - நல்லோர் மனம் போலத் தழைத்திருந்த அந்த மரத்தின் நிழலில் அமர்ந்தார்..

அவர் - தமிழ் மூதாட்டி ஔவையார்!..

நரை திரையினை வேண்டிப் பெற்ற அவருடைய மனம் நிறைந்து தான் இருந்தது. 

எனினும், செல்லும் வழியில் எல்லாம் தன்னை வெல்லும் சொல் கொண்ட ஒருவர் - எதிரில் இல்லாமையால் -  வித்யா கர்வத்தால் - சற்றே குறைந்து இருந்தது. 

பறந்து திரிந்திருந்த பறவைகளும் களைத்து அமர்ந்திருந்த - அந்த சோலையில் - ஆங்காங்கே வயிறார மேய்ந்த மாடுகள் - ஓய்வாகக் கிடந்து அசை போட்டுக் கொண்டிருந்தன. 

பசுமையான நிழல் குளுமையாக இருந்தது.
அப்படியே மேலே அண்ணாந்து நோக்கினார். அங்கே - அந்த மரக்கிளையில் கள்ளச் சிரிப்புடன் ஞானசூர்யப்பிரகாசமாக சின்னஞ்சிறு பாலகன்!.. 

இருங்கதலி போலும் இளந்தளிர்!..  நிலவாகப் புன்னகைத்தான்!..

கருங்காலிக் கட்டைகளைப் பிளந்தெறிந்த கோடாலி!.. கூர்த்த மதிக் குன்று!.

அதுவும் புன்னகைத்தது!..

அதன் பின் நிகழ்ந்ததெல்லாம்  - திருவிளையாடல்!..

சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?.. என்று என் அறிவுக்குச் சுட்டிக் காட்டிய தமிழ்க் கடவுளே!..  - என ஔவையார் பணிந்து நிற்க -

குறையாய் இருந்த கறையையும் நீக்கி - ஔவையின் வாழ்வை நிறைவாக்கிய பெருமையுடன் புன்னகைத்தான் - தமிழ் முருகன்!..

அப்படி - ஔவையாரின் மனதில் - சுருக் என -  சுட்ட பழம் - நாவல்!..

நற்றமிழ்க் குமரன் தன் நற்றாள் பதிய - புதிய பொலிவு கொண்டது நாவல் மரம்!..

நாவல் கனி முன்னவனும் மூத்தவனும் ஆன கணபதிக்கும் விருப்பானதை -

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்..


- எனும் இனிய ஸ்லோகம் விளக்கும். 
தவிரவும் திரு ஆனைக்காவில் அம்பிகை சிவ பூஜை செய்தது நாவல் மர நிழலில்!.. 

ஈசன் எம்பெருமான் திருநாவலேஸ்வரர் எனத் திருப்பெயர் கொண்டு சுந்தராம்பிகையுடன் வீற்றிருப்பதும் - நாவல் மர நிழலில்!..

இந்த திருத்தலமே - திருநாவலூர். இது சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அவதார திருத்தலம்.  

சிவ குடும்பத்தில் - மாமரமும் நாவல் மரமும் - அனைவருடனும் - தொடர்புடையன.

இப்படி நாவல் மரத்தில் இருந்தபடி - ஔவைக்கு ஞானம் அளித்த தமிழ்க் குமரன் - 

வள்ளிக் கிழங்கினைக் கிள்ளி எடுத்திட்ட பள்ளத்திலே கிடந்து - வீறிட்டு அழுது - குறவர் கோமான் நம்பி ராஜனால் வளர்க்கப்பட்ட கோலக்கிளி!..  

வனத்திடை வளர்ந்த வண்ணக்கிளி!.. 

வள்ளி எனும் வன மங்கையைத் தேடி நடந்து விளையாடிய போது - இடை புகுந்த நம்பி ராஜனின் பார்வைக்குத் தப்பி நின்றது வேங்கை மரமாக!...

வாழ்க வாழ்கஎன் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை அடியேன் எத்தனை செயினும்
பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன்

பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே
பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்!..
- என்று, அடியார் எல்லாம்  தொழுது வணங்கிக் கிடக்கும் - வெற்றிவேற் குமரன் தன் -

''காலுக்கு அணிகலம் வானோர் முடியும் கடம்பும்!.. '' - என்று அருள்கின்றார் அருணகிரிநாதர்!..

ஸ்ரீ கருமாரி அம்மன் திருக்கோலம் கொண்டு விளங்கும் - திருவேற்காட்டில் -வேல மரம் தல விருட்சம்.!..

திருக்குமரன் தவமிருந்து சிவபூஜை செய்த திருத்தலம் - கீழ் வேளூர். திருவாரூருக்கு அடுத்துள்ளது. இத்தலத்தின் தலமரம் - இலந்தை!..

கடுக்காய் - சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த மருந்துப் பொருள்களில் ஒன்றாக விளங்குவது .

அப்படிப்பட்ட கடுக்காய் - அட்ட வீரட்டத் திருத்தலங்களுள் ஒன்றான திருக்குறுக்கை வீரட்டத்தின் தலமரம்!..  


சப்த ஸ்தானத் திருத்தலங்களுள் ஒன்று திருச்சோற்றுத்துறை!.. திருவையாற்றுக்கு அருகில் உள்ள இத்தலத்தின் - தல விருட்சம் - பன்னீர் மரம்!..

அம்மா!.. என்று குரலெடுத்து அழுததும் - அதைத் தாங்க மாட்டாதவளாகி -  ஓடோடி வந்து பொற்கிண்ணத்தில் பாலமுதை ஊட்டி மகிழ்ந்தாள் - உமா மகேஸ்வரி!.. 

பவள மல்லி எனும் பாரிஜாத மலர்
ஞான சம்பந்தனைப் பெறாமல் பெற்றெடுத்த - திருநிலை நாயகியுடன் பிரம்மபுரீஸ்வரர் உவந்துறையும் திருத்தலம் - சீர்காழி.  இங்கே தல விருட்சம் - பாரிஜாதம்!..

ஞானசம்பந்தரின் பொருட்டு,   பட்டீஸ்வரம் எனும் தலத்தில் விலகிய நந்தி - இறைவனது ஆணையை ஏற்று மற்றுமோர் அடியாருக்காகவும் விலகியது.

அத்திருத்தலம்  - திருப்புன்கூர்!..

திருப்புன்கூர்
தில்லையம்பதிக்கு இன்று போவேன்!.. நாளை போவேன்!.. என்று ஒவ்வொரு நாளையும் கண்ணீருடன் போக்கிய - தன் அடியாரின் பொருட்டு - நந்தியம் பெருமானை விலகியிருக்குமாறு பணித்தான் இறைவன்!.. 

அது மட்டுமா!..

ஊர்க் குளம் தூர் எடுக்கப்பட்டு - கரையும் உயர்த்தப்பட்டால் - ஊருக்கு ஆகுமே!.. நாலு உயிருக்கு ஆகுமே!.. 

- என்று பொது நலம் குறித்து சிந்தித்திருந்த அவரது நல்ல எண்ணம் ஈடேறுவதற்காக,  இறைவன்தன் மகனையே - அனுப்புவித்தான்!.. -  என்றால்,

அவர்தம் - பெருமைதான் என்னே!..

அந்தப் புண்ணியர் - திருநாளைப் போவார்!.. -  நந்தனார்!..

மாணிக்க வாசகருக்காக - சிவபெருமான் - கூடையும் மண்வெட்டியும் தாங்கி நடந்தது  - மதுரையம்பதியில்!..

நந்தனாருக்காக - விநாயகப் பெருமான் - கூடையும் மண்வெட்டியும் தாங்கி நடந்தது  - திருப்புன்கூரில்!..

அப்படி - ஆளாக வந்து குளம் வெட்டியதற்காக, ஆனை முகத்தானுக்கு நாலு மரக்கால் நெல் கூலியாகக் கொடுத்திருக்கின்றார் - நந்தனார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவர் எனத் திகழும்  -   நந்தனார்,

நாளும் பொழுதும் - சிவ.. சிவ.. என்று வந்தித்தவர்!..
வாழ்ந்த நாளில் - சங்கடத்தைச் சந்தித்தவர்!..
எனினும், தான் சார்ந்திருந்த சமூகத்தின் நலனுக்காகச் சிந்தித்தவர்!..


ஊருக்கு ஆகுமே!.. நாலு உயிருக்கு ஆகுமே!.. 

என்ற உயர்ந்த சிந்தனைக்காக - தன் மகனை அனுப்பி வைக்கின்றான் உலகாளும் நாயகன் எனில் -  நந்தனார் தம் பெருமை தான் என்னே!.. 
 
நீர் ஆதாரம் நிலைப்பட வேண்டும். அது நிலைத்தால் சகல உயிர்களும் சுகப்படும் என்ற மகத்தான எண்ணத்துடன்,

நந்தனார் - கட்டிக்காத்த திருக்குளம், இன்று புனித தீர்த்தமாக - பிள்ளையார் தீர்த்தம் என்று விளங்குகின்றது.

சௌந்தர நாயகி சமேத சிவலோக நாதர் விளங்கும் திருப்புன்கூரில் தல விருட்சம் - புங்க மரம்.


நாலு பேருக்கு நல்லது - என்று நாம் எழுந்தால், நம்முடன் அந்த நாயகனே துணைக்கு வருகின்றான்!.. - என்பதே திருக்குறிப்பு.

நந்தனார் திருவடிகள் போற்றி!.. போற்றி!..

ஊர் வாழ்க.. உயிர் வாழ்க .. என்று சிந்திப்போம்!.. 
உடன் வருவான் நம்பெருமான் - வந்திப்போம்!..

 திருச்சிற்றம்பலம்!..

No comments:

Post a Comment