Sunday, October 5, 2014

அரசவல்லி ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாள் ஆலயம்

அரசவல்லி ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாள் ஆலயம் 

ஸ்தல வரலாறு:

ஆந்திர மாநிலத்திலும் சூரிய பகவானுக்கென்று மிகவும் பழமையும் சக்தி வாய்ந்ததுமான ஒரே ஆலயம் அரசவல்லி என்னும் ஊரில் உள்ளது. "ஹர்ஷவல்லி' என்ற பெயரே அரசவல்லியாக மாறிவிட்டிருக்கிறது. சூரியனின் பெயரை வைத்தே ஞாயிற்றுக் கிழமையென்று வாரத்தின் முதல் நாள் துவங்குகிறது. 

தெலுங்கு மொழியில் இந்நாள் "ஆதிவாரம்' எனப்படுகிறது. ஆதி என்றால் முதலாவது என்று பொருள்படும். ஆதித்யன், ஆதிதேவன் என்றால் முதலாமவனான சூரியனையே குறிக்கும். இந்த ஆலயத்தின் கருவறையில் மூலவர் ஸ்ரீ சூரியநாராயணமூர்த்தி, கருங்கல் சிலை வடிவில் இரு கரங்களிலும் தாமரை மொட்டுகளை ஏந்தியுள்ளார். 

இவரது சிரசின்மேல் ஆதிசேஷன் திருவுருவம் காணப்படுகிற. இரு புறங்களிலும் உஷா, பத்மினி மற்றும் சாயா தேவியரின் வடிவங்கள் உள்ளன. காலடியில் பிங்களன், தந்தன் ஆகிய இரு துவார பாலகர்களுடன் சனகர், சனந்தனர் ஆகிய இரு முனிவர்களும் உள்ளனர். இரு முனிவர்களும் கையில் சாமரம் ஏந்தியுள்ளனர். 

இந்த சூரியநாராயணப் பெருமாள் மும்மூர்த்திகளின் அம்சமாக வழிபடப்படுகிறார். மிகவும் சக்தி வாய்ந்த இந்த ஆலயத்துக்கு வெகுதூரத்திலிருந்தும் மக்கள் வந்து, தங்கள் துன்பங்கள் விலக வழிபடுகின்றனர். கண் பார்வை நன்கு விளங்கவும், கொடிய நோய்கள் விலகவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். 

ஆலயத்திலேயே 40 நாட்கள் விரதமிருந்து வழிபடுவோரும் உண்டு. இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி ஒரே நாளில் 108 முறை ஆலயத்தை வலம் வந்தால், நினைத்த கோரிக்கை நிறைவேறும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை. இந்த சூரிய நாராயணப் பெருமாள் கலியுக வரதராகப் போற்றப்படுகிறார். 

இத்தலத்தில் மொட்டையடிக்கும் பிரார்த்தனையும் உள்ளது. திருமலை போன்றே இங்கும் சிறப்பு சூரிய நமஸ்கார மண்டபம் உள்ளது. மேலும் ரதசப்தமி நாளன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்வோரும் விரதமிருந்து வழிபடுவோருமாக பெருங்கூட்டம் கூடுகிறது. 

ஞாயிற்றுக்கிழமை நாட்களில் சூரிய உதயத்தின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்குள்ள குளத்தில் நீராடி, சூரியனை வழிபட்டு, பின் ஆலயத்திற்குள் சென்று சூரிய நாராயணரை வழிபடுகின்றனர். ரதசப்தமி நாளில் சூரியனின் ஒளிக்கதிர்கள் இறைவனின் பாதங்களைத் தழுவுவது கண்கொள்ளா காட்சியாகும்! 

வரலாற்றுப் பின்னணியும் பெருமையும் கொண்ட இந்த ஆலயம் நாளடைவில் பழுதுபட்டு, பிறகு 1778-ல் திருப்பணி செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. அப்போது "யேலமஞ்சிலி புல்லாஜ பந்துலு' என்பவர் நடுவிலுள்ள சூரிய நாராயணப் பெருமாளைச் சுற்றி விநாயகர், சிவன், தேவி, விஷ்ணு ஆகியோரின் சந்நிதிகளை ஏற்படுத்தினார். 

இங்கு ஆதித்யன் எனப்படும் சூரிய நாராயணர் நடுவிலிருக்க, பிற சந்நிதிகள் சுற்றி இருப்பதால் இது "ஆதித்ய பஞ்சாயதன தலம்' எனப்படுகிறது. இங்கு இந்திரனுக்கும் ஒரு சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு முறை இந்திரன் சிவனை தரிசிக்கச் செல்லும்போது, அவனை உள்ளே விடாது நந்தி தடுத்ததாம். 

அதையும் மீறி அவன் செல்ல முயல, நந்தி அவனைக் காலால் உதைத்துத் தள்ளியதாம். இதனால் இந்திரன் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் போய் மயங்கி விழுந்தான். மயக்க நிலையிலிருந்த அவனது கனவில், அந்த இடத்தில் தனக்கு ஒரு பெரிய கோவில் அமைத்துத் தந்தால் தான் அவனது வலியைப் போக்கு வதாக சூரியப்பெருமாள் கூறினார். 

மயக்கம் தெளிந்து எழுந்த இந்திரன் தனது கனவை நினைவுகூர்ந்து, உடனே அங்கு சூரியனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி சூரியநாராயணப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்ததாக தலபுராணம் கூறுகிறது. 

இங்குள்ள சந்நிதியும் ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறிச் செல்லும் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரசவல்லி ஸ்ரீசூரிய நாராயணப் பெருமாள் ஆலயம் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் தலைமையிடத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

No comments:

Post a Comment