Monday, October 6, 2014



சிவ வடிவங்கள்




சிவ வடிவங்கள் போக வடிவம்,  யோகவடிவம், வேக வடிவம் என மூன்று வகைப்படும். போக வடிவம்  என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும். யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேகவடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். 


இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை. சிவலிங்கம் கிழக்கு அல்லது மேற்கு முகமாக அமைந்திருந்தால் அதன் கோமுகி வடக்கு நோக்கியும், தெற்கு அல்லது வடக்கு முகமாக அமைந்திருந்தால்  கோமுகி கிழக்கு நோக்கியும் இருக்கும். 

சந்திரசேகரர் உருவம் உமாசந்திரசேகரர், ஆலிங்கன சந்திரசேகரர், தனிச் சந்திரசேகரர் என மூவகை உண்டு. திருவாரூரில் சந்திரசேகரர் விஷேசம். உமாமகேஸ்வரர் சீர்காழியிலும், கல்யாண சுந்தரர் திருமணஞ்சேரியிலும், காமதகனர் திருக்குறுக்கையிலும், காலசம்ஹாரர் திருக்கடையூரிலும், திரிபுராந்தகர் திருவதிகையிலும், சலந்தராரி திருவிற்குடியிலும்  மாதங்காரி வழுவூரிலும், வீரபத்திரர் திருக்கச்சூரிலும் சிறப்பாக உள்ளனர். 

ஹரியர்த்தர் சங்கரன் கோவிலிலும், அர்த்தநாரீஸ்வரர் திருச்செங்கோட்டிலும், கங்காளர் சீர்காழியிலும்,  தட்சிணாமூர்த்தி ஆலங்குடியிலும், திரிசூலம் மயிலாடுதுறையிலும், யோக தட்சிணாமூர்த்தி திங்களூரிலும் வ்யாக்யான தட்சிணாமூர்த்தி கோவிந்த வாடியிலும், வீணா தட்சிணாமூர்த்தி திருவெண்காட்டிலும் சிறப்பாக காணப்படுகின்றனர்.

தாம்பத்ய தட்சிணாமூர்த்தி சுருட்டைப்பள்ளியிலும், விங்கோற்பவர் திருவண்ணாமலையிலும், அகோராஸ் திரிமூர்த்தி திருவெண்காட்டிலும் சக்ரதானர் திருவீதிமிழலையிலும், முகலிங்கேஸ்வரர் திருக்காளத்தியிலும் சர்வசம்ஹாரர் திருப்பழனத்திலும் உள்ளனர். 

த்ரிபாத மூர்த்தி சீர்காழியிலும், ஜ்வரஹரேச்வரர் காஞ்சி, திருமழபாடி தாரமங்கலம், மாடம்பாக்கம், திருவொற்றியூர், திருவண்ணாமலை, சுருட்டைப்பள்ளியிலும், ஊர்த்துவ தாண்டவர் திருவாலங்காட்டிலும், சரபேசுவரர் திருப்புவனம், சிதம்பரம், மாடம்பாக்கம், திரிசூலத்திலும் புகழுடன் வீற்றுள்ளனர். 

பைரவர் ராமநாதபுரம் திருப்பத்தூரிலும், அச்வாரூடர் திருப்பெருந்துறையிலும், ஏகாதச ருத்ரர்கள் காஞ்சி கயிலாயநாதர் ஆலயத்திலும் விஷேசமாக திகழ்கிறார்கள்.

No comments:

Post a Comment