கஜேந்த்ர மோக்ஷம்
![]() |
சுகர் பரீக்ஷித்துக்கு இதுவரையில் ஸ்வாயும்புவ மனுவின் வம்சத்தில் தோன்றியவர்களின் சரிதங்களையும், அதன் தொடர்பாக ஏற்பட்ட பகவானின் அவதாரங்களைப் பற்றியும் கூறினார். பிறகு, இதர மனுக்களின் வம்சங்களையும் சுருக்கமாகக் கூறினார். உத்தம தாமஸன் என்பவன் நான்காவது மனு. அவன் வம்சத்தில் ஹரிமேதர்-ஹரிணீ என்ற தம்பதிகளுக்குப் பகவான் ஹரி என்னும் திருநாமம் பெற்று கஜேந்த்ராழ்வாரை முதலையினிடத்திலிருந்து விடுவித்தார்' என்று கூறினார். கஜேந்த்ர மோக்ஷ விருத்தாந்தத்தை விஸ்தாரமாகக் கூறுமாறு பரீக்ஷித் சுகரிடம் ப்ரார்த்திக்க, அவர் கூறலானார்.
பாற்கடலுக்குள் பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றால் ஆன மூன்று சிகரங்களையுடைய த்ரிகூட பர்வதம் ஒரு தீவில் இருக்கிறது. மரகத ரத்னங்கள் நிறைந்த அந்த மலைச்சரிவில் அநேக செடி, கொடிகள், மரங்கள் இருந்தன. பல அருவிகளில் நீர் ஓடிக் கொண்டேயிருக்கும். அவற்றில் ஸித்தர், சாரணர், கந்தர்வர், வித்யாதரர், அப்ஸரஸ் ஆகியோர் உல்லாஸமாய் இருப்பார்கள். அநேக விசித்ரமான பக்ஷிகள், யானை, சிங்கம் போன்ற பல பிராணிகள், நதிகள், தடாகங்கள், உத்யான வனங்கள் ஆகியவைகளும் நிறைந்து அந்த பிரதேசம் மனோஹரமாய் இருக்கும். அதில் ருதுமத் என்னும் வருணனுடைய உத்யானம் ஓர் தடாகத்துடன் இருக்கிறது.
தடாகத்தில் ஒருநாள் கஜேந்த்ரன் என்ற யானைகளின் வேந்தன். தன் கூட்டாளிகள், பெண் யானைகள், குட்டியானைகள் ஆகியோருடன் கோடை வெப்பம் தணிய மூழ்கி விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு முதலை அவன் காலைக் கவ்விக் கொண்டது. யானை அரசன் தன்பலம் கொண்டவரை எவ்வளவு முயன்றும் முதலைப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியவில்லை. யானைக் கூட்டம் முழுவதுமே அவனைப் பற்றிக் கொண்டு அவனுடைய துணைக்கு நின்று உதவின. ஆனாலும், பயன் எதுவும் இல்லை. இவ்விதம், யானைக்கும் முதலைக்கும் ஆயிரமாண்டுகள் போராட்டம் நடைபெற்றது. முடிவில் முதலைக்குப் பலம் குறையாதிருக்க, யானை சோர்ந்து போய் விட்டது. இனி தன்னைக் காப்பாற்ற எவராலும் முடியாது என்று தீர்மானித்து, பகவான் ஒருவன்தான் தன்னைக் காப்பாற்றக் கூடியவன் என்று உணர்ந்து, தனது முந்திய பிறவியில் ஜபித்து வந்த ஸ்தோத்ரத்தை நினைவிற்குக் கொண்டு வந்து, கஜேந்த்ரன் பகவானை ஸ்துதித்தான்.
கஜேந்த்ர ஸ்துதி
"ஓங்கார ரூபமான பகவானுக்கு நமஸ்காரம். நீயே இந்த சைதன்ய ப்ரபஞ்ச ஸ்வரூபன். பரமபுருஷன். எல்லாவற்றிற்கும் ஆதிமூலம் நீயே. நீ ஜ்ஞானானந்த மயன். ஆகையால், வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவன். யோகிகளுக்கே உன் ஸ்வரூபம் தெரியும். உன்னை விரும்புகிறவர்களுக்கு விஷய ஸுகங்களில் ஆசை ஏற்படாது. உன்னை வணங்குபவர்களுக்கு கெடுதியே ஏற்படாது. ஜீவாத்ம ஸ்வரூபமும் உன் பரமாத்மாவான அந்தர்யாமியுனுடையதே. நீ அணுவிற்கும் அணுவானவன். தேச கால வஸ்து ஆகியவற்றின் எல்லையில்லாதவன். நீ ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லன். நான் இந்த அற்ப முதலைப் பிடியிலிருந்து விடுதலை கோரவில்லை. ஸம்ஸாரம் என்ற பிடியிலிருந்து விடுதலையான முக்தியையே நாடுகிறேன். நமஸ்கரித்து உன்னைப் பிரார்த்திப்பதைத் தவிர, எனக்கு வேறு உபாயமில்லை. நீ சரணாகத ரக்ஷகன். சேராதவற்றையும் சேர்க்கும் வல்லமை படைத்தவன். இப்படிப்பட்ட ஆதிமூலமே! உனக்கு நமஸ்காரம்."
![]() |
நிர்க்குண பரமான இந்த ஸ்தோத்ரத்தைக் கேட்ட ப்ரம்ம, ருத்ராதி தேவர்கள் கஜேந்த்ரன் தங்களை அழைக்கவில்லை என்று வாளாயிருந்து விட்டனர். ஹரி ஒருவன்தான் கஜேந்த்ரனின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்து கருடன்மீது ஏறி வேகவேகமாக ஓடிவந்தார். ஆகாயத்தில் நாராயணனைப் பார்த்ததும் கஜேந்த்ரனுக்கு ஆனந்தம் ஏற்பட்டது. நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் நிலையில் பகவானை அர்ச்சிக்க மனம் துடித்தது. தடாகத்தில் இருந்த ஒரு தாமரைப் பூவை தன் துதிக்கையால் பறித்து எடுத்து அதைத் தூக்கிப் பிடித்து பகவானின் திருவடிகளில் சமர்ப்பணம் செய்யும் பாவனையில் இருந்ததைக் கண்ணுற்ற பக்தவத்ஸலன் கருடன் மீதிருந்து கீழே இறங்கி, யானையையும் முதலையையும் கரையில் இழுத்து, சுதர்ஸனத்தால் முதலையைக் கொன்றார். ஆபத்பாந்தவனான பகவானின் செயலைப் பார்த்து ப்ரம்ம, ருத்ராதி தேவகணங்கள் கண்ணுற்று வியந்து, மகிழ்ச்சியுற்றனர்.
முதலை இறந்தவுடன் அதன் சரீரத்திலிருந்து திவ்ய தேஜஸ்ஸுடன் ஒரு கந்தர்வன் தோன்றினான். அவன் பெயர் ஹூஹூ. ஒரு சமயம் அவன் தன் மனைவிமார்களுடன் தடாகத்தில் ஜலக்ரீடை செய்து கொண்டிருந்தபோது, ஜலத்தில் நின்றுகொண்டு கர்மானுஷ்டானம் செய்து கொண்டிருந்த தேவலர் என்ற மஹரிஷியின் காலை விளையாட்டாகப் பற்றியிழுத்தான். அதனால், வெகுண்ட முனிவர் அவனை முதலையாகப் போகும்படி சபித்தார். இப்பொழுது, பகவானின் ஸுதர்ஸனத்தால் வெட்டப்பட்டு முதலை உருவம் நீங்கி, சாபம் முடியப்பெற்று, தனது பழைய கந்தர்வ உருவத்தைப் பெற்று பகவானை வணங்கிவிட்டுச் சென்றார்.
ஹரியின் திருக்கரங்கள் பட்டு கஜேந்த்ரனும் சாபவிமோசனம் அடைந்தான். நான்கு திருக்கரங்களுடன், பீதாம்பரதாரியாய் பகவானின் திருவுருவைப் போன்றே வடிவம் பெற்று, கஜேந்த்ரன் பகவத்ஸாரூப்யத்தை அடைந்தான்.
கஜேந்த்ரன் பூர்வஜன்மத்தில் இந்த்ரத்யும்னன் என்னும் பெயருடைய பாண்டிய அரசனாக இருந்தான். அவன் குலபர்வதத்தில் தவம் புரிந்து கொண்டிருந்தபோது, அகஸ்த்யர், தன் சிஷ்யர்களுடன் எழுந்தருளினார். அரசன் பூஜையில் ஆழ்ந்திருந்ததால் அகஸ்த்யர் வந்ததைக் கவனிக்கவில்லை. அதிதிஸத்காரம் (விருந்தோம்பல்) செய்யாமல் தன்னை அரசன் அவமதித்துவிட்டான் என்றெண்ணி, அகஸ்த்யர் கோபம் கொண்டு யானைபோல் மதிகெட்டிருப்பதால் ஒரு யானையாகவே நீ பிறக்கக் கடவது என்று சாபம் கொடுத்து விட்டார். அதன் விளைவாக அரசன் கஜேந்த்ரனாகப் பிறந்தான். இருந்தாலும், தனது பூர்வ ஜன்ம தவப்பயனால் உரிய ஸந்தர்ப்பத்தில் ஹரியின் ஸ்மரணை ஏற்பட்டது. கஜேந்த்ரனுக்கு மோக்ஷத்தை அளித்த பகவான் அவனிடம் கூறினார்: "விடியற்காலையில் தூங்கியெழுந்ததும் தூய மனத்துடன் என்னையும், உன்னையும், இம்மலையையும், இந்த ஸரஸ்ஸையும் நினைப்பவர்களுக்கு எல்லாப் பாபங்களும் அழிந்து போகும். நீ செய்த ஸ்தோத்ரத்தை ஜபிப்பவர்களுக்கு மரணத் தறுவாயில் என் நினைவு ஏற்பட்டு மோக்ஷத்தை அடைவார்கள்."
சுகர் பரீக்ஷித்துக்கு இந்த வ்ருத்தாந்தத்தைக் கூறிவிட்டு இதன் பலச்ருதியைச் சொன்னார்: "இந்தப் புனிதக் கதையைக் கேட்பவர்களுக்குக் கலிதோஷங்கள் யாவும் நீங்கும். கீர்த்தி பெருகும். மோக்ஷம் கைகூடும். கெட்ட ஸ்வப்னங்கள் பலனற்றுப் போகும். அதிகாலையில் இந்த சரீத்ரத்தைப் படித்துக் கேட்டால், பாபங்கள் யாவும் விலகும்."
No comments:
Post a Comment