கீழப்பாவூர் நரசிம்மர் கோவில்

சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். காட்சி கொடுத்த ஷேத்திரத்திலேயே நிரந்தரமாக நரசிம்மர் குடிகொண்டுள்ள சிறப்பு கீழப்பாவூர் தலத்துக்கு மட்டுமே உரித்தானது. ஆகவே கீழப்பாவூர் பூலோக வைகுண்டம் என்பது மிகையன்று.
தலபுராண ரீதியாக தனித்துவம் பெற்று நரசிம்மர் தலங்களுள் முதன்மையானதாக விளங்கும் கீழ்ப்பாவூர் நரசிம்மர் கோவில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய முப்பெருஞ் சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்தியாவில் 16 திருக்கரங்களுடன் காட்சி தரும் நரசிம்மர் ஆலயங்கள் மூன்று உள்ளன.
ஒன்று ராஜஸ்தானிலும் மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்கர்குடி என்ற இடத்தில் ஒரு சிறு குன்றின் மீதும் உள்ளது. மூன்றாவதாக தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கிராமத்தில் சமதளப் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.
நரசிம்மர் கீழப்பாவூரில் நித்யவாசம் செய்பவராக, நிரந்தரமாக அர்ச்சாவதாரத் திருமேனியில் குடிகொண்டு அருள் பாலித்து வருவது பக்தர்களை பரவசடையச் செய்கின்றது.
இது அமைதியான, தெய்வீகச் சூழலும் தென்றல் தவழும் இயற்கை எழிலும் ஒருங்கேயுள்ள புண்ணியஸ்தலம் ஆகும். இங்கு எளிமையான ஆலயத்தில் இரு சந்நிதிகள் உள்ளது. கிழக்கு பார்த்த தனி சந்நிதியில் அலர் மேல் மங்கை, பத்மாவதி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி நின்ற திருக்கோலத்தில் தரிசனம் தருகிறார். இதனையொட்டி பின்புறமாக மேற்கு நோக்கியுள்ள தனி சந்நிதியில் நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். ஒரே ஆலயத்தில் வெங்கடாசலபதி, நரசிம்மரை தரிசிக்க அருமையான தலம் இதுவாகும்.
பரிகாரத்தலம்:
கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் கல்யாணத்தடை, கடன் தொல்லை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கான மிகச் சிறந்த பரிகாரத்தலமாக விளங்குகிறது. சுவாதி நட்சத்திரக் கார்களுக்குரிய ஸ்தலமாகவும் திகழ்கிறது.
வழிபட உகந்த நாட்கள்:
நரசிம்மரை வழிபடுவதற்கு செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி தினங்களில் சிறப்பு பூஜை நடக்கிறது.
நடை திறப்பு: காலை 8.00-11.30, மாலை 5.00-800
இருப்பிடம்:
திருநெல்வேலி-தென்காசி நெடுஞ்சாலையில் திருநெல்வேலி மேற்காக 44 கி.மீ. தொலைவிலும் தென்காசியில் இருந்து கிழக்காக 10 கி.மீ. தொலைவிலும் உள்ளது பாவூர்சத்திரம் என்னும் ஊர். இங்கிருந்து 2 கி.மீ. அருகில் சுரண்டை என்ற ஊருக்கு செல்லும் வழியில் கீழப்பாவூர் அமைந்துள்ளது.
No comments:
Post a Comment