Tuesday, September 23, 2014

தல விருட்சங்கள் - 1

ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் என தனித்துவத்துடன் ஒரு மரம் விளங்குவதை அறிந்திருப்போம்.

அத்தகைய மரங்கள் பாதுகாக்கப்பட்டால் - அந்த வட்டாரம் பாதுகாக்கப்பட்டதைப் போல!..

ஆனால் - நடந்ததென்ன?..


மதுரையம்பதியின் ஆதி திருப்பெயர் - கடம்பவனம். அன்னை மீனாட்சியின் திரு நாமங்களுள் ஒன்று - கடம்பவன வாசினி. கடம்ப வனத்தில் வசிப்பவள்.

இன்றைக்கு மதுரையில்  - இருக்கின்ற கடம்ப மரங்கள் எத்தனை!?..

பொன்னம்பலமாகிய திருச்சிற்றம்பம் விளங்குவதே தில்லை வனத்தில்!..

ஆனால் - சிதம்பரத்தில் தில்லை மரங்களே இல்லை. அவை இப்போது பிச்சாவரம் காட்டில் உள்ளன - என்கின்றனர்.

அம்பிகை - நீரால் லிங்கம் அமைத்து பூஜித்தது - நாவல் மர நிழலில்!..

இந்த தலத்தில் இது முக்கியத்துவம் என்று  ஞானிகளாலும் மகான்களாலும் உணரப்பட்ட உண்மையே - தலவிருட்சம்!..  

பசுமையான மரங்கள் பேணி வளர்க்கப்பட்டால் நாட்டில் மழை வளம் பெருகும் என்ற அடிப்படையே - தலவிருட்சம்!..   

சிறப்பான குணநலன்களைக் கொண்டு  மரங்கள் விளங்குகின்றன. 

வில்வம்

குறிப்பாக மருத்துவ குணங்கள் நிறைந்த வில்வம், வன்னி, மகிழ் - போன்ற மரங்களை - தற்காலத்தில்  திருக்கோயிலைத் தவிர வேறு இடங்களில் பார்ப்பதே அரிதாக இருக்கின்றது.

தமிழிலக்கியங்கள் போற்றும் கொன்றையும், மருதமும் எத்தனை மகத்துவம் நிறைந்தவை!..

தெய்வாம்சமும் பேரருளும் பெற்ற கொன்றை மரங்களும், மருத மரங்களும் நம் தமிழகத்திற்கே உரித்தான மரங்கள். திருக்கோயில்களில் தல விருட்சங்களாக விளங்கி சகல துன்பங்களையும் நீக்கி, எப்பிணியும் வராமல்காப்பவை.

பிள்ளையார் பட்டியிலும் திருஇடைமருதூரிலும் தலமரமாக விளங்குவது  -மருத மரம். திருக்குமரன் திகழும் மலைகளுள் ஒன்று - மருதமலை. 

கொன்றை, வில்வம், ஆல், வன்னி, மகிழ் - ஆகியன சிவபெருமானின் அம்சங்கள். இம்மரங்களின் கீழிருந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். வில்வ இலைகளால்  சிவபெருமானைப் பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும். 


பந்தநல்லூர், அச்சிறுபாக்கம் முதலிய தலங்களின் தலமரம் - கொன்றை.

திருஅரங்கத்தில் மஹாலக்ஷ்மியின் சந்நிதிக்கு அருகில் விளங்குவதுவில்வம்!..

திருஐயாறு, தஞ்சை (ஸ்ரீபிரகதீஸ்வரர்), இராமேஸ்வரம், திருவெண்காடு, திருவைகாவூர் - இன்னும் பல சிவ ஸ்தலங்களின் தலமரம் - வில்வம்.பெரும்பான்மையான திருக்கோயில்களில் முதலிடம் பெற்று விளங்குவது வில்வம்!..

ஆலமரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையன.  ஆனால் - தகுந்த மருத்துவரின் ஆலோசனை இன்றி தன்னிச்சையாக முயற்சி செய்யக்கூடாது.

திருஆலங்காடு, திருஆலம்பொழில், திருப்பழுவூர் - முதலிய திருத் தலங்களின் தலமரம் - ஆல்.

திருப்பூந்துருத்தி, திருவான்மியூர், தஞ்சை (ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர்) - ஆகிய தலங்களின் தலமரம்  - வன்னி. வில்வத்திற்கு அடுத்து அதிக தலங்களில்  விளங்கும் பெருமையை உடையது - வன்னியே.

குளிர்ந்த நிழலையும் மணம் கமழும் மலர்களையும் உடையது மகிழ். இது வகுளம் எனவும் புகழப்படும்.

திருஅண்ணாமலை, திருஒற்றியூர், தஞ்சை (ஸ்ரீகொங்கணேஸ்வரர், யாளி நகர்) - ஆகிய தலங்களில்  மகிழ மரம் விளங்குகின்றது..

தஞ்சை பட்டுக்கோட்டைக்கு அருகில் மகிழங்கோட்டை (தொக்காலிக்காடு) எனும் ஊரில் இறைவனின் திருப்பெயர் - மகிழவனேஸ்வரர்.

புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள திருவேங்கை வாசல் எனும் திருத்தலம் -மகிழவனம் - வகுளாரண்யம் எனும் திருப்பெயருடையது. 

ஏரி  காத்தருளிய ஸ்ரீராமன் விளங்கும் மதுராந்தகம் - வகுளாரண்யம்எனப்படும்.

பிருந்தா எனப்படும் துளசி விஷ்ணுவின் அம்சம். துளசி உள்ள இடத்தில் மஹாவிஷ்ணுவும் மஹாலக்ஷ்மியும் குடியிருப்பர். அதனால் தான் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. 

பல மருத்துவ குணங்களை உடைய துளசி இருக்கும் இடத்தில் நாகங்கள் வராது.
             
சந்தன மரம்,  அத்தி மரம் - விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் இன்றி சுபகாரியங்களும், பூஜைகளும் ஏது!.. சந்தன மரத்திலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிப்படுகின்றன என்கின்றனர். 

ஸ்ரீ வாஞ்சியத்தின் தலமரம் - சந்தனமரம்.

காஞ்சி வரதர் அத்தி மரத்தினால் ஆனவர். மயிலாடுதுறையை அடுத்த கோழி குத்தி வானமுட்டிப் பெருமாளும் அத்தி மரத்தில் விளங்குபவரே!..

விலக்கப்பட்ட கனியை உண்டதனால் கர்த்தர் கோபம் கொண்டு - ஆதாம் ஏவாள் இருவரையும் ஏடன் தோட்டத்திலிருந்து நிர்வாணமாக பூமிக்கு வெளியேற்றிய போது - அவர்கள் இருவரும் தமது ஜனனேந்திரியங்களை மறைப்பதற்கு பயன்படுத்தியது - அத்தி மரத்தின் இலைகளை!..

இறைதூதர் நபிகள் நாயகம் அவர்கள் - சொர்க்கத்தின் பழம் என  அறிவிப்பதுஅத்திப் பழத்தையே!..

ஜோதிடத்தில் ஏழாம் இடமாகிய களத்ர ஸ்தானத்திற்கு அதிபதி சுக்ரன். இவரே - அத்தியின் அதி தேவதை!..

சுக்ரன் - ஜனன உறுப்புகளைக் காப்பவர். தம்பதியர் கடைசி வரையில் ஒருவரை ஒருவர் மனப்பூர்வமாக விரும்பி இருப்பதுவும் அதனால் வாழ்க்கை வளம் பெறுவதுவும் - சுக்ரனின் அருளால் தான்!..

மா , நெல்லி , மாதுளை, மருதாணி ஆகியன மஹாலக்ஷ்மியின் அம்சங்கள்.  
எல்லாவிதமான பூஜைகளிலும் சுபகாரியங்களிலும் மாவிலைகள் பயன் படுத்தப்படும் காரணம் - மஹாலக்ஷ்மியின் அம்சம் என்பதனால் தான்!..  

வீடுகளில் சுபகாரியங்கள் நிகழும் போது - கட்டப்படும் மாவிலைத் தோரணங்களின் அழகே அழகு!.

மா மரம் - காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் -  திருத்தலங்களின் தலமரம்.
நெல்லி மரத்தின் கீழிருந்து தானம் செய்தால், தானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
நெல்லி
நெல்லி - திருநெல்லிகா, திருநெல்வாயில், பழையாறை  முதலிய திருத்தலங்களின் தலமரம்.

மாதுளை மரத்தின் கீழ் விளக்கேற்றி வைத்து - இளந்தம்பதியர் வலம் வந்து வணங்க தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்பு அகலாது இருப்பர்.
மருதாணி காய்களை  தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கெட்ட கனவுகள் வராது.

திருவாவடுதுறை, திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்களின் தலமரம் -அரசு.
அரச மரத்தின் வேர்களில் மஞ்சள் நீர் ஊற்றி  நெய்தீபம் ஏற்றி வர புத்ர தோஷம் நீங்கும்.


வேம்பு சக்தியின் அம்சம்.  வேப்ப மரத்திற்கு  மஞ்சள் குங்குமம் சூட்டி  மாலை அணிவித்து மஞ்சள் ஆடையுடன் மரத்தை வலம் வந்து வணங்க மாரியம்மனின் அருள் கிட்டும். மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மர நிழலும் காற்றும் க்ஷய ரோகம் எனும் காச நோயை விரட்டக் கூடியது.
இவற்றை எல்லாம் ஆய்வு செய்ததனால் அன்றோ - அமெரிக்கா -  வேம்புக்கு உரிமை கொண்டாடியது!..
குடந்தை வியாழ சோமேஸ்வரர் திருக்கோயில் மற்றும் வைத்தீஸ்வரன் கோயிலின் தல விருட்சம் - வேம்பு.

திருச்செங்காட்டங்குடிக்கு விருந்து உண்பதற்கு, உருத்ராபசுபதி  என வந்த பெருமான் - முதலில்,  சிறுதொண்டரின் மனைவி திருவெண்காட்டு நங்கையிடம் - பிட்க்ஷை கேட்டபின் இளைப்பாறி அமர்ந்திருந்தது  - ஆத்தி மர நிழலில்!..

இலுப்பை

ருத்ர வழிபாட்டுக்கும் சகல தேவதா மூர்த்திகளுக்கும் உகந்தது - இலுப்பைஎண்ணெய் தீபம். 

இலுப்பை எண்ணெய் கொண்டு ஆலயத்தில் தீபம் ஏற்றுவதன் மூலம் காரிய சித்திகள் பல கைவரப் பெறும் என்பது அசைக்க முடியாத உண்மை.
இலுப்பை தலமரமாக விளங்கும் திருத்தலம் - திருச்செங்கோடு.
சூர்யோதயத்தின் போது வெட்டவெளியில் - சில நியமங்களுடன் சூர்ய தேவனை - இலுப்பை எண்ணெய் தீபத்தினால் வழிபடுவதனால் அடையும் நன்மைகளைச் சொல்லி முடியாது.
தூங்குமூஞ்சி மரம் முருங்கை மரம் ஆகியன - சோம்பலைக் குறிப்பவை.
புளிய மரம், கருவேல மரம், எட்டி மரம்  - ஆகியன தீய அதிர்வுகளை வெளிபடுத்தக்கூடியன.  இவற்றின் நிழல் - உடலில் உஷ்ணத்தை அதிகரிக்கச் செய்யும். இதனாலேயே - இந்த மரங்களை வீட்டுக்கு எதிரில் வளர்ப்பதில்லை.
இந்த மரங்களுக்கு மருத்துவ குணங்கள் இருப்பினும் - காய் மற்றும் வேர்களை  தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகளுக்கு இம்மரங்களே அடைக்கலம் ஆவன.
லிங்கத்தின் மீது நாகம் குடை பிடித்தாற்போல அற்புத வடிவங்கொண்டு இலங்குவது நாகலிங்கப் பூ. நாகலிங்க மரம் சுற்றுப்புற காற்றில் உள்ள தூசியை வடிகட்டி தூய்மையாக்கும் தன்மை உடையது எனக் குறிக்கின்றனர்.

நாகலிங்கப் பூ
சென்னை - புலியூர் பரத்வாஜேஸ்வரர் ஆலய  தல விருட்சம் நாகலிங்க மரம்.
நல்ல மரங்களிலிருந்து வெளிப்படும் அதிர்வுகளால் நோய்கள் தீர்கின்றன.  மனம்  - நிம்மதியையும் மகிழ்ச்சியையும்  அடைகின்றது.   

மனிதனுக்கு - விருந்தெனவும் மருந்தெனவும் விளங்குவன மரங்களே!..

ஓடித் திரிந்த உயிரினங்கள் அனைத்திற்கும் ஆதரவாய் இளைப்பாற நிழல் தந்து காப்பவை  - மரங்களே!..

அமர்வதற்கும் அடைவதற்கும் என பறவைகளுக்கு உண்மையான சரணாலயமாக விளங்குபவை - மரங்களே!..

இப்படியாக, சமூகத்தின் அகத்திற்கும் புறத்திற்கும் நன்மைகளை அளிக்கும் -  விருட்சங்களின் குணநலன்கள் காலங்கள் தோறும் காக்கப்பட வேண்டும். 

அதனால் - மண்ணும் மக்களும் பயனுற வேண்டும் என்பதே அடிப்படை நோக்கம்.

தலவிருட்சமாக ஸ்தாபிக்கப்பட்ட மரம்  - அடுத்து வந்த தலைமுறையினரின் பாதுகாப்புக்கு உட்பட்டு நாளடைவில் சிறப்புக்கும் மதிப்புக்கும் உரியதாகியது. 

சிந்தை அங்கே குவிந்து விளங்கியதால் - சித்தம் சித்தி ஆயிற்று. 
அதன் அடுத்தடுத்த வளர்ச்சி - கோயில் என்றானது. 

மரங்கள் - இறைவன் அளித்த வரங்கள்.

இதில் பொதிந்து கிடப்பது - 
இயற்கையே இறைவன்!.. - இறைவனே இயற்கை!..
எனும் உண்மை.

திருச்சிற்றம்பலம்!..

No comments:

Post a Comment