Sunday, October 5, 2014


குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்வதற்கும், குடும்பத்தில் உள்ளவர் 

அனைவரும் அமைதியுடன் வாழ்வதற்கும் ஓதவேண்டிய பதிகம்


பண் : கொல்லி (3--24)               ராகம் : நவரோசு
பாடியவர்: திருஞானசம்பந்தர்   தலம்: சீர்காழி



மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்

எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர்குறைவு இலை;

கண்ணில், நல்லஃதுஉறும்; கழுமல வளநகர்ப்

பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே




போதையார் பொன்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத்

தாதையார் முனிவு உறத் தான் எனை ஆண்டவன்

காதையார் குழையினன்; கழுமல வளநகர்ப்

பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே



தொண்டு அணை செய் தொழில், துயர் அறுத்து உய்யலாம்;

வண்டு அணை கொன்றையான், மதுமலர்ச் சடைமுடி;

கண்துணை நெற்றியான்; கழுமல வளநகர்ப்

பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே



அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே

நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்

கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்

பெயர்பல துதிசெய, பெருந்தகை இருந்ததே



அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழிநெஞ்சமே

விடைஅமர் கொடியினான்: விண்ணவர் தொழுதுஎழும்

கடைஉயர்மாடம் ஆர் கழுமல வளநகர்ப்

பெடைநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே



மற்று ஒரு பற்று இலை, நெஞ்சமே; மறைபல

கற்ற நல் வேதியர் கழுமல வளநகர்ச்

சிற்றிடைப் பேர் அல்குல் திருந்திழை அவளொடும்

பெற்று எனை ஆள்உடைப் பெருந்தகை இருந்ததே



குறை வளைவது மொழி குறைவு ஒழி, நெஞ்சமே

நிறை வளை முன்கையாள் நேரிழை அவளொடும்

களை வளர் பொழில்அணி கழுமல வள நகர்ப்

பிறை வளர் சடைமுடிப் பெருந்தகை இருந்ததே




அரக்கனார், அருவரை எடுத்தவன் அலறிட

நெருக்கினார் விரலினால்; நீடுயாழ் பாடவே


கருக்கு வாள் அருள் செய்தான்; கழுமல வளநகர்ப்

பெருக்கும் நீர் அவளொடும் பெருந்தகை இருந்ததே



நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய், அவர்

அடியொடு முடி அறியா அழல் உருவினன்;

கடிகமழ் பொழில் அணி கழுமல வளநகர்ப்

பிடிநடை அவளொடும் பெருந்தகை இருந்ததே



தார்உறு தட்டு உடைச் சமணர் சாக்கியர்கள் தம்

ஆர்உறு சொல் களைந்து அடிஇணை அடைந்து உயம்மின்

கார்உறு பொழில் வளர் கழுமல வளநகர்ப்

பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே



கருந்தடம் தேன்மல்கு கழுமல வளநகர்ப்

பெருந்தடங் கொங்கையோடு இருந்த எம்பிரான்தனை

அருந்தமிழ் ஞானசம்பந்தன் செந்தமிழ்

விரும்புவார் அவர்கள் போய், விண்ணுலகு ஆள்வரே


திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment