ராகு-கேது தோஷ பரிகாரத்துக்கு நிகரற்ற தலம்
கிரகங்கள் ஒன்பது என்றும், எண்ண முடியாத நட்சத்திர மண்டலங்களில் முக்கியமாவை இருபத்தேழு என்றும், வரையறுக்கப்பட்டுள்ளது. சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி என ஏழு கிரகங்களும் நிழல் கிரகங்கள் எனப்படும், ராகு, கேது சேர்த்து நவகிரகங்கள் எனப்படும். இவையாவும் பூமியுடன் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கின்றன.
இவைகள் சுழலும் பாதையில் இருபத்தேழு நட்சத்திரங்களும் இருக்கின்றன. சூரியனின் ஒரு சுற்று ஒரு வருட காலமும், சந்திரனின் ஒரு சுற்று இரண்டு பட்சங்கள் கொண்ட ஒரு மாதமாகவும் கணக்கிடப்படுகிறது. சனியின் ஒரு சுற்று முப்பது வருட காலமாகும்.
குருவின் ஒரு சுற்று பன்னிரெண்டு வருடங்கள், மற்ற கிரகங்களில் ராகுவும், கேதுவும், ஒன்றரை வருட காலத்தில் ஒரு சுற்றை முடிப்பர். செவ்வாய், புதன், சுக்கிரன், இவர்களின் சஞ்சாரம் அவ்வப்போது மாறும். ஏழு கிரகங்களும் பிரதட்சிணமாக சுற்றி வரும் போது ராகுவும், கேதுவும் மட்டும் அப்ரதட்சிணமாக சுற்றி வருகிறார்கள்.
இந்த கிரகங்களின் சாரம் கோட்சாரம் எனப்படும். எந்தெந்த காலத்தில் இவை எங்கெங்கு இருக்கின்றன என்பது கணக்கிடப்பட்டு பஞ்சாங்கங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்த கோள்கள், பூமியின் சுழற்சியில் ஏற்படுத்தும் பாதிப்புகளால் பஞ்சம், பூகம்பங்கள், வெள்ளம் முதலிய சீர்கேடுகள் அவ்வப் போது ஏற்படுகின்றன.
தங்கள் சஞ்சாரத்திற்கு ஏற்ப இந்த கிரகங்கள் பூமியை முழுவதுமாக பாதிப்பதோடு இல்லாமல் தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கையையும் பாதிக்கின்றன. ஒருவர் பிறக்கும் காலம், தேசம், திதி, வாரம், நட்சத்திரம் இவைகளும், பிறக்கும் சமயம் உள்ள கிரக நிலையும் பொருத்து அவரது வாழ்க்கை அமைகிறது என்பதை ஜோதிட சாஸ்திரம் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம்.
தனக்கென்று ராசி சக்கரத்தில் வீடு இல்லாமல் இருக்கும் சாயாக் கிரகங்கள் எனக் கூறப்படும் ராகுவும், கேதுவும் மனித வாழ்வில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பலவிதமானவை. ராகுவைப் போல் கொடுப்பார் இல்லை. கேதுவைப் போல் கெடுப்பார் இல்லை என்று வசனம் உண்டு.
இவ்விருவரும் ஒருவர் ஜாதகத்தில் இருக்கும் ராசியையும், அந்த ராசிநாதனையும் பொருத்தும், இவர்கள் எந்த கிரகங்களின் பார்வை பெறுகிறார்கள் என்பதை பொருத்தும் இவர்கள் கொடுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. அனேகமாக நல்ல இடங்களில் அமையாவிடில் இவற்றால் அதிகக் கெடுதல்கள் ஏற்படுகிறது.
நவக்கிரகங்களிலே சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும் சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும், இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர். சந்திர, சூரியரையும், பலம் இழக்கும் படி, ஒளி இழக்கும்படி செய்ய இவர்களுக்கு ஆற்றல் உண்டு.
ஒருவர் ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் அவர்களை அரசனைப் போல உயர்த்தி விடுவானாம். ராகு நல்ல குடும்பம், செல்வாக்கு, அந்நிய மொழிகளில் தேர்ச்சி இவற்றை எல்லாம் தருவான். ஆனால் ராகு தோஷம் உடையவர்கள், மிகவும் கடுமையான பலன்களை சந்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.
விவாக தாமதம், களத்திர தோஷம், புத்திர தோஷம் இவற்றுக்கு காரணமாக இருக்கிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் கேது பலம் பெற்றிருந்தால் இக, பரம் இரண்டிலும் உள்ள சுகங்களை அனுபவிக்கச் செய்வான். சிவபக்தனான கேது தபஸ், தியானம் முதலியவற்றில் ஈடுபடுத்துபவனாகவும், உலக பந்தங்களிலிருந்து விடுவிப்பவனாகவும் அதே சமயம் சகல சவுபாக்கியங்களையும் அளிப்பவனாயும் விளங்குவான்.
ஜாதகத்தில் கேது நீசமாக, பலகீனமாக இருந்தால் மனநோய், விபத்துக்கள், தீய சேர்க்கை போன்ற பலவித கெடுதல்கள் ஏற்படும். ராகு, கேது இவர்களால் ஒரு ஜாதகருக்கு ஏற்படும் கெடுதலான பாதிப்புகள் நீங்க ராகு, கேது ஸ்தோத்திரங்களை சொல்வதும், ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவதும் உண்டு.
திருநாகேஸ்வரம் என்னும் இடத்தில் இவ்விருவருக்கும் தனித்தனி சன்னதிகள் இருப்பதால் அங்கும் சென்று வழிபட்டு நாகநாத சாமியை வணங்கி வருவதும் உண்டு. என்றாலும் ராகு, கேது தோஷத்தை விரட்டும் ஆற்றல் கொண்ட, பிரபலமான தலமாக காளஹஸ்தி தலம் உள்ளது.
ஸ்ரீகாளகஸ்தி கோவிலில் காளஹஸ்தீஸ்வரரை தரிசனம் செய்தாலே ராகு, கேதுக்களால் ஏற்படும் கஷ்டங்கள் சீக்கிரமே விலகுகின்றது என்பது பெரும்பாலானாவர்களின் அனுபவம். சுவயம்பு மூர்த்தியான காளஹஸ்தீஸ்வரரின் மேனியிலேயே சிலந்தியும், யானையும், சர்ப்பமும் உண்டு.
இவை யாவும் வழிபட்ட, சிவபெருமானின் லிங்க வடிவான காளத்தீஸ்வரரின் தரிசனம் எண்ணற்ற பக்தர்களுக்கு நன்மை பயக்கின்றது. லக்னத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் ஜாதகத்தில் அமைந்துள்ள பெண்களின் திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும்.
இத்தகைய ஜாதக அமைப்புகள் பெண்கள், காளத்தீஸ்வரரையும், காளஹஸ்திக் கோவிலில் வீற்றிருக்கும் பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வந்தால், உடனே திருமணம் நிச்சயமாகிவிடும். அநேக விதமான ஹோமங்களும், சாந்திகளும் ராகு, கேது தோஷபரிகாரமாக விதிக்கப்பட்டிருந்தாலும் இவற்றை விதிப்படி செய்ய முடியாத தற்கால சூழ்நிலையில் பக்தியுடன் காளத்தீஸ்வரரையும், பாதாள விநாயகரையும் தரிசனம் செய்து வணங்கி வருவது சுலபமாக யாவரும் செய்யக் கூடியதாகும்.
காளஹஸ்தீவரரின் மூர்த்தியை நவக்கிரக கவசத்துடன்தான் தரிசிக்க முடியும். விரைவில் அருள்புரியும் இந்த சிவபெருமானை வழிபடுவது சுலபம். தும்பை பூவினாலும், வெள்ளெருக்கு புஷ்பத்தாலும் காளஹஸ்தீவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்.
நவக்கிரகங்களால் முக்கியமாக ராகு, கேது இவர்களால் ஏற்படும் கெடுதல்களைப் போக்கி எல்லா நன்மைகளையும் இத்தலத்து செய்து வருவது பக்தர்கள் அறிந்த விஷயம். சர்பத்தின் தலையுடன் கூடிய கேதுவும், சர்பத்தின் உடலுடன் கூடிய ராகவும் பரமசிவனை வழிபட்டு நிழல் கிரகங்களாக திகழ்ந்து ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இருபத்தைந்து வருடங்களை நடத்திச் செல்கின்றன.
ராகு தசை பதினெட்டு வருடங்கள். கேது தசை ஏழு வருடங்கள். காளகஸ்தீஸ்வரை இவர்கள் வழிபட்டு அவரது உடலிலேயே ஸ்தானம் பெற்றிருப்பதால் காளகஸ்தீஸ்வரரின் தரிசனம் இவர்களால் ஏற்படும் கெடுதலான பாதிப்புகளை நீக்குகிறது.
பாதாள விக்னேஸ்வரரின் வழிபாடும் காளஹஸ்தீவரரின் தரிசனமும், அம்பாளின் அருளும் எல்லோருக்கும் கிடைக்கக் கூடியவை. கண்ணப்பருக்கு அருள் செய்த காளஹஸ்தீசனின் மகிமையால் ராகு, கேதுக்களுடைய தீய பலன்களிலிருந்து விடுபட்டு எல்லோரும் பலன் பெறலாம்.
இக்காளகஸ்தி தலத்தில் ராகு, கேது தோஷங்கள் நீங்குவதற்காக விசேஷமான பூஜைகள் செய்வதற்கு அனேக வசதிகள் உள்ளன. சர்ப தோஷத்தால் குழந்தைகள் இல்லாதிருப்பவர்களும், திருமணம் தடைபட்டு வருபவர்களும், திருமணத்திற்கு பிறகு கணவன், மனைவி உறவு சரியில்லாமல் கவலைப்படுபவர்களும்,
குடும்ப சச்சரவுகளால் மன அமைதி இல்லாதிருப்பவர்களும் இத்தலத்தினில் பாதாள விநாயகர், ஞானப் ரசினாம்பாள், ஸ்ரீ காளகஸ்திசர் இவர்களை வழிபட்டு எல்லாவித நன்மைகளும் பெற்று வருகிறார்கள். ராகு-கேது பரிகார பூஜை இந்தியாவில் வேறு எந்த தலத்திலும் இல்லாதபடி இங்கு தினமும் விமரிசையாக நடக்கிறது.
இதற்காகவே மண்டபத்தில் தோஷ பூஜைக்கு வருபவர்களை இரு பக்கமும் உட்கார வைத்து பரிகார பூஜை நடத்துகிறார்கள். ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு குறையாமல் இந்த பரிகார பூஜை செய்வது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment