தீராத பிணிகள் போக்கும் பஞ்சமுக ஆஞ்சநேயர்

சென்னை அடுத்த தாம்பரத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கவுரிவாக்கத்தில் அமைந்துள்ளது பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். ஆஞ்சநேயரின் ஐந்து திருமுகங்களில் நடுவில் அமைந்து பக்தர்களுக்கு தரிசனம் தருகிற முகம் சாந்த ஸ்வரூப ஆஞ்சநேயர்.
அவருடைய திருமுக மண்டலத்திற்கு இரு புறங்களில் வலப்புறம் உக்ரவீர நரசிம்மரும், ஹயக்ரீவரும், இடப்புறம் மஹாவீர கருடனும், வராஹரும் காட்சி தருகின்றனர். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முப்பணிகளை செய்யும் மும்மூர்த்திகளின் அம்சங்களையும் தன்னகத்தே கொண்டவராக சாந்த ஸ்வரூப ஆஞ்சநேயர் விளங்குகிறார்.
கருடமுகம் பக்தர்களுக்கு ஏற்படும் தீராத பிணிகள், விஷக்காய்ச்சல்கள் போன்றவற்றை நீக்கி அருள் பாலிக்கிறது. வராஹ முகம் பக்தர்களுக்கு செல்வத்தை அள்ளித்தருகிறது. நரசிம்ம முகம் செய்வினை, பில்லி, சூனியம், ஏவல் தீங்குகளை அழிக்கிறது.
ஹயக்ரீவர் முகம் கல்வியையும், ஞானத்தையும் தருகிறது. தமிழ்நாட்டில் திருப்பத்தூர், சுசீந்திரம், நாமக்கல், தூத்துக்குடி, திருக்கடவூர், காஞ்சீபுரம், திருவள்ளூர், சேலம், ஈரோடு, கும்பகோணம் மற்றும் செகந்திராபாத், அலகாபாத் போன்ற வடமாநில நகரங்களிலும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்கள் உள்ளன.
No comments:
Post a Comment