Monday, October 6, 2014



சரபேஸ்வரர் ஆலயங்கள்

சோழர்கள் ஆட்சி காலத்தில் தான் சரபேஸ்வரர் வழிபாடு அறிமுகமாகியது. சரப மூர்த்தி வடிவத்தினைக் கோயில்களில் அமைப்பதாலும் வழிபடுவதாலும் எதிரிகள் அழிக்கப்படுவார்கள். போர்களில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே சோழர்கள் சரபேஸ்வரர் வழிபாட்டினைத் துவங்கினார்கள்.
துக்காச்சி......... தஞ்சை மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள துக்காச்சி என்ற ஊரிலுள்ள ஆபத்சகாயேசுவரர் கோயிலில் தான் முதன்முதலில் சரபமூர்த்தியின் சிற்பம் அமைக்கப்பட்டது. விக்கிரம சோழன் (கி.பி.1118-1135) காலத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த கோயிலில் அமைக்கப்பட்ட சரபேஸ்வரர் சிலைதான் தற்போதுள்ள சரபேஸ்வரரின் வடிவங்களில் மிகப் பழமையானதாகும். 
தாராசுரம்............ தஞ்சை மாவட்டம், தாராசுரத்திலுள்ள ஐராவதேசுவரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரர் வடிவம் தமிழகத்தின் இரண்டாவது சிறப்பாகும். இரண்டாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இக்கோயிலின் ராஜ கம்பீர மண்டபத்தின் மேற்குப்பக்கச் சுவரில் சரபேஸ்வரரின் அழகிய சிற்பம் உள்ளது.

இந்தச் சிற்பத்தில் சிங்கத்தின் முகத்தினையும், கிரீடம் அமைந்த தலையும், விரிந்த இறகுகளையும் கொண்டு விளங்கும் சரப மூர்த்தியின் காலுக்கடியில் கூப்பிய கரங்களுடன் நரசிம்மர் காணப்படுகின்றார். இந்த சரப மூர்த்திக்கு மேலே கூப்பிய கரங்களுடனான சிறிய உருவங்கள் சிலவும் காணப்படுகின்றன.

மாடம்பாக்கம்......... சென்னை, தாம்பரத்திலிருந்து 10 கி.மீ. தூரத்திலுள்ள மாடம்பாக்கம், தேனுபூரீஸ்வரர் ஆலயம், இதே மூன்றாம் குலோத்துங்க சோழனால் நிர்மானிக்கப்பட்டதாகும். நான்கு வேதங்களும் வந்து வணங்கியதால் இத்தலத்திற்கு சதுர்வேதமங்களம் என்ற பெயரும், காமதேனு வழிபட்டதால் காமதேனுபுரி என்ற பெயர்களும் உண்டு.

இக்கோயிலுள்ள சரபேஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்று கூறப்படுகின்றது. இவரை வழிபடின் மனதால் எண்ணிய காரியங்கள் யாவும் விக்கினமின்றி உடனே நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. இந்த சரபேஸ்வரரின் சக்திகளாக பிரத்தியங்கரா தேவியும், சூலினியும் விளங்குகின்றனர். 

இந்த இருவரையும் சரபேஸ்வரரின் மனைவியர் என்று அழைக்கின்றனர். சரபரின் இரு இறக்கைகளாக விளங்கும் இவர்கள் சக்தியின் திருஅவதாரம் என்றும் கூறப்படுகின்றது. இம்மூவருக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 4.30-6.00க்கு நடைபெறும் ராகுகால பூஜை மிகவும் சிறப்புடையது. இதுமட்டுமேயல்லாது பிரதோஷ கால பூசையும் இங்கு சிறப்பாக வழிபடப்படுகின்றது.

தொடர்ந்து ஆறு வாரங்கள் சரபேஸ்வரர் பூசையில் கலந்து கொண்டு தரிசித்தால் அவரவர் மனதில் நினைத்த காரியங்கள் உடனுக்குடன் நிறைவேறுகின்றன என அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர். காதல், திருமணம், மக்கட்பேறு, கல்வி முதலானவை குறித்த வேண்டுதல்கள் இக்கோயிலில் உடனுக்குடன் நிறைவேறுவதால் இக்கோயிலுக்குப் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

திரிசூலம்............  சென்னையை அடுத்த திரிசூலம் என்னு மிடத்தில் அபூர்வமான கலையம்சம் நிறைந்த விக்கிரஹத்துடன் அமைந்துள்ளது இக்கோவில். ஆலய மூலவருக்கு ஸ்தம்ப சரபேஸ்வரர் என்று பெயர். இவர் நின்ற நிலையில் நான்கு கைகளும், இரு முகமும் உடையவராக விளங்குகிறார். இரு கைகளில் மான், மழுவினை ஏந்தியிருப்பதுடன், இரு கைகளால் நரசிம்மரை மடியில் கிடத்தி பிடித்துக்கொண்டிருப்பது போல் அமைந்துள்ளது சிறப்புமிக்க ஒன்றாகும்.

மயிலாப்பூர்.............. ஸ்ரீ சரபேஸ்வரர் உருவம் ஆலயத்தின் தூணில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பங்குனித் திருவிழாவில் சோமாஸ்கந்தமூர்த்திக்கு ஒரு வாகனமாயும் அமைக்கப்பட்டுள்ளன. திருமயிலை தெற்கு மாட வீதியில் இருக்கும் ஸ்ரீ வெள்ளீஸ்வரர் ஆலயத்திலும் ஸ்ரீ சரபேஸ்வரர் வழிபாடு சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது.

பல பக்தகோடிகளின் வேண்டுகோளை ஸ்ரீ சரபேஸ்வரர் பூர்த்தி செய்கிறார். கங்கைகொண்ட சோழபுரம், தாராபுரம், காரைக்குடி சிவன் கோயில்களின் ஸ்ரீ வரபேஸ்வரருக்குத் தனி சந்நிதிகள் உள்ளன. இவையேயன்றி சென்னையை அடுத்துள்ள திரிசூலம், திரிசூலநாதர் ஆலயம்/திருவண்ணாமலை அண்ணாமலையார், சிதம்பரம் நடராஜர் கோயில் இங்கெல்லாம் சரபேஸ்வரர் மண்டபத்தூண் சிற்பமாகக் காணப்படுகின்றார். 

சென்னையிலுள்ள கோயம்பேடு குசலபுரீஸ்வரர் என்ற குறுங்காலீஸ்வரர் கோயில் மண்டபத் தூணில் காணப்படும் சரபேஸ்வரரின் வடிவம் மிக அற்புதமானது. உக்கிரம் தீர்ந்த சாந்த சொரூபியான நரசிம்மத்தை அன்புடன் வாரி அனைத்துக் கொள்ளும்படியான அபூர்வ தரிசனம்.

திருவாரூர் கோயிலின் மேலைக் கோபுரம், வைத்தீஸ்வரன் கோயில் கிழக்குக் கோபுரம், மதுரை மீனாட்சி ஆலய தெற்குக்கோபுரம், சிதம்பரம் நடராஜர் ஆலயக் கோபுரம் இங்கெல்லாம் சரபேஸ்வரர் சுதை வடிவங்களில் காணப்படுகின்றார். இத்தகைய ஆலயங்களில் காணப்படும் சரப மூர்த்தியை வழிபட்டால் தீவினை மறைந்து நன்மைகள் பல உண்டாகும் என்று கூறப்படுகிறது.

திருபுவனம் சரபேஸ்வரர்............. சரபேஸ்வரருக்கு கும்ப கோணத்திற்கு அருகில் மயிலாடுதுறை செல்லும் சாலையில் திருபுவனம் என்ற ஊரில் உள்ள கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதி உள்ளது. திரிபுவன வீரபுரம் என்பதே இத்தலத்தின்பழைய பெயராகும். 
இப்பெயரே இவ்வூர் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகிறது. இப்பெயர் இப்போது திருபுவனம் என்று மருவி வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment