Monday, December 8, 2014

சங்காபிஷேகம்


மதுரை, திருக்கடவூர், திருஐயாறு, திருமயிலை, திருக்குடந்தை, தஞ்சை - என சகல சிவாலயங்களிலும் சங்காபிஷேக சிறப்பு வழிபாடுகள் கோலாகலமாக நிகழ்வுறும் நாள்.


சோமவார வழிபாட்டினால் அன்பர் தம் ''உள்ளொளி பெருகி உலப்பிலாத ஆனந்த நிலையில் பேரானந்தம் எய்தி இன்புறுவர்'' என்பது ஆன்றோர் தம் திருவாக்கு.

சோமவார வழிபாட்டில் ஈடுபட்டு சிவத்தியானத்தில் சிந்தை திளைப்பதால் உள்ளத் தளர்வு நீங்குகின்றது. 

உள்ளத் தளர்வு நீங்குவதால் உடல் தளர்வும், வறுமையும், பிணியும், பகையும் அகல்கின்றன. 

நெஞ்சில் அமைதியும் ஆனந்தமும் குடிகொள்வதால் உடல் நலமும்  நீண்ட ஆயுளும் வரப்பிரசாதமாகின்றன. 

இதற்கு மேல்......வேறென்ன வேண்டும்?..... 

சோமவார வழிபாட்டில் ஈடுபட்டு - சிவ தரிசனம் செய்து துன்பங்கள் நீங்கவும் இன்பங்கள் தொடரவும் பிரார்த்திப்போம்.

சிவ விரதங்களுள் கார்த்திகை சோமவார விரதமும் தலையாயது.

ஞாயிறுக்கிழமை அன்று இரவு உணவைத் தவிர்த்து விரதம் ஏற்று, வெறும் தரையில் சாதாரண விரிப்பில் சிவ சிந்தையுடன் உறங்கி, அதிகாலையில் எழுந்து தூய நீராடி, சுத்தமான ஆடை அணிந்து, ஐந்தெழுத்தை உச்சரித்தபடி விபூதியினைத் தரித்து - இல்லத்திலோ அருகில் உள்ள சிவாலயத்திலோ இறைவனை வணங்கி வழிபட்டு - பகல் முழுதும் சிவ தியானத்தில் ஈடுபட்டு மாலைப் பொழுதில் மீண்டும் சிவசன்னதியில் முல்லை, மல்லிகை, வெண்தாமரை என வெண்ணிற மலர்களுடன் வில்வமும் கொண்டு இறைவனையும் இறைவியையும் அர்ச்சித்து, தம் கைகளினால் திருவிளக்கேற்றி வைத்து வலஞ் செய்து வள்ளல் பெருமானை வாழ்த்தி வணங்கி இல்லந்திரும்பி - இல்லத்திலும் ஒளி தீபம் ஏற்றித் தொழுது, விரதத்தினை எளிய உணவுடன் நிறைவு செய்வோர்க்கு - தன, தானியங்களுடன்  எல்லா நன்மைகளும் விளையும் என்பது ஐதீகம்..

கார்த்திகை மாதத்தின் எல்லா திங்கள்கிழமைகளிலும் இதனை அனுசரிப்பது என்பது கோடி பாப விமோசனம் ஆகும். எனினும் அவ்வண்ணம் இயலாத நிலையில் ஒருமித்த சிந்தையுடன் கடைசி திங்கள்கிழமையில் சோமவார விரதம் மேற்கொள்வார்க்கும் மேலான எல்லாமும் சித்திக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி..

மேலும் கார்த்திகை மாதம் முழுவதுமே -  ஈசனுக்கு ''தீபமங்கள ஜோதி நம'' என்று ஆராதனை நிகழ்த்தவேண்டும் என்பதும் சிவாகம திருக்குறிப்புகள் என்பர் பெரியோர். அவ்விதம் நிகழுங்கால் தீபங்களின் சுடர் ஒளியால் ஏற்படும் வெம்மையைக் குறைக்கவே - கார்த்திகையில் ''சங்காபிஷேகம்'' எனும் மகத்தான வைபவமும் சிவாலயங்களில் நடைபெறுகின்றது.

தட்க்ஷனின் சாபத்தால் உருக்குலைந்த சந்திரனுக்கு சாப விமோசனம் அருளிய இறைவன் அவன் மீது கருணை கொண்டு தம் திருமுடியில் சந்திர கலையினைத் தாங்கி சந்திரசேகர மூர்த்தியாகப் பொலிந்தமையினால் மனம் நெகிழ்ந்த சந்திரன் நன்றி மறவாது தன்னிடமிருந்து பெருகிய அமிர்த துளிகளால் அபிஷேகம் செய்தான். அதற்காக மனம் குளிர்ந்த சிவபெருமான், ''நீ நாளும் வளர்ந்து பூரணமாகப் பொலிவாய்'' என வரமளித்தார்.


கடலில் பிறக்கும் சங்கு சந்திரனின் அம்சமாகப் புகழப்படுகின்றது. அந்தச் சங்குகளில் நீர் நிறைத்து பூஜை செய்து - அந்த சங்கு தீர்த்தத்தால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது எல்லா நன்மைகளையும் தர வல்லது. 

இறைவன் சித்தத்தால் திருக்கழுக்குன்றத்தில் கோயில் திருக்குளத்தில் பன்னிரு ஆண்டுகளுக்கொருமுறை சங்கு விளைகின்றது. இதனால் அந்தத் திருக்குளத்திற்கே ''சங்கு தீர்த்தம்'' என்று பெயர்.


கார்த்திகை சோமவாரங்களில் இறைவனுக்கு சங்காபிஷேகம் செய்விப்பதும், அதைத் தரிசிப்பதும், எல்லையற்ற இன்பத்தையும், நோயற்ற நல் வாழ்க்கையையும் அருளும். அன்பர்களுக்கு என்றும் வளமான வாழ்க்கையை அளிப்பார் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

சதாசிவத்தைச் சரணடைந்த, சந்திரன் வரம் பெற்று பூரணமாய் வளர்ந்ததைப் போல, 

நம் வாழ்க்கையிலும் நல்வளங்கள் அனைத்தும் பெருக - நாமும்  சந்திரசேகர மூர்த்தியின் திருவடித் தாமரைகளில் சரணடைவோம். 

சங்கடங்கள் நீங்கப் பெறுவோம்!...

No comments:

Post a Comment