Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 8

மகிஷி தன் வழியைத் தானே தேர்ந்தெடுத்துக் கொண்டாள்.

தர்ம நெறிகள்  பாழாக்கப்பட்டன. ஆசார அனுஷ்டானங்கள் சீர்குலைந்தன. 

வானவர் நாடு வழி திறக்க வேண்டும் என  - தானமும் தவமும் செய்தவர்கள் தடுமாறிப் போனார்கள். 

எனினும், அவர்கள் தடம் மாறாமல் சென்று சரணடைந்த இடம் எம்பெருமானின் திருவடிகள்.


எல்லாம் வல்ல சிவம் இன்முகம் கொண்டு பாற்கடலில் துயிலும் பரந்தாமனைத்  - தம்முடைய ஹ்ருதய கமலத்தில் கொள்ள -

அலைகடல் துயிலும் ஆதி முதல்வனும்  - முக்கண் முதல்வனின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து கொள்ள - 

ஓங்கிய பேரொளி  அண்ட ப்ரபஞ்சம் எங்கும் வியாபித்து நின்றது.

அந்தப் பேரொளியின் உட்பொருளாக அன்னை பராசக்தி கலந்து நின்றாள்.

தாய் தந்தையரின் மனம் ஒன்றிய வேளையை உணர்ந்து - தமக்கு முன்பே விதிக்கப்பட்டிருந்தபடி - பூர்ணகலா, புஷ்கலா இருவரிடமும் விடை பெற்றுக் கொண்டார்.


ஸ்ரீதர்ம சாஸ்தாவாகிய  ஹரிஹர சுதன் மீண்டும் ஒரு குழந்தையாய் ஜனித்தார். தேவதேவர்களும் பூமாரி பொழிய - மகரிஷிகளும் வித்யாதரர்களும் வேத மந்த்ரங்களை முழக்கினர்.

நான்கு வேதங்களும் பொற்றாமரைப் பூவாகி ஐயனைத் தாங்கிக் கொண்டன. விண்ணும் மண்ணும் களிப்புடன்  புன்னகை பூக்க, ஐயன்  - தான் மட்டும்,  

தர்மமும் நீதியும் ஆன்றோரும் சான்றோரும் அற்றாரும் அலந்தாரும் வாழ வேண்டி -  திருவாய் மலர்ந்தருள,

அதைச் சிறிதும் பொறுக்காத இயலாதவளான - 

ஜகத் காரணி, ஜகத் ஜனனி, சர்வ ஜனரட்க்ஷகி - ஜகன் மோகினியாக,  ஓடி வந்து, மழலையை வாரித் தன் மார்புறத் தழுவிக் கொண்டாள்.

''..அவள் கிடக்கின்றாள்... மதி கெட்ட மகிஷி!.. தாயின் கருவறை தங்காத தங்கமகன் - என்று தானே கேட்டாள். தாய் மார்புறத் தழுவாத தங்கமகன்வேண்டும் எனக் கேட்க வில்லையே!..''

உச்சி முகர்ந்தாள். உள்ளங்குளிர முத்தாடி மகிழ்ந்தாள். தாயும் பிள்ளையும் எவ்வளவு நேரம் தழுவிக் கிடந்தார்களோ!.. அவர்களுக்கே வெளிச்சம்!..


பிறை சூடும் பெருமான் - பிள்ளைப் பாசத்தில் பித்தாகி நின்றார்.

அந்தப் பிள்ளை நதிக்கரையில்!.. அடுத்த பிள்ளை மலை உச்சியில்!.. இந்தப் பிள்ளையாவது அருகில் இருக்கும் என்று பார்த்தால்?!.. எல்லாம் - நாம் படைத்த விதி!..

புன்னகையுடன் மணி மாலை ஒன்றினை அணிவித்தார்.  திருநீறு அளித்துஹரிஹர புத்ரன் எனத் திருநாமம் சூட்டினார். வானோரும் ஏனோரும் வியப்புடன் விழி மூடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே  - 

பால சாஸ்தா வளர்ந்து -  இளங்குமரனாக  பன்னிரு வயதுடையவராக  ஆயிரங்கோடி சூரியன் போல விளங்கி நின்றார். 

ஆதியில் ஸ்ரீமந் நாராயணனைப் போல, நீல நிறத்துடன் விளங்கிய - அவரது திருமேனி இப்போது - பொன்னெனப் பிரகாசித்தது.

தாய் தந்தையரை வலம் வந்து வணங்கிப் பணிந்து எழுந்தார். சிவபெருமான் தனது சூலாயுதத்தின் பிரதியாக  - தண்டம் ஒன்றினை வழங்க, 

ஜகன்மோகினியாகிய - ஜனார்த்தனன் - கோதண்டத்துடன் அஸ்த்ரங்களையும் வழங்க, 

அன்னை பராசக்தி தன் பங்கிற்கு - மகிஷாசுர சம்ஹாரத்தின் போது தன் கரத்திலிருந்த  ஒளி பொருந்திய வாள் தனை வழங்கினாள்.

ஹரிஹர புத்ரன் அவற்றைத் தன் திருக்கரங்களால் பெற்று கண்களில் ஒற்றி - தன் சிரத்தின் மேல் தாங்கி  மரியாதை செலுத்தி மகிழ்ந்தார். 


அவருக்கு வாகனங்கள் என - வெள்ளை யானையும் வெள்ளைக் குதிரையும் வழங்கப்பட்டன.

ஓம் ஹரிஹர புத்ராய புத்ர லாபாய 
சத்ரு நாசனாய மதகஜ வாகனாய 
ப்ரத்யட்ச சூலாயுதாய மஹா சாஸ்த்ரே நமோ நம:

என்ற மகாமந்த்ரத்தை முழங்கியவாறே - முப்பத்து முக்கோடி தேவர்களும் வலம் வந்து சாஷ்டாங்கமாகப் பணிந்து  வணங்கி  - ஆனந்தக் கூத்தாடினர்.

ஜய கோஷமிட்டனர். அவர்கள் எழுப்பிய பேரொலி - புவனங்களைக் கடந்து - மகிஷியில் காதுகளில் கேட்டது.

அன்று தான் கேட்ட வரம்  - எப்படி பிரதிபலித்திருக்கின்றது என்பதைக் காணும் ஆவலுடன் -  தானும் வெளிப்பட்டாள்.

ஐயனுடன் இருந்த போதும் அச்சமுற்றவர்களாக  - தேவர்கள் விலகி ஓடிப் போயினர். 

மகிஷிக்கு நிறையவே மகிழ்ச்சி!.. 

''..இவன் தான் ஹரிஹரபுத்திரனா!.. இப்படிப்பட்ட பிள்ளையின் கரங்களால் மடிவது என்றால் மீண்டும் மீண்டும் மகிஷியாகவே பிறக்கலாமே!.. இளங்குமரன் இவன் கைகளினால் சாவதும் சந்தோஷம்!.. ஒருவேளை - பெண் என்பதால் மன்னித்து உயிரோடு விட்டு விட்டால்?..''

''..இல்லை.. இல்லை.. அப்படி எல்லாம் விட்டு விட மாட்டான்!..  இவன் தோன்றியதே என்னைத் தொலைப்பதற்குத் தானே!..''

''.. இவன் முன் ஆயுதம் தாங்கி நிற்க என் மனம் விரும்பவில்லை என்றாலும், ஆயுதம் இன்றி நின்ற பெண்ணை ஹரிஹர புத்ரன் வீழ்த்தினான்  - என்ற பேர் வந்துவிடக்கூடாது. எனவே நான் இதோ எனது ஆயுதங்களை ஏந்துகின்றேன்!..''

ஒருகணம். குருநாதரை வணங்கினாள். தொலைவில் நிற்கும் ஹரிஹர புத்ரனையும் வணங்கிக் கொண்டாள். தன் அழகிய மேனியை விடுத்து கோர ரூபங்கொண்டாள். அலைகடலென ஆர்ப்பரித்த வண்ணம் ஆக்ரோஷமாகப் பாய்ந்தாள்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே விளங்கும் பெருவெளியில்  - மூண்டது யுத்தம்.

மகிஷி எறிந்த ஆயுதங்களைத் தடுப்பதும் அவற்றை அழிப்பதுமாக - 

ஐயன் ஹரிஹர புத்ரனுக்கு எல்லாம் விளையாட்டாக இருந்தது!.. 

ஐயனின் கோதண்டத்திலிருந்து வெளிப்பட்ட பாணங்கள் மகிஷியின் பாவங்களைக் களைந்தன.

இறுதியில் - ஈசன் வழங்கிய சிவதண்டத்தால் மகிஷியின் தலையில் அடித்தார்.

தலையில் அடிபட்டால் - தெளிந்த சித்தம் கலங்கி விடும் என்பார்கள். ஆனால் மகிஷிக்கோ  - அதுவரையில் கலங்கியிருந்த சித்தம் தெளிந்தது.

நிலைகுலைந்து விழுந்த மகிஷியை - தன் திருவடியினால் - எற்றினார்.

ஸ்ரீராமன் அன்று - துந்துபியின் எலும்புக் கூட்டினை திருவடியால் எற்றினாரே - அதைப் போல!..

மகிஷி - அந்தரத்தில் இருந்து பூமியில் பெருஞ் சத்தத்துடன் விழுந்தாள். 

அவளுடைய பூத உடலின் மேல் ஹரிஹர புத்ரன் ஆனந்த நடனம் ஆடினார்.

அன்பு மகன் ஆனந்த நர்த்தனமிடுவதைக் கண்ட  பரமனுக்கு அளவு கடந்த சந்தோஷம்!..

ஓர் ஓரமாகக் கட்டிக் கிடந்த காளை நினைத்துக் கொண்டது - ''..அப்பாவைப் போலவே  பிள்ளை!..''  - என்று.


 ஹரிஹர புத்ரனின் பாத ஸ்பரிசத்தால் - பூத சரீரத்தினின்று வெளிப்பட்டு நின்ற - லீலா, தன் பிழைகளுக்கு மனம் வருந்தினாள். தன்னை மன்னிக்க வேண்டி ஐயனைப் பணிந்தாள்.

தன்னை ஏற்றுக் கொண்டு அருள் புரிய வேண்டினாள். 

அவளுடைய கோரிக்கைக்கு பின்னொரு சமயம் பதில் உரைப்பதாகக் கூறிய ஐயன்,  தனது அவதார நோக்கம் நிறைவேறும் வரை அங்கேயே அந்த வனத்திலேயே அவளை இருக்கப் பணித்தார்.

வானவர் கூட்டம் ஓடி வந்து ஐயனின் பாதக் கமலங்களில் வீழ்ந்து வணங்கியது. 

''..ஐயனே போற்றி.. அப்பனே போற்றி!.. எங்கள் அல்லல் எல்லாம் அகற்றிய அருட்பெருஞ்சோதியே போற்றி!..'' 

- எனத்  தொழுது வணங்கிய தேவேந்திரன் -

''..எம்பெருமானே!.. எம்மைப் பணி கொள்ளுமாறு அன்றைக்கே தங்களிடம் நான் விண்ணப்பித்தேன். தேவரீர் இதுவரையிலும் கருணை கூரவில்லை. நாங்கள் பிழை புரிந்தோம் எனில் அதனைப் பொறுத்தருளல் ஆகாதா!?.. ஐயனே!.. அப்பனே!.. எம்மை ஆண்டு கொண்டு அருள்க.. ஐயப்பனே!..''

- என்று அழுது நின்றான். 


''..தேவேந்திரா!.. எனது அவதார நோக்கம் என்று ஒன்று உண்டு. அது கூடி வரும் போது - உனது எண்ணம் நிச்சயம் நிறைவேறும்!.. அதுவரையிலும் இங்கேயே யோகநிலையில் யாம் எழுந்தருளி இருப்போம்!..''

எனத் திருவாய் மலர்ந்தார். 

அந்த அளவில், ஆனிப் பசும்பொன் கொண்டு தேவதச்சன் மயன் உருவாக்கிய திருக்கோயிலில் எழுந்தருளினார்.

தேவரெல்லாம் கூடி ஐயனின் திருநாமங்களைச் சொல்லி பொற்றாமரைப் பூக்களால் பூஜித்துக் கொண்டிருக்க - தேவேந்திரனின் மனம் மட்டும் தனியே சிந்தித்தது. 

ஐயனின் அவதார நோக்கம் என்னவாக இருக்கும்?.. 
அடுத்து ஐயனின் திருவிளையாடல் என்ன?!..

ஸ்ரீ ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

No comments:

Post a Comment