Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 10

பந்தள நாடு எங்கும் புன்னகை - கோலமானது. 

பச்சைப் பசும் வயல் வெளிகள் எல்லாம் பசுந்தோகை விரித்து ஆடும் மயில்களைப் போலாகின. பாறைகளும் பரவசமாகி கசிந்துருகின.


வனத்தில் - பம்பை நதிக் கரையில் - கண்டெடுத்து மார்புறத் தழுவிக் கொண்ட அந்த கணம் முதல் - அரண்மனையினுள் நுழையும் வரை இமைப் பொழுதும் அன்பு மகனைப் பிரியாதவராக மன்னர் ஸ்ரீராஜசேகர பாண்டியன். 

அன்பின் சின்னமான அரசி ஒடோடி வந்தாள்.

''..எங்கே!.. எங்கே.. என் செல்லம்!.. என்னிடம் கொடுங்களேன்!..''


மன்னனிடம் இருந்து  - தான் பெற்ற சேயை ஆனந்தக் கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள்.

ஊருக்கும் உலகுக்கும் என்று - வந்த பிள்ளையை -

''..இவன் என் பிள்ளை!.. இவன் என் பிள்ளை!..'' - எனக் கொண்டாடி மகிழ்ந்தாள். 

பொக்கிஷ அறைகள் திறந்து விடப்பட்டன.. ஜனங்கள் யார் வேண்டுமானாலும் வாரிக் கொள்ளுங்கள் என்று!.. 

ஆனால் - யாருக்கும் அவ்வாறு செய்யத் தோன்றவில்லை!.. 

அரசியின் கரங்களில் தவழ்ந்த பிள்ளைச் செல்வத்தைத் தம் இரு கண்களால்  கண்டதே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. அதுவே அவர்களுக்குப் பேரின்பமாக இருந்தது.

அடுத்து வந்த ஆனந்த மயமான நாட்களில் - 

அரசிக்கும் மணி வயிறு வாய்த்தது. தங்கப் பதுமை என, ஆண் குழந்தை பிறக்க - ராஜராஜன் எனப் பெயரிட்டனர். 

வளர் நிலவென வளர்ந்த மணிகண்டன் குருகுலம் செல்லவேண்டிய நாளும் வந்தது. 

குருநாதருக்கு பாத பூஜையுடன் பொன்னாடை போர்த்தப்பட்டது. மாலை அணிவித்துத் தக்க மரியாதைகள் செய்யப்பட்டன.  

ஞானமும் கல்வியும்  நல்லருட் செல்வமும் வழங்க - வந்த ஞான ஜோதி,  குரு நாதரைப் பணிந்தது.

ஏதும் அறியாததைப் போல - தானும் கல்வி கற்க வேண்டும் என -  பின் தொடர்ந்து நடந்தது.

ஆயிற்று சிலகாலம்.

இனி வேறு எதுவும் இல்லை சொல்லிக் கொடுப்பதற்கு என்ற நிலையில் - குருகுலக் கல்வி பரிபூரணமாயிற்று.


தகவல் அறிந்த மன்னர் மணிகண்டனை அழைத்து வருவதற்கு முத்துப் பல்லக்குகளை அனுப்பி வைத்திருந்தார். ராஜ பிரதிநிதிகள்  குருவுக்குக் காணிக்கைப் பொருட்களுடன் அறச்சாலைக்கு வெளியே காத்திருந்தனர். 

''..இன்னும் சில நிமிடங்களில்..''  - நினைக்கும் போதே குருநாதருக்குக் கண்கள் கலங்கின.

அண்ட சராசரமும் பணிந்து தொழும் திருவடித் தாமரைகள். - குரு நாதரை வணங்கி வலம் வந்தன.

பணிந்து வணங்கிய மணிகண்டனை மார்புறத் தழுவிக் கொண்டார். மணிகண்டனின் தோள்களில் குருநாதரின் கண்ணீர்த் துளிகள் விழுந்தன.

''..அனைத்தும் அறிந்த தாங்கள் கலங்கலாமா!..''- வேத முதல்வன் திருவாய் மலர்ந்தான். 

''.. அதனால் தானே - கலங்குகின்றேன்!..'' - குருநாதர் கசிந்து உருகினார்.

''.. குருவே!.. எனக்குப் புரியவில்லையே!..''

''..மணிகண்ட மகாப்ரபுவே!.. மக்கள் குறை தீர்க்க வந்த மாமணியே!.. மகாதேவனுக்கும் மாதவனுக்கும் பிறந்த அருட்சுடரே!.. உன் பேரொளியை ஊருக்கு ஒளித்து வைத்திருக்கலாம்!.. ஊரும் உலகும் உன்னை இதுநாள் வரை உணராதிருக்கலாம். ஆனால் - ''


''.. உள்ளுணர்ந்த வேதியனாகிய எனக்கு ஒளிக்க முடியுமா?.. நான் உன்னை உணராதிருப்பேனா!.. உன்னை  உணராதிருந்தால்  - நான் கற்றது கல்வி ஆகுமா!.. என் முன்னோர் செய்த தவம் அல்லவா -  நான் உன்னைப் பேசுவதும் நினைப்பதுவும்!.. ''

குருநாதரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

''.. குருஸ்வாமி!.. ஈசன் எனக்களித்த கட்டளைப்படி இங்கே வந்துள்ளேன். நான் இன்னும் சில காலத்திற்கு என்னை மறைத்தே வாழ வேண்டும். எனக்கு கல்வி கற்பித்த தங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகின்றேன்!.. நான் தங்களுக்கு - குருதட்சணையாகத் தருவதற்கு - என் தந்தை  பொன்னும் பொருளும் வாரிக் கொடுத்துள்ளார். இன்னும் வேண்டுவது எதுவோ - கேளுங்கள்!..''

- மணிகண்டன் கருணையுடன் மொழிந்தான்.

''..தேவதேவனே!.. நான் உனக்கு கல்வி பயிற்றுவித்தேன் என்றா சொல்கின்றாய்!.. இல்லை.. இல்லை.. நான் அல்லவோ - உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் கற்ற கல்வியை -  நீ அல்லவோ   புதுப்பித்தாய்!.. குருவுக்கும் குரு ஆன குணக்குன்றே!.. உன்னிடம் யான் வேண்டுவது பொன்னும் பொருளும் அல்ல!..''

''..பின்!?..''

''.. முன்னும் பின்னும் அறிந்த முதல்வனே!.. என் மகன் - பேச இயலாதவனாக - பார்வை அற்றவனாக - மனநலம் குன்றியவனாக - இருப்பதை அறிவாய் தானே!..  அவனுக்கு நல்வாழ்வினைக் கொடு!.. பொன்னையும் பொருளையும் விட - 

என் மகனுக்கு நீ அருளும் நல்வாழ்வே - நீ எனக்குத் தரும் குரு தட்சணை!.. ஜன்ம ஜன்மாந்திரங்களில் - அறிந்தும் அறியாமலும் நான் செய்த பிழைகளை எல்லாம் மன்னித்து வரம் அருள்வாய் மணிகண்டா!..''

இருகரம் ஏந்தி நின்றார் - குருஸ்வாமி!.. அவர் கரங்களைப் பற்றிக் கொண்டான் மணிகண்டன்.

கை கொடுத்த தெய்வம் - கலங்கி நின்ற கண்களைத் துடைத்தது. 

''.. ஆனாலும்  - ரகசியம் காக்க வேண்டும் குருஸ்வாமி!..''

''.. அப்படியே ஆகட்டும் மணிகண்டா!.. இருப்பினும், யான் பெற்ற பேறாக உன்னை அடைந்தார் அனைவரும் - அனைத்தும் பெற்று வாழ்வாங்கு வாழ வகை அருள வேண்டும்!..''

தன் குறை தீர்ந்து நலம் விளைந்தாற்போல் அனைவருடைய குறையும் தீர வேண்டும் என -   பிறர் நலமும் பேணி நின்றார் குரு நாதர்.

''.. தங்கள் விருப்பப்படியே.. ஆகட்டும் குருஸ்வாமி!..''

எல்லாம் அறிந்த ஐயன் - அந்த ஏழைக்கு இரங்கி அருள் புரிந்தான்.  

மணிகண்டனின் திருக்கரங்களின் ஸ்பரிசத்தால் - குருவின் மகன் புது வாழ்வு பெற்றான். குருவும் குரு புத்ரனும்  - மணிகண்டப் பெருமானை போற்றி வணங்க - 

மணிகண்ட மூர்த்தியோ -

குரு ப்ரம்மா குரு விஷ்ணு குருதேவோ மகேஸ்வர: 
குரு சாட்சாத் பரப்ரம்மா: தஸ்மை குரவே நம:

எனப் பணிந்து வணங்கினான். 

இப்படி -

குரு இல்லத்தில் - ஆனந்தவெள்ளம் கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கையில்,


பந்தளத்தின் அரண்மனையில் -

ஓர் இருட்டு மூலையில் - வறட்டு மூளையில் -  காலம் தன் வேலையைச் செவ்வனே செய்தது!..

நாடகத்தின் அடுத்த காட்சியை அரங்கேற்றியது.

ஓம் ஹரிஹர சுதனே போற்றி!..
மணிகண்ட மகாப்ரபுவே போற்றி!.. போற்றி!..

No comments:

Post a Comment