Monday, December 8, 2014

திருக்கருகாவூர்

முல்லை வனம்.   

நறுமணத்துடன் தவழ்ந்த காற்றில்  தேனீக்களின் இனிமையான ராக ராஜாங்கம் அலை அலையாக எங்கும் பரவ - 


அந்தக் காற்றின் ஊடாக  மெல்லிய சிறகுகளை  விரித்தபடி வண்ணத்துப் பூச்சிகள் அங்குமிங்குமாக  ஆனந்தமாக மிதந்து கொண்டிருந்தன. 


பச்சைப் பட்டு - என பரவிக் கிடந்த புல்வெளியில் துள்ளிக் களித்த மான் கூட்டங்கள்!.. அவைகளுக்கு இணையாக அடர்ந்து விரிந்து படர்ந்திருந்த ஆலமரக் கிளைகளின் - ஊடாக தாவித் திரிந்த வானரங்கள்...


கோவைக்கனி போல சிவந்த அலகால் குலவிக்  கொண்டிருந்தன  கிளிகள்!...

இதில் எந்த அழகைப் பாடுவது என திகைத்துத் தவித்தன குயிலினங்கள்!.. இப்படியெல்லாம் ''.. அங்கே வனத்தில் அழகு சிரிக்கின்றதாமே!..'' - என்ற வியப்புடன் அமிர்தவாகினி எனும் வெட்டாற்றின் நீரிலிருந்து மேலெழும்பிக் குதிக்கின்றன வெள்ளிக் கெண்டை மீன்கள்!... 

இனிமை!.இனிமை!. இதைத் தவிர வேறொன்றுமில்லாத அந்த வனத்தினுள் - 

அழகான குடில்... அது நித்ருவ முனிவருடையது. அதனுள் நிறைமாத கர்ப்பிணி - வேதிகை. நித்ருவரின் இல்லக்கிழத்தி. 

''..தேவயாகத்தினை நடத்தித் தரவேண்டும்!..'' என இந்திரன் அழைத்தன் பேரில்  கெளதமர், கார்கேயர் எனும் முனிவர்களுடன் நித்ருவரும் தேவலோகம் சென்றிருக்கின்றார்.  

இங்கே, வேதிகை - முல்லை வனத்தில் - தனித்திருந்தாள்.

வேதிகையின் எண்ணமெல்லாம் வயிற்றினுள் வளரும் தன்னுயிரின் மீது இருந்தது. எப்படி இருப்பான்?.. 


மகனா!.. இல்லை!.. இல்லை!.. மகள் தான்!.. மகனோ!.. மகளோ!..

அன்புச் செல்வம்!.. ஆனந்தத் தேன்!..
இன்னல் தீர்க்கும் மருந்து!.. ஈசன் அளித்த விருந்து!..

உண்ணத் திகட்டா அமுது!.. ஊடாடும் உயிரின் விழுது!..
என்னுள்ளே  பூத்திருக்கும் முல்லை!.. ஏழிசையும் பேசவரும் கிள்ளை!..

- என்று உயிர் மெய்யுடன் விளையாடிக் கொண்டு, இனித்திருந்தாள்.  எனவே - யாதொன்றும் பயமில்லை.. 

வனத்தின் தலைமைப் பொருளான முல்லைவனநாதர் தோன்றாத் துணையாக இருக்கும் போது  - பயமும் வருமா!.. ஆனாலும் வந்தது!... 

கிழ வேதியரின் வடிவில்!... ஊர்த்துவபாதர் என்ற பெயரில்!... துர்வாசருக்கு அடுத்த கோபக்காரர் - என்று அக்கம்பக்கம் பேசிக்  கொள்வார்கள்.  

''..பவதி பிக்ஷாம் தேஹி!..'' ஆனந்த சாகரத்தினுள் அழுந்திக் கிடந்தவளுக்கு அந்தக் குரல் சட்டெனக் கேட்கவில்லை. 

''..பவதி பிக்ஷாம் தேஹி!..''

''..இதோ.. வந்துவிட்டேன்!..'' மெல்ல கையினை ஊன்றி எழுந்தாள்.

முனிவரை உபசரிப்பதற்காக, அருகில் இருந்த கனிவகைகளை- ஒரு மூங்கில் தட்டில் எடுத்துக் கொண்டு -  நடப்பதற்குள் மீண்டும் சற்றே உரத்த குரலில் - 

''..பவதி பிக்ஷாம் தேஹி!..''

குடிலின் நிலையைத் தாண்டி வருவதற்குள் - நிலைமை மாறிப் போனது அங்கே... 

''.. அதிதிக்கு அன்னமிடுவதில் உனக்கு அத்தனை அலட்சியமா?.. ஆணவமா?.. எம்மை அலட்சியப்படுத்திய - உன் சிந்தை எங்கே நிலைத்திருந்ததோ அது நிலைக்காமல் போகட்டும்!..'' 

முக்காலமும் உணர்ந்த முனிவர்,   மூர்க்கராகி சினத்துடன் சாபம் கொடுத்தார்.

ஒரு நொடியில்  வேதிகையின் சந்தோஷத்தைக் கெடுத்தார். 

அவ்வளவுதான்!.. நிலைகுலைந்தாள் வேதிகை... கொடுமை - இதைவிட வேறு ஒன்று இருக்கமுடியுமா? - நிறைமாத கர்ப்பிணிக்கு!.. 

ஆனந்த மயமாக விளங்கிய முல்லை வனம் அதிர்ந்து அடங்கியது.   

''..அம்மா!...'' வேதனையுடன் சரிந்தாள் வேதிகை. 


கொடும் சாபம் குத்தீட்டியாய்ப் பாய்ந்தது கர்ப்பத்தில். உயிர் உருகியது.

இறுகிய மனத்துடன் முனிவர் கொடுத்த சாபத்தின்படி உருக் கொண்டிருந்த கரு -  மெல்ல இளகியது. 

இதற்கு மேல் வேதிகையால் இயலவில்லை. 

''..இதுதான் கதியா!.. இதுதான் விதியா!.. இந்த அபலைக்கு நாதி இல்லையா!.. ஐயனே காத்திடு என் உயிரை!.. அம்பிகையே காத்திடு என் கருவை!.. ஒளிவளர் விளக்கே வருக!.. ஓங்காரப் பொருளே வருக!.. என் அன்னையே வருக!.. என் அப்பனே வருக!.. அபலைக்கு இரங்கி வருக!.. அபலைக்கு இரங்கி வருக!..''

முனிந்தவன்  அறியாதிருக்கலாம்  - வேதிகையின் நிலைமையை!.. 

முல்லை வனநாயகி - 

மனை - மங்கலமாக, சிவசங்கரப் பரம்பொருளின் சித்தமெல்லாம் குழைக்கும் கனங்குழை,  கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி   - அறியாதிருப்பாளா!..

அனைத்தும் அறிந்தவள் அபலைக்கு இரங்கி வந்தாள்!...

மயங்கிச் சரிந்த  வேதிகையைத் தாங்கிக் கொண்டாள் - தாயாக வந்த தயாபரி!..

வேத வேதாந்த ஸ்வரூபிணி  - வேதிகையைத் தாங்கிக் கொண்டாள்!... 

அவளுடைய வேதனையை -  தான் - வாங்கிக் கொண்டாள்!... 

''.. அம்மா!..'' வீறிட்டாள் வேதிகை. கண்ணீர் பெருகி வழிந்தது.

முனிவர் இட்ட சாபத்தின்படி - கர்ப்பத்தினின்று  கரு - நழுவி விழுந்தது.

அம்பிகை புன்னகைத்தாள். தானே தாதியாய் நின்று, தாயுமாய் நின்று - வேதிகையின் கர்ப்பத்திலிருந்து நழுவிய கருவினைக் கலசத்தினுள் ஏந்திக் கொண்டாள்!... 

வேதிகை முற்றாக மூர்ச்சையானாள்!..


கார்முகில் போல் கருணைமழை சுரக்கும் தாய் - ஓர் அபலையின் கருவினைக் காத்து   - கர்ப்பத்தை ரக்ஷித்து - 

கர்ப்ப ரக்ஷாம்பிகையாக

நின்ற திருத்தலம்  - நிற்கும் திருத்தலம்

திருக்கருகாவூர்

கருகாவூர் மேவிய கற்பகமே போற்றி!.. போற்றி!..

No comments:

Post a Comment