Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 4

ஸ்ரீவீரமாகாளரால் தண்டிக்கப்பட்ட அஜமுகி - அழுது புலம்பியவளாக - 

அந்த நிலையிலும் தன் பிழையினை எண்ணி வருந்தாமல் - 

வீரமாகாளரையும்,  அவரை ஏவி விட்டு காரியத்தை நிறைவேற்றிக் கொண்ட தேவர்களையும் அழித்து ஒழித்து விடுவதாக சூளுரைத்தபடியே - 

தன் அண்ணன் சூரபத்மன் வீற்றிருக்கும் வீரமகேந்திரபுரத்தை நோக்கி  - தனது தோழி துன்முகியுடன் விரைந்தாள்.


தனக்கு நேரிட்ட இடரைக் களைந்து தன்னைக் காத்தருளிய ஸ்ரீவீரமாகாளரை வலம் வந்து வணங்கி நின்றாள் - இந்திராணி!.. 

பெருகிய நன்றி உணர்வில் - வீரமாகாளரின் திருவடிகளை கண்ணீர்ப் பூக்களால் அர்ச்சித்தாள். ஸ்ரீ வீரமாகாளரும் புன்னகைத்தபடி,

''..அம்மையே!.. அஞ்சற்க!.. இனி எந்தத் துன்பமும் உம்மை நெருங்காது. மும்மைக்கும் முன்னின்று - தேவதேவனாகிய ஸ்ரீ ஹரிஹரசுதன்  காத்து அருள்வார்!.. எவ்வித அச்சமும் இன்றி சிவபூஜையைத் தொடர்வீராக!..'' 

- என்று ஆறுதல் கூறியபடி - தன்னுரு கரந்தார்.

இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த தேவர்கள் - வந்ததே நமக்கு ஒரு விடிவு காலம் என்று ஆனந்தக் கூத்தாடினர். 

நாரத முனிவர் இந்த அற்புதத்தை இந்திரனிடம் சொல்ல வேண்டும் என - கயிலை நோக்கி விரைந்தார்.

நிகழ்வுகள் அனைத்தையும் அறிந்து கொண்ட இந்திரன் - ஒடோடிச் சென்று, 

ஸ்ரீ பூர்ணகலா ஸ்ரீபுஷ்கலா சமேதரராக வீற்றிருந்த ஸ்ரீஹரிஹரசுதனின் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து வணங்கி கண்ணீர் உகுத்தான்.


''..என் ஐயனே!.. என் அப்பனே!.. வார்த்தை ஏதும் இன்றித் தடுமாறுகின்றேன். எப்படி நன்றி சொல்வேன் ஐயா!.. உணர்ச்சிப் பெருக்கினால் என் நா தடுமாறுகின்றதே!.. ஆனந்தக் கண்ணீர் - அந்த கங்கையையும் மீறுகின்றதே!.. பெருமானே!.. எளியோரைக் காத்தருளும் ஏந்தலே!.. எங்கள் குலம் காத்து நின்ற ஸ்வாமி!.. அனாத ரட்சகனே!.. ஆபத்பாந்தவனே!..''

''..அபயம் என்று நாங்கள் அலறிய போது - ஆலகால விஷத்தையும் அருந்தி எம்மைக் காத்தருளினார் - பரமேஸ்வரன்!..''

''..ஆதிமூலமே என்று அங்கே யானை அலறிய போது - அஞ்சேல் என்று ஆட்கொண்டருளினார் - ஹரி நாராயணன்!..''

''அத்தகைய அருட்பெருஞ்சோதிகளுக்கு உள்ளிருந்து அவதரித்த ஆனந்த ஜோதியே!..  உன்னை அடைந்தார்க்கு ஏதுமில்லை - இடர்!..''

''..என்னையும் தாங்கள் பணி கொண்டருளவேண்டும்!.. தங்கள் திருவடிகளுக்குச் சேவை சாதிக்கும் பாக்கியத்தை எளியேனுக்குப் பிரசாதிக்க வேண்டும்!..''

- என்று துதித்தவனாய் - ஐயனின் திருவடிகளில் தலைவைத்துக் கிடந்தான் தேவேந்திரன்.

ஸ்ரீ ஹரிஹரசுதன் புன்னகைத்தார்.

''..தேவேந்திரா!.. எம்மைத் தஞ்சமடைந்தபின் உனக்கொரு தாழ்வில்லை. எழுந்து நில்!.. எம்மை வந்தித்த போது - ஐயனே!.. அப்பனே!.. - என்று விளித்தாய்!.. அவ்வண்ணமே - நாம் ஐயப்பன் எனும் திருநாமம் கொண்டு கலியுகத்தில்- பூவுலக மக்களுக்கு இரங்கி - அருள வேண்டிய காலம் ஒன்று நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அப்போது உன்னையும் ஆட்கொண்டருள்வோம்!..''

- என்று திருவாய் மலர்ந்தருளினார். திருநீறும் தீர்த்தமும் பிரசாதித்தார்.

''..பூர்ண புஷ்கலா காந்தனே சரணம்!.. பூமிப் பிரபஞ்சனே சரணம்!..''

''..அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து அருள வேண்டும் பெருமானே!..''  

- என்று வேண்டிக் கொண்ட இந்திரன் - ஐயனின் சந்நிதானத்திலிருந்து பிரிய மனம் இல்லாதவனாக - இந்திராணியைச் சந்திக்க விரைந்தான் - இந்திரன்.

அதன்பிறகு - ஈசனின் திருவிழிகளில் இருந்து - முன்னமே முளைத்தெழுந்த ஜோதியாய் - அறுமுகச் செவ்வேள் உதித்தெழுந்து - அவுணர் குலத்தின் வேரறுத்தருளினான்.

அச்சமும் அல்லலும் அகன்றவராய் - தேவர்கள் களித்திருந்த வேளையில் - மீண்டும் ஒரு புயல் மகிஷன் எனும் பெயரில் -உருவாகி அமராவதியை நோக்கி வந்தது. 


மகிஷனையும் அவன் கூட்டத்தாரையும் அன்னை பராசக்தி ஸ்ரீ துர்க்கையாய் எழுந்து தொலைத்துக் கட்டினாள். 

ஆனாலும், வல்வினை தீராத வகையினால் - 

அசுரர் பெருங்கூட்டம் - மகிஷனின் மனைவியை தமக்குத் தலைவியாய் அறிவித்தன. அதுவரையிலும் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்தவள் - இன்று அசுரப் படைகளுக்குத்  தலைமைப் பொறுப்பினை ஏற்று வழி நடத்தும் நிலைக்குத் ஆளானாள். 

சூழ்நிலையின் கொடுமையினால் - அதுவரை யாருமே செய்திராத ஒன்றைச் செய்ய வேண்டியதாயிற்று. 

அவள் செய்த காரியம்  - சகல லோகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது!..

என்ன அது!..

ஸ்ரீதுர்க்காம்பிகையின் திருக்கரத்தினால் - மகிஷன் வதம் செய்யப்பட்டபோது - மகிஷனின் மனைவி கருவுற்றிருந்தாள். அந்தக் கரு இப்போது அசுரர்களுக்குக் கை கொடுத்தது.

குறுக்கு புத்தி - கொண்ட கொடூரர்களின் திட்டத்துக்கு உட்பட்ட மகிஷனின் மனைவி - தன் மாயையினால் - பேறுகாலத்தைத் தள்ளிப் போட்டாள். 

காரணம் - கர்ப்பிணிக்கு யாரும் இன்னல் செய்ய மாட்டார்கள் என்பதே!.. 

அப்படியிருக்க,  தேவரும் மூவரும் - கர்ப்பிணியுடன் போர் செய்ய முன் வருவார்களா!..நிச்சயம்  வரமாட்டார்கள்!..

இந்த உத்தி - அசுரர்களுக்கு மிகவும் வசதியாக இருந்தது. மறுபடியும் ஆரம்பமானது அசுரர்களால் பிரச்னை!.. 

கர்ப்பிணியை முன் நிறுத்திக் கொண்டார்கள். அடிதடி வெட்டுகுத்து - என மீண்டும் ஆரம்பித்தனர்.

இதென்னடா.. மறுபடியும் சோதனை!.. என்று தேவர்கள் அலறினர். ஓடிச் சென்று,   ஈஸ்வரனின் திருவடிகளில் வீழ்ந்து அரற்றினர். 

ஐயன் அம்பிகையை நோக்க - அம்பிகை புன்னகை செய்தாள்.


கோர ரூப செளந்தர்யங்கொண்டு - ஸ்ரீகாளி என நின்றாள்!..

அப்போது - அவள் திருமேனியில் இருந்து அகிலத்தைக் காப்பதற்கென்று அருள் மயமாய் - அதே சமயம் ஆங்கார ஸ்வரூபிணியாய் வெளிப்பட்டாள் -ஸ்ரீபேச்சியம்மன்!.. 

ஏதோ - ஒன்று புதிதாக -நடக்க இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்ட தேவர்கள் அன்னையின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர்.

ஸ்ரீ பேச்சியம்மனை முன் நிறுத்தியவளாய், தேவர்கள் புடை சூழ வந்து நின்ற  - 

ஸ்ரீ காளிகாம்பாளைக் கண்டதும் மகிஷனின் மனைவிக்கு கையும் காலும் வெடவெடத்தன!.. கண்கள் கசிந்து உருகின!.. கைகளைக் கூப்பித் தொழுதாள். அழுதாள்.

''..என் தாயே!.. தயாபரி!.. என்னை மன்னித்து விடு!.. பெண்ணில் நல்லாளாய் பெருந்தகையோடு அமர்ந்தவளே!.. இந்த மூடர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டு,  மாய கர்ப்பம் தாங்கி - மதியிழந்தவள் ஆனேன். பெண்மைக்கு பேரிடர் செய்து விட்டேன்.. என்னை உன் மலரடிகளில் தாங்கிக் கொள்!..''

- என்று தொழுதபடி அன்னையின் திருவடிகளில் பெருஞ்சிரமத்துடன் விழுந்து வணங்கினாள். 

ஆனாலும் அசுரப் பதர்களோ, ''..போர்!.. போர்!..'' - என ஆர்ப்பரித்தன. 

''..அடப் போங்கடா!.. நீங்களும் உங்க போரும்!.. இனியாவது புத்தியோடு நடந்து கொள்ளுங்கள்!..'' 

- என்றவளாய் அன்னையைச் சரணடைந்தாள் மகிஷனின் மனைவி!.. 

அவளுடைய - நிறை கர்ப்பத்தை நீக்க வேண்டிய காலமும் வந்தது!.. 

தேவர்கள் அங்கிருந்து அகன்றனர். அஞ்சி நடுங்கிய அசுரர்கள் ஓட்டம் பிடித்தனர்.

மாய கர்ப்பத்தை நீக்க வேண்டி - மகிஷனின் மனைவியைத் தன் மடி மீது தாங்கிக் கொண்டாள் - ஸ்ரீ பேச்சியம்மன்!..


ஸ்ரீ பேச்சியம்மன் - 
தன் மலரடியில் விழுந்தவளை  மடி மீது தாங்கிக் கொண்டாள் 
எனில் மகிஷனின் மனைவி செய்த தவம் தான் என்ன!..

தேவரும் மூவரும் மலர் மாரி பொழிந்தனர். சப்தரிஷிகளும் விண்ணில் கூடி நின்று  வேதமந்த்ரங்களை முழக்கினர்.

ஸ்ரீபேச்சியம்மன் தன் திருக்கரங்களால் - மகிஷனின் மனைவியின் கர்ப்பத்தின் உள்ளிருந்த - சிசுவை நீக்கி - 

ஸ்ரீ காளிகாம்பிகையின் திருக்கரங்களில் கொடுத்தாள்!..

மாய சக்திகளால் உருவேற்றப்பட்டிருந்த அந்த சிசுவை - உலக நன்மையைக் கருதி, 

வலது திருச்செவியில் குழையாக அணிந்து கொண்டாள் ஸ்ரீ காளி!..

அந்தளவில் - மகிஷாசுரனின் மனைவியின் ஆத்மா - ஸ்ரீ பேச்சியம்மனுடன் ஒன்றி உடனானது!..

ஸ்ரீ பேச்சியம்மன் - பெண்மையின் இயற்கையான, இயல்பான  பிரச்னைகளைத்  தீர்த்து  அருள்பவளாகக் கோலங்கொண்டு அமர்ந்தாள்!..

சிசுவைக் காதில் குழையாய் அணிந்த ஸ்ரீ காளியை -தேவாரத்தில் - அப்பர் பெருமானின் தம் திருவாக்கில் குறிப்பிடுகின்றார்!..

சிசுவைக் காதில் குழையாய் அணிந்தவளாக அம்பிகை திருக்காட்சி நல்கும் திருத்தலம் தான் -


திருவக்கரை!..

இத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்த அசுரகுரு - சுக்ராச்சார்யார், அடுத்த நாடகத்தைத் தீட்டலானார். அதில் - தானே வந்து அமர்ந்தாள் -

காலவ மகரிஷியின் மகளும் - தத்த மகரிஷியின் மனைவியுமான,

லீலா!..

ஸ்ரீ ஹரிஹர சுதனே சரணம்!.. சரணம்!..

No comments:

Post a Comment