Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 7

ஜய கோஷத்துடன் அசுர சேனை அமராவதிக்குள் புகுந்தது. 

அமராவதியோ - ஆளரவமின்றிக் கிடந்தது. 

திக்கெட்டும் தேடித் திரிந்தும் தேவேந்திரனையும் அவனது கூட்டத்தாரையும் அசுரர்களால் கண்டறிய முடியவில்லை.

அவர்களுக்குள் - அச்சம் ஏற்பட்டது.

இந்த விஷயத்தை - மகாராணியாகிய மகிஷியிடம் எப்படிக் கூறுவது என்று தயங்கினார்கள்.

ஆனாலும் சொல்லித்தானே ஆகவேண்டும்!.. 

தலை தப்பினால் - தம்பிரான் புண்ணியம் என மனதைத் திடப்படுத்திக் கொண்டு -

மெதுவாக மகிஷியின் காதருகே செய்தி கிசுகிசுக்கப்பட்டது. 

மனம் விட்டுச் சிரித்தாள் - மகிஷி!..

அசுரர்கள் - இதற்கு முன் இப்படியொரு சிரிப்பினைக் கேட்டதே இல்லை!.. 

மகிஷி சொன்னாள் - 

''..உயிருக்குப் பயந்து ஓடிப்போனவனைப் பற்றி கவலை வேண்டாம். விட்டுத் தள்ளுங்கள். தேவேந்திரனைத் துரத்திக் கொண்டு  காலம் கழிப்பதை விட - கிடைத்திருக்கும் புதுவாழ்க்கையில் அனைவரும் சந்தோஷமாக இருங்கள்!..''

அசுரர்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை!.. 

''..இப்படியெல்லாம்  - பழைய ஆளுங்க சொன்னதே இல்லையே!.. என்ன இருந்தாலும் குருவோட மகள் இல்லையா!.. நாலு எழுத்து படிச்சதினால தான் புத்தி வேலை செய்யுது!..''

அந்த நேரத்தில் சில மடையர்கள் பெரும் சத்தத்துடன் - தேவ கன்னியரைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தனர். 

வீறிட்டு அலறிய தேவ கன்னியர் - செய்வது அறியாது தவித்தனர்.

மகிஷி என்று நிற்பவளிடம் சரணடைவதா!.. அசுரக் கொடுங்கோலர்களின் கைகளில்  சிக்குவதா!..

''..டேய்!.. நில்லுங்கள்!..''

வாளை உருவிக் கொண்டு பாய்ந்தாள் - மகிஷி!.. அசுர கணங்கள் திகைத்து நின்றன.

''..என்ன காரியம் செய்யத் துணிந்தீர்கள். அபலைகளாகிய இவர்களைத் துன்புறுத்துவதானால் நான் மகிழ்ந்து விடுவேன் என்றா நினைத்தீர்கள்?... மனப்பால் குடிக்க வேண்டாம்.  சுக்ராச்சார்யார் அளித்த வாள் இன்னும் புதியதாகத் தான் இருக்கின்றது. அதற்கு வேலை வைத்து விடாதீர்கள்!..''

''..என் சொல்படி - அடங்கி நடக்க வில்லையானால் - உங்களை அழித்து ஒழித்து விடுவேன்!.. பெண்களுக்குக் கேடு செய்யத் துணிந்தால் - கீறிக் கிழித்தெறிந்து விடுவேன்!.. எச்சரிக்கை!..''

எரிமலையாய் பொங்கி எழுந்த மகிஷியைக் கண்டு அசுரர்கள் திகைத்து நின்றனர்.

திக்கற்று திகைத்து நின்றிருந்த தேவகன்னியர் - ஓடிவந்து மகிஷியின் பாதங்களைத் தொட்டு வணங்கினர். அழகிய விழிகளில் ஆனந்தக் கண்ணீர் துளிர்த்திருந்தது.

''.. உங்களுக்கு என்னால் எந்த துன்பமும் நேராது. கவலை வேண்டாம்!..'' - மகிஷி உறுதியளித்தாள்.

அப்புறம் என்ன!..

மகிஷியும் - ரம்பையும் , மேனகையும் ஊர்வசியும் - ஆத்மார்த்த தோழிகளாகி விட்டனர்.  

ஆடலும் பாடலும் என்று  ஆனந்தமயமாக இருந்தது அவர்களின் வாழ்க்கை.

இந்த வேளையில் - ''.. நினைத்தது ஒன்று!.. நடப்பது ஒன்றாக இருக்கின்றதே!..'' - என வியந்த இந்திரன்,

அமர வாழ்வினைத் தொலைத்து விட்டு, அடர் வனத்தினுள் எத்தனை நாளைக்குத் தான் பதுங்கிக் கிடப்பது என்று பரிதவித்தான்.

''..என்ன இருந்தாலும் உங்களை விட நன்றாகவே நடத்துகின்றாள். பாருங்கள் - ரம்பையும் மேனகையும் ஊர்வசியும் சிரித்து விளையாடி மகிழ்வதை!.. உங்கள் ஆட்சியில் பெண்கள் என்றாவது சிரித்ததுண்டா!.. 

இந்திராணி - இடங்கண்டு இடிக்க - ஐராவதமும் இதுதான் சமயம் என்று தலையை ஆட்டிக் கொண்டது.

அடுத்த சில தினங்களில் கூர்மையான திட்டம் ஒன்று தீட்டப்பட்டது. 

பூர்வ ஜனனத்தில் - தத்த மகரிஷி உதறித் தள்ளி விட்டுச் சென்ற - மனோ தர்மங்களை ஒன்று திரட்டினர்.  

தத்த ரிஷிக்கு, லீலா அளித்த சாபம் திடங்கொண்டு நின்றது. தத்த ரிஷி அதை அனுபவித்துக் கழித்தால் ஒழிய அவருக்கு - சிவலோகம் சித்திக்காது. 

எனவே, ஒரு ரகசியத்துடன் கூடிய - தேவ கட்டளைக்கு உடன்பட்டார்.

சாப விமோசனம் ஆக வேண்டிய நேரம் நெருங்கிய வேளையில் -  

அமர லோகத்தின் எல்லையில்  -  காம கோலாகலத்துடன், காட்டெருமை ஒன்று கனைப்பது கேட்டது மகிஷிக்கு!..

இத்தனை நாள் கேட்டு மகிழ்ந்த தேவகானங்கள் எல்லாம் - கர்ண கடூரமாகி விட,  காட்டெருமையின் கனைப்பு - கானாமிர்தமாக இருந்தது - மகிஷிக்கு!..

உள்ளத்தின் ஒரு மூலையில் ஒடுங்கிக் கிடந்த எண்ணங்கள் உருப்பெற்று கிளர்ந்தெழ - தானும் ஒரு காட்டெருமையாய் மாறினாள்.

துள்ளிக் குதித்து ஓடினாள்.


மகிஷி காட்டெருமையாய் மாறி காட்டுக்குள் ஓடிப்போன விஷயம் சுக்ராச்சார்யருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவரும் சிந்தித்தார். தேவர்கள் செய்த சதி புரிந்தது.

சாப விமோசனம் ஆகின்றது என்ற அளவில் சரி!.. ஆனால், 

கூடி முயங்கும் வேளையில், மகிஷியின் காமத்தைத் தொலைப்பதோடு மகிஷியையும் தொலைத்து விடுவது என்ற கொடுஞ்செயலுக்கு அவர் மனம் ஒப்பவில்லை.

தனது தவ வலிமையால்  - இந்த சதியை மகிஷிக்கு உணர்த்தினார். 

அத்துடன் - காம ஆகர்ஷண மந்த்ரத்தினைப் பிரயோகித்து - தத்த ரிஷியின் காமத்தைக் கவர்ந்து -  யாக அக்னியில் இட்டு  சாம்பலாக்கி விட்டார். 

எல்லாப் பழங்கதையும் பொய்யாய் - புகைந்து போனதும் , மகிஷி தன் நிலையைப் புரிந்து கொண்டாள். 

தான் வாங்கி வந்திருக்கும் வரத்தின் நுட்பம் புரியாமல் - தன் உயிருக்கு உலை வைக்க முயன்ற அற்பத்தனத்தை எண்ணிச் சிரித்த மகிஷி - இந்திரனை இனி விட்டு வைக்கக்கூடாது என முடிவெடுத்தாள்.

குருநாதரை உதாசீனம் செய்த - தன் மடமையை நொந்து கொண்டு - அவரைத் தேடிச்சென்று பணிந்தாள். சுக்ராச்சார்யாரும் மகிஷியைப் புரிந்து கொண்டு அடுத்த ஆலோசனைகளை வழங்கினார்.

''.. மகளே!.. தேவலோகத்தை விட்டு ஓடிப் போன பின்னும் - இந்திரனும் மற்ற தேவர்களும் வலிமை குன்றாமல் இருப்பது எப்படி?.. அவர்களுக்கு ஆற்றலை அளிப்பவை - பூவுலகில் செய்யப்படும் அன்றாட ஆராதனைகளும் ஹோம ஆகுதிகளும் அவிர் பாகங்களும் தான்!.. எனவே அவற்றைத் தடுத்து விடு!.. தேவர்கள் வலிமை குன்றி உன் காலடியில் விழுந்து கிடப்பர்!..''

''..இப்படி ஒன்று இருப்பதை முன்னரே சொல்லவில்லையே!..''

''.. அன்று நான் சொல்ல வந்த போது -  நீ கேட்கும் மனநிலையில் இல்லையே!.. இன்னும் ஒரு விஷயம் மகளே!.. உன் விருப்பப்படி ஹரிஹர புத்ரன் அவதரித்து விட்டான்!..''

''.. அவன் பிறந்தது எப்படி?.. எப்போது?..'' - அதிர்ந்தாள் மகிஷி!..


''..அந்த முன்னவன் முகிழ்த்து ஆயிற்று பலகாலம்!.. நீ கேட்டாய் - ஹரனுக்கும் ஹரிக்கும் பிறந்த பிள்ளை என்று!.. கடைசியில் - ஹரியே அம்பிகை!.. அம்பிகையே ஹரி!.. என்று சாதித்து விட்டார்கள். இப்படிப் பார்த்தால் - அது சரி என்றாகின்றது!.. அப்படிப் பார்த்தால் - இது சரி என்றாகின்றது!..''

அந்த ஹரிஹரசுதன் இப்போது இருப்பது கயிலையங்கிரியில்!.. அவன் பூவுலகில் வெளிப்பட - நீயே  காரணமாக இருக்கப் போகின்றாய். அண்ட சராசரங்களையும் அளக்கும் என்னால் கூட  - உன் விருப்பங்கள் அடங்கிற்றா என்று அறிய முடியவில்லை!.. எனவே,  நடப்பது எப்படியும் நடக்கட்டும்.  நீ சிந்தித்து நடந்து கொள்!..''

- என்று சொல்லியபடி மகிஷியை வாழ்த்தி வணங்கினார்- சுக்ராச்சார்யார்.

''.. குருவே!.. என்ன இது?.. என்னை வணங்குகின்றீர்கள்?..'' - துடித்தாள் மகிஷி. 

''.. இல்லையம்மா!.. தேவர்களுக்கும் கிட்டாத பெருவாழ்வினை நீ அடைய இருக்கின்றாய்!.. மக்களுக்கு மங்கலங்களை அருள்பவர்களுள் நீயும் இடம் பெறப் போகின்றாய்!..  வாழ்க பல்லாண்டு!..''

- என வாழ்த்தியபடி  - விடை பெற்றார். 

மகிஷி யோசித்தாள். போதும் இந்த வாழ்க்கை என்று தோன்றியது அவளுக்கு!..

''.. ஆசார அனுஷ்டானங்களைக் கெடுத்தால்!.. ஆகுதியையும் அவிர் பாகத்தையும் தடுத்தால்!.. தேவர்களுக்கு இரங்கி - இது வரையிலும் வராத தெய்வம் - புனிதங்களைக் குலைக்கும் போது - பூவுலகைக் காத்தருள கண்டிப்பாக வந்தே தீரும்!..''

சிலிர்த்தெழுந்தாள் - மகிஷி!.. 

''..ஆஹா!.. வெகுநாட்களுக்குப் பிறகு போர்!..'' - ஆர்ப்பரித்தன அசுரப் படைகள். 

அவர்களைத் தடுத்தாள் மகிஷி. 

''.. இது என்னுடைய தனிப்பட்ட பிரச்னை!.. என்னைத் தொடர்ந்து வந்து - நீங்கள் யாரும் பலியாக வேண்டாம். உங்களுக்குக் கிடைத்திருக்கும் நல்வாழ்வினை - விதிக்கப்பட்ட நாள் வரையில் நல்வழியில் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் வருகின்றேன்!..''

அசுர கணங்கள்  - முதல் முறையாக கண்ணீர் சிந்தின.

''..இல்லை.. இல்லை!.. உங்களுடைய பெருந்தன்மையால் - நீங்கள்  இப்படிச் சொன்னாலும் அது எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. நாங்கள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் அது உங்களுடன் தான்!..''

''.. சரி.. மக்களுக்கு அவரவர் விதியினால் - விளைவதே அன்றி - அவர்களுக்கு நீங்கள் எந்தவகையிலும் துன்பம் கொடுக்கக்கூடாது!.. சத்தியம் செய்யுங்கள்!..''

அதன்படியே ஆயிற்று!..


அசுர கணங்கள் ஆர்ப்பரிக்க - ஆங்காரத்துடன் யாக சாலைகளைக் குறி வைத்துத் தாக்கினாள் மகிஷி. நிலைமை கட்டுக் கடங்காமல் போனது. 

ஆசார அனுஷ்டானங்கள் நிலைகுலைய - அறவோர் தம் ஓலம் - திருக் கயிலாய மாமலையிலும் திருப்பாற்கடலிலும் எதிரொலித்தது.

சிவ சித்தம் ஈடேற வேண்டி கோள்கள் 
அனைத்தும்  கூடி நின்றன.

ஸ்ரீ ஹரிஹரபுத்ரன் ஜோதியாய் 
வெளிப்படும் நேரமும் நெருங்கியது.

ஓம் ஹரிஹர சுதனே!.. சரணம்!.. சரணம்!..

No comments:

Post a Comment