Monday, December 8, 2014

கர்ப்ப ரக்ஷாம்பிகை

திருக்கருகாவூர் - ஸ்தல வரலாறு  தொடர்ச்சி .. ( முதல் பகுதி )

சற்று நேரத்தில் மூர்ச்சை தெளிந்து எழுந்த வேதிகை - பரபரப்புடன் அங்குமிங்குமாக தன்னுயிரின் உயிரைத் தேடினாள்.. 

கண்டறிய முடியவில்லை.. திகைத்தாள்..

''..மகளே!.. ''

திடுக்கிட்டு விழித்து நோக்கியவளுக்கு நினைவு வந்தது. தான் மயங்கிச் சரியும் முன் - தாயாகி வந்த தயாபரி பேரொளிப் பிழம்பாகத் தன் முன் நின்றது நினைவுக்கு வந்தது.

தளர்ச்சியுடன்  - இரு கரங்களையும் கூப்பி  - அம்பிகையை வணங்கினாள்.

''..வேதிகை!. அஞ்சாதே!.. உன் அன்புச் செல்வம் இதோ இந்தக் கலசத்தினுள்!.. இன்னும் சில தினங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.  தக்க தருணத்தில் கலசத்திலிருந்து உன் குழந்தை தோன்றும். அதுவரை தேவ மகளிர்  உனக்கு உற்ற துணையாக இருப்பர்!..''

''..அம்மா!. கருகாத்து நின்ற கருணாகரியே!. கர்ப்ப ரக்ஷாம்பிகையே!. கை கூப்பித் தொழும் அனைவரையும் என்றும் - இதேபோல  காத்தருள வேண்டும் தாயே!...''

பணிந்து வணங்கிய வேதிகை - ஆனந்தக் கண்ணீரால் அம்பிகையின் பாதங்களை அபிஷேகித்தாள். 

அன்னையும்  - ''..அவ்வண்ணமே ஆகட்டும்!..'' என புன்னகைத்தாள்.

ஆயிற்று. நாளும் கோளும் கூடிய நல்ல வேளையில் - கலசத்தின் உள்ளிருந்த கரு முதிர்ந்து ஆண் மகவாக வெளிப்பட்டது. 

''..வாராது வந்த மாமணியே!..'' - என  ஆனந்தக் கண்ணீருடன் அள்ளியெடுத்து மார்புடன் அணைத்துக் கொண்ட போது - வேதிகை அதிர்ந்தாள். 

பசித்து அழும் பச்சிளங்குழவிக்கு ஆதரவாக -  பால் சுரக்கவில்லை!.. 

அப்போது  - அங்கே மற்றொரு அதிசயமும் நிகழ்ந்தது. 

வெள்ளிப் பனிமலையைப் போல காமதேனு தோன்றியது!.

''..வேதிகை!... உன் மகன், கருவாக இருந்து நழுவியபோது - அம்பிகையின் அருளால் கலசத்தில் பாதுகாக்கப்பட்டவன். கலசத்தினுள் தேவமருத்துவ மூலிகைச் சாற்றில் ஊறிக் கிடந்த உன் மகனுக்கு - நிலவுலக நியதிகள் நின்று நிலவ இன்னும் சில தினங்கள் ஆகும். எனவே அதுவரையிலும் - உன் மகனுக்கு நான்  பாலூட்டுவேன். இது அம்பிகையின் கட்டளை!..'' - என்றது தெய்வப் பசுவாகிய காமதேனு.

வேதிகை அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் ஏது!...

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிட பாற்கடல் ஈந்த பிரான்  - என ஒரு திருக்குறிப்பு - பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருப்பல்லாண்டு எனும் நூலில்  உள்ளது. அது - வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவரின் மகனாகிய உபமன்யுவுக்காக -  ஈசனால் நிகழ்த்தப்பட்ட திருவிளையாடல். 

அப்படிப்பட்ட ஈசனின் இடப்பாகம் அமர்ந்த அம்பிகை,  தன் பங்குக்கு -  தான் அருளாமல் இருப்பாளா!. அழும் பிள்ளை குரல் கேட்டுப் பொறுப்பாளா!.

எனவே - அவளுடைய திருவிளையாடலாகத் தான் - வேதிகையின் மகனுக்கு காமதேனுவின் பால் அருளப்பட்டதும்!...

இதில் வேறு ஒரு  விஷயமும் உள்ளது.


இன்றைக்கும் குறைப் பிரசவமாகும் சிசு தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு, தனியே வைத்து விசேஷ கவனத்துடன்- பாதுகாக்கப்படுவதும், சில தினங்களுக்கு தாய்ப்பால் தவிர்க்கப்படுவதும் நடைமுறையில் நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இது - அன்றைக்கே வேதகாலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை நாம் உணர்ந்து கொண்டால் -  நம்முள்  எழும் உணர்வு எத்தகையது!..

உண்மை உணரப்படும் போது  - நம் கைகள் பரம்பொருளை நோக்கிக் கூப்பிய வண்ணம் இருக்கும்.

காரணம்...

நம்முள் விதைக்கப்பட்ட மெய்யான ஆன்மீகம்  அத்தகையது!..

பின்னும் - சிலநாட்களில் தேவலோக யாகத்தினை சிறப்புடன் நிறைவேற்றி விட்டுத் திரும்பிய நித்ருவர் நடந்தவற்றை  அறிந்து பெருமகிழ்வு எய்தினார். 

தன் அன்பு மகனுக்கு நைத்ருவன் எனப் பெயர் சூட்டி - முல்லை வன நாதரையும்  கர்ப்ப ரக்ஷாம்பிகையையும் கசிந்து கண்ணீர் மல்கிப் போற்றித் தொழுது வணங்கியதாக தலபுராணத் திருக்குறிப்புகள் கூறுகின்றன.


அந்த அளவில் - அமிர்தவர்ஷினி எனும் வெட்டாற்றின் கரையில் இருந்த முல்லை வனம் திருக்கருகாவூர் எனப் போற்றப்பட்டது.

ஆரண்ய ஸ்தலங்கள்  எனப்படும் பஞ்ச வனங்களில்,

திருக்கருகாவூர் - முல்லை வனம் - இதுவே முதலாவதானது.

மற்ற தலங்கள்  -

அவளிவநல்லூர் - பாதிரி வனம்.
ஹரித்துவாரமங்கலம் - வன்னி வனம்.
இரும்பூளை (ஆலங்குடி) - பூளை வனம்.
திருக்கொள்ளம்பூதூர் - வில்வ வனம்.

அன்புடையீர்!..

அடுத்து -  திருக்கருகாவூர் முல்லைவனநாதர் திருக்கோயிலில் சந்திப்போம்!..

''திருச்சிற்றம்பலம்!. ''

No comments:

Post a Comment