Monday, December 8, 2014

கார்த்திகை சோம வார விரதம்


வேங்கீஸ்வரம் சந்திரசேகரர்
சிவபெருமானுக்குரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. இந்த வருடம் ஐந்து சோமவாரங்கள் வருகின்றன. ஐந்து வாரங்களிலும் இவ்விரதம் சம்பந்தப்பட்ட பல்வேறு தகவல்களை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆண்டவன் உத்தரவு.
முதல் வாரமான இவ்வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்பு மற்றும் கார்த்திகை சோமவார விரதம் தோன்றிய வரலற்றைக் காணலாம்.
இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றி காணலாம்.
மூன்றாம் வாரம் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் பற்றி காணலாம் .
நான்காம் வாரம் பல்வேறு சிவாலயங்களில் கார்த்திகை சோமவாரம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்பதை காணலாம்.
நிறை வாரம் 1008 சங்காபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் திருக்கடையூர் தலவரலாறும் சங்காபிஷேக உற்சவம் பற்றியும் காணலாம். வந்து தரிசியுங்கள் அன்பர்களே.

திருவான்மியூர் சந்திரசேகரர்
சூரியபிரபை ஸேவை
கார்த்திகை மாதத்தின் சிறப்பு:

ஐப்பசி மாதத்தில் சூரியன் துலா இராசியில் நீச்சம், கார்த்திகை மாதத்தில் நீச்சம் மாறி உச்சம் ஆகிறார் எனவே தான் அக்னி ரூபமான அண்ணாமலையார் சிவபெருமானை கார்த்திகை மாதம் முழுதும் வழிபடுகிறோம். சிவ பெருமானின் ஐந்து முகங்களான சத்யோஜாதம், தத் புருஷம், வாமதேவம், ஈசானம், அகோரம் இவற்றுடன் கீழ் நோக்கிய அதோ முகம் என்னும் ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு பொறிகளே சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமானாக மாற அந்த அறுவரையும் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள் இதற்காக அவர்கள் அறுவரும் நட்சத்திரமாக விளங்குகின்றனர். அந்த கிருத்திகை நட்சத்திரத்தின் அதி தேவதை ‘அக்னி’. கிருத்திகா ப்ரதமம் என்று வேதத்தில் கிருத்திகை முதலாவதாக கூறப்படுள்ளது. அந்த மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இனைந்த அந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம். கிருத யுகத்தில், மலையரசன் தன் பொற்பாவை உமையம்மையுடன் பரமேஸ்வரன் “திருக்கயிலையில்” அக்னி ரூபமாகத்தான் மகரிஷ’களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்ததாகவும், உமா மஹேஸ்வரர்களின் உண்மையான திவ்ய தரிசனத்தைக் காண்பதற்காக , அம்மாமுனிவர்கள் கடும் தவமியற்றியதாகவும், அப்போது அவர்கள் தவத்திற்காகப் பிரம்மதேவரால் தனது மனதிலிருந்து படைக்கப்பட்டதே மானசரோவரம் என்னும் தெய்வீகத்தடாகம் என்றும் புராண நூல்கள் கூறுகின்றன.

திருவான்மியூர் சந்திரசேகரர்
காஞ்சி வரதராஜப் பெருமாளும் பிரம்ம தேவர் இயற்றிய அஸ்வமேத வேள்வியின் அக்னியிலிருந்து தோன்றியவர்தான். பகவான் ஸ்ரீமந்நாராயணின் பத்து அவதாரங்களில் அளவற்ற வீரியம் கொண்ட ஸ்ரீ நரசிம்மருக்கு உகந்த மாதமும் கார்த்திகையே. எனவேதான் சோளிங்கரில் எழுந்தருளியுள்ள யோக நரசிம்மரை கார்த்திகை ஞாயிறன்று வழிபட அந்த ஸ்ரீ நரசிம்மன் கேட்டவற்றை எல்லாம் பக்தர்களுக்குத் தந்தருள் புரிவான் என்பது காலம் காலமாக கண்டுவரும் அனுபவமாகும். இவை தவிர நாம் புண்ணிய காலங்களிலும், திதி தினங்களிலும் செய்யும் பித்ரு பூஜையின் பலனைப் பித்ரு தேவதைகளின் மூலமாக, நமது முன்னோர்களிடம் சேர்ப்பிப்பவரும் அக்னிதேவரே ஆவார், ஆதலால் தான் கார்த்திகை மாதத்தில், தினமும் அக்னியை மானžகமாக பூஜித்து, வீடுகளில் விடியற்காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றி வரும்படி மகரிஷ’கள் அருளியிருக்கின்றனர், முக்கியமாக பரணி தீப தினம் அன்றும், கார்த்திகை தீபம் அன்றும் நம் இல்லங்களில் மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்து, இறைவனை வழிபட வேண்டும், இது மட்டுமன்றி, அவரவர் ஊர்களிலுள்ள திருக்கோவில்களிலும் தங்கள் கையினால் தீபம் எற்றி வைப்பது அவசியமாகும்.
 வட திருமுல்லைவாயில் சந்திரசேகரர்
இவ்வாறு கார்த்திகை மாதம் அக்னியின் மாதமாகும். நெருப்புக்கோள் (அக்னி கிரகம்) செவ்வாயின் ராசியான விருச்சிகத்தில், மற்றொரு நெருப்புக் கோளான சூரியன் சஞ்சரிக்கும் காலமே, விருச்சிக மாதம் எனப் புராதான நு‘ல்களில் விவரிக்கப்பட்டுள்ள கார்த்திகை மாதமாகும். விருச்சிக மாதத்தின் கார்த்திகை மற்றும் பௌர்ணமி இனைந்த திருக்கார்த்திகை நாளில் அடிமுடி காண முடியாத ஜோதிப்பிழம்பாக எம்பெருமான் நின்றதால் அவரை ஜோதி வடிவாகவே வணங்குகின்றோம், அந்த கார்த்திகை மாதத்தில் திங்கட் கிழமைகளில் சோம வார விரதமும் இருக்கின்றோம். இவ்வாறு இந்த கார்த்திகை(விருச்சிக) மாதத்தில் இரண்டு விரதங்கள் வருகின்றன அவையாவன கார்த்திகை சோம வார விரதம்மற்றும் கார்த்திகை பௌர்ணமி உமா மகேஸ்வர விரதம் ஆகும்.

வேங்கீஸ்வரம் சந்திரசேகரர்
சோமவார விரதம் தோன்றிய வரலாறு:
 சந்திரன் கார்த்திகை மாத சுக்லபக்ஷ அஷ்டமியில் தோன்றினான். சந்திரன் பெயரால் சோமவார விரதம் தோன்றியது. சந்திரன் சிவனை ஆராதித்ததும், கிருத யுகம் தோன்றியதும், சந்திரனை சிவபெருமான் சிரசில் அணிந்ததும் கார்த்திகை சோம வாரத்தில் தான். தட்சபிரஜாபதி தன் மகள்களை தனித்தனியாக மணம் செய்து கொடுத்தால் அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாகும் என்று கருதி தந்து 27 மகள்களான , கார்த்திகை, ரோகிணி, மிருகžருஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுபதி, பரணி ஆகியோரை மஹா பேரழகனான சந்திரனுக்கு மணம் புரிவித்தான். ஆனால் சந்திரனோ ரோகிணி மற்றும் கார்த்திகையிடம் மட்டும் மிகவும் அன்பு கொண்டு தனது மற்ற மனைவியர்களை புறக்கணித்தான். அதனால் மனம் நொந்த மற்ற பெண்கள் தங்கள் தந்தையிடம் சென்று முறையிட்டனர். ஆத்திரமடைந்த தட்சன் சந்திரனுக்கு சாபம் கொடுத்தான், அதனால் சந்திரன் தனது கலைகளை இழந்தான் அவனை குஷ்ட நோயும் பீடித்தது. தன் சாபம் நீங்க சந்திரன் கார்த்திகை மாதத்தின் அனைத்து திங்கட் கிழமைகளிலும் எம்பெருமானை கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடற்றினிலடக்கிய வேதியனை புனல் விரி நறுங்கொன்றைப் போதணிந்த கனல் புரி யனல் புல்கு கையவனை, ஐந்தலையரவு கொண்டரைக்கசைத்த சந்த வெண்பொடி சங்கரனை நினைத்து விரதம் அனுஷ்டித்தான், அவனது விரததிற்கு மகிழந்த பரம கருணாமூர்த்தியான எம்பெருமான் அவனுக்கு சாப நிவர்த்தி அளித்தார் அதனால் சந்திரன் தான் இழந்த சோபையை பெற்றான், ஆயினும் பதினாறு கலைகளும் நாள் ஒன்றாக வளர்ந்து பௌர்ணமியன்று பூரண சந்திரனாக திகழ்ந்து பின் தன் கலைகளை ஒவ்வொன்றாக இழந்து பின் அமாவாசையன்று ஓளியற்றவனாகவும் ஆகும் வண்ணம் எம்பெருமானை இகழ்ந்தவனே ஆனாலும் தட்சன் அளித்த சாபத்தை முற்றிலும் நீக்காமல் மாற்றியருளினார் கருணைக் கடலாம் சிவபெருமான். என்னே பகைவனுக்கும் அருளும் ஐயனின் பண்பு.

சந்திர சேகரர் சூரிய பிரபை சேவை
இவ்வாறு சந்திரன், சோம வார விரதத்தின் மகிமையால் எம்பெருமானின் சடாமுடியில் இளம் பிறையாக அமரும் பாக்கியமும் பெற்றான். இவ்வாறு சந்திரனை தனது முடியில் சூடி அருளிய எம்பெருமான் சந்திர சேகரர், சந்திர மௌலீஸ்வரர், சசிதரர் , சோம சுந்தரர், சசி மௌலீஸ்வரர், சோமநாதர், சசாங்க சேகரர், சசிசேகரர் என்றும் புகழப்பட்டார். இந்த கார்த்திகை விரதம் சோமன் என்னும் சந்திரனின் பெயரால் (உமையம்மையுடன் கூடிய சிவபெருமானின் ஒரு நாமமும் சோமன்) சோமவார விரதம் என்று வழங்கப்படலாயிற்று. சந்திரன் வேண்டுதலுக்கு இணங்கி கார்த்திகை விரதம் இருப்பவர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதுடன் இறுதியாக அவர்களுக்கு முக்தியும் கொடுத்து அருள வேண்டும் என்று சந்திரன் வேண்ட அவ்வாறே அருள் பாலித்தருளினார் ஐயனும். பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களுள் ஒன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோமநாதம் ஆகும். இங்கு தான் சோமனாகிய சந்திரன் சோமனாகிய எம்பெருமானுக்காக சோம வார விரதம் இருந்து அவர் ஜடாமுடியில் இளம் பிறையாக அமர்ந்தான் என்பது ஐதீகம்.
மேலே செங்குந்தகோட்டம் சந்திர சேகரர் பௌர்ணமி புறப்பாட்டின் போது ரிஷப வாகன சேவை. சிவபெருமானின் 64 மூர்த்தங்களுள் ஒன்று சந்திரசேகரர் ஆகும், ஐயன் அம்மையுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றார். ஜடா முடியில் சாப விமோசனம் பெற்ற சந்திரன் இளம் பிறையாக விளங்குகின்றான், மேல் கரங்களில் மானும் மழுவும் விளங்குகின்றன. கீழ்க்கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். அம்மைமையும் இரு கரங்களுடன் நின்ற கோலம். அம்மையுடன் அருள் பாலிப்பதால் இது போக மூர்த்தம்.
பிறை சூடிய பெம்மானான இவர்தான் பலி பேரர், அமாவாசை, பௌர்ணமி, மாத பிறப்பு நாட்களில் பவனி வருபவர் இவரே. பல் வேறு தலங்களில் பெருவிழாக்களின் போது காலை சந்திர சேகரரே பவனி வருகின்றார், தியாகத்தலங்களில் சோமாஸ்கந்தர் தியாகராஜராக எழுந்தருளியிருப்பதால் பஞ்சமூர்த்தியாக பவனி வருபவர் சந்திரசேகரரே. பல்வேறு ஆலயங்களில் எம்பெருமான் பரம கருணாமூர்த்தி பவனி வரும் அழகை கண்டு களித்தீர்கள் அன்பர்களே. நிறைவாக பரத்வாஜேஸ்வர சந்திரசேகரர் சூரியவட்ட சேவையை கண்டு களியுங்கள்.

No comments:

Post a Comment