ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 5
தன் முன் வந்தமர்ந்த லீலாவைக் கூர்ந்து நோக்கினார் - அசுர குருவாகிய சுக்ராச்சார்யார்.
ஆதியில் இருந்தே அவரும் என்னவெல்லாமோ - செய்து பார்க்கின்றார் - அசுர குலத்தின் மேன்மைக்கு என்று!.. ஆனால் - அசுரர்கள் அவர்களுடைய அடாத செயல்களினால் - அவர்களுக்கே எதிரியாகி விடுகின்றார்கள்!..
''..சொல் மகளே!..'' - கனிவுடன் அவளுடைய குறையைக் கேட்டார் - சுக்ராச்சார்யார்.
''..குருவே!.. என் நிலைமை சிக்கலானது. நான் காலவ மகரிஷியின் மகளும் தத்த மகரிஷியின் பத்னியுமான - லீலா!.. நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வாழ விரும்பினேன் - வாலிபம் இருக்கும் போதே!..''
''..ஆனால், பிடிவாதமாக மறுத்தார் - என் கணவர். வாழ்க்கை நீர்க்குமிழி போன்றது. அநித்யமானது. அதனால், புலனறிவு இருக்கும் போதே - புலன்களை அடக்கி - புண்ணியத்தைத் தேடவேண்டும். எனவே - வானப் பிரஸ்தமே நன்று என்றார்!..''
''..சொல்லுங்கள் ஸ்வாமி!.. போகமும் ஒருவகையில் யோகம் தானே!.. போகத்தின் வழியே - யோக நிலை எய்தலாகாதா?.. நெய்யை விட்டு அக்னியை அவித்தார் யாரும் உண்டா!.. ஆசைகளை அடக்கி அழித்து விட்டு வா.. என்றா அமரர் உலகம் கூறுகின்றது?.. அந்த இந்திரனே - போகங்களுக்கு அதிபதி அல்லவா!..''
''.. வாழ்வதற்காகத்தானே - வாலிபத்தை வரவு வைத்தான் ஈசன்!.. எண்ணரும் முனிவரும் தமக்கு ஒரு துணையுடன் வாழவில்லையா!.. அவர் தம் புத்ரர் அறவழியில் நின்றதில்லையா?..''
''.. மனிதர் என்ன - தேவர் என்ன!.. புல்லும் பூச்சியும் பறவையும் மிருகமும் - தாம் பெற்ற பேறு என்று தமக்கு விதிக்கப்பட்டவாறு கொஞ்சி மகிழ்ந்து கூடிக் குலவி வாழவில்லையா?.. ''
''.. வீணே மனதை விறகாக்கி வெறுந்தரையில் - யோகம் என்று அமர்ந்த நிலையில், அந்தக் காமவேள் எய்யும் பூங்கணைகளால் தேகம் பற்றிக் கொண்டு எரியும் போது -
அவர்கள் உருண்டு வந்து விழுந்த இடம் - பெண்மையின் காலடியில் தானே!..''
''.. நீ சொல்வது எல்லாம் சரி.. மகளே!.. ஆனாலும் - காமத்தை வென்று - காலத்தையும் வென்றவர்களை நீ அறிய மாட்டாயா?..''
''.. காமனை வெல்வதாய்க் கூறி கரியைப் பூசிக் கொண்டவர்களையும் அறிவேன் ஸ்வாமி!.. என் கேள்வி எல்லாம் - இல்லறத்துடன் கூடிய துறவறம் இனிக்குமா?.. கசக்குமா?.. வாலிபம் என்பது - என் தவறா ஸ்வாமி?.. விடை கூறுங்கள்!..''
''.. இல்லறம் துறவறம் - இவை இரண்டும் ஒன்றாகாது. இரு நிலையின் அடிப்படை தர்மங்களும் வெவ்வேறானவை!.. அவற்றை - உன் கணவன் - உனக்குப் புரியும்படி விளக்கி இருக்க வேண்டும்!..''
''..ஆனால், அவர் என்னை விலக்கி விட்டாரே!.. என்னை விட்டு விலகி விட்டாரே!.மனம் அடக்கி வாழாத நீ மகிஷியாகப் போ!.. - என்று சபித்து விட்டாரே!..''
''..நிலைமை சிக்கலாகத் தான் ஆகி விட்டது!..'' - சுக்ராச்சார்யாருக்கும் மனம் வலித்தது.
தன்னிடம் இருந்து ம்ருத்யு சஞ்ஜீவினி மகா மந்த்ரத்தினைக் கற்க வேண்டும் என, தேவ குருவின் மகன் கசன் வந்ததையும், தன் மகள் தேவயானி அவனிடம் மனம் பறி கொடுத்ததையும் - கடைசியில் அது மகா சோகமாக முடிந்து போனதையும் எண்ணி நெகிழ்ந்தார்.
''..நானும் பதிலுக்கு சாபம் கொடுத்து விட்டுத்தான் வந்தேன் - என்னை அடையாமல் - நீ உன்னை அறிய முடியாது!.. என் மனதை அறிந்து வாழாத நீயும் மகிஷமாகப் போ!.. - என்று!..''
''..சரி.. மகளே!.. மனதைத் தேற்றிக் கொள். இப்போது உனக்கு என்னால் ஆக வேண்டியது என்ன?..''
''..வையகத்து மாந்தருக்கு வரமான வாலிபம் - எனக்கு சாபமாகி விட்டதே!.. பார்ப்பவர்கள் எள்ளி நகையாட பரிதவித்து நின்றேன்!.. என் சாபம் பலிக்க வேண்டும். என் கணவன் என்னைத் தேடி வர வேண்டும். அதுவரைக்கும் -''
'' ..பெண்மைக்கு எவ்விதத்திலும் பாதுகாப்பு இல்லாத இந்த சூழ்நிலையில் - எனக்கு நீங்கள் தான் அடைக்கலம் தந்தருள வேண்டும்!..''
- என பணிந்து நின்றாள்.
தான் இயக்காமல் - நாடகம் அதுவாகவே இயங்குவதை - சுக்ராச்சார்யார் புரிந்து கொண்டார்.
அம்பலத்தரசன் அம்மையுடன் ஆட்டுவிக்கின்றான். அவர்தம் திரு உள்ளத்தை யார் அறியக்கூடும். பொன்னம்பலம் மேவிய புண்ணியன், பூங்கொடியாளுடன் கூடி - புதிதாய் நடத்தும் நாடகத்தில் - நாம் - நம் கடமையைச் செவ்வனே செய்வோம்!.. - என்று மனம் தெளிந்தார்.
கண்களை மூடி ஸ்ரீபஞ்சாட்சரத்தைத் தியானித்த அவர் - கையில் கமண்டல நீரை எடுத்தார்.
''..ஸ்வாமி!.. என் மனமும் உடலும் ஏதோ .. ஏதோ.. ஒரு மாறுதலுக்கு ஆளாகின்றன. என் மனம் தடுமாறுகின்றது. என்னைக் காப்பாற்றுங்கள்!..'' - என்றவளாய் மயங்கிச் சரிந்தாள்.
அந்தத் தருணத்தில் - கையில் வார்த்த கமண்டல நீரை மந்த்ர ஜபத்துடன், மயங்கிக் கிடந்த லீலாவின் மீது தெளித்தார் - சுக்ராச்சார்யார்.
மானுட வடிவும் மானுடமும் நீங்கியவளாக,
அசுர மேனியுடன் எழுந்தாள் - லீலா!..
ஸ்ரீ ஹரிஹர சுதனே!.. சரணம்!.. சரணம்!..
No comments:
Post a Comment