Monday, December 8, 2014

ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - 9

ஆதியில் அந்த வனம் மதங்க வனம் எனப்பட்டது. 

காரணம் -


அன்னை பராசக்தியை - மகளாகப் பெறும் பாக்யத்தைப் பெற்ற மதங்க மகரிஷி தவம் இயற்றியது -  அங்கே தான்!..

தினமும் இருவேளையும் - எட்டுத் திக்கும் தாவிச் சென்று சிவபூஜை செய்யும் வானர வேந்தன் வாலி நெருங்க முடியாத மலை - இந்த மலை!.. 

ஏனெனில் , இவனது சேட்டையினால் - கோபமுற்ற மதங்க  மகரிஷி, - ''..மறுமுறை இங்கே வந்தாயானால் - உன் தலை வெடித்துச் சிதறி விடும்!..'' - என்று எச்சரித்திருந்தார். 


அதனால் தான், வாலியிடம் உதைபட்டு ஓடி வந்த சுக்ரீவன் இந்த மலைச்சாரலில் அடைக்கலமாகி இருந்தான். அப்படியானால்!.. ஆம்!.. சுக்ரீவனின் அமைச்சராக இருந்த ஸ்ரீ ஆஞ்சநேயரின் திருப்பாதங்கள் பட்ட புண்ணிய பூமி இதுதான். 

வயிறும் தலையும் ஒன்றாகும்படி சபிக்கப்பட்டிருந்த கபந்தன் - ஸ்ரீராமனால் சாப விமோசனம் பெற்ற வேளையில் - அடையாளம் காட்டிச் சென்றது - இந்த மலையைத் தான். 


இங்கே - மதங்க மகரிஷியின் தபோவனத்தில் இருந்த மகாதபஸ்வினியான சபரி அன்னை தான்  - தான் சுவைத்த பழங்களைக் கொடுத்து ஸ்ரீ ராமனை உபசரித்தவள். 


ஸ்ரீ ராமசந்த்ர மூர்த்தி - சபரி அன்னைக்கு மோட்சம் அருளினார். ஆனாலும் ஹரிஹர புத்ரனின் பாதம் தொழ வேண்டும் என்ற ஆவலும் விதியும் இருந்ததனால் - காலங்களைக் கடந்து யுகங்களைக் கடந்து சபரி அன்னை அங்கேயே தங்கியிருந்தாள்.

மகிஷி வதம் செய்யப்பட்டபின் அனைவரும் அல்லல் அகன்று ஆனந்தமாக இருந்த நிலையில் - தம்மைத் தாம் அறிந்த முனிவர்கள் - ஸ்ரீ ஹரிஹர புத்ரனின் தத்துவத்தையும் பூஜாவிதி முறைகளையும் உணர்ந்தனர். 

அவரவர் மனோபாவப்படி  - அந்தப் பிரதேசத்தின் பல பகுதிகளிலும் தோன்றாத் துணையாக ஸ்ரீ ஹரிஹர புத்ரன் - பற்பல அருஞ்செயல்களுடன் குடி கொண்டார். எனினும் சாமான்ய மக்கள் தரிசித்து இன்புறும் காலம் அப்போது ஏற்படவில்லை. 

அதற்கும் ஒரு விடிவு காலம் பிறந்தது.

இன்றைக்கு 880 ஆண்டுகளுக்கு முன் - (1125 - 1150) சில குறிப்புகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்கின்றன. 


பரசுராம க்ஷேத்ரமான கேரளத்தில் பந்தள ராஜ்யத்தை - பாண்டிய மன்னர்களின் வம்சத்தில் வந்த ஸ்ரீராஜசேகர பாண்டியன் என்பவர் ஆட்சி செய்து வந்தார். மிகச்சிறந்த சிவபக்தரான அவருக்கு அதுவரையிலும் மகப்பேறு இல்லை. 

ஸ்ரீராஜசேகர பாண்டியன் - முற்பிறவியில் விஜயன் எனும் பெயருடன் - இன்று தஞ்சை என்று அழைக்கப்படும்  - குபேரன் வழிபட்ட தஞ்சபுரி எனும் அளகாபுரியில் உயர்குலத்தில் பிறந்தவர். 

விஜயன் - அதற்கு முன் சிவானந்தர் எனும் பெயருடன் பெரும் தவசீலராக இருந்தவர். இவரது ஆஸ்ரமம் பராசர மகரிஷியின் ஆஸ்ரமத்திற்கு தெற்கே -வம்புலாம் சோலை எனும் பசும் சோலையில் அமைந்திருந்தது.

தஞ்சபுரியில் -  தஞ்சகனை அன்னை பராசக்தியானவள் - திருவுடைக் கோடியம்மனாகத் தோன்றி வதம் செய்யும் போது - எல்லாம் வல்ல சிவபெருமான் - அஞ்சி நின்ற தேவர்களையும் மகரிஷிகளையும் அடைக்கலமாகக் கொண்டு  காத்தருளும் பணியை , ஸ்ரீதர்ம சாஸ்தாவை அழைத்து, அவரிடம்  ஒப்படைத்தார். 

அதன்படி - ஸ்ரீஹரிஹரபுத்ரன்- அவர்களைச் சிறை கொண்டு பாதுகாத்ததனால் தஞ்சபுரி எனப்படும் தஞ்சாவூரில் -  ஸ்ரீ சிறைகாத்த ஐயனார் என்று கோயில் கொண்டார். 

அப்படி தஞ்சன் வதம் செய்யப்படும் போதும், -  ஸ்ரீஹரிஹர சுதன் அழுதையில் மகிஷியை வதம் செய்த போதும், தேவர்கள் பெருமானை பொன்னம்பல மேட்டில் எழுந்தருளச் செய்து வழிபட்ட போதும் - அந்த வைபவங்களில் கலந்து தரிசனம் செய்து புண்ணியம் கொண்டவர். 

அந்த மங்கலகரமான வேளையில் -  பெருமானைத் தனக்குப் புத்திரனாகப் பிறக்க வரம்  கேட்டவர். அதன்படியே - அவர் மறுபிறவியில் விஜயன் என்று உயர்குடியிலும் அடுத்து ஸ்ரீராஜசேகர பாண்டியன் என ராஜ வம்சத்திலும் பிறந்தார்.


ஸ்ரீராஜசேகர பாண்டியனின்  பட்டத்தரசி ஸ்ரீமதி ராஜ்யலக்ஷ்மி தேவி - ஸ்ரீமந் நாராயணனிடம் அன்பு பூண்டு தொழுபவள். 

இவர்களுடைய மனவருத்தத்தைத் தீர்க்க விரும்பிய ஈசன் வழக்கம் போலவே ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். 

இவரது சகோதரி மோகனா - சங்கு சக்ர ரேகையுடன் விஷ்ணு அம்சத்துடன் பிறந்தவள்.

மன்னனின் அரன்மனையை அடுத்து ஸ்ரீ சாஸ்தாவின் திருக்கோயில் ஒன்று இருந்தது. அங்கே தேவ கைங்கர்யங்களைச் செய்து வந்தவர் ஜயந்தன். இவர் சிவாம்சம் கொண்டு திகழ்ந்தவர். 

நேரிடையாகச் சொல்வதானால்- சிவபெருமானும் மஹாவிஷ்ணுவுமே - ஜயந்தன் , மோகனா - என தோன்றியிருந்தனர்.

நிலை இப்படியிருக்க - ஒருநாள், கட்டுக் காவலை மீறி  உதயணன் என்பவன் அரசரின் சகோதரியான மோகனாவைக் கடத்திக் கொண்டு போய் விட்டான். இவன் தலை சிறந்த கொள்ளையனும்   கொடியவனும் ஆவான். 

செய்வதறியாது திகைத்த மன்னரிடம் - ஜயந்தன் தான் சென்று மோகனாவை மீட்டு வருவதாக சொல்லி - வனத்தினுள் புகுந்தார். ஆனால், நாட்கள் பல ஆகியும் நல்ல செய்தி எதுவும் கிடைக்கவில்லை. திரும்பி வர காலதாமதம் ஆனதால் மனம் வருந்திய மன்னர் - மோகனா என்ன ஆனாள் என ஆரூடம் பார்த்தார். 

அதில் - அவளைப் பற்றிய தகவல்கள் வெளிப்படவில்லை. எனவே- அவள் மீண்டு வர வாய்ப்பில்லை என முடிவு செய்து - வருத்தத்துடன் அவளுக்கு நீர்க் கடன்களைச் செய்து கண்ணீருடன் கரையேறினர். 

ஆனால் - அடுத்த சிலதினங்களில் ஒருநாள் அந்திப் பொழுதில் - உதயணனை வென்று, மோகனாவுடன் நாடு திரும்பினார் ஜயந்தன். அவரைத் தடுத்து நிறுத்திய துறவி ஒருவர் -

அரண்மனையில் நிகழ்ந்த விஷயங்களைக் கூறி, ''..இனி நீங்கள் அங்கே போவது கூடாது. அபலைப் பெண்ணாகிய மோகனாவுக்கு இனி நீயே எல்லாம். இறுதிக் காரியங்கள் செய்து விட்டபடியால் - இனி உங்கள் இருப்பிடம் அந்த வனமே!..'' - என்று அறிவுறுத்தி - சிவமாகிய ஜயந்தனுக்கும் ஜகன் மோகினியாகிய மோகனாவுக்கும் திருமணம் செய்வித்தார். 


 காலம் விரைந்து ஓடியது. மோகனாவின் மணி வயிற்றில் மழலை ஒன்று உதித்தது. அது அழகான ஆண் குழந்தை. 

அப்போது - வனவிலங்குகள் பெருகி, நாட்டுக்குள் வந்து மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் - அரசர் அவற்றைத் திரும்பவும்  துரத்து விடும் பணியில், காட்டுக்குள் வந்தார் பந்தள மன்னர்.

அதை அறிந்த துறவியார் - ஜயந்தனிடம்,  அவருடைய சுய ஸ்வரூபத்தினை எடுத்துக் கூறி, ''..குழந்தையை - மன்னர் வரும் வழியில் விட்டு விடு. இனி அவன் அரண்மனையில் வாழ்வதே சிறப்பு!..'' - என்று பணித்தார். 

எல்லாவற்றுக்கும் ஒரு சாட்சி அமைந்ததில் மகிழ்ந்து - ஜயந்தனும் மோகனாவும்  - தம் உருவில் இருந்து வெளிப்பட்டு - வாழ்த்தி மறைந்தனர்.

காட்டுக்குள் வந்த மன்னன் - கதறி அழுத குழந்தையின் குரலைக் கேட்டான். 

''..இந்த வனத்தில் குழந்தையின் அழுகுரல் கேட்பது எப்படி?!..'' - என அதிர்ந்தான். தேடி அலைந்து தேஜோ மயமான குழந்தையைக் கண்டான்.


அப்போது அகஸ்திய மாமுனிவர் தோன்றி, ''..தெய்வாம்சம் பொருந்திய இந்தக் குழந்தையை உன் மகனாக வளர்க்க வேண்டியது - இனி உன் பொறுப்பு!..''  - என்று ஆணையிட்டார். 

''..எனினும் இந்தக் காட்டில் எப்படி இந்தக் குழந்தை!..'' - என மன்னர் வியந்தார். 

''..இவனது பனிரண்டாம் வயதில் உண்மைகளை உணர்வாய்!..''  - எனக் கூறிய அகஸ்தியர் மன்னனின் நினைவில் இருந்து தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனும்  நினைவை மட்டும் அகற்றி அருளினார்.

ஆனந்தத்துடன் அரண்மனைக்கு விரைந்த மன்னன் நாளும் கோளும் கூடிய நல்ல வேளையில் - ஒளி மிகுந்த மணி மாலையுடன் திகழ்ந்த தன் அன்பு மகனுக்குப் பெயர் சூட்டினான். 

அந்தப் பெயர் தான் -  மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் அமுதாக விளங்கும்,

மணிகண்டன்!..

ஓம் ஹரிஹர சுதனே சரணம் !..
மணிகண்ட ப்ரபுவே சரணம்.. சரணம்!..

No comments:

Post a Comment