மகாமாயா
ஆதிசங்கரர் அருளிச்செய்த அன்னபூர்ணாஷ்டகத்தில் தேவி காஷ்மீரில் வசிப்பவளாகப் போற்றப்படுகிறாள். ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் வளர்க்கப்பட்ட ஸ்ரீ கண்ணனுக்கு சகோதரியாக யசோதைக்கும் நந்தகோபருக்கும் பிறந்த சக்தி மாயாதேவி. குழந்தைகள் இடம் மாற்றப்பட்டவுடன் வானிலிருந்து கம்சனை நோக்கி கம்பீரமாகச் சிரித்தாள் இந்த மாயாதேவி.
பல கோடி மக்களால் சக்திதேவி பல உருவங்களில் வணங்கப்படுகிறாள். அபிஷேக ஆராதனையில் தொடங்கி சூலம் க்ரகம் செடல் பாத யாத்திரை அங்கப் பிரதட்சணம் என்று அவரவர் சார்ந்து இருக்கும் சமுதாய கலாச்சார வழக்கப்படி தேவி பக்தர் மனதில் நீங்கா இடம் கொண்டு உறைகிறாள். அழகிய ‘ தாவி’ நதிக்கரையில் பாஹூ கோட்டைக்குப் பின்புறம் விசேஷமான சக்தி வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது மகாமாயா தேவி கோயில். இக்கோயில் அமைந்த சாலைக்கு மோஹ்மாயா சாலை என்றே பெயர்.
தட்சனின் யாகத்தில் உயிர்த்தியாகம் செய்த தாட்சாயணியாகிய தேவியின் உடலை மகாவிஷ்ணு தன் சக்கரத்தால் பல கூறுகளாக்கி பல இடங்களில் விழச் செய்கிறார். அந்த இடங்கள் சக்தி பீடங்களாகப் புகழ் பெற்று வழிபாட்டுத்தலங்களாகத் திகழ்கின்றன.
பாகம்பிரியாளான உமையவள் அக்ஷரஸ்வரூபியல்லவா அதனால் 54 சக்தி பீடங்களில் தேவி அருள்புரிகிறாள். திரிகோணம் எனப்படும் முக்கோணவடிவம் சக்தி வழிபாட்டில் முக்கிய சின்னம் இதனை உறுதிப்படுத்துவதுபோல் வடக்கே காஷ்மீரம் மேற்கில் அஸ்ஸாமிலுள்ள காமாக்யா தெற்கு எல்லையில் கன்னியாகுமர் என்று பாரத தேசத்தை சக்தி வழிபாட்டுச் சின்னமாகவே மாற்றி இந்த திருக்கோயில்கள் திகழ்கின்றன.
காஷ்மீரில் ஸதி தேவியின் கழுத்துப்பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள தேவியையே மகாமாயா என்று அழைக்கின்றனர். வட நாட்டில் சிவபெருமானை பைரவர் என்றே குறிப்பிடுகின்றனர். மகாமாயா கோயிலில் த்ரிஸ்ந்தியேசுரர் என்ற பெயருடன் விளங்குகிறார் வாமதேவர். இவர் தனி சன்னதியில் பாணலிங்க வடிவத்தில் அருள்பாலிக்கிறார். ஆவுடை இல்லை வெள்ளிக்கண் மலருடனும் நாக தேவருடனும் விளங்குகிறார் ஆதிசிவன்.
இந்தக் கோயிலைச் சுற்றி காஷ்மீரைச் சேர்ந்த ஒரு வீரப்பெண்மணியின் கதையும் பின்னப்பட்டுள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்னால் டோக்டா இனத்தைச் சேர்ந்த மாயா என்ற பெண் காஷ்மீரில் வாழ்ந்து வந்தாள். எதிரி நாட்டினர் இந்தப் பிரதேசத்தைக் கைப்பற்ற முற்றுகையிட்டனர். அரசர்களே எதிர்த்துச் சண்டையிட பயந்த அக்காலகட்டத்தில் எழுச்சியடைந்த மாயா ஒரு படைக்குத் தலைமை தாங்கி காண்போர் பயந்து மிரளும்படி போரிட்டாள். தன் படையையும் உற்சாகப்படுத்தி போரிட வைத்தாள். எதிரிகள் அவளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் புறமுதுகிட்டு ஓடினர்.
தமது பிரதேசத்தையும் இனத்தையும் காக்கும் மகத்தான தன்னலமற்ற பணியில் உயிர்த் தியாகம் செயதாள் மாயா மக்களால் ‘மாயா’ இறையம்சம் பொருந்தியவளாகப் போற்றப்பட்டாள். தங்களை காக்கவே மகாமாயா தேவியாக உருவெடுத்தாள் என்று திடமாக நம்பும் டோக்டா இனத்தவர் அவளுக்குக் கோயில் கட்டி வழிபடவும் ஆரம்பித்தனர். காஷ்மீரின் மலைப்பகுதியில் பாஹூ கோட்டைக்கு அருகிலேயே இக்கோயி இருப்பதும் இந்தச் செவி வழிக் கதைக்கு வலு சேர்க்கிறது. அழகிய சிறு கோயில் அமர்ந்த திருக்கோலத்தில் கையில் சூலத்துடன் மாயாதேவி வடிவம் வெள்ளிக் கண் மலர்கள்
நியாயத்தை நிலை நாட்ட அநீதியை அழிக்க தந்தையையும் எதிர்த்து நின்றவள் உமாதேவி. நமது நாட்டில் பல சக்தி பீடங்களில் அசுரர்களை வதைத்து தம்மை அண்டியவர்களைக் காத்து நிற்கிறாள் ஜகன்மாதா.
இந்தத் திருத்தலம் சக்தி தேவியின் அன்பர்களுக்கு பெண்மையைப் போற்றுபவர்களுக்கு இயற்கையை ரசிப்பவர்களுக்கென பலதரப்பட்ட மக்களையும் ஈர்க்கும் வண்ணம் திகழ்கிறது.
No comments:
Post a Comment