Tuesday, November 11, 2014

சிவகவசம்






சிவகவசம் என்பது பாண்டிய மன்னன்னான வராமதுங்கர் என்பவர் காலத்தில் அவரால் இயற்றப்பட்ட செய்யுளாகும். இதை விடபமுனி எனும் முனிவர் பத்ராயு எனும் ஒரு அரசகுமாரனுக்கு அருளுபதேசம் செய்ய அதை வராமதுங்கர் என்ற பாண்டிய மன்னன் தாம் எழுதிய சிவபெருமானின் புண்ணியக் கதைகளை எடுத்துரைக்கும் பிரம்மோத்ர காண்டம் எனும் நூலின் ஒரு பகுதியாக செய்யுள் வடிவில் இயற்றினார் என்பதும் செய்தியாகும்.

 கவசம் என்றாலே காக்கும் ஒரு தடுப்பு அரண் போன்றதாகும்.

சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர் என்பதினால் அவருடைய அந்த ஐந்து முகங்களைக் குறிப்பிட்டு உடலின் ஒவ்வொரு பாகத்தை காக்குமாறும், நான்கு திசைகளில் இருந்தும் வரும் ஆபத்துக்களில் இருந்தும் தம்மைக் காப்பாற்றுமாறு சிவபெருமானை வேண்டி துதிக்கும் மந்திர பாடலாகும். இதை பாராயணம் செய்தால் பஞ்சமா பாதகங்கள், பகைகள், வறுமை போன்றவை விலகி அதை பாராயணம் செய்பவர்களுக்கு ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.

மந்திர சக்தி வாய்ந்த சிவகவசத்தை திங்கள் கிழமைகளிலும்  பிரதோஷ தினங்கள் அன்றும்  தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால் பல பலன்கள் கிடைக்கும் என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். 
 
அகில நாயகனாய், ஞான ஆனந்த ரூபியாகித்,
துகள்தரும் அணுவாய், வெற்பின் தோற்றமாய், உயிரை எல்லாம் 
தகவுடன் அவனி யாகித் தரிப்பவன் எம்மை இந்த 
மகிதலம் அதனில் தீமை மருவிடாது அருளிக் காக்க
(பிரபஞ்சத்தின் மூல நாயகர், ஞான வடிவம், ஆனந்த ஸ்வரூபிணி, பூமி முதல் விண்ணுலகம் வரை பறந்து கிடக்கும் உயிர் அணுக்களின் ஜீவன், மரணம் அடைந்தப் பின் எம்மை உம்முள் அட்கொள்பவரான சிவபெருமானே, இந்த பூமியில் எந்த தீமையும் என்னை சூழாமல் காத்து அருள வேண்டும் )

குரைபுனல் உருவம் கொண்டு கூழ்தொறும் பயன்கள் நல்கித்
தரையிடை உயிர்கள் யாவும் தளர்ந்திடாவண்ணம் காப்போன்  
நிரைநிரை முகில்கள் ஈண்டி நெடுவரை முகட்டில் பெய்ய
விரைபுனல் அதனுள் வீழ்ந்து விளிந்திடாது எம்மைக் காக்க.
(ஓஹ் என்ற ஒலியை எழுப்பி ஓடிவரும் நீரைப் போலல்லாது, மௌன நீரோடையாக பயிர்களில் பாய்ந்து, உணவைத் தந்து உயிர்களைக் காப்பவரே, அலையலையாக வரும் மேகக் கூட்டத்தின் வழியே மழையாக வந்து மலை மீது பொழி, பாய்ந்து வரும் அந்த நீரின் வெள்ளத்தில் விழுந்து இறந்து விடாமல் எம்மை நீங்களே  காத்து அருள வேண்டும். ) 

கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள்தீயால்
அடலைசெய்து அமலை தாளம் அறைதர நடிக்கும் ஈசன்
இடைநெறி வளைதாபத்தில் எறிதரு சூறைக் காற்றில்
தடைபடாது எம்மை இந்தத் தடங்கடல் உலகில் காக்க
(பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட யுக முடிவில், அனைத்து உலகத்தையும் தெய்வீகத் தீயினால் பொசுக்கி அவற்றால் உன் மேனியில் திருநீர் எனும் அரிதாரம் பூசி நிற்கையில், பார்வதி தேவியார் தாளம் போட, அதில் மயங்கி நடனமாடும் சிவபெருமானே, வளைந்து வளைந்து வந்து தீ போன்ற வெப்பம் தரும் சூரைக் காற்றினால் உன் வரவு தடைபடாமல் இருக்க,  பெரும் கடல்போல உள்ள இவ்வுலகில் எம்மைக் காத்தருள வேண்டும்)

தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
பாயுமான் மழுவினோடும் பகர் வரத அபயங்கள் 
மேயதிண் புயங்கள் நான்கும் மிளிரும் மின்னனைய தேசும்
ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை யதனில் காக்க
(தூய்மையான மூன்று கண்களையும், சுடர்விட்டு எரியும் பொன்னிறம் போன்ற நான்கு திருமுகங்களையும் கொண்டவரே, பாயும் மானைப் போன்ற மழுவாளினையும் (ஒருவித ஆயுதம்), வரத மற்றும் அபய முத்திரைகளையும் காட்டும் நான்கு புஜங்களையும் (கைகள்),   மின்னலைப் போல ஒளிவிடும் மேனியையும் கொண்டவருமான தத்ரூப புருஷரானவரே, கிழக்கு திசையில் நின்றவாறு என்னைக் காத்திடுவீர்)

மான்மழு சூலம் தோட்டி வனைதரு நயன மாலை
கூன்மலி அங்குசம் தீத் தமருகம் கொண்ட செங்கை
நான்முகம் முக்கண் நீலநள் இருள் வருணம் கொண்டே
ஆன்வரு மகோர மூர்த்தி தென்திசை யதனில் காக்க
(பாயும் மானைப் போன்ற மழுவாள், சூலம், கோடரி போன்றவற்றுடன் ருத்திராக்ஷ மாலை, கூனனைப் போல வளைந்து நிற்கும் அங்குசம், தீ, தமருகம் (டமாரம்) போன்றவற்றை ஏந்திய சிவந்த கைகளுடன், மூன்று கண்களை கொண்ட நான்கு திருமுகங்களுடன்  காட்சி தருபவரே, கருநீல நிறத்திலான எருதின் மீது அமர்ந்து உள்ள ஐம்முகத்துள் ஒன்றான அகோர முகத்தைக் கொண்டவரே, தெற்குத் திசையில் நின்றவாறு எம்மைக் காத்திடுவீர்) 

  
திவள்மறி அக்க மாலை செங்கை ஓர் இரண்டும் தாங்க
அவிர்தரும் இரண்டு செங்கை வரதத்தொடு அபயம் தாங்கக் 
கவின் நிறை வதனம் நான்கும் கண் ஒரு மூன்றும் காட்டும்
தவளமா மேனிச் சத்தியோ சாதன் மேல் திசையில் காக்க
(தாவுகின்ற மானையும், ருத்ராக்ஷ மாலையையும் இரு கைகளும் ஏந்தி நிற்க, ஒளிமயமான இன்னும் இரு திருக்கைகள் அபய முத்திரையைக் காட்டி நிற்க, ஐம்முகங்களுள் ஒன்றாக மேற்கு நோக்கிய முகமும் கொண்டவரே, மூன்று கண்களையும் அளவற்ற அழகுடைய நான்கு முகங்களும் கொண்டவரே, மேற்கு திசையில் நின்று எம்மைக் காத்திடுவீர்) 

கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
அறைதரும் தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்திப் 
பொறைகொள் நான்முகத்து முக்கண் பொன்னிற மேனியோடும் 
மறைபுகழ் வாமதேவன் வடதிசையதனில் காக்க 
(ரத்தம் தோய்ந்த மழு வாள், மான், அபய முத்திரை சின்னம், ருத்திராக்ஷ மாலை போன்றவற்றை ஏந்தி நின்றவாறு  நான்கு சிவந்த  திருக்கைகளை காட்டி, ஜொலிக்கும் பொன் போன்ற முக்கண்களுடன் சாந்தமான நான்கு திருமேனிகளைக்(முகங்கள்) காட்டுபவரே, வேதங்கள் போற்றிப் புகழும் வாமதேவ மூர்த்தியே (சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றே வாமன் என்பது ), வட  திசையில் நின்றிருந்து எம்மை நீர் காத்தருள வேண்டும்)

அங்குசம் கபாலம் சூலம் அணிவரத அபயங்கள்
சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தித்
திங்களின் தவள மேனித் திருமுகம் ஐந்தும் பெற்ற
எங்கள் ஈசான தேவன் இருவிசும்பு எங்கும் காக்க
(வரத சின்ன முத்திரை காட்டி, அங்குசம், கபாலம், சூலம், மான், பாசக் கயிறு, ருத்திராஷம், டமாரம் போன்றவற்றை பத்து கரங்களிலும் ஏந்தி, சந்திரனைப் போன்ற வெண் நிற திருமேனியின்  ஐந்து திரு முகங்களில் ஒரு முகத்தை வடகீழ்த்திசை நோக்கி வைத்துள்ள மூர்த்தியே, தேவலோகம் வரை படர்ந்திருக்கும் அனைத்து இடங்களிலும் எம்மை நீர்  காத்து அருள வேண்டும்)

சந்திர மவுலி சென்னி (தலை) தனிநுதல் கண்ணன் நெற்றி
மைந்துறு பகன்கண் தொட்டோன் வரிவிழி அகில நாதன்
கொந்துணர் நாசி வேதம் கூறுவோன் செவி கபாலி
அந்தில் செங்கபோலம் தூய ஐம்முகன் வதனம் முற்றும் (சந்திரமௌலீஸ்வரர் எனும் சிவபெருமான் எங்கள் தலையையும், நெற்றிக் கண் கொண்ட மூர்த்தியானவர் எம் நெற்றியையும், கண் கூசும் ஒளி தரும் சூரியனின் ஒளியையே பறித்த பரமசிவனார் விழிகளையும், பூங் கொத்துக்களின் வாசனைகளை உணரும் சக்தி மிக்க நாசிகளையும், எமது காதுகளையும் நான்கு வேதங்களையும் அருளிய நாயகன் சிவபெருமான் காக்க, எமது கபாலத்தை கபால மூர்த்தியும், எம் முகத்தை ஐம்முகத்தைக் கொண்டவனான சிவபெருமானே  அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும்)

வளமறை பயிலும் நாவன்நா, மணி நீல கண்டன்  
களம் அடு பினிகபான கையினை தரும வாகு  
கிளர்புயம் தக்கன் யாகம் கொடுத்தவன் மார்பு தூய
ஒளிதரு மேருவில்ல உதரம் மன்மதனைக் காய்ந்தோன்
 (வேதங்களை உச்சரிக்கும் நாவினை கொண்ட நீல நிறக் கழுத்தோனான வேத மூர்த்தி எம் கழுத்தினையும், போரில் பினாகம் என்னும் வில்லை கையில் ஏந்திய தர்மவாகு எனும் சிவபெருமான் எமது கைகளையும் தோளையும் காத்தருள, தக்கன் யாகத்தை அழித்த மூர்த்தியானவர்  எம் மார்பினையும், காமதேவனை தகனம் செய்த பேரொளி தரும் மேரு மலையான் எம் வயிற்றினையும்  தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )
  
இடைஇப முகத்தோன் தாதை உந்தி  நம் ஈசன் மன்னும்
புடைவளர் அரை குபேர மித்திரன் பொருவில்  வாமம்
 படர் சக தீசன் சானு பாய்தரும் இடப கேது 
விடைநெறி கணைக்கால் ஏய்ந்த விமலன் செம்பாதம் காக்க 
(யானை முகத்தோனின் தந்தையானவர் என் வயிற்றையும், அதே சர்வேஸ்வரன் தொடைப் பகுதியின் மேல்புற இடையையும், குபேரனின் தோழரும்  ஐந்து முகங்களில் ஒன்றை இடப்புறத்தை நோக்கிக் காட்டி நிற்கும் வாம முகத்தவருமான  சிவபெருமான் எம் தொடையையும்  காக்க,  படமெடுத்தாடும் பாம்பு போல படர்ந்து விரிந்துள்ள ஜகத்தின் ஈசன்  எம் முழங்கால்களையும், எம் கணுக்காலை பாய்ந்து வரும் ரிஷபத்தின் (நந்தி) தலைவனானவர் காத்து அருள, விமலன் எனும் மூர்த்தியானவர் எம் பாதத்தையும்  தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )

வருபவன் முதல் யாமத்து மகேசன் பின் இரண்டாம் யாமம்
பொருவரு வாம தேவன் புகன்றிடும் மூன்றாம் யாமம்
செருமலி மழுவாள் அங்கைத் திரியம்பகன் நாலாம் யாமம்
பெருவலி இடப ஊர்தி பிணியற இனிது காக்க 
(வேதங்கள் கூறும் பதினோரு ருத்ரர்களில் ஒருவரான பவன் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) முதற் ஜாமத்திலும் , மஹேஸ்வரன்  எனும் ஈஸ்வரன் இரண்டாம் ஜாமத்தின் பின் பகுதியிலும்,  முனிவர் போன்ற உருவிலான  வாமதேவர்(சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூன்றாம்  ஜாமத்திலும்,  மழுவாயுத்தை ஏந்திய  திரியம்பகனாதர் (சிவபெருமானின் இன்னொரு பெயர்) நாலாம் ஜாமத்திலும் காத்து அருள இடபத்தில் பவனி வரும் மூர்த்தியானவர் எம் சரீரம் பிணிகளால்(வியாதிகள்) பீடிக்கப்பட்டு சோர்வடையாமல்   அந்தந்த ரூபங்களில் தனித் தனியே   இருந்தவாறு காத்தருள வேண்டும்.

கங்குலின் முதல் யாமத்துக் கலைமதி முடித்தோன் காக்க
தங்கிய இரண்டாம் யாமம் சானவி தரித்தோன் காக்க
பொங்கிய மூன்றாம் யாமம் புரிசடை அண்ணல் காக்க
பங்கமில் நாலாம் யாமம் கவுர்தன் பதியே காக்க 
(இரவின் முதற் ஜாமத்தில்  பிறைசூடிய மூர்த்தியும் இரண்டாம் ஜாமத்தில் கங்காதர மூர்த்தியும் (கங்கையை தலையில் கொண்டுள்ள) எம்மை காத்து அருள வேண்டும். மூன்றாம் ஜாமத்தில் ஜடா மகுட மூர்த்தி காக்க, பங்கமே இல்லாத  நாலாம்ஜாமத்தில் உமை எனும் பார்வதியின் கணவரான உமாபதி வந்து எம்மைக் காக்க வேண்டும்)

அனைத்துள காலம் எல்லாம் அந்தகன் கடிந்தோன் உள்ளும்
தனிப்பெரு முதலாய் உள்ள சங்கரன் புரமும் தாணு
வனப்புறு நடுவும் தூய பசுபதி மற்றும் எங்கும்
நினைத்திடற் கரிய நோன்மை சதாசிவ நிமலன் காக்க
 (அனைத்து காலங்களிலும் காலத்தை நிர்ணயிக்கும் கால சம்ஹார  மூர்த்தி எம்மைக் காத்து வர, காலத்தின் உட்பகுதியில் தனித்தன்மை வாய்ந்த சங்கரரும் (சிவபெருமானின் இன்னொரு பெயர்), வெளிப்புறத்தில் தாணு (சிவபெருமானின் இன்னொரு பெயர்) மூர்த்தியும், நடுப்புறத்தில் ஆன்மாக்களை தன்னுள் அடக்கி வைத்துள்ள பசுபதி நாதர் (பசு என்பது ஆன்மாவைக் குறிக்கும் இன்னொரு சொல்) எனும் சிவபெருமானும், மற்ற இடத்தில் என்றுமே (சதா என்பது என்றுமே என்பதின் வாய் மொழிச் சொல்)  நினைவில் சுழன்றுகொண்டிருக்கும் சதாசிவ முர்த்தியும்  எம்மை தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு காத்தருள வேண்டும் )

நிற்புழி புவனநாதன், ஏகுழி நிமலன், மேனி
பொற்புறும் ஆதி நாதன், இருப்புழி பொருவி லாத
அற்புத வேத வேத்தியனும், துயில்கொள்ளும் ஆங்கண்
தற்பர சிவன், விழிக்கின் சாமள ருத்திரன் காக்க 
(யாம் நிற்கும் இடங்களிலெல்லாம் புவனநாதரும், நடக்குமிடமெல்லாம் மாசற்ற  நிர்மலனாதனும் (நிர்மலம் என்பது மாசின்மை மற்றும் மனக் கவலை அற்றவர் என்ற பொருளை தருவதினால் நிர்மலமானவர் என சிவபெருமானின் இன்னொரு பெயராக அமைந்தது),  உடலழகினை முதலும் முடிவுமே இல்லாத அனைத்தையுமே படைத்த அந்த ஆதி மூர்த்தி காக்க,  இருக்குமிடமெல்லாம் வேதங்கள் புகழும் வேத மூர்த்தி சிவபெருமான் காக்க, உறங்கும்போதேல்லாம் பரம்பொருளான பரமசிவன் காக்க, விழித்திருக்கும் நிலையில் சியாமள ருத்ரர் எனும் சிவபெருமான் தனித் தனியே அந்தந்த ரூபங்களில் இருந்தவாறு எம்மைக் காத்தருள வேண்டும்) 

மலைமுதல் துருக்கம் தன்னில் புராரி காத்திடுக மன்னும்
சிலைமலி வேட ரூபன் செறிந்த கானகத்தில் காக்க
கொலையமர் கற்பத்து அண்ட கோடிகள் குலுங்க நக்குப்
பலபட நடிக்கம் வீர பத்திரன் முழுதும் காக்க 
(அடி மலை முதல் அதன் மேல் முகட்டுவரை (முகட்டு என்பது மலை உச்சியின் பெயர்)  புராரிக் கடவுள் காக்க வேண்டும்.  காட்டினில் என்னை விட்டுப் பிரியாமல் இருந்து வில்லேந்திய  வேட வடிவ மூர்த்தி காக்க,  பேரழிவைத் தரும் பிரளயகாலத்தில் அண்டகோடிகள் நடுங்குமாறு நடனமாடும் வீரபத்திரர் (சிவபெருமான் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், ஸத்யோஜாதம் என்கிற ஐந்து திருமுகங்களைக் கொண்டு ஐந்தொழில் ஆற்றுகையில் ஆணவாதி மலங்களை அழிப்பதற்காக ஐந்து முகங்களில் ஒன்றான அகோர முகத்தில் இருந்து  வீரபத்திரரைப் படைத்தார் என்பது புராணக் கதை)என்னை முற்றிலுமாக சூழ்ந்திருந்து காக்க வேண்டும்)

பல்உளைப் புரவித் திண்தேர் படுமதக் களிறு பாய்மா
வில்லுடைப் பதாதி தொக்கு மிடைந்தியும் எண்ணில்கோடி
கொல்லியல் மாலை வைவேல் குறுகலர் குறுகும் காலை
வல்லியோர் பாகன் செங்கை மழுப்படை துணித்து மாய்க்க 
(கழுத்து மயிரினையுடைய குதிரைகள் பூட்டிய தேர்கள், மதம் பிடித்தது போன்ற மத யானைகள், பாய்ந்து செல்லும் குதிரைகள், வில்லேந்திய கோடிக்கணக்கான படைவீரர்கள் என அனைவருடன் சேர்ந்து கூர்மையான வேலுடன் பகைவர்களை அழித்திடும்  வள்ளியின் நாயகனை படைத்த சிவப்பு நிறக் கைகளைக் கொண்டவரின்  திருக்கரத்தில் இருக்கும் மழு ஆயுதம் என்னைக் காக்கட்டும் ) 

தத்துநீர்ப் புணரி ஆடைத் தரணியைச் சுமந்து மானப்
பைத்தலை நெடிய பாந்தள் பல்தலை அனைத்தும் தேய்ந்து
முத்தலை படைத்த தொக்கும் மூரிவெம் கனல் கொள் சூலம்
பொய்த்தொழில் கள்வர் தம்மைப் பொருதழித்து இனிது காக்க 
(படமெடுத்தாடும் ஆதிசேஷன் எனும் நாகம் படுத்துக் கிடக்கும் பாய்ந்து வரும் கடலையே தன்  ஆடையாக போர்த்தி , பூமியையே தாங்கி நின்ற கடவுளை உம் முத்தலைகளுக்குள் அடக்கியவரே, அந்த  வலிமைகளை  அடக்கிய    தீய எண்ணம் கொண்ட கயவர்களை அழித்து மகிழ்ச்சியைத் தரும்  உம்முடைய  சூலம் எம்மைக் காத்து அருளட்டும் )
முடங்குளை முதலாய் நின்ற முழுவலிக் கொடிய மாக்கள்
அடங்கலும் பினாகம் கொல்க என்று இவை அனைத்தும் உள்ளம்
திடம்பட நினைந்து பாவம் தெறும் சிவகவசம் தன்னை
உடம்படத் தரிப்பை யானால் உலம்பொரு குலவுத் தோளாய் 
(பிடரி மயிருடைய சிங்கத்தை ஒத்த வலிமை மிக்க தோள்களைக் கொண்டு கொடிய மிருகங்களையெல்லாம் பினாகம் என்கிற வில்லால் கொல்வது போல, இருதயத்தில் சிவனையே வைத்து உறுதியுடன் தியானித்தால், அனைத்து பாவங்களையும் வெல்லும் சிவகவசத்தை ஒருவர் அணிந்து கொள்வாரேயானால் (பாராயணம் செய்வது என்பது பொருள்) )

பஞ்ச பாதங்கள் போம் பகைகள் மாய்ந்திடும்
அஞ்சலில் மறலியும் அசூசி ஆட்செயும் 
வஞ்சநோய் ஒழிந்திடும் வறுமை தீர்ந்திடும்
தஞ்சம் என்றிதனை நீ தரித்தல் வேண்டுமால்  
(இப்படியாக பாராயணம் செய்பவர்களது பஞ்சமா பாதகங்கள் அனைத்துமே நீங்கும், சுற்றி உள்ள பகைகளும்  விலகும், பயமின்றியும்  வாழலாம், கொடிய வியாதிகள் விலகும், வறுமை எனும் தரித்திரம் தொலையும்).

No comments:

Post a Comment