Tuesday, November 11, 2014


குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவில்

அருள்மிகு சனீஸ்வர பகவான், குச்சனூர்.

இந்துமத வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் நவக்கிரகங்களில் ஒன்றாகவும், சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோவிலாகவும் கொண்டு எழுந்தருளியிருக்கும் சனீஸ்வர பகவான் தமிழகத்தில் தனக்கென தனிக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ஒரே இடம் குச்சனூர்தான்.

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் சுரபிநதி எனப் புராணங்களில் போற்றப்படும் பெருமையுடைய சுருளி ஆற்றின் கிளையாக இருக்கும் முதன்மை வாய்க்காலின் மேற்குக் கரையில் இந்தக் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலும் அமைந்திருக்கிறது. சனி தோசம் உடையவர்கள் இந்தக் கோவிலிற்கு வந்து மனமுருக வேண்டிக் கொண்டால் அவர்களுக்கு வரும் சோதனைகள் நீங்கி வாழ்க்கையில் வளம் பெற முடியும். மேலும் தாங்கள் துவங்கும் புதிய தொழில்கள் வளர்ச்சி அடையவும், வணிகங்கள் பெருகவும், குடும்பத்தினர் நலமுடன் வாழவும் இவரது துணை வேண்டுமென்று தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வணங்கிச் செல்கின்றனர். தற்போது இந்தியாவின் பிற பகுதிகளிலிலிருந்தும், இலங்கை, சிங்கப்பூர், நேபாளம் போன்ற வெளிநாட்டிலிருந்தும் இந்துமத நம்பிக்கையுடையவர்கள் இந்த சனீஸ்வர பகவான் கோவிலுக்கு வந்து தங்கள் குறைகள் தீர்ந்திட வேண்டிச் சென்று கொண்டிருக்கின்றனர்.    

தல வரலாறு

இப்பகுதியை சேர்ந்த தினகரன் எனும் மன்னன் ஒருவன் குழந்தையின்றி மனம் வாடிவந்த நிலையில்  தனக்குக் குழந்தை ஒன்று அளிக்கக் கோரி தினமும் இறைவனிடம் வேண்டி வந்தான். இப்படி அவன் வேண்டிக் கொண்டிருந்த போது ஒருநாள் அசரீரி ஒன்று கேட்டது. அந்த அசரீரியில் அவனது வீட்டிற்கு பிராமணச் சிறுவன் ஒருவன் வருவான் என்றும் அவனை வளர்த்து வர வேண்டும் என்றும் அதன் பின்பு அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்றும் கூறப்பட்டது. அந்த அசரீரியில் கூறப்பட்டபடி சில நாட்களில் பிராமணச் சிறுவன் ஒருவன் வந்தான். அந்த மன்னனும் அந்த சிறுவனுக்கு சந்திரவதனன் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தான். அதன் பின்பு அரசிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மன்னனும், அரசியும் அந்தக் குழந்தைக்கு சதாகன் என்ற பெயர் சூட்டி வளர்த்தனர். இரண்டு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்களாயினர்.

சந்திரவதனன் மிகவும் அறிவுத் திறனுடன் இருந்தான். மன்னனும் அவனுடைய அறிவுத்திறனுக்கு அவனை மன்னனாக்குவதே சரி என்கிற எண்ணத்துடன் சந்திரவதனன் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனுக்கே முடிசூட்டினான்.

இந்நிலையில் மன்னன் தினகரனுக்கு சனி தோசம் பிடித்தது. சனி தோசத்தால் தினகரன் பல சோதனைகளுக்கு ஆளானான். மிகவும் துன்பமடைந்தான். தன்னை வளர்த்து மன்னனாகவும் ஆக்கிய தனது வளர்ப்புத் தந்தை அடையும் துன்பத்தைக் கண்டு மனமுடைந்த சந்திரவதனன் சுரபி நதிக்கரைக்குச் சென்று இரும்பால் சனியின் உருவத்தைப் படைத்து தனது தந்தைக்கு வரும் துன்பத்தை நீக்க வேண்டி வழிபடத் துவங்கினான்.

இவனது வழிபாட்டில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவன் முன் தோன்றினார். அவர், "முற்பிறவியில் செய்த பாவ வினைகளுக்கு ஏற்ப இந்தப் பிறவியில் சனி தோசம் பிடிக்கிறது. அவர்களுடைய பாவ வினைகளுக்கேற்ப ஏழறை நாழிகை, ஏழறை நாட்கள், ஏழறை மாதங்கள், ஏழறை ஆண்டுகள் என்று சனி தோஷத்தால் அவர்களுக்குப் பல துன்பங்கள் வருகின்றன. இந்தக் காலங்களில் வரும் துன்பத்திலும், தங்கள் கடமைகளுடன் நன்மை செய்து வருபவர்களுக்கு அவர்களது நற்செயலுக்கேற்ப இறுதியில் நன்மையும் அளிக்கப்படும். உன் தந்தையின் முற்பிறவி பாவ வினைகளுக்குத் தகுந்தபடி அவருக்குத் துன்பங்கள் வருகின்றன." என்றார்.

சந்திரவதனன் அனாதையாக அந்த வீட்டிற்கு வந்த தன்னை வளர்த்ததுடன் வளர்ப்பு மகனான தன்னை இந்த நாட்டின் மன்னனாகவும் ஆக்கிய அவருக்குக் கொடுக்கும் துனபங்களைத் தனக்கு அளித்து அவருடைய துன்பத்தைக் குறைக்கும்படி வேண்டினான். அவனுடைய வேண்டுதலில் மனமிரங்கிய சனீஸ்வர பகவான் அவனுடைய தந்தைக்குப் பதிலாக அவனை ஏழறை நாழிகைக் காலம் சனி தோசம் பிடிக்கும் என்றும் அந்த ஏழறை நாழிகைக் காலத்தில் அவனுக்குப் பல துன்பங்கள் வரும். அந்தத் துன்பங்களை எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். சந்திரவதனனும் அதற்கு சம்மதித்தான்.

சனீஸ்வர பகவானும் அதற்கு ஒத்துக் கொண்டு ஏழறை நாழிகை காலத்திற்கு அவனுக்குக் கடுமையான பல துன்பங்களைக் கொடுத்தார். அத் துன்பங்களையெல்லாம் ஏற்றுக் கொண்ட  சந்திரவதனனின் முன் மீண்டும் தோன்றிய சனீஸ்வர பகவான் "இந்த ஏழறை நாழிகை கால சனிதோசம் கூட உன் முற்பிறவியின் வினைகளுக்கேற்ப உனக்கு வந்தது. தங்கள் குறைகளை உணர்ந்து இவ்விடத்திற்கு வந்து என்னை வணங்கும் எவருக்கும் சனி தோசத்தால் வரும் துன்பங்களைக் குறைத்து முடிவில் நன்மைகளை அளிப்பேன்" என்று சொல்லி மறைந்தார். பின்பு அந்த இடத்தில் சுயம்புவாகத் தோன்றினார்.

சுயம்பு வடிவிலான சனீஸ்வர பகவான் தோன்றிய அந்த இடத்தில் சந்திரவதனன் தன்னுடைய வழிபாடு, சனி தோசம் பிடித்து அதனால் துன்பப்படும் பிறருக்கும் வழிகாட்டுதலாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்,  அந்த செண்பகநல்லூரில் சிறிய கோவில் ஒன்றை அமைத்து அதற்குக் குச்சுப்புல்லினால் கூரை அமைத்து வழிபாட்டுத் தலமாக்கினான். இதன்பிறகு இந்த செண்பகநல்லூர் குச்சனூர் என்று ஆகிவிட்டது.  "தினகரன் மான்மியம்" என்கிற பெயரில் வெளியான பழமையான நூலில் இந்த தலத்திற்கான வரலாறு  குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

வழிபாடுகளும் சிறப்புகளும்

இந்த குச்சனூர் அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் தினசரி வழிபாடு நடத்தப்பட்டு வந்தாலும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் சனிக்கிழமைகளில் "ஆடிப் பெருந்திருவிழா" என்கிற பெயரில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இது போல் இரண்டறை ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் சனிப்பெயர்ச்சியின் போதும் "சனிப்பெயர்ச்சித் திருவிழா" சிறப்பாக நடத்தப்படுகிறது.

இத்திருவிழாக்களின் போது தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் இக்கோவிலுக்கு வந்து தங்கள் குறைகளைத் தீர்க்க வேண்டிச் செல்கின்றனர்.

சுயம்புவாக இருக்கும் இந்த சனீஸ்வர பகவான் கோவிலில் "விடத்தை மரம்" தல மரமாகவும், "கருங்குவளை மலர்" தல மலராகவும், "வன்னி இலை" தல இலையாகவும் உள்ளது. சனீஸ்வர பகவானுக்கு "காகம்" வாகனமாகவும், "எள்" தானியமாகவும் இருக்கிறது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் எள் விளக்கு போட்டு வணங்குவதுடன் காகத்திற்கும் அன்னமிட்டு வழிபடுகின்றனர்.

அரூபி வடிவமான லிங்கம் சுயம்புவாக வளர்ந்து கொண்டேயிருப்பதால் மஞ்சனக் காப்புக் கட்டிய நிலையில் அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்படும் இந்த தலம் சனிஸ்வர பகவானுக்கு பிரம்மகதி தோசம் பிடித்து நீங்கிய வரலாற்றுத் தலம் என்றும் கூறப்படுகிறது.

இக்கோவிலில் துணைத் தெய்வங்களாக அருள்மிகு சோணைக் கருப்பண சுவாமி, அருள்மிகு லாட சன்னியாசி ஆகியோர் இருக்கின்றனர்.

No comments:

Post a Comment