தான்தோன்றீஸ்வரர் - எண்ணியது ஈடேறும்!
எண்ணியது ஈடேறும்!
சென்னை, அம்பத்தூர் (ஓ.டி.) பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஒரகடம். இங்கே 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது. ஏழரை அடி உயரமுள்ள தான்தோன்றீஸ்வரர் அருள்புரிகிறார். சுயம்பாகத் தோன்றியவர் இவர். அம்பாளின் திருநாமம் அமிர்தவல்லி. நந்திதேவர், வலம்புரி செல்வ விநாயகர், வள்ளி தேவசேனா உடனுறை சுப்ரமணியர், வலம்புரி நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, ஐயப்பன், லிங்கோத்பவர், அஷ்டபுஜ விஷ்ணு துர்க்கை, ஆகியோரும் இக்கோயிலில் எழுந்தருள்கின்றனர்.
ஐம்பொன்னால் ஆன பிரதோஷ நாதர், சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் ஆகியோர் உற்ஸவ மூர்த்திகளாக உள்ளனர்.
விசேஷங்கள்: இங்கே இரண்டு கால பூஜைகள் சிறப்பாக நடக்கின்றன. இதுதவிர திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்கு 1008 திருமுறை போற்றி பதிகங்கள் பாடி வழிபடுகின்றனர். செவ்வாய்க் கிழமை அம்மனுக்கு ராகு கால பூஜை நடத்தப்படுகிறது. வியாழக் கிழமை தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் நடக்கின்றன. வெள்ளிக் கிழமை அமிர்தவல்லி அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை நடை பெறுகிறது. ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் தேதியன்றும் ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.
எண்ணியது ஈடேறும்!: நந்தி பகவானை வேண்டி அவருக்கு அணிவித்த மாலையை அணிந்துகொண்டு கோயிலை மூன்று முறை பக்தியுடன் வலம் வந்து வழிபட்டால் எண்ணியது ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
No comments:
Post a Comment