Thursday, November 27, 2014

ஒத்தாண்டேஸ்வரர் - திருமழிசை.



சென்னை - திருவள்ளூர் - திருத்தணிப் பேருந்து வழித்தடத்தில் சென்னையிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசையில் உள்ள சிறிய, சிறப்பான கோவில். பேருந்துகள் ஆலயத்தின் வாயிலில் நிற்கின்றன.



இராஜகோபுரம் தென்திசையில் அமைந்திருக்கிறது. ஈசன் சந்நிதி கிழக்கு நோக்கியது. இராஜகோபுரத்தின் சிறப்பான சுதைச் சிற்பங்கள் ஆலயத்தின் தலவரலாற்றை ஒட்டி அமைக்கப்பட்டது. இறைவனின் கருவறை முன்பு பலிபீடமும், நந்தியும் உள்ளது. கிழக்கில் அழகான திருக்குளம் உள்ளது.  ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயம்!

இறைவன் - ஒத்தாண்டேஸ்வரர், கைதந்த பிரான், மனோ அணுகுலேஸ்வரர்.

இறைவி - சீதளாம்பாள், குளிர்ந்த நாயகி.

தலமரம் - பாரிஜாதம், வில்வம். 

பொய்கை - திருக்குளம். 

வரலாறு!   சோழமன்னன் இரண்டாம் குலோத்துங்கன் தேரில் திருமுல்லைவாயில் செல்கிறான். வழியில் ஊணான் கொடி படர்ந்து பயணத்தைத் தடுத்தது. கொடியை வாளால் வெட்ட, வாளில் குருதிக்கறை படிந்தது. அதிர்ந்த மன்னன் கொடியை அகழ்ந்து பார்க்க, குருதி வடிந்த நிலையில் சிவலிங்கம் இருந்தது. சிறந்த சிவபக்தனான மன்னன், தன் செயலுக்கு மிகவும் மனம்வருந்தித் தன்கையை வாளால் துண்டித்தான். சிவன், பார்வதியோடு தோன்றி அவன் கையை வளரச்செய்து அருளினார். நெகிழ்ந்த மன்னன் இறைவனைக் கைதந்த பிரான், ஒத்து ஆண்ட ஈஸ்வரன், மனோ அணுகுலேஸ்வரர் என்று புகழ்ந்து போற்றி, ஆலயம் எழுப்பி லிங்கத்தை நிறுவினான். 

தலத்தின் சிறப்புகள்!

மன்னன் வாளால் எற்படுத்திய வடுவினை லிங்கத்தில் காணலாம்!

பொதுவாக சிவன்கோவில்களில் நவக்கிரகங்கள் வடகிழக்குப் பகுதியில் இருக்கும். இங்கு தென்கிழக்குப் பகுதியில் இருக்கிறது. 

பங்குனியில் பெருவிழா, கந்தசஷ்டி, ஆருத்ரா தரிசனம் சிறப்பானவை. 

No comments:

Post a Comment