சூரிய பூஜையின் சிறப்பும் அவசியமும்!
ஊர்தோறும், தெருதோறும் உள்ள கூரையே இல்லாத மேடைக் கோயில்களிலும் கருவறை மட்டுமே உடைய பல்லாயிரம் சிறிய கோயில்களிலும், அன்றாடம், இறைவடிவின் மேல் பல மணி நேரம் சூரிய ஒளி படுகின்றதை சிறப்பு அம்சமாகக் கருதாத போது, எப்போதாவது சில நாட்கள் மட்டுமே கருவறையில் சூரிய ஒளி பரவும் கோயில்களை பெருமையாகப் பேசுவது ஏன்? பல முன் மண்டபங்களைத் தாண்டிக் கருவறையில் சூரிய ஒளி படர்வது ஒரு பொறியியல் சாதனை மட்டுமா? எல்லா மண்டபங்களையும் தாண்டி கருவறையில் கதிரவனின் ஒளி படருமாறு அமைப்பது ஏன்? நாம் உணராவிட்டாலும் கூட, காற்று ஓட்டம், காந்த சக்தி நகர்வு, ஒளிச் சிதறல், ஒலிப்பரவல் போன்ற பல இயற்கைச் சக்திகளின் இயக்கத்திற்கு நாம் ஒவ்வொரு நொடியும் ஆளாகிக் கொண்டேயிருக்கிறோம். குடிசையாயினும், மாளிகையாயினும், பலமாடிக்குடியிருப்பு ஆயினும், பொருள் கிடங்காயினும், பெரும் ஆலயங்களாயினும், சிறு பந்தலாயினும் சரி, நாம் உருவாக்கும் ஒவ்வொரு அமைப்பும் மேற்கண்ட இயற்கைச் சக்திகளின் நகர்வில் குறுக்கிடுகின்றன. இக்குறுக்கீட்டினால் நமக்கு தீங்கு ஏற்படக்கூடாது என்பதற்காக, தீவிர ஆராய்ச்சி செய்து எழுதப்பட்டவையே வாஸ்து சாஸ்திரம். வாஸ்து நியதிகள் எல்லா கட்டமைப்புக்கும் உண்டு. ஆலயங்கள் இதற்கு விதிவிலக்கல்ல. உண்மையில், ஆலயங்கள் கட்டுமானத்திற்குத் தான் வாஸ்து விதிகள் அதிகம். அதிலும், ஆலய வளாகம் பெரிதாகப் பெரிதாக நியதிகளும் அதிகமாகின்றன. கருவறையில் சூரிய ஒளி படர வழி வகுப்பதும், கருவறையைச் சுற்றி மண்டபங்கள் எழுப்பும்போது வெளிச்சமும், வெய்யிலும், காற்றும் உள்ளே பரவிடுதற்காக, மேல் விதானத்தில் ஆகாயம் தெரியுமாறு, பிரம்மவெளி என்று அழைக்கப்படும் ஜன்னல்கள் வைப்பது முக்கிய நியதிகளாகும். இயற்கைச் சக்தியோடு நமக்கு தடையற்ற தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காகவே, இன்றும் பல ஊர்களில் பெரிய வீடுகளில் திறந்த வெளி முற்றங்கள் அமைக்கப்படுகின்றன. வீட்டு அறைகளில் இயற்கைச் சக்திகளின் இயல்பான ஓட்டம் தடைப்படுவது அதிகரிக்க அதிகரிக்க, நாம் செயற்கையாக, வெளிச்சத்துக்கு விளக்கும், காற்றுக்காக காற்றாடியும் உபயோகிக்கிறோம். பலமாடிக் குடியிருப்புக்களில் வீட்டிலுள்ள சமையல் வாடையும், கழிவறை நாற்றமும் வெளியேறிட காற்று வெளித்தள்ளியும் வைக்கிறோம். இது போன்ற ஒரு செயல்பாடே, ஆலயக்கருவறையில் சூரிய ஒளி படரச் செய்திடுவதும் ஆகும். அன்றாடம் இயலாவிட்டாலும், நாம் வருடாவருடம், எப்போதாவது அருவியிலும், ஆற்றிலும், கடலிலும் நீராடி ஆரோக்கியம் பராமரிப்பது போல, பல்லோரும் கூடிடும் ஆலயங்களிலும், அசுத்த நிலையை நீக்கி தூய்ப்பிக்கும் முயற்சியே மிக நுணுக்கமான, அளப்பரிய சக்தி வாய்ந்த சூரிய ஒளியை பரவச் செய்யும் ஆலய இயல் நியதியும் ஆகும். மூர்த்திக்கு எதிரே நின்று அர்ச்சகர் பூஜிக்கலாகாது என்றும், பக்தர்கள் வழிபடலாகாது என்றும் கூறுவதற்குக் காரணம், பின் இருப்பவர்க்கு இறைவனைக் காண முடியாது என்பது மட்டுமல்ல. கருவறைக்கும் பிற மண்டபங்களுக்கும் இடையிலான ஒளி, ஒலி, காற்றுப் பரவல் தடைப்படக்கூடாது என்பதுவே மிக முக்கியகாரணம். சூரிய ஒளி பரவல் அமைப்பு உள்ள கோயில்கள் பல இருந்தாலும், தமிழகத்தில் தான் அவை அதிகம் உள்ளன. தமிழகத்திலுள்ள சுமார் 100 சூரிய பூஜைக் கோயில்களில் மிகச் சிலவற்றில் மட்டுமே (கண்டியூர், சங்கரன் கோயில் போல) ஒளிப்பரவல் மாலையில் ஏற்படுகிறது. மற்றவற்றில் காலையில் தான். பலவற்றில் சூரிய பூஜை அமைப்புடைமை பொது மக்களுக்குத் தெரியாமலேயே உள்ளது. பஞ்சாங்கங்களில் கூட சிலவைப் பற்றி மட்டுமே குறிப்பு உள்ளது. ஒளிப்பரவல் நேரத்தில் பல்லோரும் கூடி இறைநாமம் ஜபிக்கும்போது நல்ஒலி அதிர்வுகளும் சேருவதால் ஆலயம் புதுப்பொலிவும், ஈர்ப்பும் பெற்று நாம் அடையும் பயனும் பன்மடங்காகிறது. அடிக்கடி ஆலயம் செல்ல முடியாவிட்டாலும், சூரிய பூஜை நேரத்திலாவது இறைவனை கண்டிப்பாக தரிசிக்க முயல்வோம். |
Tuesday, November 11, 2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment