Saturday, November 8, 2014

நந்தி திருக்கல்யாணம் - 2

மங்கல மேளங்கள் முழங்க -

திருஐயாற்றிலிருந்து பொற்பல்லக்கில் ஆரோகணித்து -

திருநெய்த்தானம், கடுவெளி, வைத்யநாதன் பேட்டை  வழியாக கொள்ளிடம் ஆற்றைக் கடந்து - திருமழபாடிக்கு எழுந்தருளிய -

ஐயாறப்பரையும் அறம் வளர்த்த நாயகியையும் நந்தீசனையும் -


எதிர் கொண்டு அழைத்தனர் - அங்கே முன்னதாகவே கண்ணாடிப் பல்லக்கில் சென்று காத்திருந்த சுந்தராம்பிகையும் வைத்யநாதப்பெருமானும்!..

சந்தனம் தாம்பூலம் வழங்கி -  நல்வரவு கூறி வரவேற்றனர்.

அனைத்தையும் முன்பே உணர்ந்திருந்த வியாக்ரபாதர் - அனைவரையும் அன்புடன்  வரவேற்று இன்முகத்துடன் உபசரித்தார். 

வியாக்ர பாதரின் மகன் உபமன்யு, மாப்பிள்ளை நந்தீசனை எதிர்கொண்டு அழைத்து மாலை அணிவித்து வரவேற்றான். 

இந்த உபமன்யு பச்சிளம் பாலகனாக , பசி தாளாது அழுதபோது தான் - ஈசன் இரக்கங்கொண்டு பாற்கடல் ஈந்து அருள் புரிந்ததாக திருக்குறிப்பு உள்ளது.

நன்றி - ஆனந்த், திருமழபாடி
வேத மந்த்ர கோஷங்களும் மங்கல வாத்தியங்களும் முழங்க - மணப் பந்தலினுள் கம்பீரமாக நந்தீசன் நுழைந்ததும் - இல்லத்தினுள் தனியறையில் தோழியர் மத்தியில் இருந்த - சுயம்பிரகாஷினி தேவிக்கு செய்தி மின்னலெனச் சென்றது.

''..கொள்ளை அழகு மாப்பிள்ளை!.. கொடுத்து வைத்தவள் நீ!..'' - தோழியர் மாப்பிள்ளையைச் சுட்டிக் காட்டினர்.  மண் பொதிந்த மரபின் வழி வந்த நாணத்தால் முகம் சிவந்தாள் இளங்கன்னி சுயசை. 

இந்த தேவி - சுயசாம்பிகா எனவும் அழைக்கப்படுவாள். 

மணப்பந்தலில் குழுமி இருந்த அனைவரது முகங்களிலும் ஆனந்தப் பரவசம். 

என்ன அழகு மாப்பிள்ளை முகத்தில்!.. இப்படியொரு தேஜஸை இதுவரை எங்கும் கண்டதில்லையே!.. 

நீட்டி முழக்குதற்கு அவசியமின்றி, 

பார்வதி பரமேஸ்வரர் தம் ஸ்வீகார புத்திரரும் சிலாத முனிவரின் திருக் குமாரனும் ஈசனிடம் சகல வரங்களையும் பெற்றவரும் திருக்கயிலாய மாமலையில் அதிகார நந்தி எனும் பெரும் பதவியினை வகிப்பவரும் ஜபேசன் எனப் புகழப்படுபவருமான  நந்தீசன் எனும் திருநிறைச் செல்வனுக்கு, 

அருந்தவ சிரேஷ்டரான வசிஷ்ட மகரிஷியின் பேத்தியும் வியாக்ர பாதரின் திருக்குமாரத்தியும் உபமன்யுவின் பிரிய சகோதரியும் சுயசாதேவி  எனப் புகழப்படுபவளுமான  சுயம்பிரகாஷினி  எனும் திருநிறைச் செல்வியை -

மணம் முடிக்க என்று நல்ல முகூர்த்தத்தில் பேசி, சகல தேவதா மூர்த்திகளின் நல்லாசிகளுடன் பங்குனி மாத புனர்பூச நட்சத்திரங் கூடியதான - சுபதினத்தில் சுபயோக  சுபவேளையில் திருமாங்கல்யதாரணம் செய்வது என ஏக மனதாக நிச்சயித்து இரு தரப்பிலும் தாம்பூலம் மாற்றிக் கொண்டனர்.

அஷ்ட மங்கலங்கள் பொலிந்தன. எட்டுத் திக்கிலும் மங்கல வாத்யங்கள் முழங்கின.

விநாயகனும் வேலவனும் அருகிருக்க,

முப்பத்து முக்கோடிதேவர்களும் சிவகணங்களும் மகரிஷிகளும் சூழ்ந்திருக்க,

பஞ்சபூத சாட்சியாக, அக்னி சாட்சியாக -

அறம் வளர்த்த நாயகியும் ஐயாறப்பனும் முன்னின்று -

ஸ்ரீநந்தீசனுக்கும் சுயம்பிரகாஷினி தேவிக்கும் திருமண வைபவத்தை நடத்தி வைத்து அருளினர். 

பூமாரி பொழிந்து அனைவரும் மகிழ்ந்தனர்.

இந்த ஆனந்த வைபவம் - 

மனிதரும் தேவரும் மாயா முனிவரும் மற்றும் அகிலத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் கண்குளிரக் காணும்படிக்கு இனிதே நடந்தேறியது. 

திருமாங்கல்ய தாரணம் நிகழ்ந்தேறிய அளவில் - 

ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் வளர்த்த தாய் தந்தையர்க்கும் ஆதிகாரணராகிய அறம் வளர்த்த நாயகிக்கும் ஐயாறப்பனுக்கும் பாதபூஜைகள செய்து பணிந்தார். வலஞ்செய்து வணங்கினார். 

இளந்தம்பதியர் இருவரும் திருமணக் கோலத்தில் - ஸ்ரீசுந்தராம்பிகை சமேத வைத்யநாதப் பெருமானை வலஞ்செய்து வணங்கினர். 

நன்றி - ஆனந்த், திருமழபாடி
மாட வீதிகளில் வலம் வந்த தம்பதியர்க்கு - திருமழபாடியின் மக்கள் அனைவரும் மாவிலைத் தோரணம் மங்கலச் சின்னங்களுடன் வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர்.

விசேஷத்திற்கு வந்திருந்த அனைவரும் மணமக்களைப் பணிந்து வணங்கி இன்புற்றனர்.

ஐயாற்றிலிருந்து எம்பெருமானுடன் கூடி வந்த அனைவரும்  மணமக்களை தத்தமது ஊர்களுக்கு வந்தருளுமாறு வேண்டி விரும்பி அழைத்தனர்.  

சித்ரா பௌர்ணமியை  அடுத்து வரும் விசாக நட்சத்திரத்தன்று - தாமே மணமக்களை அழைத்து வருவதாக அம்மையும் அப்பனும் அவர்களுக்கு வாக்களித்தனர்.

அனைவருக்கும் மனம் நிறையும்படி  அன்னமும் சொர்ணமும் வழங்கி அருள் பாலிக்கப்பட்டது.  

அந்த அளவில், 

அனைவரும் இன்புற்றிருக்க வேண்டி   - ஸ்ரீநந்திகேஸ்வரர் சுயம்பிரகாஷினி தேவியுடன் சிவசாயுஜ்யம் பெற்றனர்.

சிவதாஜதானியாகிய திருக்கயிலாய மாமலையில் - 

நெற்றிக்கண் இலங்கும் ரிஷபமுகத்துடன் அதிகார நந்தி எனத் திருத்தோற்றங் கொண்டு,

வலத் திருக்கரத்தினில் மழுவும் இடத் திருக்கரத்தினில் மானும் ஏந்தி,

மற்ற திருக்கரங்களில்  பொற்பிரம்பு  தாங்கிய வண்ணம் திருக்குறிப்பு காட்டி- திருத்தொண்டு புரிந்து இன்புற்றனர்.

* * *

இந்த அளவில் - என் தந்தையினும் தந்தையாய், எங்கள் குல தெய்வமாய் விளங்கும்  -

ஸ்ரீ நந்திகேஸ்வரர் சுயசாம்பிகை தேவி திருமண வைபவம் சிந்திக்கப்பட்டது. 

நந்தீசர் திருமண வைபவத்தினைக் கேட்டவர்க்கும் படித்தவர்க்கும் சிந்தித்தவர்க்கும் மனை மங்கலம் சிறக்கும் என்பது திருக்குறிப்பு!.. 

நந்தியம்பெருமான் திருமணத்தைத் தரிசித்தால் - திருமணத் தடைகள் உடைபட்டு திருமணம் கைகூடி வரும் என்பது நிதர்சனமான உண்மை.

இதனால் தான் - நந்தி கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்!.. - எனும் சொல்வழக்கு வழங்குகின்றது.

வருடந்தோறும் - திருமழபாடியில் திருமண வைபவம் கோலாகலமாக நடைபெறுகின்றது.  இந்த வைபவத்தில் திருமழபாடியைச் சுற்றியுள்ள மக்களும் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.


அப்பர், ஞான சம்பந்தர், சுந்தரர் - என மூவராலும் திருப்பதிகங்களைப் பெற்ற திருத்தலம் -  திருமழபாடி. தல விருட்சம்  - பனை. தீர்த்தம் - லக்ஷ்மி தீர்த்தம் மற்றும் கொள்ளிடம்.

தஞ்சை - அரியலூர் நெடுஞ்சாலையில் திருமானுரை அடுத்து, மேற்காக கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது திருமழபாடி.

தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து - திருவையாறு , திருமானூர் வழியாக சிறப்பான பேருந்து வசதிகள் உள்ளன. தவிரவும் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயங்குகின்றன.

நந்தீசர் திருமண வைபவத்தின் தொடர்ச்சியாக  -

திருஐயாற்றில் சித்திரையில்  ஏழூர் வலம் வரும் சப்தஸ்தானத் திருவிழாவும் நடைபெறும்.

இனி வரும் நாட்களில் - சப்த ஸ்தான மங்கல வைபவங்களைச் சிந்திக்கும் வாய்ப்பினை - எல்லாம் வல்ல சிவம் அருள்வதாக!..

நெற்றிமேல் நிமிர் கண்ணும் நிலா ஒளிர் 
பொற்றடம் புய நான்கும் பொருந்துறப்
பெற்றெம்மான் அருளால் பிரம்பு கைப் 
பற்றும் நந்தி பரிவொடு காப்பது!.. 

ஓம் நம சிவாய சிவாய நம ஓம்..

No comments:

Post a Comment