Saturday, November 8, 2014

நலந்தரும் நெல்லை

திருநெல்வேலி!..

தென்பாண்டித் திருநாட்டின் திலகம்.

குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல் - எனும் ஐந்து வகை நிலப் பரப்புகளையும் தன்னகத்தே கொண்டது.

அன்று அகத்தியர் அமர்ந்து அருந்தமிழ் வளர்த்து அருளாட்சி செய்த பொதிகை மலை தொட்டு -

வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்!.. அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்!.. என ஆர்ப்பரித்து - அதற்கு முன்னோட்டமாக கப்பலோடிய கீழைக்கடல் வரைக்கும் -

எத்தனை எத்தனையோ - புராண இதிகாச வரலாற்றுத் தடங்கள்..


தமிழகத்தின் ஜீவநதியான தாமிரபரணி - விளையாடிக் களிக்கும் புண்ணிய பூமி திருநெல்வேலி!..

அன்று - அருந்தமிழகத்தில் - அந்நியன் கண்டு அயர்ந்து நின்ற  ஐந்து ஊர்களுள் திருநெல்வேலியும் ஒன்று!..

அன்னியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த பாரதம் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து - விடுதலை வேட்கை கொண்டு - நின்றபோது,  அதன் முதற் கனல் இங்கிருந்தே மூண்டெழுந்தது..

பேர் கொண்ட சிறப்பெல்லாம் - ஊர் கொண்டு நிற்கும் திருநெல்வேலியில்,
சீர் கொண்டு நிற்கும் திருக்கோயில் - ஸ்ரீ காந்திமதியம்மை உடனாகிய ஸ்ரீநெல்லையப்பர் திருக்கோயில்!..

அண்ட பகிரண்டம்  முழுதும் தாமுடைய வள்ளல் - தன்னை ஆங்கே வெளிக்காட்டிக் கொள்ள வேண்டிய வேளையும் வந்தது. அதற்கு ஐயன் தேர்ந்தெடுத்த இடம் வேணுவனம் எனப்படும் மூங்கில் காடு.


அப்போதெல்லாம் - நமது குடும்பங்களில் நிகழும் மங்கலங்களின் போது -ஆல்போல் தழைத்து அருகு போல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முசியாமல் வாழ்க!.. - என்று வாழ்த்துவார்கள்!..

அப்படிப்பட்ட நல்ல மங்கல வார்த்தைகளுக்கெல்லாம் விடை கொடுத்து அனுப்பிய பெருமை நம்முடையது!..

மூங்கில் ஒன்று தான் தனது வேரடியில் நூற்றுக்கணக்கான முளைகளுடன் விரிந்து படர்ந்து வளர்ந்து பல்லாண்டு வாழ்வது!.. 

இயற்கை தந்த முதல் இசை - ரீங்காரத்துடன் வண்டு துளைத்த மூங்கிலின் வழி!.. அது -  புல்லாங்குழல்!..

வாழ்வு தொடங்கி தொடந்து முடியும் வரையிலும் மனிதனுக்குத் துணை வருவது மூங்கில்!..

பொதுவாக - மூங்கில் வளர வளர அதன் தூரில் இருந்தே அடுத்த தலைமுறை தோன்றும். ஆனால் -  அறுபது ஆண்டுகளுக்கு மேல் விளைந்த மூங்கில் பூக்கின்றது.

அந்தப் பூக்களில் இருந்து நெல்மணிகள் தோன்றுகின்றன. அந்த மூங்கில் அரிசி உன்னதமானது. மருத்துவ குணமுடையது. சித்த மருத்துவத்தில் சிறப்பாகக் குறிப்பிடப்படுகின்றது என்பதை அறியும்போது - நாம் எதையெல்லாம் தொலைத்து விட்டு நிற்கின்றோம் என்பது புரிகின்றது!..

நாற்பது ஆண்டுகளுக்கு முன் எங்கள் வீட்டுக்கு ஒரு பெரியவர் - கொள்ளிடக் கரையில் இருந்து மூங்கிலரிசி கொண்டு வந்து கொடுக்க - மூங்கிலரிசிப் பொங்கல் சாப்பிட்டிருக்கின்றோம்.

பூச்சிகளாலும் வண்டுகளாலும் அழிக்க முடியாத வைரம் பாய்ந்த மூங்கில் வாரைகளையும் பல்லக்குகளையும் தமிழகத்தின் பல கோயில்களில் இன்றும் நாம் காணலாம் - ஏதாவது ஓர் இருட்டு மூலையில்!..

தென்னை பனை போன்று அளப்பரிய சிறப்புகளை உடைய மூங்கில் -  மனிதர்க்கு மட்டுமல்லாமல் கால்நடைகளுக்கும் மருந்துப் பொருளாகத் திகழ்கின்றது. 


இத்தகைய மூங்கிலின் பெருமையை நாம் உணர வேண்டுமென்று தான் - ஓங்கார நாயகன் மூங்கில் முளையில் வெளிப்பட்டான்.

பொன்னுக்கு மேலானது செம்பு. செம்பு சேர்க்காவிடில் தங்கம் - தங்கம் தான்!..  பொன் வெள்ளி இவற்றின் உயிர் செம்பு - என்பது போகரின் திருவாக்கு.

பொன் இல்லாத கோயில்கள் இருந்தாலும்  செம்பு இல்லாத கோயில் என்று எதுவுமே இல்லை. விக்ரகங்கள் முதற்கொண்டு ஆலயமணி மற்றும் பூஜா உபகரணங்கள் எல்லாவற்றுக்கும்  செம்பு அடிப்படை.

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மனிதனின் பயன்பாட்டில் இருந்தது செம்பு. ஆதிதமிழன் இதனை செம்பொன் என்றான்.

முப்பதாண்டுகளுக்கு முன்வரை  வீட்டில் செம்பு பாத்திரங்களே பிரதானமாக இருந்தன..

எல்லாவற்றிலும் குளறுபடி செய்து குழப்பியடிக்கும்  மேலைத் தேசத்தவரின் போதனையால் - நாம் புதிய ஞானம் பெற்றவர்களாக பாரம்பர்யத்தைத் துறந்தோம். அதனால் - வேதனை மிகவாயிற்று!..

இப்போது அவனே சொல்கின்றான் Non Stick  பாத்திரங்கள் நல்லவை அல்ல என்று!.. ஆக  - திரும்பவும் பயணம் பழைமையை நோக்கி!..

தாமிரபரணி - அகத்தியர் அருவி - கல்யாணதீர்த்தம்.
மனிதனுக்கு நாளும் தேவைப்படும் சத்துக்களில் செம்புச் சத்தும் ஒன்று. இதன் மறு பெயர் தாமிரம். அடிப்படையில், உடலுக்கும் மூளையின் திறனுக்கும் தாமிரம் பல நன்மைகளை அளிக்கிறது.  

இரத்த சோகை எனும் நோய் தீர்ந்து போகின்றது -  சுத்தமான தாமிரபரணியின் தண்ணீரைக் குடித்து வந்தால்!..

இப்படி மூர்த்தி தீர்த்தம் விருட்சம் - என, எல்லாவற்றாலும் மகத்துவமும் மருத்துவமும் பொருந்திய சிறப்பான திருத்தலம் - திருநெல்வேலி!..

பெருமானின் பஞ்ச சபைகளுள் நான்காவது சபை.. 

தில்லை பொற்சபை. நெல்லை தாமிரசபை.

தனக்கென வாழாது - பிறர்க்கென வாழ்ந்த உத்தமனின் பொருட்டு வெயிலில் உலர்ந்து கொண்டிருந்த நெல்லுக்கு நீரால் வேலியிட்டுக் காத்தருளிய ஈசனின் திருப்பெயர் இங்கே  -  நெல்லையப்பர்.  

வேணு எனப்பட்ட மூங்கில் வனத்தில் மூங்கில் முளைகளின் ஊடாகத் தோன்றியதால் - வேணுவனநாதர். 


மலர்ந்த முகத்தாள். மலர் கொண்ட திருக்கரத்தாள்!. வடிவுடை நாயகி!.. 

அப்பனுடன் அன்னை ஒளி கொண்டு நின்றதால், அவள் - காந்திமதி!..

திருக்கோயிலின் உள்ளேயே - திருமூலத்தானத்தில் அருகில் - பள்ளி கொண்ட பெருமாள்!.. பெருமாளின் திருமார்பில் சிவலிங்கப் பதக்கம்.

மூண்டெழும் வினை தீர்க்கும்  - முக்குறுணிப் பிள்ளையார். அழகு மயிலேறி வரும் ஆனந்த முருகன்.

ஈசனின் வலப்புறம் காந்திமதி அன்னையின் திருக்கோயில். அருகில் நீராழி மண்டபத்துடன் கூடிய பொற்றாமரைக் குளம்!..

தென் தமிழகத்தின் கலைப்பொக்கிஷமாகத் திகழ்வது  நெல்லையப்பர் திருக் கோயில்!..
கலைநயம் மிக்க சிற்பங்களும் நெடுந்தூண்களும் நிறைந்த பிரகாரங்கள் சிந்தை கவர்வன.

இணையில்லா அற்புதமாக  - ஏழிசைத் தூண்கள்.



எண்ணரும் சிறப்புகளுடன் கூடிய இத்திருக்கோயிலில் ஆனிப் பெருந்தேர்  திருவிழாவினை முன்னிட்டு ஜூலை/2 புதன்கிழமை காலையில் கொடியேற்றப்பட்டது.

நெடிதுயர்ந்த துவஜஸ்தம்பத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

வஸ்திரங்களும் மலர் மாலைகளும் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் மஹா தீபாராதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து அன்றிரவு -  சுவாமியும், அம்பாளும் பூங்கோயில் சப்பரத்தில் வீதியுலா வந்தனர்.

தொடர்ந்து மறுநாள் காலையில் வெள்ளிச் சப்பரத்திலும் இரவு  வெள்ளி கற்பக விருட்சத்திலும், வெள்ளிக் கமலத்திலும் ஸ்வாமி அம்பாள் - திருவீதி உலா எழுந்தருளினர்.

ஜூலை /4 வெள்ளிக்கிழமை வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும் வெள்ளி கமல வாகனத்திலும் வீதியுலா எழுந்தருளி , அன்றிரவு  சுவாமி தங்க பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சிம்ம வாகனத்திலும் ஆரோகணித்தனர்.  


நேற்று காலை  வெள்ளிக் குதிரை வாகனத்திலும்  வெள்ளிக் காமதேனு வாகனத்திலும்  எழுந்தருளிய சுவாமியும், அம்பாளும்  இரவில்  வெள்ளி ரிஷப வாகனத்தில் வலம் வந்தனர்.

இன்று (ஜூலை/6) காலை  வெள்ளி ரிஷப வாகனத்திலும், இரவு இந்திர வாகனத்திலும் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருவர்.

ஜூலை/7 இரு பொழுதும் வெள்ளி சப்பர திருஉலா.

ஜூலை/8 காலையில்  ஸ்வாமி தந்தப் பல்லக்கிலும் அம்பாள் முத்துப் பல்லக்கிலும் வீதியுலா வருவர். அன்றிரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் சுவாமியும், வெள்ளிக் காமதேனு வாகனத்தில் அம்பாளும் வீதியுலா வருவர்.

ஜூலை/9 காலை நடராசப் பெருமான் வெள்ளை சாத்தி உள் பிரகார உலா . பகல் பன்னிரண்டு மணிக்கு பச்சை சாத்தி நடராசப் பெருமான் வீதியுலா மாலையில்   தங்கச் சப்பரத்தில்  கங்காளநாதர் வீதியுலா. இரவு- தங்க கைலாச பர்வதத்தில் சுவாமியும் தங்கக்கிளி வாகனத்தில் அம்பாளும் நகர் வலம். 


திருவிழாவின் ஒன்பதாம் நாளான ஜூலை/10 வியாழன்று காலை எட்டு மணிக்கு மேல் எட்டரை மணிக்குள் திருத்தேர்  வடம் பிடித்தல்.

நாள்தோறும் மாலை ஆறு மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கும் சோடச உபசாரத்துடன்  தீபாராதனை நடைபெறும். திருவிழா நாட்களில் மாலையில் திருக்கோயில் வளாகத்தில் இன்னிசையுடன்  பக்திக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

தமிழகத்தில் திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர் தேர்களுக்கு அடுத்த  பெரிய தேர் - நெல்லையப்பர் கோயில் சுவாமி தேர் ஆகும். 35 அடி உயரமும் 450 டன் எடையும் உடையது.

மற்ற பெரிய தேர்கள் புல்டோசர் உதவியுடன் இழுக்கப்படும் நிலையில் நெல்லையப்பர் தேர் மட்டுமே இன்றும் லட்சக்கணக்கான பக்தர்களால் இழுக்கப்படுகிறது.

இந்த ஆண்டு தேரோட்டத்துக்கு வயது 510. 

509 ஆண்டுகளாக இந்த தேரோட்டம் எந்தவித தடங்கலுமின்றி தொடர்ச்சியாக நடைபெறுவதாகவும் ,

இந்தியா சுதந்திரம் அடைந்த - மறு ஆண்டு (1948) ஸ்வாமி தேரின் உச்சியில் ரிஷப கொடியுடன் இந்திய தேசிய கொடியும் பட்டொளி வீசிப் பறக்க திருத்தேர் இழுக்கப்பட்டதாகவும்  - திருக்கோயில் வரலாறு தெரிவிக்கிறது.


மூர்த்தி தலம் தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடைய திருநெல்வேலி ஞானசம்பந்தப் பெருமானின் திருப்பதிகம் பெற்ற திருத்தலம்.

தாமிரபரணியில் - தைப்பூச தீர்த்தவாரி நிகழும் தீர்த்தக் கட்டங்களுள் ஒன்றுசிந்து பூந்துறை.  எனில் - தேன் சிந்து பூந்துறை!..

நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற , பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலி!..  - என்பது ஞானசம்பந்தப் பெருமானின் திருவாக்கு.

வெடிதரு தலையினர் வேனல்வெள் ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியத ளாடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல்செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி யுறை செல்வர் தாமே!..(3/92)
திருஞானசம்பந்தர்.

மூங்கில் வன நாதனைப் பணிவோம்!..
மூங்கிலென சுற்றம் முசியாமல் வாழ்வோம்!..
சிவாய திருச்சிற்றம்பலம்.
* * *

No comments:

Post a Comment